11 Dec 2019

கொறடுல கிள்ளுனா கிள்ளுறவங்க கை வலிக்காது!



செய்யு - 295
            ஒரு மனைக்கட்டு வாங்குறதுல நெறைய கணக்குப் பார்ப்பாங்க கிராமத்துல இருக்குறவங்க. அந்த மனைக்கட்டுல குத்தலான மனைக்கட்டா, யில்ல தோஷமான மனைக்கட்டா, வாஸ்து அது இதுன்னு சரிபட்டு வருதான்னு ஆயிரத்தெட்டு கணக்குப் பாப்பாங்க. அத்தோட அந்த மனைக்கட்டு வளர்ச்சியான மனைக்கட்டா, யில்ல சூன்யமான மனைக்கட்டான்னா அந்த மனைக்கட்டுல இருந்தவங்கள வெச்சி வம்சக் கணக்கும் பாப்பாங்க. வளர்ச்சியான மனைக்கட்டுன்னா அந்த மனைக்கட்டுல இருந்தவங்க சுபிச்சமா புள்ளைக் குட்டியோட வம்ச விருத்தியோட இருந்திருப்பாங்க. சூன்யமான மனைக்கட்டுன்னா அந்த மனைக்கட்டுல இருந்தவங்க கஷ்டப்பட்டு, சின்னாபின்னப்பட்டு குழந்தை குட்டிங்க இல்லாம வம்ச விருத்தியில்லாம போயிருப்பாங்க. அத்தோட ஒரு மனைக்கட்டுல குடும்பத்துல ஒருத்தரு தற்கொலை பண்ணிட்டு இறந்துட்டாங்கன்னாலும் அதையும் சூன்யமான மனைக்கட்டுல சேர்த்துடுவாங்க. அந்த மாதிரியான மனைக்கட்டுகள ஓசியில கொடுத்தாலும் சரித்தாம், அடி மாட்டு வெலைக்கு வித்தாலும் சரித்தாம் அதெ வாங்கி அதுல குடியிருக்கிறதுக்கு யாரும் வர மாட்டாங்க.

            திட்டையில இப்போ விற்பனைக்கு வந்திருக்குற மனைக்கட்டு நல்ல சுபிட்சமான மனைக்கட்டு. அது ஒரு ஆச்சாரியோட மனைக்கட்டுங்றது சுப்பு வாத்தியாருக்குக் கொஞ்சம் சாதகமா அமைஞ்சுப் போச்சுது. திட்டைக் கிராமத்துலேயே பாரம்பரியமா இருந்தவரு கோவாலு ஆச்சாரி. திட்டை கிராமத்துக்கு அவருதாம் கிராம வேலைப் பாக்குற ஆச்சாரி. கிராம வேலைங்றது கோயிலுக்குத் தேவையான, கிராமத்துக்குத் தேவையான தச்சு வேலை இருந்தா அதைப் பாத்துக் கொடுக்குறது, பொங்கல் வந்துட்டா கிராமத்துல இருக்குற அத்தனை வூடுகளுக்கும் ஆப்பைப் போட்டுக் கொடுக்குறதுங்ற மாதிரியான கிராமத்துக்குப் பொதுவான மரவேலைகள செஞ்சுக் கொடுக்கிறதுதாம். அதுக்கு அப்பைக்கப்ப கூலி கொடுக்க மாட்டாங்க. மொத்தமா வருஷத்துக்கு இத்தனை மூட்டை நெல்லுன்னு அதுக்கு ஒரு கணக்கு வெச்சி நெல்லு மூட்டைகளக் கொண்டாந்து வூட்டுல எறக்கிப்புடுவாங்க.
            திட்டை கிராமம் உருவான காலத்திலேந்து கோவாலு ஆச்சாரி குடும்பம்தான் கிராம வேலைப் பாத்துட்டு இருக்குது. திட்டைக் கிராமத்த உருவாக்குனப்போ அப்படித்தாம் கிராமத்துக்குத் தேவையான கிராம வேலை பாக்குற கொத்தனாரு, ஆச்சாரி, வண்ணான், பரியாரி, கோனாருன்னு பாத்துக் கொண்டாந்து அத்தோட தேவருங்க, நாடாருங்கன்னு சேர்ந்து கிராமத்தை உருவாக்கியிருக்காங்க. இந்த எல்லா வீடுகளும் கலந்து கட்டித்தாம் சுப்பு வாத்தியாரு மனைக்கட்டு வாங்க நெனைக்கிற திட்டைக் கிராமம் இருக்கு. அப்போ கிராமத்த உருவாக்குன காலத்துல அப்படிக் கொண்டாந்து குடி வெச்ச ஆளுங்களுக்கு ஏத்தாப்புல அவங்கவங்களுக்குப் பாத்து மனைக்கட்டுப் பிரிச்சப்போ கிராம வேலை பாக்குற ஆச்சாரிக்குன்னு பிரிச்ச மனைக்கட்டுத்தாம் இப்போ கோவாலு ஆச்சாரி இருக்குற மனைக்கட்டு. அப்போ பிரிச்சுக் கொடுத்தவங்க நல்ல பெரிய மனைக்கட்டாத்தாம் பிரிச்சுக் கொடுத்திருக்காங்க.
            கோவாலு ஆச்சாரியோட அப்பா காலம் வரைக்கும் அது அதெ அளவுல பெரிய மனைக்கட்டா மனைக்கட்டுக்கு நடுவுல வூடாத்தாம் இருந்திருக்கு. அவரோட முன்னத்தி ஆட்கள்லாம் கிராம வேலைப் போக மித்த நேரத்துல வெளிவேலைகளையும் அலைஞ்சித் திரிஞ்சிப் பாத்து நல்லவிதமா குடும்பம் பண்ணிருக்காங்க. இந்தக் கோவாலு ஆச்சாரி கிராம வேலைய மட்டும் பாத்துக்கிட்டு, அதுக்கு வர்ற நெல்லு மூட்டையில மட்டும் காலத்தை ஓட்டிக்கிட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகராம கிடந்ததுல குடும்பத்துல கஷ்டம் உண்டாயிப் போயிருக்கு. சரி குடும்ப கஷ்டத்தைப் போக்குவோம்னு மனைக்கட்டுல கெழக்கால இருந்த எடத்தைக் கொஞ்சம் பிடிச்சி விக்குறது, மேற்கால இருந்த எடத்தைக் ‍கொஞ்சம் பிடிச்சி விக்குறதுன்னு ஆரம்பிச்சாரு. ஒரு வருஷம், ரெண்டு வருஷம் வித்தவருக்கு அதே பழக்கமா போயி வருஷம் வருஷம் வித்ததுல வூடு இருந்த எடத்தை மட்டும்தான் அவரு விக்காம வெச்சிருந்தாரு. மொத்தத்துல அங்க இங்க வித்து அவரு கஷ்டம் இல்லாம காலத்தை ஓட்டிப்புட்டாரு.

            அவரு காலத்துக்கு முன்னாடி வரை எண்பது குழி அளவுக்குப் புஷ்டியா இருந்த மனைக்கட்டு அவரு காலத்துல எளைச்சிப் போயிட்டுன்னுத்தாம் சொல்லணும். அந்த மனைக்கட்டு அப்படியே வாலு மாதிரி பதினெட்டு குழி கணக்குக்கு வந்திடுச்சி. வூட்டுக்குக் கெழக்கால சுத்தமா சந்தே இல்லாத அளவுக்கும், மேற்கால மட்டும் நாலடிக்கு சந்து மட்டும் வெச்சிருந்தாரு. வீட்டுக்குப் பின்னாடி கொஞ்சம் பொழக்கத்துக்கு எடம் இருந்துச்சு. அவ்வளவுதாம் அந்த எடம். ஆளும் கொஞ்சம் அலுப்புப் பிடிச்ச ஆளு. அலுப்புன்னா அலுப்பு அப்படி ஒரு அலுப்பு. புள்ளைங்க எதாச்சிம் தப்புப் பண்ணிப்புட்டா அதுங்களோட கையைப் பிடிச்சி கிள்ளுனா அவரோட கையி வலிக்கும்னு கொறடுல சதையைப் பிடிச்சித் திருவுற ஆளுன்னா நீங்களே பாத்துக்குங்களேன் அவர்ரப் பத்தி.
            ஆளுதாம் அலுப்புப் பிடிச்ச ஆளே தவிர உண்ணுறதுல, உடுத்துறதுல ரொம்ப சோக்கா இருக்கணும்னு நெனைப்பாரு கோவாலு ஆச்சாரி. வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா போட்டுக்கிட்டு வவுத்துல பட்டையா இருக்குற பச்சை பெல்ட்டைக் கட்டிருப்பாரு. அந்த பச்சைப் பெல்ட்டு ஜிப்பாவ தாண்டி நல்லாத் கண்ணுக்குத் தெரியும் அவர பச்சை பெல்ட்டுத்தாம் கட்டியிருக்கார்னு. இந்த உடுத்துற சங்கதி சகிதமா ஆளு ராச கலையோட நடந்துப் போவாரு, வருவாரு. உண்ணுறதுன்னா வாழையிலைப் போட்டுத்தாம் சோறு பரிமாறணும் அவருக்கு. அதுவும் சோறு அப்போ வடிச்சதா இருக்கணும். தொட்டுக்கிறதுக்கு ரண்டு மரக்கறி இருந்தாவணும். பருப்புக் கடைஞ்சி அதைச் சோத்துல போட்டு பெசையுறப்ப ஊத்துறதுக்கு நெய்யி தயார் நெலையில இருக்கணும். ரசம் மோருல்லாம் இல்லாம சாப்பிட மாட்டாருங்றதால அதுவும் தயாரு நெலையில அவரு சாப்பிட சாப்பிட தயாரா இருக்கணும்.
            வாரத்துல சனி, ஞாயிறு ரெண்டு நாளு அசைவ சாப்பாடுத்தாம். சனிக்கிழமை மீனுன்னா, ஞாயித்துக் கெழமை ஆட்டுக்கறித்தாம். புரட்டாசி மாசத்துல மட்டும்தாம் அதுக்கு விடுமுறை கொடுப்பாரு. ஆவணி மாசத்துல ஞாயித்துக் கெழமை மட்டும் அசைவ சாப்பாடு சாப்பிட மாட்டாரு. மித்தபடி சனி ஞாயின்னா அசைவ சாப்பாட்டை வெளுத்துக் கட்டுவாரு கோவாலு ஆச்சாரி. சனி, ஞாயிறு அசைவச் சாப்பாடுன்னா அன்னிக்கு எந்த வேலையோ, வெளி சோலியோ வெச்சிக்க மாட்டாரு. பதினோரு மணி வாக்குலயே நல்லா வெந்நிய வைக்கச் சொல்லி, அதெ ஒனக்கையா ஒடம்புக்குத் தோதா பச்சத் தண்ணிய விட்டு உலாவி விட்டு, எண்ணெய்க் குளியல ஒன்றரை மணி நேரத்துக்கு மேல போடுவாரு. குளியல முடிச்சிப்புட்டு அரையில ஒரு வேட்டியைக் கட்டிக்கிட்டு, மேலுக்கு ஒரு வேட்டியைப் போட்டுக்கிட்டு உக்கார்ந்தார்ன்னா தலைவாழையிலைப் போட்டு ஆவிப் பறக்கச் சோத்தைப் போட்டு ஒவ்வொரு சமாச்சாரமா எலையில அவர சாப்பிட சாப்பிட எறங்கிக்கிட்டே இருக்கணும். அதெ சாப்பிட்டு முடிச்சி அவரு எழுந்திரிக்கிறதுக்கு அது ஒரு ஒன்றரை மணி நேரம் ஆவும். சோத்தையும், வெஞ்சனத்தையும் போடுற குனிஞ்சிக் குனிஞ்சிப் போட்டுகிட்டுக் கெடக்குற பொம்மனாட்டிக்கு இடுப்பொடிஞ்சிப் போயிடும். கோவாலு ஆச்சாரி மாரி சாப்புடுறதுக்கு லோகத்துல ஆளில்லன்னு அது வேற ஊருக்குள்ள ஒரு பேச்சு உண்டு.
            கோவாலு ஆச்சாரிக்கு ஒரு பொண்ணு, நாலு புள்ளைங்க. பொண்ணை திட்டையிலத்தாம் கட்டிக் கொடுத்திருந்தாரு. அப்படி இப்பிடின்னு அங்க இங்க கடன உடன வாங்கி பொண்ணு புள்ளைங்களோட கல்யாணத்தை முடிச்சி கடங்காரங்க தெனமும் வூட்டை நோக்கி படையெடுத்து வர்ற அளவுக்கு கடைசிக் காலத்தைத் தள்ளிட்டு இருந்தாரு கோவாலு ஆச்சாரி. அதெப் பாத்த அவரு பெத்தெடுத்து கல்யாணம் பண்ணி வெச்ச ஆம்பளைப் புள்ளைங்க ஒவ்வொண்ணும் ஆள வுடுடா சாமின்னு கல்யாணம் பண்ணி வெச்ச பொண்ணுங்க ஊரோட, வூட்டோட மருமவனா போயிட்டுங்க. கடைசிக் காலத்துல கோவாலு ஆச்சாரி தானும் பொண்டாட்டியுமாவும், கடன்காரனுங்களுமா காலத்தைக் கழிச்சிட்டு இருந்தாரு. அவர்ர பொண்ணு, புள்ளைங்க வந்து பாக்காம இருந்தாலும் கடனைக் கொடுத்த கடங்காரங்க நித்தமும் வந்து பாத்துக்கிட்டுக் கெடந்தாங்க. கடனெ கொடுக்காம அவரு மேல போயிச் சேந்துடக் கூடாதுன்னு அவங்க ஆண்டவங்ககிட்ட பிரார்த்தனையும் வெச்சிக்கிட்டுக் கெடந்தாங்க.
            இருந்த எடத்தை வித்தாத்தாம் நெலமையைச் சமாளிக்க முடியுங்ற நெலமையில தன்னோட தலையை வித்தா காசு கிடைக்கும்னா அதையும் விக்குறதுக்கு தயாராத்தாம் இருந்தாரு கோவாலு ஆச்சாரி. ஆட்டுத் தலைய, மானு தலைய, புலித் தலைய வாங்குறவங்க மனுஷத் தலைய வாங்குவாங்களா? அதால தலைய விக்க முடியாம செரமபட்டுக் கெடந்துகிட்டு இருந்த கோவாலு ஆச்சாரிக்கு, அவரோட பொண்டாட்டிச் செத்துப் போன பிற்பாடு இனுமே மனைக்கட்டு இருந்தென்ன? இல்லாம போயி என்னன்னு ஒரு மனநிலை உண்டாயிப் போச்சுது. மனைக்கட்டு வித்து கடனைத் தீத்துப்புட்டு புள்ளைங்களோடு போயி இருந்துப்புடலாம்னு முடிவு பண்ணிட்டாரு.
            கோவாலு ஆச்சாரி மனைக்கட்ட விக்கப் போறார்ங்ற சங்கதி தெரிஞ்ச ஒடனே அக்கம் பக்கத்துல மனைக்கட்டுல இருந்தவங்க வாங்கிப் போட்டா உபயோகமா இருக்குமேன்னு கோவாலு ஆச்சாரிய நெருக்க ஆரம்பிச்சிட்டாங்க. கிராமத்துல இருக்குறவங்களுக்குக் கொடுக்காம கண்டகண்ட வெளியாளுக்கு வித்து கண்டகண்ட ஆளையும் கிராமத்துலக் கொண்டாந்து பிரச்சனையை உண்டு பண்ணிடக் கூடாதுன்னு கிராமத்துக் கூட்டத்தைப் போட்டு கோவாலு ஆச்சாரிகிட்டேயும் சொல்லிப்புட்டாங்க திட்டைக் கிராமத்துப் பஞ்சாயத்துக்காரங்க. கிராமத்துல இருந்த ஆளாளுக்கு அந்த எடம் வேணும்னு போட்டிப் போட்டதுல நாலாயிரம் பொறுமானம் உள்ள அந்த எடம் ஐயாயிரம், ஆறாயிரம்னு வெல எகிறிப் ‍போயிடுச்சி.
            வைத்தி தாத்தா கோவாலு ஆச்சாரி நெலத்தை விக்குற சேதி தெரிஞ்சி, திட்டையில இருந்த கோவாலு ஆச்சாரி எடத்தை மருமவனுக்காக நாலாயிரம், நாலாயிரத்து ஐநூறுல எடத்தை முடிச்சிப்புடலாம்னுத்தாம் வந்து விசாரிச்சிக்காரு. வெலை ஆறாயிரம் வரை வாங்குறதுக்குப் பேச்சு நடந்துகிட்டு இருக்குதுன்னு தெரிஞ்சதும் அவருக்கு கப்புன்னு ஆயிப் போயிடுச்சி. போயி சுப்பு வாத்தியார்கிட்ட போயி நெலமையைச் சொல்லி வேற மனைக்கட்டு ஏதும் வாங்குற தோதுக்கு வந்தா பாத்துக்கலாம்னு சொல்லிருக்காரு. சுப்பு வாத்தியாரும் யோசனைப் பண்ணிப் பாத்துப்புட்டு அம்மாம் வெலைக்கு மனைக்கட்டு வாங்கிப் போடுறதுக்கு மாச வாடகை முப்பதோ, நாப்பதோ கொடுத்துப்புட்டு வாடகை வூட்டுலயே காலத்தை ஓட்டிப்புடலாமேன்னு சொல்லிருக்காரு.
*****


No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...