1 Dec 2019

18.2



அகல் இலக்கியக் கூடலின் மூன்றாவது கூட்டம் :
            மூன்றாவது கூட்டத்தில் அதே வழக்கமான சாரங்கள் இருக்கிறதென்றாலும், 3வது கூட்டத்திற்கு கித்தாஸ் பண்டாரம் வருகிறார். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஸ்வரங்களை அவர் வாசித்து விட்டுச் செல்கிறார். அதைப் பார்ப்பதற்கு முன்பு கித்தாஸ் பண்டாரத்தை முழுமையாகப் பார்த்து விடுவது நல்லது.

            கித்தாஸ் பண்டாரம் தலையில் நைந்துப் போன பழந்துண்டு ஒன்றைக் கட்டியிருக்கிறார்.  கேட்டதற்கு முடி விழுந்த தலையை மறைப்பதற்கான ஏற்பாடு அது என்கிறார். மேலுக்கு சில்க் ஸ்மிதாவின் படம் போட்ட மஞ்சள் டீசர்ட் போட்டிருக்கிறார். இடுப்புக் கீழே துவைத்து பல ஆண்டுகள் கடந்த ஜீன்ஸ் பேண்ட்டை அணிந்திருக்கிறார். நவயுக யுவதிகள் மாட்டியிருக்கும் தோள்பட்டையோடு கூடிய பையைப் போல எட்டு முழ வேட்டியொன்றில் புத்தகங்களைக் குண்டுக்கட்டாய்க் கட்டி  மாட்டியிருக்கிறார். அதில் கதிரைவேற்பிள்ளை அகராதியும், அபிதான சிந்தாமணியும், ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூல்களும் இருக்கின்றன. எந்நிலையிலும் நடந்து செல்லும் பண்டாரம் தலையில் ஹெல்மெட் எனும் தலைக்கவசம் அணிந்திருக்கிறார். மாடி மேலிருக்கும் மனிதர்களை நம்ப முடியவில்லை என்றும், அவர்கள் எந்நேரத்தில் வேண்டுமானாலும் மாடியிலிருந்து எதை வேண்டுமானாலும் வீசலாம் என்கிறார். அவரது தலைக்கவசத்திற்கான காரணம் புரிந்ததும் அதைக் கழட்டச் சொல்ல மனம் வரவில்லை. தலைக்கவசத்தோடு கித்தாஸ் பண்டாரம் பின்வருமாறு பேசுகிறார்.
            1. மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் மன இறுக்கத்தை மாற்ற முடியும். யாருக்கு உதவுகிறோமோ அவர் இதனால் மனஇறுக்கம் அடைந்து நமது மன இறுக்கத்தை விடுவிப்பார்.
            2. மனதை மூடுவதன் மூலம் அன்று, மனதைத் திறப்பதன் மூலம் மன உளைச்சலைப் போக்கிக் கொள்ள முடியும். மனதைத் திறக்க முதலில் மனதை மூட வேண்டும். மூடியிருக்கும் ஒன்றைத்தானே திறக்க முடியும். ஆக இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது, மனம் எப்போதும் திறந்தே இருக்கிறது. நாம் அநாவசியமாக மூடி, அநாவசியமாகத் திறப்பதற்கு சிரமப்பட வேண்டாம்.
            3. மனஇறுக்கம் - சேகரம் - வெடிப்பு. இதைக் கவனியுங்கள். மனம் வெடிக்கிறது. அதுதான் அணுகுண்டின் வெடிப்பு. வெடிப்பினால் பாழாய்ப் போனது ஹிரோஷிமா, நாகசாகி மட்டுமா? உங்கள் மனமும்தான். ஒரு ஜப்பான் பாழாய்ப் போனது போதும். நீங்கள் விழிப்பாய் இருங்கள்.
            4. நிலவைப் பார்த்துக் கொண்டே எவ்வளவு நேரம் தூங்காமல் இருப்பது? அது என்ன தூக்க மாத்திரையா? வழுக்கையை மறைக்க மறைக்க பளபளப்பாவது போல வாழ்க்கையை மறைக்க மறைக்க அது பெரிதாகப் பளபளப்பாக ஆகிறது. மறைத்தல் வேண்டாம். அழுது விடுங்கள். அழுகை உங்களைப் புனிதப்படுத்தும். புனிதப்படுத்தாவிட்டாலும் உடம்பில் இருக்கும் உப்பின் அளவு குறையும். உப்பின் அளவு குறைந்தால் உணர்ச்சிகளின் அளவு குறையும். நான் அடிக்க அழ முயற்சிக்கிறேன். பாழாய்ப் போன கண்ணீர்தான் வர மறுக்கிறது.
            5. அந்த வழியில் வரலாற்றுப் பயணம்... இந்த வழியில் குடிமையியல் பயணம்... சொந்த வழியில் புவியியல் பயணம் என்கிறார்கள். அவ்வளவு ரூபாய்க்கு நான்கு மாதங்களை ஓட்டி விடுவேன் நான். எந்தப் பயணமும் வேண்டாம். கித்தாஸாகிய என்னைப் போல் ஓர் அழுக்கு வேட்டிக்குள் தேவையானதைச் சுருட்டிக் கொண்டு நடக்கத் துவங்குங்கள். எந்தச் செலவும் இல்லை. கால்நடையாய் நடந்துச் செல்பவனுக்குச் சுங்கச்சாவடியில் வரி கிடையாது தெரியுமோ?
            6. ஆதார் கார்டு, டிவைிங் லைசென்ஸ், பான் கார்டு, வோட்டர் கார்டு இல்லாத போது ஒரு கட்சியின் மெம்பர்சிப் கார்டு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அத்தனைக் கார்டுக்குமான சக்தியை அது பெற்றுத் தரும்.
            7. பல்லைக் கடித்தல், ஆளுக்கொரு திசையில் குப்புற படுத்தல், தலையணை நனைத்தல், தொடர்புடைய மொத்த நபர்களையும் திட்டித் தீர்த்தல் - இரவு நாசமாய்ப் போக! தீப்பொறி கனவுகளில் எதையும் செய்யாதீர்கள். இரவில் தூங்க முடிந்தால் தூங்குங்கள். இல்லையா நடக்க ஆரம்பியுங்கள். தூக்கத்தில் நடப்பவர்கள் பாக்கியவான்கள். இந்தப் பிறவியில் நடந்தால் அடுத்த பிறவியில் தூக்கம் வரும்.
            8. சான்றிதழ்களோடு வருபவர்களைத் தயவுசெய்து நம்பாதீர்கள். சான்றிதழ்கள் விற்கப்படுகின்றன. பெட்டிக்கடையில் சான்றிதழ்கள் விற்பதாகக் கேள்விப்படுகிறேன். போதைப்பாக்குகளைப் பெட்டிக் கடையில் தடை செய்ததைப் போல அதையும் தடை செய்ய வேண்டும்.
            9. கழிவறைக்கு முதல் தேவை தரமான செட்டிக் டேங்குகள். உறைகளில் இட்டு அதை நிரப்ப முயலாதீர்கள். உறைகள் வெடித்து விடுகின்றன. பெரிய பெரும் பாலங்களைப் போக்குவரத்து நேரிசல் கருதிக் கட்டுவை விடவும் தரமான செட்டிக் டேங்குகள் கட்டுவது முக்கியம். உறைகளில் செட்டிக் டேங்க் உருவாவதைப் பார்த்து நிலத்தடி நீர் பயந்து போய் அதள பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது.
            10. ஹெல்மெட்டைப் பற்றிப் பேசாமல் பேச்சை நிறைவு செய்வதில்லை.
            "ஒவ்வொரு முறையும்
            ஹெல்மெட் போடாமல்
            தண்டம் அழுகிறான்
            ஹெல்மெட் வாங்க நேரமில்லை."
என்னை எந்த போலீஸ்காரரும் பிடிக்க முடியாது. நடக்கும் போதும் ஹெல்மெட் போட்டு நடப்பவன் நான். காரில் போகாத போதும் சீட் பெல்ட் போல பின்னே சுமக்கும் பொதிகளுக்கான வெட்டியின் முடிச்சை குறுக்காகப் போட்டு நடப்பவன் நான். ஹா... ஹா...ஹா....
            அபாரமாகச் சிரிக்கிறார் கித்தாஸ் பண்டாரம். அவரது பேச்சு முற்று பெறுகிறது. இனி மற்றவர்கள் பேசப் போவதைக் கேட்க வேண்டும்.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...