செய்யு - 297
மளிகை சாமான வாங்க வந்து, வேட்டி அவுந்து,
உடுக்கை இழந்த கைக்கு ஆங்கே இடுக்கண் களைந்த மோகனசுந்தரம் வாத்தியாரோட பேச ஆரம்பிச்சதுல
சுப்பு வாத்தியாருக்கு மளிகை சாமானுங்கள வாங்கணும்ற விசயமே மறந்துப் போயிடுச்சு.
"எம்யா ஒம்மட கையெழுத்து அச்செழுத்து
கண்ணகால்ல இருக்கும்னு நம்ம வாத்திங்க பேசிக்குறாங்க? ஒம்ம மாதிரி ஒரு ஆளைத்தாம்யா
திட்டைப் பள்ளியோடத்துல கொண்டாந்து வைக்கணும். இந்த லாலு பயெ, விநாயகம் பயெ எல்லா
பயலுங்களையும் பாத்துச் சொல்லிட்டுத்தாம் இருக்கேம். என்ன பண்ணிட்டு இருக்கானுவோன்னு
தெரியல. நீரு அந்த லாலு பயெ ஒறவுதாம்ல. நாம்ம ரிட்டையர்டு ஆயி ஒன்னரை மாசத்துக்கு மேல
ஆவுது. ஒம்ம அஞ்ஞ கொண்டாந்து வைக்கிறதெ வுட அவனுங்களுக்கு வேற ன்னா வேலன்னு தெரியல.
கேட்டாக்க சங்கத்துல இருக்கேம், அதுல இருக்காம்பானுவோங்க. இந்தக் காரியத்த செய்யுறதுக்கு
எம்மாம் நாளு அவனுங்களுக்கு?" அப்பிடிங்கிறாரு மோகனசுந்தரம் வாத்தியாரு.
"வேல நடந்துட்டுத்தாம் இருக்கு. இன்னும்
பத்து பாஞ்சி நாளுக்குள்ள மாத்தலாயி வந்துடலாம்னு நெனைக்கிறேம்."ங்றாரு சுப்பு
வாத்தியாரு.
"ரிட்டையர்டு ஆயி வந்தாச்சி. இனுமே
போயி ன்னா ஆபீஸ் பக்கம் போயி நிக்குறதுன்னு பாக்கிறேம். இல்லேன்னா ஒரே நாளுல்ல ஒம்ம
கொண்டாந்து வெச்சிப்புடுவேம். பயலுக நம்ம பயலுகத்தாம். செஞ்சிடுவானுங்க. கொஞ்சம்
சொணக்கமாத்தாம் செய்வானுங்க. அதெ பழக்கமா போயிடுச்சு அவனுங்களுக்கு!" அப்பிடிங்கிறாரு
மோகனசுந்தரம் வாத்தியாரு.
அப்படியே பேசிக்கிட்டே சுப்பு வாத்தியாரோட
பூர்வாங்கம், ஜாகை எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டவரு, "இன்னும் ஏம் வாடவ
வூட்டுல தங்கிக் கெடக்கணும். எடத்தைப் பாத்து வாங்கிட்டு வூட்டைக் கட்டிக்க வேண்டியதுதானே?"ன்னுருக்காரு.
திட்டையில கோவாலு ஆச்சாரியோட எடத்தை விசாரிச்சதையும், அது வெலை கூடப் போயிக் கெடக்குறதையும்
சொல்லுறாரு சுப்பு வாத்தியாரு.
"அந்த ஆச்சாரி நமக்குத் தெரிஞ்ச ஆளுதானே!
வாருமய்யா பேசிப் பாப்பேம்!"ன்னு கையோட சுப்பு வாத்தியார்ர கெளப்பிக்கிட்டுப்
போட்ட மூக்குப் போடிக்கு மாடக்கண்ணுக்கிட்ட காசைக் கூட கொடுக்க மறந்து கெளம்புறாரு
மோகனசுந்தரம் வாத்தியாரு. அவரு அப்படி காசு கொடுக்காம போனாலும் மாடக்கண்ணு கண்டுக்கிட
மாட்டாரு. மறுநாளு வர்றப்ப சேத்து வாங்கிக்கலாம்னு அவருக்குத் தெரியும். மோகனசுந்தரம்
வாத்தியாரும், "இந்தாம்யா ரூவா! எடுத்துக்கிட்டு மிச்சம் மீதி போவக் கொடு!"ன்னு
சொல்வாரே தவிர எம்மாம் காசு கொடுக்கணும்னு கேட்டுக்கிட்டுல்லாம் எண்ணிக் கொடுக்க
மாட்டாரு.
"மாமாட்ட ஒரு வார்த்தை கலந்துக்கிட்ட
தேவலாம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
"யாரு வைத்தி ஆச்சாரிட்டயா? செரி
அவர்ரையும் அழைச்சிட்டுக் கெளம்புவோமா?"ன்னு அவரு அவரோட சைக்கிள எடுக்க, சுப்பு
வாத்தியாரு இவரோட சைக்கிள எடுக்க, எடுத்து பின்னாடி விகடு பயலெ உக்கார வெச்சுக்கிட்டு
வைத்தி தாத்தா வூட்டுக்குப் போனா அங்க அவரு இல்ல. வேலை முடிஞ்ச இன்னும் வரலேன்னு சொல்லுது
சாமியாத்தா.
"சரியாப் போச்சுது! எந்நேரத்துக்கு
என்ன நடக்கும்னு தெரியாதும்யா! இந்நேரத்துக்கு கைமாறிப் போனாலும் போயிடும். நீரு
பயலெ இஞ்ஞ வுட்டுப்புட்டு வாம்யா! மொதல்ல கோவாலு ஆச்சாரியப் பிடிச்சு ஒரு பேச்சு
பேசி வைப்பேம். பெறவு ஒம்மட மாமானாரையெல்லாம் கொண்டுப் போயிக்கலாம்!"ங்றாரு
மோகனசுந்தரம் வாத்தியாரு. அதுவும் சரிதான்னு விகடுவ அங்க விட்டுப்புட்டு ரெண்டு பேருமா
சைக்கிள்ல கெளம்பி திட்டையில இருக்குற கோவாலு ஆச்சாரி வூட்ல போயி நிக்குறாங்க.
அங்கப் போயி நின்னு, கோவாலு ஆச்சாரிய
சந்திச்சுப் பேசுனா, "ன்னா வாத்தியார்ரே! ஒரு வார்த்த சொல்லி வுட்டுருந்தா இவுங்களுக்குக்
கொடுத்து வுட்டுப்புட்டுப் போறேம். இதுக்கு இப்பிடியா பொசுக்குன்னு நேர்லயா வாரணும்?"ன்னுருக்காரு
கோவாலு ஆச்சாரி. சரிதாம் காரியம் முடிஞ்சிடுச்சுன்னு ஒடனே கெளம்பல மோகனசுந்தரம் வாத்தியாரு.
கையோடு உக்காந்து பேசி முடிச்சிடுவோம்னு மனைக்கட்டோட வெலையக் கேக்குறாரு.
"நீஞ்ஞ ன்னா வெலையைக் கேக்குறது?
நாஞ்ஞ ன்னா வெலையைச் சொல்றது? கொடுக்குறத கொடுத்துட்டு மனைக்கட்ட எடுத்துக்குங்க
வாத்தியார்ரே!"ங்றாரு கோவாலு ஆச்சாரி.
"ந்தாரும்மய்யா ஆச்சாரி! பழக்கம்
வேற. கொடுக்கல் வாங்கல் வேற. நீரு ஒரு வெலையச் சொன்னீர்ன்னா பேசி முடிச்சிப்புடுவேம்.
வெசாரிச்ச வரைக்கும் ஆளு நல்ல கொணமான ஆளு. நம்ம வாத்தியாரு கூட்டம். அது மட்டுமில்ல
வே ஒஞ்ஞ ஆச்சாரிக் கூட்டத்த சேந்த ஆளும்னும் கேள்விப்பட்டேம். வைத்தியோட மருமவ்வேம்யா!
ஒஞ்ஞ எடத்துல யாரு வர்றணுமோ அவ்வுகளே வார்ராக. இதெல்லாம் அமையாது. பிடிச்சுப் போட்டுக்கிட்டு
போய்ட்டே இருக்கணும் வே! மனைக்கட்ட விக்குறது முக்கியமில்ல வே. ஒரு நல்ல ஆளுகிட்ட
வித்தோங்ற மனத்திருப்தி முக்கியம் வே!"ங்றாரு மோகனசுந்தரம் வாத்தியாரு.
"வாத்தியார்க்கிட்ட கூட கொறைச்சலு
சொல்லி ஏமாத்தவா முடியும்! நீஞ்ஞளா பாத்து கொடுக்குறத கொடுங்க! கடங்கப்பி பெருத்துப்
போயி ஏராளமா நிக்கிது. அதெ அடைச்சிப்புட்டு பொண்ணுக்குக் கொஞ்சம் கொடுத்துப்புட்டு,
மிச்சத்த புள்ளையாண்டானுங்ககிட்ட கொடுத்துட்டு நீஞ்ஞத்தாம் தஞ்சம்னு சாஞ்சிடப் போறேம்.
நம்ம ஆளுன்னு வேற சொல்லுதியே! வைத்தியோட மருமவ்வேன்னு வேற சொல்லுதீயே! கடங்கப்பில்லாம்
இல்லன்ன வெச்சுக்குங்க, பிடிய்யா எடத்தன்னு ச்சும்மாவே பத்திரம் பண்ணிக் கொடுத்துட்டுப்
போய்ட்டே இருப்பேம். அந்த நெலமைக்கு ஆண்டவேம் நம்மள வைக்கலப் பாருங்க. நீஞ்ஞலும் வந்திட்டீங்க.
ஆளுன்னு நம்ம வகையறான்னு சொல்லிப்புட்டீங்க. பெறவு நாம்ம ன்னா வெலையச் சொல்றது? கொடுக்குறதெ
கொடுத்துப்புட்டு சந்தோசமா எடுத்துக்கிடுங்க!"ங்றாரு கோவாலு ஆச்சாரி.
"ஊர்ல என்னவோ ஊருக்காரனுக்குத்தாம்
கொடுக்கணும்னு கட்டுப்பாடு போட்டுருக்கிறதா கேள்விப்பட்டிருக்கேமே! அதெப்படி ஆச்சாரி
நீரு பாட்டுக்கு நாம்ம வந்து கேட்டப்புடனே எடுத்துக்கோங்கன்னு சொல்லுதீரு ஏம் வே?
நம்மள வம்புல மாட்டிக்க விடப் பாக்குதீயளா வே?"ன்னு வேடிக்கையா கேக்குறாரு மோகனசுந்தரம்
வாத்தியாரு.
"நீஞ்ஞ வந்து நின்னா ஊராவது மண்ணாவது?
நீஞ்ஞத்தாம் ஊரு. ஊருத்தாம் நீஞ்ஞ. பூரா ஊருப் பயலும் ஒஞ்ஞகிட்ட சுழி போட கத்துக்கிட்ட
பயலுங்கதேன்னே. எவ்வேம் ஒங்கள சாட்சிப் பண்ணி கெரயம் பண்ணா கேள்விக் கேட்கப் போறாம்?
எந்தப் பஞ்சாயத்துல ஒங்கள எதுத்துப் பஞ்சாயத்து பண்ணிருக்கு? வெள்ளாட்டுப் பண்ணாம சோலியப்
பாத்து வுடுங்க வாத்தியாரே!"ங்றாரே கோவாலு ஆச்சாரி.
"ரெண்டு பக்கமும் பங்கமில்லாம முடிச்சு
வுடணும். நாளைக்கு வாத்தி இப்பிடிப் பண்ணிப்புட்டானேன்னு ஆச்சாரியும் ஒண்ணும் நெனைக்கக்
கூடாது. வந்திருக்குற வாத்தியாரும் எதுவும் நெனைக்கக் கூடாது. அதாச்சி கொறைச்சி வித்துக்
கொடுத்துப்புட்டானேன்னு ஆச்சாரிக்க மனசுல ஒரு நெனைப்பு இருக்கக் கூடாது. கூட வெலை
வெச்சி வாங்கிக் கொடுத்துப்புடானேன்னு வாத்தியாருக்கும் மனசுல ஒரு எண்ணம் வந்துடக்
கூடாது. வெசயம் நம்ம காதுக்கு வந்த வரைக்கும் எடத்தை ஆறாயிரத்து ஐநூறு வரைக்கும் கேட்டதா
கேள்விப்படறேம். வீடு எடம் எல்லாம் சேத்து வீடு எடத்தோட பொருமானம் ஐயாயிரம்தாம் கொடுக்கலாம்.
வாங்குறதுக்கு நீயி நானுன்னு போட்டி இருக்கு. ஏழாயிரம்னு சொன்னாலும் வாங்க ஆளு இருக்குங்றதும்
தெரிஞ்ச சங்கதித்தாம். இந்தாரும்யா ஆச்சாரி! நீரு ஒம்ம எடத்தை பெறத்திக்குக் கொடுக்கல.
ஒம்ம வகையறா ஆளுக்குக் கொடுக்குறீரும் வே. இந்தாருங்கய்யா வாத்தியாரு! நீஞ்ஞ எடத்தை
பெறத்திக்கிட்டேந்து வாங்கல. ஒம்ம வகையறா ஆளுக்கிட்டேந்து வாங்கறீரும். அதால ரண்டு
பேருக்கும் நல்லது நடக்கணும். கூட கொறைச்சல்னு மனசுல தோணிடக் கூடாது. அதால ஆச்சாரி!
ஒங்களுக்குக் கடங்கப்பின்னு எம்மாம் இருக்குன்னு நீஞ்ஞத்தாம் ஒங்க வாயத் தொறந்து சொல்லணும்.
அதெ வெச்சித்தாம் ஒரு வெலைய நாம்ம சொல்ல முடியும். அது போல வாத்தியாரய்யா! ஒங்க தெம்பு
எம்மாம்னு நீங்கத்தாம் ஒஞ்ஞ மனசத் தொட்டு சொல்ல முடியும். ரண்டு பேரும் இந்த வெவரத்தைச்
சொல்லிப்புட்டியேள்னா நாம்ம மித்ததைப் பேசி முடிச்சிப்புடுவேம்!"ங்றாரு மோகனசுந்தரம்
வாத்தியாரு.
"ன்னா வாத்தியார்ரே! புள்ளைங்கள வெச்சிக்
கணக்குப் போடுற கணக்கா? பாத்துக் கொடுத்து வுட்டுப் போவீயளா? தாளயும் தூவலயும் வெச்சிக்
கணக்குப் போட்டுக்கிற மாரி இப்டி கேக்குதீயளே? இது அடுக்குமா?"ங்றாரு கோவாலு
ஆச்சாரி.
"அதல்லாம் அப்புறம் வே! கடங்கப்பியோளட
பொருமானத்த சொல்லும் வே!"ங்றாரு மோகனசுந்தரம் வாத்தியாரு.
"அது அய்யாயிரம் வாரும்யா!"ங்றாரு
கோவாலு ஆச்சாரி.
"ன்னா வாத்தியார்ரே ஒங்க தெம்பு?"ங்றாரு
மோகனசுந்தரம் வாத்தியாரு சுப்பு வாத்தியாரைப் பார்த்து.
"அவுக கடங்கப்பிய அடைச்சி புள்ள குட்டிகளுக்குக்
கொஞ்சம் கொடுக்கணும்னு பாக்குறாக. இதுல கணக்குப் பாக்குறதுக்கு ன்னா இருக்கு. அனுபவப்பட்டவங்க
நீஞ்ஞ வாத்தியார்ரே! நீஞ்ஞ ன்னா வெல சொன்னாலும் அதுக்குக் கட்டுப்படறேம்!"ங்றாரு
சுப்பு வாத்தியாரு.
"இந்தாரும்யா ஆச்சாரி! ஆறாயிரத்து
ஐநூத்துக்கு வாங்க ஆளு கையில காசோட நிக்குது. தெரிஞ்ச சங்கதி அது. இப்போ வாங்க நிக்குறதுக்கு
ஒஞ்ஞ ஆளு. அதால ஒரு முந்நூத்த கொறைச்சி ஆறாயிரத்து எரநூத்துக்கு முடிச்சிக் கொடுத்துப்புடும்
வே! இந்தாருங்க வாத்தியார்ரே! வெல கூடுதலா போச்சுன்னு நெனைக்க வாணாம். ஒஞ்ஞ ஆளுத்தாம்.
ஒரு ஒதவியதா நெனைச்சுக்குங்க. வெல ரண்டு பக்கத்துக்கும் சரிதானான்னு ஆளாளுக்குச் சொல்லுங்க.
மேக்கோண்டு பேசுவேம்!"ங்றாரு மோகனசுந்தரம் வாத்தியாரு.
"அதென்ன அப்பிடிச் சொல்லிப்புட்டீங்க
வாத்தியார்ரே! இந்த எடத்துக்கு காக்காசுதான்னு நீஞ்ஞ சொன்னாலும் அதெ வாங்கிட்டுப்
போற ஆளு நாம்ம. போதும் நீஞ்ஞ முடிச்சத்ததும் செரி. அதிகமும் ஆசப் படக் கூடாதுன்னு
இந்த ஆச்சாரிக்குத் தெரியும். அப்படியே முடிச்சிக்கிடலாம்."ங்றாரு கோவாலு ஆச்சாரி.
"அதில்லீங்க வாத்தியாரய்யா! ஆறாயிரத்து
ஐநூத்துக்கு கேக்குற மனையெ முந்நூத்த கொறைச்சி முடிக்கிறது சரியாப் படலே. ஆறாயிரத்து
ஐநூத்தோட இன்னும் ஐநூத்த சேத்து ஏழாயிரத்துக்கு முடிச்சிப்பேம்!"ங்றாரு சுப்பு
வாத்தியாரு.
"அட்றா சக்கே! சாதிக்கார ஆளுங்கன்னா
விட்டுக் கொடுத்துக்குவீயாள்ளய்யா! இதுக்கு நாம்ம பேசி முடிக்க வந்தேம் பாரு! எம்மட
புத்தியத்தாம் சோட்டால அடிச்சிக்கணும். சந்தோஷமாப் போச்சு. இருந்தாலும் நாளைக்கு
மோகனசுந்தரம் வாத்தி பேசி வுட்டான்னு ஒம்மட மாமனாரு வைத்தி ஆச்சாரி வந்து எம்மட வூட்டுல
நின்னுப்புட கூடாது பாருங்கய்யா வாத்தியார்ரே! ஆறாயிரத்து ஐநூத்தோட ஒரு நூத்த சேத்து
ஆறாயிரத்து அறுநூத்தா முடிச்சிக்குங்க. அதாஞ் செரி. மோகனசுந்தரம் வாத்தி பேசிட்டான்னா
அதுல குறுக்கால இன்னொரு ஆளு பூந்துப் பேசிடக் கூடாது வே! ரண்டு பேத்துக்கும்தாம் சொல்றேம்வே"ங்றாரு
மோகனசுந்தரம் வாத்தியாரு.
கோவாலு ஆச்சாரியும், சுப்பு வாத்தியாரும்
அதுக்குச் சம்மதிச்சாப்புல தலைய ஆட்டுறாங்க. பெறவு மோகனசுந்தரம் வாத்தியார்ரே பேசுறாரு,
"காலத்தப் போட்டு வளத்த வாணாம். எம்மாம் சீக்கிரம் காசக் கொடுத்து வாங்கிக்
கெரயத்த முடிச்சிக்கணுமோ அம்மாம் சீக்கிரம் முடிச்சிக்கிடலாம்."ங்றாரு மோகனசுந்தரம்
வாத்தியாரு.
"செரிதாங்க!"ன்னு சொல்லிப்புட்டு
உத்தரவ வாங்கிக்கிட்டு கெளம்புறாரு சுப்பு வாத்தியாரு. மறுநாளே வைத்தி தாத்தா, லாலு
மாமா, சுப்பு வாத்தியாரு, கோவாலு ஆச்சாரி எல்லாத்தையும் கொண்டாந்து வெச்சி பேசுன விசயத்தை ஒரு டிம்மி பேப்பர்ல
எழுதி கையெழுத்த வாங்கி எரநூத்துப் பணத்த முன்பணமா வாங்கிக் கொடுத்து அக்ரிமெண்டு
வேலையை முடிச்சிடுறாரு மோகனசுந்தரம் வாத்தியாரு.
சுப்பு வாத்தியாரு தைரியமா இப்படிப் பண்ணிட்டாரே
தவிர அவரு கையில ரெண்டாயிரத்துக்கும் கொறைச்சலா ஆயிரத்து ஐநூத்துதாம் சேர்த்து வெச்சதுல
காசு இருக்கு. ஒழுகச்சேரியில வேலை பாத்தப்போ திருப்பனந்தாள் போஸ்ட் ஆபீஸ்ல போட்டு
வெச்ச வகையில அறுநூத்து ரூவா தேரும். மித்தபடி ஐயாயிரத்த சுப்பு வாத்தியாரு கடன ஒடன
வாங்கித்தாம் தேத்த வேண்டிய நிலையில இருந்தாரு.
*****
No comments:
Post a Comment