11 Dec 2019

20.2



            மனஆறுதல் என்பது நிரந்தரமானது அன்று. ஒரு பொழுதில் ஆறுதலாகத் தெரிவது, பிறிதொரு பொழுதில் ஆறுதலுக்கு எதிராக மாறி விடும்.

            ஆற்றுப்படுத்தும் சொற்கள் அந்த நேரத்துக்கானவை. அச்சொற்களை என்றென்றைக்குமானதாகக் கொள்ள முடியாது. அமைதியாகக் கேட்பது என்பது அப்படியா? அது என்றென்றைக்கும் ஆறுதலைத் தரக் கூடியது.
            ஒருவருக்கு ஆறுதல் தர வார்த்தைகளால் மெனக்கெட வேண்டியதில்லை. ஆறுதல் சொற்களைத் தேடி அலைய வேண்டியதில்லை. வெறுமனே கேட்டல் என்பது வார்த்தைகளால் அளிக்க முடியாத ஆறுதலை அளிக்கலாம்.
            ஒரு மனிதருக்கு அவர் பேசுவதை அக்கறையோடு கேட்க ஆள் கிடைத்து விட்டால் அவர் மனநலம் பிறழ்ந்து போகாமல் இருப்பாரோ என்னவோ! கித்தாஸ்க்கு அவர் சொன்னதையெல்லாம் கேட்க கேட்க அவரை அறியாமல் அவருக்குப் பிடித்தமானவனாய்ப் போகிறான் விகடு. திடீரென அவர் குழந்தைப் போலாகி கண்ணீர் உகுக்கிறார். தான் மிக மோசமான வார்த்தைகளை பிரயோகித்து விட்டதாக மன்னிப்புக் கேட்கிறார். பேசக் கூடாத பொருளைப் பேசி விட்டதாக எண்ணி ஒரு புழுவைப் போல வளைந்து நெளிந்து குற்ற உணர்வு கொள்கிறார்.
            மூர்க்கமான மனிதர் ஒருவர் அதுவரை இருந்த மூர்க்கம் இழந்து அமைதியாவதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு மனதிலிருந்தும் கொட்ட ஏரளாமக இருக்கிறது. அதைக் கொட்ட முடியாத ஆற்றாமையும், ஏலாமையும்தான் மூர்க்கமாக வெளிப்படுகிறதோ யாரறிவாரோ! அங்கே கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
            மாணிக்கம் ஐயா அங்கே கூட்டத்தில் ஒரு கவிதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அமாவாசை வானம் பொட்டிழந்து, பெளர்ணமி வானம் பொட்டிட்டுக் கொள்வதுதான் மறுமணத்திற்கு முன்னோடியோ என்கிறார். அந்தக் கவிதைக்குச் சிலர் உச் கொட்டுகிறார்கள்.
            மண் தேங்கி மணலாகி, பொன் தேங்கி நகையாகி, கல் தேங்கி சிலையாகி, நீர் தேங்கி கடலாகி, காற்று தேங்கி புயலாகி, வார்த்தை தேங்கி கவிதையாகி ஆனால் பெண்ணே தேங்கி என்று ஏதோ ஒரு கேள்வியைப் போட்டு ஒரு கவிதையைக் கேள்விக் குறியாக்குகிறார் சிவா. அவர் சொல்கின்ற தேங்கல் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக அமையுமா என்று ஒரு சலசலப்பு எழுந்து அடங்குகிறது கூட்டத்தில். இங்கு கித்தாஸ் முழுமையாக அமைதியாகி இருக்கிறார்.
            கார்மேகம் அண்ணன் எழுந்தவர் அந்த நேரத்திற்குப் பொருத்தமாய் இருப்பது போல தான் எப்போதோ வாசித்த சில வரிகளைச் சொல்கிறார், "கோபமாகப் பேச வேண்டாம், குணத்தை இழக்க நேரிடும். அதிகமாகப் பேச வேண்டாம், அமைதியை இழக்க நேரிடும். வெட்டியாகப் பேசினால் வேலையை இழக்க நேரிடும். வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழக்க நேரிடும். ஆணவமாகப் பேசினால் அன்பை இழக்க நேரிடும். பொய்யாகப் பேசினால் பெயரை இழக்க நேரிடும்."
            கார்மேகம் அண்ணன் இதைச் சொன்னதும் கித்தாஸ் பண்டாரம், "இதெல்லாம் எந்தச் சித்தர் சொன்னது?" என்கிறார். "கார்மேகச் சித்தர்!" என்று முறுவலிக்கிறான் விகடு. "அப்படி ஒரு சித்தரைக் கேள்விப்பட்டதில்லையே!" என்கிறார் கித்தாஸ் பண்டாரம். "சித்தராய்த் தெரிந்தோர் சில பேர்! தெரியாதோர் பல பேர்!" என்கிறான் விகடு.
            ஒல்லியல் மருத்துவர் அருள் அடுத்ததாக ஒரு தகவலைச் சொல்கிறார், "ஹிட்லர் அவரது தளபதி ஹாப்பேன், முசோலினி, அவரது தளபதி கோரிங் ஆகியோர் ஓமியோபதி மருத்துவம் எனும் ஒல்லியல் மருத்துவத்தின் பலனைப் பார்த்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்கிறார். சொல்லி விட்டு, "அதிகாரம் கொண்டோர்க்கும், அன்பான இதயம் கொண்டோர்க்கும் ஓமியோபதியில் மருந்து உண்டு." என்கிறார்.
            அருள் அப்படிச் சொன்னதைக் கேட்டு கித்தாஸ் பண்டாரம், "எனக்கு ஏதேனும் மருந்து இருக்குமா?" என்று விகடுவிடம் கேட்கிறார்.
            "நீங்கள் அதிகாரம் கொண்டவரா? அன்பான இதயம் கொண்டவரா?" என்கிறான் விகடு.
            "அந்த ரெண்டும் கெட்ட மிருகம். எனக்கு மிருக வைத்தியம்தான் சரி!" என்கிறார் கித்தாஸ்.
            அடுத்து தமிழய்யாவின் பேச்சுத் தொடங்குகிறது. முதன் முதலாக கித்தாஸ் கூர்மையாகக் கேட்கத் துவங்குகிறார்.
*****


No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...