1 Dec 2019

மனசுல உள்ளத சொல்லிப்புடு!



செய்யு - 285

            சுப்பு வாத்தியாரோட கல்யாணத்தைச் சீக்கிரமா முடிக்கணுங்றதுல செயராமு பெரிப்பாவும், பத்மா பெரிம்மாவும் ஒத்தக் காலுல்ல நின்னு அவசரம் காட்டுனாங்க. ஏன்னா வேலங்குடி பெரியவரு வந்து பேசுனா சுப்பு வாத்தியாரு மனசு மாறி அவரோட பொண்ணையே கட்டிக்கலாம்னு அவங்களுக்கு ஒரு கணக்கு இருந்திச்சு. அப்படி நடந்துடக் கூடாதுன்னு பெரிம்மாவுக்கு ஒரு நெனைப்பு. தனக்கு தப்பா நெலத்த வாங்கிக் கொடுத்து வேலங்குடி பெரியவரு தன்னை ஏமாத்திட்டதா பெரிம்மா நெனைச்சிக்கிடுச்சி. அதுக்குப் பழிக்குப் பழி வாங்குறதாவும் நெனைச்சுக்கிட்டு பெரிம்மா இப்படி பண்ண ஆரம்பிச்சதுன்னுதான் இதைச் சொல்லணும். பெரிப்பாவோட மனசுலயும் அப்படி ஒரு நெனைப்புதான் ஓடிக்கிட்டு இருந்துச்சு.
            இப்படி திடீர்ன்னு வந்து நின்னுகிட்டு பொண்ண பாரு, கல்யாணத்த முடின்னு சொன்னா, பொண்ணு என்னா கடையிலயா விக்குது? வாங்கியாந்து கட்டி வைக்க? பெரிம்மா மனசுலயும் அதுக்குத் தெரிஞ்ச சொந்த பந்தங்கள்ல இருக்குற பொண்ணுங்களப் பத்தின யோசனை ஓடுது. அதுல எந்தப் பொண்ணும் இப்போ சுப்பு வாத்தியாருக்குக் கல்யாணம் பண்ணி வைக்குற நெலமையில இல்ல. அதால சொந்தப் பந்தத்துல இல்லாட்டியும் பரவாயில்ல, எட்டி இருந்தாலும் சாதி சனத்துல எதாச்சும் பொண்ணு கெடைச்சாலும் கலியாணத்த முடிச்சிடறதுன்னு அது ஒரு முடிவுல நின்னுச்சி.
            பெரிப்பா விகடபிரசண்டரு வாத்தியார்ர பாத்து, "நீஞ்ஞதான் அவ்வேம் படிப்பு, வேலன்னு நின்னு பாத்தவங்க. ஒரு கலியாணத்தயும் நீஞ்ஞதான் பாத்து செஞ்சு வுட்டுப்புடணும். நாங்கள்லாம் பின்னாடி நிக்குற பரிவாரங்கதான். நீஞ்ஞதான் கர்ப்பகெரகம். நீஞ்ஞ மனசு வெச்சத்தாம் காரியம் ஆவும். அவ்வேம் யம்பீக்கார்ரேன் இப்படியும், அப்படியுமா மனசுக்குள்ள அல்லாடிட்டுக் கெடக்காம். அண்ணங்கார்ரேம் சொல்றதக் கேக்குறதா? யில்ல அக்காக்காரி பொண்ண கட்டுறதான்னு? வேலங்குடிக்காரனுக்கு மாப்புள்ளைகளுக்கு ஒண்ணும் கொறைச்சலு இல்ல. அவ்வேம் எவனையாவது பாத்து அவ்வேம் பொண்ணுக்குக் கட்டி வெச்சிக்கட்டும். நம்ம யம்பீக்கார்ரேம் அஞ்ஞ போயிச் சிக்கிடக் கூடாது. நீஞ்ஞ மனசு வெச்சாத்தாம் காரியம் ஆவும். பாகப்பிரிப்புல ஒஞ்ஞலோட சொல்ல கேக்கலன்னு ஒண்ணுத்தையும் மனசுல வெச்சிக்க வாணாம். ஊர்லயும் யம்பீக்காரனுக்கு நாம்ம ஒண்ணும் கொடுக்கலன்னு பேச்சாயிக் கெடக்கு. அப்டில்லாம் யம்பீக்காரன வுட்டுப்புட மாட்டேம். அவனெ படிக்க வெச்சி தலைநிமுர வெச்சிப்புட்டேம். நாம்ம நெனைச்சிருந்தா நம்மள மாரியே கட்ட அடிக்க வெச்சிருக்கலாம். காலத்துக்கு அவ்வேம் நம்மள மாரியே கஷ்டப்பட்டுக் கெடக்கணும். அதல்லாம் வாணாம்னுதாம் படிக்க வெச்சி வேலைக்கு அனுப்பியாச்சி. அத்தாம் நாம்ம அவனுக்குக் கொடுக்குற பாகம்னு வெச்சிக்குங்களேன். நம்ம வூட்டுக்கு எதுத்தாப்புல ஒரு மனைக்கட்டுக் கெடக்கு. அது அவனுக்குத்தாம். பாஞ்சி, பதினாறு குழி இருக்கும். அதெ எழுதி அவ்வேம் பேருக்கு எழுதி வெச்சிப்புடலாம்னு முடிவு பண்ணிட்டேம். இந்தக் கல்யாண வெசயத்துல நீஞ்ஞத்தாம் ஒரு நல்ல முடிவா அவ்வென எடுக்க வைச்சாகணும்!" அப்பிடிங்குது செயராமு பெரிப்பா.
            "நீஞ்ஞ நெனைக்குறபடி வேலங்குடிக்காரரு கெட்டவருல்லாம் யில்ல. நீஞ்ஞ பண்ணது தப்பு. யம்பீக்காரனுக்குச் சொத்த கொடுக்குப்படாதுன்னு, ஆவணத்துல இருந்த நல்ல நெலத்த வித்துப்புட்டு அஞ்ஞ வேலங்குடியில போயி உருப்படாத நெலத்த வாங்கியிருக்கீங்க. தப்பா பண்ணது தப்பாவே முடிஞ்சிப் போயிடுச்சி. ஒங்க மச்சாங்காரரும் தப்பான நெலத்த ஒண்ணும் வாங்கியாந்திருக்க மாட்டாங்க. நல்லதுன்னு நெனைச்சிப் பண்ணப் போயி தப்பா முடிஞ்சிருக்கலாம்னுத்தாம் நெனைக்கிறேம்." அப்பிடிங்கிறாரு விகடபிரசண்டரு வாத்தியாரு.
            "அந்தப் பயலுகளப் பத்தி அப்டி லேசுல நெனைச்சுப்புடாதீங்க வாத்தியார்ரே! கொலய பண்ணிப்புட்டு இல்லேன்னு சத்தியம் பண்ணுற பயலுவோ அவனுங்க. எல்லாத்தையும் நேக்கா பண்ணிப்புட்டு அதுவா நடந்த மாரி பண்ணிப்புடுவானுங்க. அவ்வேம் வேலங்குடி சின்னப் பயலாவது வேல தெரிஞ்சி சம்பாதிச்சிட்டு இருக்காம். இவ்வேம் பெரியப் பயெ கெடக்கானே! அவனுக்கு ன்னா தெரியும்? ஒரு மண்ணும் தெரியா. அந்தப் பயலுக்கு எப்டி அஞ்ஞ அம்மாம் நெல நீச்சு, மாடு கண்ணு வந்திச்சுச் சொல்லுங்க? எவ்வேம் குடும்பத்த குடி கெடுத்து சேத்ததுவோ? யாருக்குத் தெரியும்? எஞ்ஞ குடும்பம் அப்பங்கார்ரேம் இல்லாம தவிச்ச நேரத்துல எப்டியோ வந்து நின்னு கட்டிட்டுப் போயிட்டாம். இந்தப் பயலுக்குல்லாம் எவனும் பொண்ணு கொடுக்க மாட்டான்னு தெரிஞ்சுகிட்டு, எஞ்ஞ குடும்பத்துக்கு நல்லது பண்ற மாதிரி தந்திரம் பண்ணி வஞ்சகமா எந் தங்காச்சிய கல்லாணம் பண்ணிட்டுப் போயிட்டாம். அப்டியே மறுக்கா ஏத்தோ பண்ணி தம்பிக்காரனுக்கு அடுத்த தங்காச்சியா கல்லாணம் பண்ணிப்புட்டாம். மறுக்கா மறுக்காவும் அப்டியே பண்ணி எந் தம்பிய கொண்டுட்டுப் போயிடலாம்னு கணக்குப் போடுறாம். அது அப்போ அனுபவம் பத்தல. இப்போத்தாம் எல்லா வண்டவாளமும் தெரிஞ்சிடுச்சில்ல. இனுமேலும் அப்டி நடக்க வுட மாட்டேம்!"ங்குது பெரிப்பா.
            "செரி! ஒங்க முன்னாடி நாம்ம செல விசயங்களல அவ்வேம் சுப்புகிட்ட கேக்க முடியா. அவன தனியா தள்ளிட்டுப் போயிக் கேட்டாத்தாம் அவ்வேம் மனசுல உள்ள சங்கதிப் புரியும். இஞ்ஞ இப்டி பள்ளியோடத்துல நின்னுட்டு அம்மாம் சங்கதியையும் பேசப்படாது. பள்ளியோடம் வுட்டு வூட்டுல கொண்டு போயி வெச்சி மிச்ச சங்கதிய பேசி என்னா ஏதுன்னு விசாரிச்சு ஒரு முடிவுக்கு வருவேம்!"ங்றாரு விகடபிரசண்டரு. பள்ளியோடம் விடுற வரைக்கும் அங்கயும், இங்கயுமா நின்னு பெரிப்பா, பெரிம்மா, வாத்தியாரு எல்லாமுமா சேர்ந்து இப்படி பேசிட்டு நிக்குறாங்க. பள்ளியோடம் விட்டதும் ஒழுகச்சேரியிலேந்து அணைக்கட்டுல சுப்பு வாத்தியாரு தங்கி இருக்குற வாடகை வூட்டுக்கு வர்றாங்க எல்லாரும்.

            ஒரு கூட்டமா எல்லாரும் வர்றதைப் பார்த்து அங்க அணைக்கட்டுல யம்மாக் கெழவி, "யே யப்பாடி! இப்பத்தாம் ஒஞ் சொந்தக்கார சனத்துகள எம்மட கண்ணுல காட்டுறே?"ன்னு நெட்டி முறிச்சிக்கிட்டு எல்லாருக்கும் டீத்தண்ணிய போட்டுத் தருது. அந்த டீத்தண்ணிய குடிக்குறதுக்குள்ள ஒவ்வொருத்தரும் இன்னாருன்னு அறிமுகம் ஆயிக்கிறாங்க. அறிமுகம் ஆன பிற்பாடு பேச்சு சுப்பு வாத்தியாரு கலியாணத்துல வந்து நிக்குது.
            யம்மாக்கெழவியப் பொருத்தமட்டுல பேச்சு எப்பயும் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுங்ற வகையறாத்தான். அது அடிச்சிப் பேசுது, "நீஞ்ஞ சொல்றதுத்தாம் செரி. சொந்த பந்தம் சுத்தப்பட்டு வர்றாது. எம்மட சங்கதிய எடுத்துக்குங்களேம். எம்மட வூட்டுக்காரரு மிலிட்டிரிக்காரரு. அவரு இருந்தப்போ வந்த சொந்தபந்தம் ன்னாங்கறீங்க? அடிச்சக் கூத்து ன்னாங்கிறீங்க? அவரு சீனக்காரனோட நடந்த சண்டையில செத்துப் போயிட்டாரு."ன்னு சொல்லிக் கண்ணைத் தொடைச்சிக்கிது. கண்ணைக் தொடைச்சிக்கிட்டு, "அவரு போயிச் சேந்த பிற்பாடு ஒரு பயலும் நம்மள எட்டிப் பாக்கலையே. ஒத்தையா ஒத்த பொண்ண வெச்சிக்கிட்டு நாம்ம பட்ட பாடு இருக்கே நாயி படாத பாடு. அதுக்கா ன்னா வுட்டாப்புட்டேன்? ஒடம்புல சீவன் இருக்கு, ஒழைக்குறதுக்கு தெம்பு இருக்குன்னு தெகிரியமா நின்னேம். இந்த அணைக்கட்டுல குடியான சனத்துல மச்சு வூடு கட்டுன மொத ஆளு நாம்மத்தேம்.  ஊருல எத்தன ஆம்பளப் பயலுவோ இருக்கானுவோ. ஒரு பயலும் இன்னிய வரைக்கும் கட்டல. பொம்பளத்தான நாம்ம. கட்டிருக்கேம் பாருங்க. வூடு எப்டி? ஜோக்கா இருக்கா ன்னா? பெறவு வூடு கட்டுனதப் பாத்துட்டு சொந்தக்கார பயலுக வார ஆரம்பிச்சானுங்க பாருங்க. வந்து எம் பொண்ண எனக்குக் கொடு, ஒனக்குக் கொடுன்னு நிக்குறாம். ஒரு பயலுக்கும் கெடையாதுன்னு திருப்பனந்தாள்ல எம்மட சாதியில ஒரு நல்ல பையனா பாத்துக் கட்டி வெச்சேம். அத்தும் பொம்பளையா நின்னு பாத்து கட்டி வெச்சு கல்லாணத்தை ஜாம் ஜாம்னு பண்ணி வெச்சேம். மச்சு வூட்ட கட்டுனா இஞ்ஞ வந்து கட்டிக்கிட்டு வூட்டோட மாப்பிள்ளையா இருந்துட்டு சொகுசா இருக்கலாம்னு அவனவனும் கணக்குப் போட்டானுவோ. நமக்கா புரியாது அவனுங்க கணக்கு? அத்து மாரித்தாம். நீஞ்ஞ நெனைக்குறதுதாம் செரி. பிறத்தியிலேந்து ஒருத்தி வந்தாளாச்சும் கடைசீ காலத்துல மொறைச்சிக்கிட்டாவது கஞ்சித் தண்ணி ஊத்துவா. சொந்த பந்தத்துல கட்டி வெச்சா வர்றவளுவோ பச்சத் தண்ணிய கொடுக்குறதுக்கு பத்து கணக்குப் பாப்பாளுவோ! பெறத்தியா வூட்டுப் பொண்ணுதாஞ் செரி. கட்டியாந்து இஞ்ஞ வுடுங்க. எம்மட மருமவளா நெனைச்சி நல்ல வெதமா நாம்ம பாத்துக்கிறேம்!" அப்பிடிங்கிது யம்மாக்கெழவி.
            "செரி நீஞ்ஞ உக்காந்து பேசிட்டு இருங்க. யம்பியும் நாமளும் கடைத்தெரு பக்கமா போயிட்டு வர்றேம்." அப்பிடிங்கிறாரு விகடபிரசண்டரு வாத்தியாரு.
            "ஆம்மா கடைத்‍தெருவுல போயி வாங்குறதுக்கு ன்னா கெடக்கு? ராத்திரி போசனத்தையெல்லாம் நம்மட வூட்டுல பாத்துக்கிடலாம். எல்லாஞ் சாமாஞ் செட்டும் நம்மட வூட்டுல கெடக்கு. பாத்துக்கிடலாம் குந்துங்க! சித்தே பேசுவோம்!" அப்பிடிங்கிது யம்மாக்கெழவி.
            "அதுக்கில்ல வர்றப்ப கோயிலப் பாத்தேம். அப்டியே சுப்புவ அழைச்சிட்டு ஒரு எட்டுப் பாத்துப்புடலாம்னு பாக்கிறேம்!" அப்பிடிங்கிறாரு விகடபிரசண்டரு வாத்தியாரு.
            "வில்லியாண்டரு கோயில்ல சொல்றீயளா? பாக்க வேண்டிய கோயிலுத்தாம். இப்ப ன்னா அவசரம். நாளைக்கு ஒரு பொழுது தங்கி காலங்காத்தால பாத்துக்கிட்டாப் போச்சு!" அப்பிடிங்கிது யம்மாக்கெழவி.
            "அட என்ன பெத்த ஏம் யாத்தா! அத்து வாத்தியாரு யம்பீ மனசுல ன்னா இருக்குன்னு தனியா கொண்டு போயி கேக்க நெனைக்குது. அத்த புரிஞ்சிக்காம இப்டி பெசுதீயளே?" அப்பிடிங்கிது இப்போ பெரிம்மா குறுக்கால பூந்து.
            "ஓ! சங்கதி அத்துவா! நமக்கு எஞ்ஞ அத்துப் புரியுது? நமக்கு எல்லாத்துலயும் நேராத்தாம் பேசோணும். சுத்தி வளைச்சிப் பேசுறது நமக்கு ஆகாது. இந்த நெளிவு சுளிவு வரைமுறையெல்லாம் ஒண்ணும் புரியாது. செரி செரி நீஞ்ஞ கெளம்புங்க."ங்குது யம்மாக்கெழவி சிரிச்சிக்கிட்டே.
            விகடபிரசண்டரு வாத்தியாரும், சுப்பு வாத்தியாரும் கெளம்பி வில்லியாண்டவரு கோயிலு பக்கமா வர்றாங்க.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...