12 Dec 2019

‍அவிழ்ந்த வேட்டி மவன் கையில!



செய்யு - 296
            எங்க போனாலும் கோண்டுபுள்ள மாதிரி வேட்டியைப் பிடிச்சுக்கிட்டு சுப்பு வாத்தியாரோட போவ ஆரம்பிச்சிட்டான் விகடு. ஒரு நிமிஷ நேரத்துக்கு அவ்வேம் அப்பார்ர பிரிஞ்சி இருக்குறதில்ல. அதுலயும் சைக்கிள எடுத்துட்டா போதும். அவனெ விட்டுட்டுப் போனா கத்தி நாலு ஊரைக் கூட்டிடுவாம் போலருக்கு. வேற வழியில்லாம சுப்பு வாத்தியாரும் கங்காரு குட்டியை வயித்துல வெச்சு தூக்கிட்டுப் போற மாதிரி, அவனெ சைக்கிளு கேரியர்ல வெச்சு தூக்கிட்டுப் போறாரு. சைக்கிளு கேரியர்ல வெச்சு கொண்டுட்டுப் போனா சீட்டை நல்லா கெட்டியா பிடிச்சிக்கிறவன், சைக்கிள விட்டு எறக்குனா அப்பாரோட வேட்டியை நல்லா கெட்டியா பிடிச்சிப்பான். சுப்பு வாத்தியாருக்கு அதால ஒரு கவலெ இல்ல. இவனெ அழைச்சிட்டுப் போறப்ப கவனிக்காம விட்டு அந்தாண்ட இந்தாண்ட போயிடுவாங்ற பயமெல்லாம் இல்ல. அப்பாங்காரரோட வேட்டியைப் பிடிச்சிட்டே நிக்குற பய எங்க போயிடுவாம்? வேட்டி அவிழ்ந்துப் போனாத்தாம் பெரச்சன. வேட்டி அவிழ்ந்தாத்தாம் உடுக்கை இழந்தவங்ற கை போலன்னு வள்ளுவரு சொல்லிருக்குற மாதிரி கையி தானா போயி பிடிச்சிடும் இல்லையா. அதால விகடுவெ வெளியில கொண்டுட்டுப் போனா புள்ளை மேல கவனம் வெச்சிக்கிறத விட வேட்டி மேல கவனம் வெச்சிக்கிட்டு இருந்தா போதுங்றது சுப்பு வாத்தியாருக்கு ஒரு நெனைப்பு.

            அன்னிக்கு சாயுங்காலம் ஓகையூரு பள்ளியோடம் விட்டு வந்தவரு இவனெ வூட்டுல எறக்கி விட்டுப்புட்டு, வெங்கு போட்டு வெச்சிருந்த டீத்தண்ணிய கொஞ்சம் குடிச்சுப்புட்டு, வூட்டுக்குத் தேவையான மளிகைச் சாமானுங்கள வாங்கிட்டு வந்துப்புடுவோம்னு கடைத்தெரு பக்கமா கெளம்புறாரு. அம்மாம் நேரம் அப்பங்காரரோட பள்ளியோடம் போய்ட்டு வந்து அவரோட இருந்த பயதானே. கொஞ்ச நேரம் வூட்டுல அம்மாக்காரியோட இருக்கப் பிடிக்காம கடைக்குக் கெளம்புற அப்பங்காரரோட கெளம்புணும்னு அடம் பிடிச்சிட்டு நிக்குறாம் வெகடு பயெ.
            சரிதாம் வூடு கடைத்தெரு எல்லாம் ஒண்ணுதானே. கடைத்தெருவுல ஒரு வூட்டுலத்தானே அவங்க இப்போ குடியிருக்கிறாங்க. சரி நடையைக் கட்டிக்கிட்டுப் போயி இவனையும் தூக்கிட்டுப் போயி வாங்கி வருவோம்னு கெளம்புனா, இந்த விகடு பயெ சைக்கிள்லதாம் போவணும்னு அடம் பண்றாம். ஒண்ணுஞ் சொல்ல முடியாம சைக்கிள எடுத்துக்கிட்டு இவனெ தூக்கி கேரியர்ல வெச்சுக்கிட்டு, காடாத்துணி பையொண்ண முன்னால ஹேண்டில்பார்ல மாட்டிக்கிட்டு கெளம்புறாரு சுப்பு வாத்தியாரு.
            வடவாதிக் கடைத்தெருவுல மாடக்கண்ணு மளிகைக் கடையிலத்தாம் சாமானுங்கள வாங்குவாரு சுப்பு வாத்தியாரு. அது இவரு குடியிருந்த கடைத்தெரு மத்தியிலேர்ந்து கெழக்கால கடைத்தெருவோட கடைசியில இருந்துச்சு. ஒரு நூறடி தூரம் போயாவணும். அதுக்கு சைக்கிள மிதிச்சிட்டு வந்து எறங்குறாரு.
            மாடக்கண்ணு மளிகையோட ஓனரு மாடக்கண்ணு தெக்கத்தி ஆளு. வடவாதி சர்க்கரை ஆலைய நம்பி பொழைக்க வந்த ஆளுங்கள்ல அவரும் ஒருத்தரு. பொழைக்க வந்த அவரு அவரோட தம்பியையும் கூட அழைச்சுக்கிட்டுத்தாம் வந்தாரு. அண்ணணும், தம்பியுமா நாக்கியரு கடையில பொட்டணம் போடுற வேலையில சேர்ந்துப்புட்டாங்க. சேர்ந்தப்போ அவருக்கு மாசக்கூலி முப்பது ரூவா, அவரோட தம்பிக்கு மாசக்கூலி இருவது ரூவா. அந்த ஐம்பது ரூவாக்குள்ள மாசத்த ரெண்டு பேரும் ஓட்டியாவணும். இந்த அம்பது ரூவாய்க்காகவா அங்கேயிருந்து இங்க வந்தோம்னு மாடக்கண்ணுக்கு வெறுத்துப் போயிடுச்சி. அந்த வெறுப்போட அவரோட அப்பங்காரருக்கு, அம்பவது ரூவா சம்பளத்துக்கு கடையில பொட்டணம் போட்டுக்கிட்டு கெடக்கிறது இருக்கிறது செரமமா இருக்குன்னும், வேற வேலைக்கு மாறலாம்னு இருக்கிறதாவும் ஒரு கடுதாசி போட்டிருக்காரு. கடுதாசிய படிச்சுப் பார்த்த அப்பங்காரரு அதுக்கு கூலி கம்மியா இருந்தாலும் பரவாயில்ல, அந்தக் கடையிலயே அணுக்கமா இருந்து, நுணுக்கமா தொழில கத்துக்கடான்னு பதிலு கடுதாசியப் போட்டிருக்கிறாரு.
            அப்பங்காரரு சொன்னதே வேதம்னு மாடக்கண்ணு பல்ல கடிச்சுக்கிட்டு அண்ணணுக்கும், தம்பிக்கும்மான அம்பது ரூவா கூலியிலயே ரண்டு வருஷத்த ஓட்டியிருக்காங்க. அந்த அம்பது ரூவாய்லயே எம்மாம் காசை மிச்சம் பிடிக்க முடியுமோ அம்மாங்க காசை மிச்சம் பிடிச்சு‍ சேர்த்து வெச்சு, கடைக்கு சரக்கு எடுக்கப் போற எடங்கள்ல அங்க இருக்குற ஆளுங்கள சிநேகம் பிடிச்சு அடுத்த ரெண்டு வருஷத்துல தனியா கடையப் போடுற அளவுக்கு சாமர்த்தியம் பண்ணிக்கிட்டாங்க. வேலைக்கு சேர்ந்த ரெண்டே வருஷத்துல தனியா கடையப் போடப் போறோம்னு அவுங்க வேலை பார்த்த நாக்கியர்க்கிட்ட போயி நின்னப்போ அவரும் கொஞ்சம் காசு பணத்தைத் தந்து அதுக்கு உதவி பண்ணி அவரே வந்து வடவாதிக் கடைத்தெருவோட கெழக்கால கடைக்கோடியில்ல அவங்க போட்டிருந்த கடையைத் தெறந்தும் வெச்சுக் கொடுத்துட்டுப் போனாரு. அன்னைக்குத் தொடங்குன அவங்க முன்னேத்தம் கடை ஓகோன்னு போற அளவுக்கு அண்ணணும், தம்பியுமா மாத்தி மாத்தி ராப்பகலு பாராம கடையைத் திறந்து வெச்சி பேரு சொல்ற மளிகைக் கடையா கொண்டாந்துட்டாங்க.
            வடவாதி கடைத்தெருவுல காலங்காத்தால அஞ்சரை மணிக்கெல்லாம் டீக்கடை கணக்கா மொதல்ல தொறக்குற மளிகைக் கடை மாடக்கண்ணு மளிகைக் கடைத்தாம். மதியான இடைவெளியெல்லாம் அந்தக் கடைக்குக் கிடையாது. அண்ணன் தம்பி மாத்தி மாத்தி ஷிப்ட்டு போட்டுக்கிட்டு யாராச்சிம் ஒருத்தரு கடையில இருப்பாங்க. ராத்திரி கடைசியா பத்து மணி வாக்குல மூடுற கடையும் அதுதாம். இன்னிய வரைக்கும் கடை பெரிசா வளந்துட்டாலும் கடைக்குக் கையாளுங்க இல்லாத ஒரே கடை அதுதாம். அண்ணன், தம்பி ரெண்டு பேரும்தான் கடையோட மொதலாளிங்க, தொழிலாளிங்க, கையாளுங்க, சரக்கு எடுக்கப் போறவங்க, கல்லால காசை வாங்கிப் போடுறவங்க எல்லாமும். கடை தெறந்ததிலேந்து பத்து மணி வரைக்கும் கடையில அண்ணன் தம்பி ரண்டு பேரும் இருப்பாங்க. பத்து மணிக்கு மேல மத்தியானச் சாப்பாடு வரைக்கும் அண்ணன் இருப்பாரு. பத்து மணி வாக்குலேந்து மத்தியானச் சாப்பாடு வரைக்கும் தம்பிக்காரருக்கு ரெஸ்ட்டு. மத்தியானச் சாப்பாட்டு முடிச்சிட்டு தம்பி வந்தார்ன்னா, மத்தியானச் சாப்பாட்டுலேந்து சாயுங்காலம் நாலரை வரைக்கும் அண்ணங்காரருக்கு ரெஸ்ட்டு. நாலரை மணிக்கு டீத்தண்ணிய குடிச்சிட்டு அண்ணங்காரர் வந்தார்ன்னா தம்பிக்காரரோடு சேர்ந்துகிட்டு அண்ணனும் தம்பியுமா கடையை மூடுற வரைக்கும் இருப்பாங்க. அவுங்க கடைக்கு ஞாயித்துக் கெழமை விடுமுறையோ, பொங்கலு, தீபாவளின்னு கடையை மூடுறதெல்லாம் கெடையாது. வருஷத்தோட அத்தனை நாளும் கடை தொறந்துதாம் இருக்கும். கடைதாம் அவங்களோட உலகம். கடையைத் தவிர அவுங்களுக்கு எதுவும் தெரியாது.
            அப்படிக் கடையில ஒழைச்சு அண்ணனும் தம்பியுமா வடவாதிக்குப் கிழக்கால இருக்குற சந்திரபுரத்து தெருவுல எதுக்க எதுக்க இருக்குறாப்புல ரண்டு மனைய வாங்கி, அதுல வூட்டைக் கட்டிக்கிட்டு, தெக்கத்திக்கே போயி அங்க பொண்ண கட்டிக்கிட்டு வந்து குடித்தனம் பண்ணிக்கிட்டு, சந்திரபுரத்துல ரெண்டரை வேலி நெலத்தையும் வாங்கிப் போட்டுருக்காங்கன்ன பாத்துக்குங்களேன்.
            ஆளுங்களுக்குத் தகுந்தாப்புல யேவாரம் பண்றதுல அண்ணன் தம்பி ரண்டு பேருமே கில்லாடிங்க. கடைக்கு வர்ற எந்தச் சரக்கும் தங்காத அளவுக்கு பாத்து பதனமா வாங்கித் தள்ளிக்கிட்டே இருப்பாங்க. எந்த நேரத்துக்குப் போனாலும் சாமானுங்கள வாங்கலாம், வாங்குற சாமானும் புதுச்சரக்கா இருக்குங்றதால மாடக்கண்ணு மளிகைக் கடைக்கு வடவாதியில ஒரு மவுசு உண்டு. எம்மாம் கூட்டம் நின்னாலும், எத்தனை பேரு எவ்வளவு சாமான் வேணும்னு சொன்னாலும் சரித்தாம் மின்னலு வேகத்துல சாமானுங்கள எடுத்துப் போட்டு, அதே மின்னலு வேகத்துல கணக்குப் போட்டு அத்தனை பேரையும் மின்னலு வேகத்துல அனுப்பி வெச்சிடுவாங்க. அதுலயும் மாடக்கண்ணோட தம்பிக்காரரு இருக்காரே பொருள எடுக்குறப்பவே மனசுக்குள்ளேயே கணக்குப் போட்டு முடிச்சிடுவாரு. மாடக்கண்ணு சீட்டுல எழுதித்தாம் கணக்குப் போடுவாரு. அத்தோட அண்ணன், தம்பி ரெண்டு பேருக்கும் கடையில எம்மாம் சரக்கு இருக்கு, எம்மாம் சரக்கு வித்திருக்கு, மீதச் சரக்கு எம்மாம் இருக்குங்றதெல்லாம் கம்ப்யூட்டரு கணக்கா விரலு நுனியில பதிவாயிட்டே இருக்கும். கடைக்கு வர்ற ஆளுங்க கூட கொறைச்ச சரக்க வாங்குற அளவுக்கு ஏற்ப நயமாவும் சரக்கை தட்டி விட்டுக்கிட்டே இருப்பாங்க.

            அவங்களப் பொருத்த வரைக்கும் கடைக்க வர்ற சரக்குக்கு லாபம் கொஞ்சமா இருந்தாலும் கடையில சரக்குத் தங்கக் கூடாது, ரொட்டேஷன் ஆயிட்டே இருக்கணுங்றதுல குறியா இருப்பாங்க. பத்து ரூவா சரக்கை கொஞ்சம் கொஞ்சமா நாலு நாளு வெச்சிருந்து வித்தா பன்னெண்டு ரூவாய்க்கு விக்கலாம்னு இருக்குன்னு வெச்சிக்குங்க, அதே சரக்க ஒரு ரூவா லாபத்துக்கு இன்னிக்கு தட்டி விடலாம்னா அன்னிக்கே தட்டி விட்டுப்புடுவாங்க. அவங்களப் பொருத்த வரைக்கும் அன்னிக்கு வர்ற ஒரு ரூவா லாபமும், சரக்கு கைமாறி போறதும் முக்கியம். நாலு நாளு வெச்சு சரக்கு கைமாறாம கடையில வெச்சிக்கிட்டா இன்னும் கொஞ்சம் சரக்க எடுத்து வெச்சிக்கிறதுக்கான தோது குறையுதுல்லம்பாங்க அவங்க. அவங்க தொழிலு ரகசியம் இதுதான், கடைக்கு சரக்கு வந்த வேகத்துல வாடிக்கையாளுங்க கைக்குப் போய்ட்டே இருக்கணும். 
            அவங்க கடை ஆரம்பிச்சப் பிற்பாடு எத்தனையோ கடைங்க வடவாதிக்கு வந்திடுச்சு. ஆனா மாடக்கண்ணு மளிகைதாம் எப்போதும் டாப்பா இருக்கு. கலியாணம் ஆயி கொழந்தை குட்டிங்க பொறந்த பிற்பாடு அண்ணன் தம்பி ரண்டு பேரும் அதே ஒத்துமையோட கடையை நடத்திட்டுப் போறது ஊருக்குள்ள எல்லாத்துக்கும் அதிசயந்தாம். அதை விட அதிசயம் அண்ணங்காரருக்கு மாடக்கண்ணுன்னு பேரு ஊரறிஞ்ச சங்கதின்னா தம்பிக்காரருக்கு என்ன பேருங்கறதே ஊருல யாருக்குமே தெரியாது. ஊர்ல எல்லாத்துக்கும் அவரு மாடக்கண்ணு தம்பித்தாம். அவருக்குக் கலியாணம் ஆயி கொழந்தைக் குட்டிங்க பொறந்த பிற்பாடும் மாடக்கண்ணுவோட தம்பிங்றதுதாம் அவரு பேரா ஆயிப் போச்சு. தன்னோட பேரு கூட வெளியில தெரியலயேன்னு அவரும் எதுவும் நினைச்சுக்காம இருக்காரு பாருங்க அந்த ஒத்துமை அவங்களோட பலம்னும் சொல்லலாம்.
            அந்த கடைக்கு முன்னாடித்தாம் சுப்பு வாத்தியாரு சைக்கிள நிப்பாட்டி எறங்குறாரு. அவரு ஒரு புள்ளைப்பூச்சியையும்ல சைக்கிளு கேரியர்ல பிள்ளையாண்டாங்ற ரூபத்துல கட்டிக்கிட்டு வர்றாரு. அந்த விகடு பயலே எறக்கி விட்டா எறக்கி விட்டதும் அவன் அவரோட வேட்டியைப் பிடிச்சுக்கிட்டு அவரு கடைத்தெருவுக்குப் போற வேகத்துக்கு அவனும் போக முயற்சிப் பண்ணுறாம். ஆனா பாருங்க! கடைக்கு முன்னாடி கொஞ்சம் கூட்டமாத்தாம் நிக்குது. சுப்பு வாத்தியாரு அதுல புகுந்து வேகமா போறாரு. இவ்வேம் சின்ன புள்ளை இல்லையா. நாலு வயசுக்கும் கொஞ்சம் கம்மி. அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்துப் போக முடியல. சரிதான்னு வேட்டியைப் பிடிச்சப் பிடியையும் விட முடியல.
            சுப்பு வாத்தியாரு வேட்டியைப் பிடிச்சா அவனுக்குப் புளியங்கொம்ப பிடிச்ச மாதிரித்தாம். சுப்பு வாத்தியாரும் வேட்டியைக் கட்டி வாருல்லாம் போட மாட்டாரு. வேட்டியைக் கட்டுனா வீடு திரும்பி அவுக்குற வரைக்கும் மறுகட்டு கட்டாத அளவுக்கு வாரெல்லாம் கட்டாம அரையில தங்கணுங்றது அவருக்கு மட்டுமில்லாம கிராமத்துல வேட்டிக் கட்டுற ஒவ்வொருத்தரோட லட்சிய சங்கல்பம்னே சொல்லலாம். என்னத்தாம் வேட்டிய அப்படிக் கட்டியிருந்தாலும் வேட்டியைப் பிடிச்சு இழுக்குறப்ப என்னா ஆவும் சொல்லுங்க. சுப்பு வாத்தியாரு வேக வேகமா மளிகைச் சாமானுங்கள வாங்கிட்டுக் கெளம்பிடுவோம்னு முன்னால விடுவிடுன்னு போறாரு. விகடு பொடிப் பயெ பெரிய பெரிய மனுஷங்கள நிக்குறப் பாத்துட்டு வேட்டியை மட்டும் நல்லா இறுக்கப் பிடிச்சுக்கிட்டு முழிச்சுக்கிட்டு மெதுவா போனவன் ஒரு கட்டத்துல அப்படியே நின்னுடுறான். வேட்டியோட பிடிய மட்டும் விடல. பிறவு என்ன நடந்திருக்கும்னு இதுக்கு மேல சொல்லணுமா?
            சுப்பு வாத்தியாரு வேட்டியில்லாம கடைக்கு முன்னாடி போறாரு. அவரோட வேட்டி விகடுப் பயெ கையில பிடிச்சாப் பிடியில அப்படியே இருக்கு. கடைக்கு அந்தப் பக்கம், இந்தப் பக்கம் நின்னவங்க, சாமான் வாங்க நின்னவங்க எல்லாரும் கொல்லுன்னு சிரிச்சுட்டாங்க இதெப் பாத்துப்புட்டு. எல்லாரும் சிரிக்கிறப்பத்தாம் சுப்பு வாத்தியாருக்குக் கொஞ்சம் பிரக்ஞை வந்து நிலமை புரியுது. இது என்னடா உடுக்கை இழந்தவன் கை போலன்னு வள்ளுவரு சொன்னதையுத் தாண்டி ஏதோ ஞாபவத்துல இந்தக் கையி அவிழ்ந்த வேட்டியைப் பிடிக்காம, காலு பாட்டுக்கு நாலடி தூரம் வந்திடுச்சேன்னு அவருக்கு தர்ம சங்கடமா போயிடுச்சு. ஆனா அவிழ்ந்த வேட்டி அடிச்சக் காத்துல அந்தாண்ட இந்தாண்ட போவாம தரையில கெடக்கு. அதோட மறுமுனை ரொம்ப பத்திரமா விகடு பயலோட பிடியில இருக்கு. அவருக்கு ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னு புரியாம நிலைகுழைச்சுப் போயிடுது.
            அந்த நேரத்துல கடையோரத்துல மூக்குப்போடி வாங்கி அதெ உறிஞ்சுகிட்டு இருக்குறாரு திட்டையில வேலை பாத்து ரிட்டையர்டு ஆயிட்ட மோகனசுந்தரம் வாத்தியாரு. அவருக்கு மூக்குப்போடி போடுற பழக்கம் உண்டு. இதுக்குன்னே அவரு சாயுங்கால நேரத்துல கெளம்பி மாடக்கண்ணு மளிகைக் கடை பக்கம் வந்திடுவாரு. அவர்ர பாத்ததும் பட்டணம் பொடி டப்பாவுலேந்து பொடியைத் தாளுல்ல கொட்டி மடிச்சி டக்குன்னு கொடுத்துடணும். அவரு அதெ வாங்கிட்டு கடையோரத்துக்குப் போயிப் போட்டுட்டு நிப்பாரு. போட்டு முடிச்சதும் கடைத்தெருவுல நின்னு அரைமணி‍ நேரத்துக்கு மேல பேசிப்புட்டுத்தாம் அதுக்குப் பிற்பாடு காசைக் கொடுத்துப்புட்டு வீட்டுக்குக் கெளம்புவாரு. அவருக்கு அப்படி ஒரு பழக்கம்.
            அவரு மூக்குப் பொடிய பொட்டுக்கிட்டு அச் போட்டுக்கிட்டு இருக்குற அந்த நேரத்துலத்தாம் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சுப்பு வாத்தியாரோட வேட்டி அவிழ்ந்த சம்பவம் நடக்குது. அச் போட்டுக்கிட்டும், அதே நேரத்துல இதெப் பாத்துப்புட்ட வர்ற சிரிப்ப நிப்பாட்டவும் முடியாம சங்கடப்பட்டு போன மோகனசுந்தரம் வாத்தியாரு ஓடிப் போயி விகடு பயலோட கையில இருக்குற வேட்டியை உருவப் பாக்குறாரு. அவன் விடாக் கொண்டன் கொடாக் கொண்டன் கணக்கா வேட்டியைப் பிடிச்சுக்கிட்டு இருக்கான். சரி அவன் கையிலேந்து வேட்டியைப் பிடுங்க முடியாதுன்னு அவன அப்படியே கொத்தா அள்ளித் தூக்கிக்கிட்டு வேட்டியைக் கொண்டாந்து அதெ அப்படியே சுப்பு வாத்தியாருட்ட கொடுக்குறாரு. அப்பங்காரரை கண்ணால பாத்ததும்தான் விகடு பயெ வேட்டிப் பிடியை விடுறாம்.
            பட்டா பட்டி டிராயரோட நிக்குற சுப்பு வாத்தியாரு வேக வேகமா வேட்டியைக் கட்டிக்கிறாரு. சுப்பு வாத்தியாரு வேட்டியைக் கட்டிய முடிச்சதும், "என்னம்யா வாத்தியார்ரே! பயெ வேட்டியை அவுத்து வுடுறதப் பாத்தா அன்ட்ராயரையும் உருவிடுவாம் போலருக்கே! நம்ம எடத்துக்கு ஒம்மள கொண்டு போயி திட்டைப் பள்ளியோடத்துல வெச்சிடலாம்னு பாத்தா இப்பிடி வேட்டிய விட்டுப்புட்டு நிக்குதீரே வே!"ன்னே சொல்லிச் சிரிக்கிறாரு மோகனசுந்தரம் வாத்தியாரு.
            "சரியான அப்பாக்கோண்டா இருக்காம். அந்தாண்ட இந்தாண்ட வுட மாட்டேங்றாம். வேட்டியைப் பிடிச்சுக்கிட்டே நிக்குறாம். சித்தே இருடா வூட்டுல, மளிக சாமானுங்கள வாங்கிட்டு வர்றேன்னா கேக்க மாட்டேங்றாம். அழுது அடம் பண்ணி இப்போ இந்த வேல பாத்துட்டு நிக்குறாம்!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "செரி விடும்யா! சின்ன புள்ளத்தானே! எலே பயலே! ஒமக்கு என்னடா மிட்டாயி வேணும்? மிட்டாயி வேணுமா? சாக்குலேட்டு வேணுமா? ஏம்யா மாடக்கண்ணு பயலுக்குப் பிடிச்சாப்புல எதாச்சிம் கொடும்யா! பெறவு பாத்துக்கலாம் யேவாரத்த!" அப்பிடிங்கிறாரு மோகனசுந்தரம் வாத்தியாரு.
            கடைக்கு முன்னாடி இப்படிச் சம்பவம் நடந்து சனங்க சிரிச்சுக்கிட்டு இருக்கே! அதுக்காவது ஒரு சிரிப்பு சிரிக்கணுமே மாடக்கண்ணு. ம்ஹூம்! அவரு பாட்டுக்கு விகடு பய கையில ஒரு சாக்குலேட்ட எடுத்துக் கொடுத்துட்டு அடுத்த யேவாரத்தப் பாக்குறாரு. அதாங் மாடக்கண்ணு. அவரு தம்பித்தாம் கொஞ்ச நேரம் சிரிச்சுக்கிட்டு இருந்தவரு அண்ணங்காரரு யேவாரத்தப் பாக்குறதப் பாத்து அடுத்து நிக்குற ஆளுங்ககிட்ட சாமான் லிஸ்ட்ட வாங்கி யேவாரத்துல எறங்குறாரு.
*****


No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...