12 Dec 2019

20.3



மூன்றாவது கூட்டத்தில் தமிழய்யா பேசியதன் சுருக்கங்கள் :-

            செயலாக்கம் என்பது மனதின் திறன்.
            செயலாக்கமே விளைவுகள்.
            அனுபவம் என்பது திறனும் பழக்கமும்.
            வேகம் என்பது அனுபவத்தின் விளைவு.
            உறுதி என்பது அனுபவ வேகத்தின் குழந்தை.
            உலகில் உறுதியானவை மென்மையாகவே இருக்கும் அமைதியின் குழந்தையாய்.
            தரம் என்பது செயல்திறனில் உண்டாகும் திருப்தி. வடிவமைப்பு என்பது அதுதான்.
            மனித உடலில் இல்லாத உறுப்பு மனம். இல்லாத உறுப்பாகிய மனம் இருக்கின்ற உறுப்புகளை எல்லாம் பாதிக்கும்.
            மனம் என்பது மூளையின் செயல்கள், உணர்ச்சியின் துடிப்புகள், அறிவின் கற்பிதங்கள்.
            உலகில் முதலில் தோன்றிய உயிரினம் ஒரு செல் உயிரி. அதற்குப் பெயரிட்டு மனிதக் கூட்டம் குழப்பி விட்டது. பெயரிட பெயரிட ஆதியில் தோன்றிய உயிரினத்தின் பெயர் மாறிக் கொண்டிருக்குமே தவிர முதலில் தோன்றிய அந்த உயிரி மாறாது. கடவுள் பற்றிய பிரச்சனையிலும் அநேகமாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
            ஒவ்வொரு உயிரியும் இன்னொரு உயிரியைப் பாதிக்கிறது. மனித உயிரியின் பாதிப்பு இதில் அதிகம்.
            உயிரினங்களின் தாக்கம் மனித உயிர்களுக்கு வழிகாட்டல்கள் அல்லது அச்சுறுத்தல்கள்.
            தாய்தான் முதலில் கற்றுக் கொடுக்கிறாள். தந்தை அந்த இடத்தை கவர்ந்து கொள்கிறான் தான்தான் கற்றுக் கொடுத்ததாக. குழந்தை தன் காலில் நிற்கும் வரை தாய்தான் எல்லாம். தாய்தான் ஆசிரியர், இறைவன் எல்லாம் குழந்தைக்கு. உயிரியின் ஆதி பகவன் தாய்தான், தாயன்றி வேறில்லை.
            மனம் எனும் கடலில் ஆயிரமாயிரம் அலைகள் எழுந்து அடங்கும்.
            மனிதர் ஒரு தனிமனிதரல்லர். ஒரு தனிமனிதரும் தனிமனிதரல்லர். ஒவ்வொரு தனிமனிதரும் சமூகம். மனிதனின் மனதைத் திறந்து பிளந்து பார்த்தால் அதுதான் தெரியும். மனிதன் தனித்து இருக்கலாம். அவர் சமூகத்தின் எண்ண ஓட்டத்துடன் இருக்கிறார்.
            கற்றலில் அவர் அடையாளத்தைக் காண்கிறார். தாம் கற்றுக் கொண்ட அடையாளத்தை வைத்து அவர் ஒரு பிரிவை உருவாக்குகிறார். அது சாதியாக இருக்கலாம். மதமாக இருக்கலாம். கலாச்சாராமாக இருக்கலாம். கன்றாவியாக இருக்கலாம். ஆதியில் கற்ற அடையாளத்துக்குப் பின் அவர் நிறையக் கற்றாலும் ஆதியில் கற்றதை வைத்து அவர் தம்பட்டம் அடிக்கவே செய்வர்.
            கற்றதை எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தும் போது கிளியின் உடல் பச்சையாகவும், மூக்கு சிவப்பாகவும் இருக்கும். பஞ்சவர்ணக் கிளி பச்சைக்கிளியின் பொதுமைத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்தும். ஆனால் கற்காத உயிரினம் ஏது?
            கற்றலை அறியும் மனம் கோபுரம். அது உயர்ந்து நிற்கும். ஒரு கட்டத்திற்கு மேல் புறந்தள்ளுதலில் உண்டாகும் தெளிவு.
            தெளிவின் விளைவு பக்குவம் ஆகும். பக்குவப்படாத மனம் துன்பத்தின் கைக்குழந்தை. துன்பத்தின் ஊஞ்சலில் அது ஆடும்.
            பல உதாரணங்கள், முக்கால நிகழ்வுகள் மனதின் முன் நிற்கின்றன. தடம் பார்க்கும் மனிதனுக்கு உதாரண புருஷர்கள் இருக்கிறார்கள்.
            புடம் போடப்பட்ட பழக்க வழக்கங்கள் சமூகத்திற்கு உதவக் கூடும்.
            குடத்தின் நீர் ஒவ்வொரு துளிகளால் ஆனது. மனம் பல்வேறு அனுபவங்களால் ஆனது.
            வளமான உடல் மாளிகை.
            நோயுண்ட உடல் சிறை.
            கடைசியில் உடல்தான் ஞானம். உடல்தான் அறிவு. உடல்தான் மனம். உடல்தான் எல்லாம். உடலுக்கு வெளியே மனம் துருத்திக் கொண்டிருக்கலாம். உடல் அதை வென்று விடும் காலம் வரும்.
            தமிழய்யா பெருமூச்சு விட்டுக் கொள்கிறார். தான் கேட்டதி‍லேயே அதி அற்புதமான உரை என்கிறார் இதை கித்தாஸ். கித்தாஸ் அப்படிச் சொல்லும் போதே தொண்டையைச் செருமிக் கொண்டு மேலும் தொடர்கிறார் தமிழய்யா.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...