13 Dec 2019

20.4



            தமிழய்யா பின்வருமாறு தொடர்கிறார்.
            கல்வி பிழைப்புக்கு வழிகாட்ட வேண்டும். பிழைப்புக்கு மட்டுமேயல்ல.

            வேலை வேறுபடுத்துகிறது. வேலையை வைத்து இன்னார் என்று சொல்வது வழக்கமாகி பழக்கமாகி விட்டது. அந்த வேலையை இப்போது தருவது கல்வி என்றாகி விட்டது. வேலை என்ற ஒன்றோடு தொடர்பு இல்லாவிட்டால் படிப்பதில் இவ்வளவு ஆர்வம் நிலவப் போவதில்லை.
            நற்குடிமகன் என்ற அடையாளத்தைக் கல்வி தர வேண்டும்.
            வாழ்வில் ஆக்கம் பெற, புதிய புனைவுகளை உருவாக்க, நல்லவை அல்லவை அறிய, ஒத்து வாழ, கேடு விளைவிக்காது வாழ, வளமான சுற்றுச்சூழலை தலைமுறைக்கு மடைமாற்றம் செய்ய, எண்ணித் துணிய, அழகைத் துய்க்க, உறவுகளை வளர்த்தெடுக்க, மரபுகளைக் காபந்து செய்ய, பகுத்துண்ண, தன்னுடல் பேண, தன்னைப் போல பிறரை நினைக்க, கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்து எதிர்காலத்தில் தடம் பதிக்க கல்வியானது உணர்வையும், உத்வேகத்தையும் தர வேண்டும்.
            உழைத்து ஊதியம் ஈட்ட, மக்களாட்சியை மதிக்க, பொருளாதாரத்தைக் கையாள, தோழமையை மதிக்க, பெற்றோர்களையும் மற்றோர்களையும் காக்க, உற்றோர்களை உயிரெனக் கொள்ள கல்விதான் ஏதாவது செய்ய வேண்டும். நம்மிடம் உள்ள கடைசி நம்பிக்கை கல்வி மட்டுமே.
            தற்சார்புடைய மனிதரை உருவாக்க கல்வி பொறுப்பேற்க வேண்டும். வளமான உள்ளம், நலமான எண்ணம் கொண்டோரைக் கல்விதான் உருவாக்க வேண்டும். உயர்வான நோக்கங்களை உறைவிடமாய்க் கொள்ள கல்விதான் மனிதகுலத்துக்கு துணை நிற்க வேண்டும் என்ற அளவில் தமிழய்யா பேசி முடித்ததும் விகடு அவன் பங்கிற்குப் பேசுவதற்காக அழைக்கப்படுகிறான். இன்றைய கூட்டத்தின் கடைசிப் பேச்சாளன் அவன்தான்.
            கித்தாஸைத் தனியே விட்டு விட்டு கூட்டத்தில் சென்று பேச அவனுக்குத் தயக்கமாக இருக்கிறது. அதை உணரந்து கொள்கின்ற கித்தாஸ் போய் பேசி விட்டு வருமாறு கண்களால் சைகை காட்டுகிறார். இன்னொரு கூட்டத்தில் பேசிக் கொள்ளலாம் என்பது போல தூரத்திலிருந்தே விகடு கை காட்டுகிறான். வலுகட்டாயமாய் கித்தாஸ் இப்போது அவன் முதுகு மேல் கை வைத்துத் தள்ளுகிறார். வேறு வழியின்றி விகடு செல்கிறான்.
            கூட்டத்தைப் பார்ப்பதை விட கித்தாஸை மட்டும் பார்த்துக் கொண்டபடி விகடு பேசத் துவங்குகிறான், "நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த பருவ காலம் இப்போது இல்லை. பருவ காலத்தில் விடாது பெய்த அடை மழை இப்போது ஒரு சில நாட்களில் தன் வேலையை முடித்துக் கொண்டு வெள்ளமாய் விரைந்தோடுகிறது. இப்போதைய வெள்ளம் அப்போது இருந்ததோ என்னவோ! வடிகால் வாய்க்கால்கள் முறையாய் இருந்த அந்தக் காலக்கட்டத்தில் வெள்ளத்திற்கு ஓட வழி தெரிந்திருக்கிறது. இப்போது வடிகால்களை, வாய்க்கால்களைக் கண்டால் அதைக் கண்டுபிடித்தவர்க்குத்தாம் நோபல் பரிசைக் கொடுக்க வேண்டும்.
            அந்தக் காலத்தில் பீர்க்கம் பூ பூக்குமாம். கார்மேகம் சூழ்ந்திருக்கும் அந்தப் பொழுதுகளில் இரவுக்கும், பகலுக்கும் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாதாம். இப்போது போல கடிகாரங்கள் அப்போது பயன்பாட்டில் கிடையாதாம். பொழுது சாய்ந்தது என்பதைப் பீர்க்கம் பூப்பதை வைத்து கண்டுபிடித்திருக்கிறார்களாம். அது சரி! பீர்க்கம் பூத்தால் மணி எத்தனை என்று தெரியுமா? பீர்க்கைப் பூக்க வைத்து கடிகாரத்தை அருகில் வைத்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
            அந்தக் காலத்தில் ஆட்டுக்கல்லில் அரைத்தார்கள். இந்தக் காலத்தில் கிரிலில் சுற்றும் சிக்கனை வாங்கிக் கொண்டு தோசை மாவை பாலிதீன் பையில் வாங்கிக் கொண்டு போகிறார்கள்.
            அந்தக் காலத்தில் வாகனங்கள் இன்றி வேறு வழியில்லாமல் நடந்து சென்றார்கள். இந்தக் காலத்திலும் செரிப்பதற்கு வழியின்றி வேறு வழியில்லாமல் சுகருக்காக நடக்கிறார்கள். வீட்டுக்கு வெளியே சைக்கிள் ஓட்டியவர் அந்தக் காலத்து மனிதர். சுகருக்காக வீட்டுக்குள்ளேயே சைக்கிள் ஓட்டுபவர் இந்தக் காலத்து மனிதர்.
            உணவை மருந்தைப் போல உண்டதும், மருந்தை உணவைப் போல உண்டதும் என்று காலத்துக்குக் காலம் மனிதர்கள் மாறுபடுகிறார்கள்.
            மனிதர் ஒருவர்தாம். காலம் அவர்களைப் புரட்டிப் போடுகிறது..." பேசிக் கொண்டே கொஞ்ச நேரம் வரை கித்தாஸைப் பார்த்துக் கொண்டிருந்த விகடு, நேரமானது கொஞ்சம் பேச்சைக் கடத்தியதில், பேச்சு சுவாரசியத்தில் கித்தாஸைக் கவனிக்க மறந்த நேரத்தில் கித்தாஸ் நின்ற இடத்தில் வெற்றிடம் நின்று கொண்டிருக்கிறது.
*****


No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...