10 Dec 2019

மூங்கில்ல தொங்க விட்டு வைக்கோலைக் கொளுத்திப் போட்டு...



செய்யு - 294
            ஓகையூர்ல இருந்த காலகட்டத்துல மழைக்காலத்துல விகடுவுக்கு ரொம்பவே உடம்பு முடியாம போயிடும். சளியும், காய்ச்சலுமா கெடப்பான். அது மாதிரியான நாள்கள்ல ஓகையூர்லேந்து சேத்துல கடந்து டாக்கடருக்கிட்டப் போயி பாக்குறது ரொம்ப சிரமமா போயிடுச்சி சுப்பு வாத்தியாருக்கும் வெங்குவுக்கும். சேத்தைக் கடந்து தார் ரோட்டுக்கு வர்றதுக்கு ஒரு மைலு தூரம் சேத்துலப் புதைஞ்சத்தாம் வர வேண்டியிருந்திச்சி. அதுவும் ராத்திரி நேரம்னா அது ரொம்பவே சிரமமாப் போயிடுச்சி. ராத்திரி நேரத்துல தரையில மட்டும் இல்லாம வெளி எங்கும் சேத்தை அப்புன மாதிரி இருட்டு படர்நது கெடந்துச்சு. மொழங்காலு முட்டுற சேத்துல வுழுந்து பொரண்டுதான் எழுந்து வர வேண்டியதா இருந்துச்சி. கூட மாட பக்கத்துல சொந்தக்காரங்க இருக்காங்கன்னு இங்க வந்தா, இந்த சேத்துல வுழுந்து எந்தச் சொந்தக்காரன் வந்துப் பார்ப்பாங்ற மாதிரி ஆயிடுச்சி சுப்பு வாத்தியாரோட நெலமை.

            அதுவும் மழைக்காலம்ன்னா ஓகையூரு பக்கம் எந்தச் சனமும் தலைவெச்சிப் படுக்காது. இங்கயிருந்தும் சனங்க வெளியில போவாது. வெளியில இருந்தும் சனங்க உள்ள வராது. அது சரி! தண்ணியிலன்னா நீச்சலு அடிச்சி வந்துப்புடலாம். சேத்துல நீச்சலடிச்சி வர்றதுன்னா... செரமந்தானே! இப்படி ஒரு ரெண்டு வருஷம் ஓடிச்சி. பார்த்தாரு சுப்பு வாத்தியாரு வடவாதி கடைத்தெருவுலேயே வைத்தி தாத்தாக்கிட்ட சொல்லி ஒரு வாடகை வீட்டைப் பாத்துக்கிட்டு ஜாகைய மாத்திக்கிட்டாரு. அதுவும் ஒரு கூரை வீடுதாம். வடக்குப் பாத்த வூடு. அவரு ராசியோ என்னவோ அவரு பொறந்த வூட்டுலேந்து, அவரு வாடகைக்கு இருந்த வூட்டுலேர்ந்து அவரு வாங்குன வூடு வரைக்கும் எல்லாமும் வடக்குப் பாத்த வூடாவே அமைஞ்சிச்சி. எல்லாம் வடக்குமலையானோட பார்வைன்னு இதெப் பத்தி வெங்கு சொல்லிக்கும். அதுல அதுக்கு ஒரு சந்தோஷம்.
            வாடகை வூடுன்னாலும் புதுசா குடி மாறுறதால பாலு காய்ச்சிறதுக்கு லாலு மாமாகிட்ட போயி மரியாதை நிமித்தமா சொன்னாரு சுப்பு வாத்தியாரு. இதுக்குல்லாம் ஏம் எங்கிட்டச் சொல்றீங்கன்னு கொஞ்சம் சலிச்சுக்கிட்டுத்தாம் வந்திச்சு லாலு மாமா. அதுதான ஓகையூருக்கு மாத்தலாகி வரலாம்னு தகவலு சொன்னுச்சி சுப்பு வாத்தியாருக்கு. இப்படி வூடு மாறுற சங்கதிய அதுகிட்ட சொல்லாம போயி அதெ அது மரியாதெ குறைவா நெனைச்சிடக் கூடாதுல்ல. அதுக்குத்தாம் அதுகிட்ட சொன்னாரு. அது சலிச்சுக்கிட்டு சலிப்பப் பாத்து ஏம் அதுகிட்டே சொன்னோம்னு ஆயிடுச்சி சுப்பு வாத்தியாருக்கு. சலிச்சிக்கிட்டாலும் லாலு மாமா வூடு குடி மாறி பாலு காய்ச்சிற அன்னிக்கு வந்து நின்னுட்டுப் போனது. மித்தபடி வைத்தி தாத்தாவும், சாமியாத்தாவும் வந்து நின்னுட்டுப் போனுச்சுங்க. வேற யாருகிட்டயும் பெரிசா சொல்லல.
            இப்போ குடித்தனம் வடவாதியில, வேலை ஓகையூர்லன்னு ஆனுச்சி சுப்பு வாத்தியாருக்கு. கொஞ்ச நாளு வரைக்கும் குறுக்கால மாயனூரு வழியா ஓகையூருக்கு நடந்துதாம் போய்ட்டு வந்தாரு சுப்பு வாத்தியாரு. பிறவுதாம் மாமனாருகிட்ட எழுபது ரூவாயோ, எண்பது ரூவாயோ கொடுத்து ஒரு சைக்கிளு வாங்கித் தர்ற சொல்லிக் கேட்டுருக்கிறாரு. வைத்தி தாத்தாவும் அங்கயிங்க விசாரிச்சி ஒரு பழைய சைக்கிள்ல வாங்கிக் கொடுத்திக்காரு. அந்தச் சைக்கிள மாமனாரு வாங்கிக் கொடுத்த சைக்கிள்னே சொல்லி ரொம்ப பெருமையா வடவாதியிலேந்து ஓகையூருக்கு ஓட்டிக்கிட்டு கெடந்தாரு சுப்பு வாத்தியாரு. அப்படிப் போகும் போது விகடுவையும் கேரியர்ல்ல ஒரு தேங்காய்ப்பூ துண்டைப் போட்டு உக்கார வெச்சுக்கிட்டுத்தாம் கொண்டுகிட்டுப் போவாரு. விகடுவும் அவங்க அப்பார எங்க போனாலும் அவர்ர விட மாட்டான். அப்பங்காரரோடேயே ஒட்டிக்கிட்டு கெடப்பான்.
            வடவாதியில வந்ததுல ஒரு செளகரியம்ன்னா, டாக்கடருங்களப் பாக்குறதுக்கு அது ரொம்பவே வசதியா இருந்துச்சு. சில நேரங்கள்ல வடவாதி டாக்கடருங்களாலே பாக்குறது சிரமமா போனப்ப மட்டும் மன்னார்குடிக்குத் தூக்கிட்டுப் போவாங்க. இருந்தாலும் வடவாதி குடி வந்து ஆறு மாசத்துக்குள்ளேயே சுப்பு வாத்தியாருக்கு வடவாதி பிடிக்காம போயிடுச்சு. மகனுக்கும் சளியும் காய்ச்சலுமா இருக்கிறதுக்குக் காரணம் வடவாதி சர்க்கரை ஆலையிலேந்து வெளியேறுற புகைதாம்னு நெனைக்க ஆரம்பிச்சிட்டாரு. அந்த அளவுக்கு அவருக்கு மகனுக்கு உடம்பு சரியில்லாம போறது அவரோட மனசப் பாதிக்க ஆரம்பிச்சிடுச்சு. அதால வடவாதியிலேந்து கொஞ்சம் தூரத்துல குடி போனா தேவலாம்னு யோசிக்க ஆரம்பிசிட்டாரு.
            மறுக்கா மறுக்கா வாடகை வூடா பாத்துக் குடியேறுறத விட வடவாதிக்கு அப்பால ஒரு எடத்தை வாங்கி ஒரு கூரை வூட்டையாவது கட்டிட்டுப் போயிடணும்னு அவருக்கு யோசனை ஓட ஆரம்பிச்சிடுச்சி. இந்தச் சங்கதியையும் வைத்தி தாத்தா காதுல போட்டு வெச்சாரு சுப்பு வாத்தியாரு. அந்த நேரத்துல திட்டையில மூர்த்தியப்பரு கோயிலுக்கு எதுத்தாப்புல ஒரு எடம் வெலைக்கு வந்திச்சு. நல்ல எடந்தான். மூர்த்தியப்பரு ஐயனாரோட ஒரு வகைங்றதால யோசிச்சாரு சுப்பு வாத்தியாரு. கோயிலுக்குப் பக்கத்துல அதுவும் ஐயனாரு கோயிலுக்கு எதுத்தாப்புல குடியிருக்கிறது அவருக்குக் குத்தமா பட்டிருக்கு. அதால அந்த எடத்தை வேணாம்னுட்டாரு. இவரு வேணாம்னு சொன்னா எல்லாரும் வேணாம்னா சொல்லுவாங்க. அந்த எடத்தைத்தான் காரைக்கால்லேர்ந்து வந்த பட்டறைக்காரரு பட்டாமணி வாங்கி வாள்பட்டறையைப் போட்டாரு. அந்தப் பட்டறை திட்டைக்கு ஒரு அடையாளமா போயிடுச்சி.
            ரொம்ப பெரிய எடம் அது. அந்த எடத்தை வாங்காம விட்டதுல வைத்தி தாத்தாவுக்கு வருத்தம்தாம். அதே நேரத்துல அவ்வளவு பெரிய எடத்தை வெலை கொடுத்து வாங்குறதுக்கும் சுப்பு வாத்தியார்கிட்ட அப்போ தெம்பு இல்ல. அதுவும் அந்த எடத்தை வாங்காம போனதுக்கு ஒரு காரணமா போயிடுச்சி. அந்த எடத்தை கடனை உடனையாவது வாங்கி அப்பவே வாங்கிப் போட்டிருக்குனும்னு பிற்பாடு சுப்பு வாத்தியாரு நினைச்சிக்கிட்டாரு. அவரோட வாழ்க்கையில பட்டாமணியால வந்த ஒரு சோதனையால அப்படி அவரு நினைக்க வேண்டியதா போயிடுச்சி. ஒருவேளை அந்த எடத்தைச் சுப்பு வாத்தியாரு வாங்கியிருந்தார்ன்னா அந்த எடத்துக்குப் பட்டாமணி வர்றப் போறதில்ல. வேற எந்த ஊர்லயோ தோதுபட்ட எடத்துல பட்டறையைப் போட்டுட்டுப் போயிருப்பாரு. அவரால சுப்பு வாத்தியாரு குடும்பத்துக்கும் தேவையில்லாத குடைச்சல்களும் வந்திருக்காது. அது என்னாங்கறத பிற்பாடு பாக்கலாம்.
            திட்டைப் பள்ளியோடத்துல அப்போ ஒண்ணாப்பு வாத்தியாரு மோகனசுந்தரம்ங்றவரு ரிட்டையர்டு ஆவுறாரு. வேலைக்குச் சேர்ந்ததிலேந்து கடைசி வரைக்கும் ஒண்ணாப்பு வாத்தியாராவே இருந்தவரு. அதுவும் அந்த ஒரே பள்ளியோடத்துல. அவரோட அத்தனை வருஷ சர்வீஸூம் அந்த ஒரே பள்ளியோடத்துல ஒரே வகுப்பறையிலத்தாம் ஒண்ணாப்பு வாத்தியார்ரா. அவரு ஒண்ணாப்புத் தவிர வேற வகுப்புல்லாம் எடுக்கக் கூடாதுங்றதுல பிடிவாதமா இருந்து ஒண்ணாப்பு வாத்தியாராவே இருந்துட்டாரு.

            சுத்துப்பட்டு பள்ளியோடத்துல திட்டைப் பள்ளியோடம் புள்ளைங்க நிறைய எண்ணிக்கையில படிக்குற பள்ளியோடம். ஒண்ணாப்புலயே அறுவது, எழுவது, எண்பதுன்னு புள்ளைங்கப் படிக்கும். அத்தனைப் புள்ளைங்களுக்கும் பாடஞ் சொல்லிக் கொடுக்குறவரு மோகனசுந்தரம் வாத்தியாரு. ஆளு நல்லா மெலிசா ஒசரமா இருப்பாரு. வயித்துல தொந்தியெல்லாம் கெடையாது. கரவு செரவாத்தாம் இருப்பாரு. ஐம்பத்து அஞ்சு வயசுக்கு மேல பல்லுதாம் கொட்டிப் போயி டொக்கு விழுந்துப் போயிடுச்சி. ஆனா ஆளு எப்பவும் சிரிச்ச மொகத்தோடத்தாம் இருப்பாரு. நல்ல வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையைத்தாம் வுடுத்துவாரு.
            அடிச்சிப் பாடஞ் சொல்லிக் கொடுக்குற வாத்தியாரு அவரு. அடின்னா அடி ஒங்க வூட்டு அடி, எங்க வூட்டு அடியில்ல. ஊரு ஒலகமே தெறிச்சுப் போற மாதிரியான அடி. பள்ளியோடத்துல ஒண்ணாப்பு சேர்ற புள்ளைங்க ரண்டு வாரத்துலயே ஆனா ஆவன்னாவா தலைகீழா ஒப்பிச்சாவணும். ஒண்ணு ரெண்டு மூண அடுத்த ரெண்டு வாரத்துல நேராவும், தலைகீழாவும் சொல்லியாவணும். இல்லன்னக்கா மூங்கிக் கம்பைக் கட்டி அதுல புள்ளைங்கள தொங்க விட்டு கீழாப்புல வைக்கல போட்டுக் கொழுத்தி வுட்டுப்புடுவாரு. இப்படி அடிக்கிறீங்களே, வைக்கலக் கொழுத்திப் போடுறீயேளேன்னு கேட்டுக்கிட்டு யாரும் பள்ளியோடத்துக்குப் போயிட முடியாது. அப்படி போனாக்கா, "ஒம் புள்ளைக்கு இந்தப் பள்ளியோடம் சரிபட்டு வர்ராது. டிசிய வாங்கிட்டுக் கெளம்பு! ஒம் புள்ளைக்கும் ஒனக்கும் சுத்தப்பட்ட பள்ளியோடத்துல சேத்துக்க!"ம்பாரு.
            ஆளானப்பட்ட பெரிய வாத்தியாரே இவர்கிட்ட பாத்துத்தான் நடந்தாவணும். ஒண்ணாப்பு வாத்தியார்ரா இருந்தாலும் அவருதாம் பள்ளியோடத்துக்கு மூத்த வாத்தியாரு. ஊரு பஞ்சாயத்து, பிரச்சனைன்னா அவர்ர ஒரு வார்த்தைக் கலந்துக்காம எதுவும் பண்ண மாட்டாங்க. அப்படி ஒரு ஆளு அவரு. எதாச்சிம் ஒரு பிரச்சனை, சிக்கல்ன்னா இவரு வந்து நின்னு, "போங்கடா அந்தாண்ட!"ன்னு சொன்னாக்கா போதும் போலீசுக்காரங்களுக்குக் கட்டுப்பட்டுச் சனங்க போற மாதிரி அந்தாண்ட போயிடும் சண்டைக்கார அசாமிங்க. அப்படி ஒரு செல்வாக்கு அவருக்கு.
            அவரு அடிக்கிற அடியில எழுவது எண்பதுன்னு சேர்ந்த புள்ளைங்க வருஷக் கடைசியில நாற்பது அம்பதுன்னு வந்துடும்னா பாத்துக்கோங்க. அந்த நாற்பதும் அம்பதும் ஆனா, ஆவண்ணா, ஒண்ணு ரெண்டு மூணு தெரியாம ரெண்டாப்புக்குப் போக முடியாது. ரொம்ப கறாரா பாடஞ் சொல்லிக் கொடுத்து அனுப்புறவரு. புள்ளைங்கள பொதுவா அப்பாப் பேர்ர சொல்லித்தாம் ஏலே குப்புசாமி மவனே, சாமியப்பன் மவளேன்னு கூப்புடுவாரு. அப்பன் படிச்சி, அப்பங்காரனோட பிள்ளைங்க படிச்சி, பேரப்புள்ளைங்க வரைக்கும் ஒரே பள்ளியோடத்துல இருந்து ஒரே ஒண்ணாப்புல இருந்து பாடஞ் சொல்லிக் கொடுத்த வாத்தியார்ன்னா இந்த ஏரியாவுல அவரு ஒருத்தருத்தாம்.
            அப்போ லாலு மாமாவும் வடவாதி பள்ளியோடத்திலேர்ந்து மாத்தலாகி திட்டைப் பள்ளியோடத்துலத்தாம் வேலை பாத்துட்டு இருந்துச்சி. அந்த நேரத்துல வேணி அத்தைக்கு வேற்குடியில மாத்தல் கிடைச்சாதல அது ஜாகைய வேற்குடிக்கு மாத்திக்கிட்டு வேலைய திட்டைக்கு மாத்திக்கிட்டிருந்துச்சு. மோகனசுந்தரம் வாத்தியாரு ரிட்டையர்டு ஆயிப் போன எடத்துல லாலு மாமா சுப்பு வாத்தியார்ர கொண்டு வந்து வெச்சுது. திட்டைப் பள்ளியோடம் சுப்பு வாத்தியாருக்கு மூணாவது பள்ளியோடம் வேலை பார்த்ததுல. அதுதாங் அவரு கடைசியா மாத்தல் ஆன பள்ளியோடம். பிறவு எந்தப் பள்ளியோடத்துக்கும் அவரு மாத்தல் ஆவல. அந்தப் பள்ளியோடத்துலயே அவரும் மோகனசுந்தரம் வாத்தியாரைப் போலவே ஒண்ணாப்பு வாத்தியார்ராவே காலத்தை ஓட்டிட்டாரு. சுப்பு வாத்தியார்ட்டயும் அப்பன் ஆயிலேந்து அதுங்களோட பிள்ளைங்க வரைக்கும் ரெண்டு தலைமுறைங்க பாடம் படிச்சிதுங்க. மோகனசுந்தரம் வாத்தியாரு செவப்பு, சுப்பு வாத்தியாரு கருப்புன்னாலும் ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் ஒண்ணாப்பு வாத்தியாராவே இருந்துட்டதால மோகனசுந்தரம் வாத்தியாரை நகலெடுத்துக்கிட்டு வந்தவர்தாம் சுப்பு வாத்தியார்ன்னு திட்டையில சனங்க பேசிப்பாங்க. ஆனா மோகனசுந்தரம் வாத்தியாரு அடி அடின்னு அடிப்பார்ன்னா, சுப்பு வாத்தியாரு புள்ளைங்கள அடிக்க மாட்டாரு. அது ஒரு வித்தியாசம்.
            வடவாதியில இருந்த வாடகை வூட்டுல ஆறு மாசமோ, ஏழு மாசமோ இருந்திருப்பாங்க சுப்பு வாத்தியாரும் வெங்குவும். வேலை இப்போ ஓகையூர்லேந்து திட்டைக்கு வந்துட்டதால திட்டையிலயே கூட ஒரு எடத்தைப் பாத்து வாங்கிக் குடியாந்திடலாம்னு சுப்பு வாத்தியாருக்கு ஒரு தெளிவு வந்துப் போச்சு. திட்டையில இருந்த பட்டறையிலிருந்து சோத்துக்கையிப் பக்கமா எறங்கி மேற்கால திரும்பி நூறு தப்படி நடந்தா வர்ற எடத்துல கூரை வீட்டோட ஒரு மனை வந்திச்சி. வீட்டோட மனைங்றதால அதெ வாங்குறதுக்குப் போட்டா போட்டியா போயிடுச்சி.           
*****


No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...