9 Nov 2019

தங்கக்காப்பா போடப் போறாங்க?



செய்யு - 263
            விவசாயம் மட்டும் பண்ற சம்சாரிக்கு அதெ விட்டா வேற வருமானம் கெடையாது. விவசாய வருமானங்றது விளைஞ்சு அறுவடை ஆவுற காலத்துல மட்டுந்தாம். குடும்பத்தை ஓட்ட வருமானங்றது எல்லா நாளுக்கும் தேவையா இருக்குது. விவசாயம் பண்றவங்க விவசாயத்தோட ஆடு, மாடுகள வளர்க்கிறப்போ அதுலேந்து ஒரு வருமானம் வந்துகிட்டே இருக்கும். அதுவும் மாடுக பால் கறக்குற நாட்கள்ல நல்ல வருமானம் வந்துகிட்டே இருக்கும். வூட்டுலேயும் பாலுக்கும், தயிருக்கும் எந்தக் கொறையும் இல்லாம இருக்கும். என்னத்ததாம் இருந்தாலும் தெனமும் வேலைக்குப் போயி சம்பாதித்திச்சிட்டு வர்ற வருமானதுக்கு அது ஈடா இருக்காது. வேலைப் பாத்து கொஞ்சம் கூட கொறைச்ச சம்பாதிக்கலாம். விவசாயத்துல அப்டி வருஷா வருஷம் வெளையுற மூட்டைக கூட கொறைச்சலாவா போவும்? கொறைஞ்சி வேணாப் போவுமே தவிர கூடப் போவாது. அதெ வெச்சிக்கிட்டுத்தாம் மறுவருஷம் அறுவடை ஆவுற வரைக்கும் காலத்த ஒட்டியாவணும்.
            வேலங்குடி பெரியவருக்குக் குடும்பம் சின்னதா இருந்தப்போ பெரிசா எந்தப் பிரச்சனையும் தெரியல. குடும்பம் பெரிசான பின்ன கொஞ்சம் கொஞ்சமா தாட்டா ஆவ ஆரம்பிக்குது. எட்டுப் புள்ளைக, புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் ஆக பத்துப் பேருன்னா பத்துப் பேருக்குமான சாப்பாடு, உடுத்துற துணி மணிக, வைத்தியச் செலவு அப்பிடி இப்பிடின்னு ஆவுற செலவுக்கு அவரால சமாளிக்க முடியல. தம்பிக்குக் கலியாணம் ஆன பிற்பாடு நெலத்திலயும் கணிசமா பிரிச்சிக் கொடுத்துட்டாரு. பன்னெண்டு மா நெலத்துல ஆறு மாவோ, ஏழு மாவோ நெலத்துல பாடுபட்டு வர்ற சம்பாத்தியம் அவருக்குப் போதல.
            அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் விவசாய வேலைகளும், சமையலு வேலைகளும்தாம். கல்யாணம் காட்சில்லாம் எப்பயாச்சி ஆனிக்கு ஒரு தடவயும், ஆவணிக்கு ஒரு தடவயும்தான் அப்ப நடக்கும். ஒரு கல்யாணத்துக்குப் போய்ட்டு வந்தா மறுகல்யாணத்துக்குச் சேதி வர்றதுக்கு அப்போல்லாம் ஒரு வருஷம்லாம் கூட ஆயிருக்கு. மறுகல்யாண சேதி வர்ற வரைக்கும் அந்த ஒரு கல்யாணத்தப் பத்தியே பேச்சா பேசிட்டுக் கெடக்கும்ங் சனங்க. அது ஒரு காலம். அப்பிடி எப்பயாவது நடக்குற கல்யாண வேலைகளுக்கு அழைச்சிட்டுப் போற ஆளுக நல்ல வேலைய வாங்கிட்டுச் சாப்பாட்டுப் போட்டு அனுப்பிச்சிட்டு, கையில பலகாரத்தக் கொஞ்சம்‍ கொடுத்து அனுப்புறானுகளே தவிர மருந்துக்குக் கூட கையில காச கொடுத்து அனுப்ப மாட்டேங்றானுங்க.
            இவரு கலியாண வேலைக்குப் போற எடமும் அப்படித்தான் இருக்கு. கலியாணச் செலவுக்கே காசில்லாதவங்க எடமா இருக்கு. சமையலு சாமான்களயே அரையும் கொறையுமா வாங்கிக் கொடுத்து அதுல எப்படியாவது சமைச்சி ஒப்பேத்தி வுடுங்கன்னு சொல்ற எடமா இருக்கு. ஏதோ ஒரு புண்ணியமா போவட்டும்ன்னும், ஒரு கலியாணத்துக்குப் போயிட்டு வந்தா புள்ளைங்க திங்குறதுக்குப் பலகாரமாவது கெடைக்குதுன்னும் இவரும் அங்க, இங்க விசாரிச்சுகிட்டுக் கல்யாண வேலைக்குப் போயிட்டு வந்துட்டுத்தாம் இருக்காரு. அத்தோட காக்காப்புள்ள வூடு, தம்புசெட்டி வூடுன்னு அவங்க வூடுகள்ல வேலி கட்டுறது, கொல்லை வேலைப் பாக்குறதுன்னாலும் பெரியவரு கெளம்பிடுவாரு. மாட்டுத் தரவு வேலையும், நெலம் வாங்கிக் கொடுக்குற வேலையும் எப்பயாச்சும் வரும். வந்தா கொஞ்சம் கையில காசு பொரளும்.
            கொத்தனாரு வேலை தெரிஞ்சவங்களும், தச்சு வேலை தெரிஞ்சவங்களுக்கும் வேலை அப்போ சீரா இருந்துச்சு. அந்த வேலையையும் வூடு கட்டறவங்கள ஊரு ஊராப் போயி உளவு பாத்துப் பிடிச்சி வைச்சிக்கணும். அப்போல்லாம் வேலை செய்யுறத்துக்கு ஆட்கள் அதிகமா இருந்தாலும் வேலை வாய்ப்புக கொறைவாத்தாம் இருந்துச்சு. அதால நெலம் வெச்சிருந்தவங்க, வெச்சிருக்காதவங்கன்னு எல்லாரு வூட்டுலயும் ஒரு வேள பட்டினியாவது இருக்கத்தான் செஞ்சிச்சி. குழந்தைங்க நெறைய பொறந்த பின்னாடி பெரியவரோட வாழ்க்கையில ஒரு கஷ்ட தசை வருது. அதெ எப்பிடிச் சமாளிக்கிறதுன்னு தெரியாம பெரியவரு தவிக்கிறாரு.
            அண்ணன் குடும்பத்தோட படுற செரமம் தம்பிக்காரருக்குத் தெரியுது. கூட மாட வேலைக்கு அழைச்சிட்டுப் போயி ஒப்புக்கு வெச்சிட்டுச் சம்பளத்த வாங்கிக் கொடுத்தா உபயோகமா இருக்கும்னு நெனைச்சி, "நீயும் வாண்ணே வேலைக்கு!"ன்னு அழைச்சிட்டுப் போறாரு. "நமக்கென்ன சுத்திப் பிடிக்கத் தெரியுமா? ஆணி அடிக்கத் தெரியுமா? நம்மளயும் வேலைக்கிக் கூப்புடுறானே தம்பி! தம்பியுடையான் படைக்கு அஞ்ச மாட்டாம்னு அந்தக் காலத்திலயே சும்மாவா சொல்லி வெச்சிருக்காங்க. நாம்ம பட்ட பாட்டுக்கு ஏதோ கொஞ்சம் உதவியா இருக்கணும்னு நெனைக்கிறானே. இந்த ஒண்ணு போதும் அவனெக் கொண்டாந்து இங்க வெச்சதுக்கு!"ன்னு நெனைச்சிக்கிட்டு வேலைக்குக் கெளம்பினாரு பெரியவரு.
            பெரியவருக்கு பெரும்பாலும் எடுபிடி வேலைங்கத்தான். சாமானுங்கள கட்டிக்கிட்டு தோளு மேல வெச்சிக்கிட்டு வேலைக்குப் போறது, வேலைக்குப் போன எடத்துல சாமானுங்களப் பிரிச்சி ஆளாளுக்கு எடுத்துக் கொடுக்குறது, வூட்டுக்காரங்க டீத்தண்ணி, பலகாரம் செஞ்சிக் கொடுத்தா அதெ ஆளாளுக்கு எடுத்துக் கொடுக்குறது, மரங்கள சட்டங்கள தூக்கிப் போடுறது இப்பிடித்தாம் ஓடியாடி வேல பாத்துட்டு இருந்தாரு பெரியவரு.
            என்னைக்காவது ஒரு நாளு சின்னவரு பெரியவர்கிட்ட உளியையும், சுத்தியையும் கொடுத்து துளை போடச் சொன்னா, டொக்கு டொக்குன்னு நாலு தட்டு தட்டுவாரு. அப்படி தட்டிக்கிட்டே தலை தொங்கி வுழுவ தூங்கிடுவாரு. அந்த டொக்கு டொக்குச் சத்தமே தாலாட்டு கணக்கா அவர தூங்க அடிச்சிடும். சின்னவருக்கு இது வேடிக்கையா இருக்கும், "பாருங்கய்யா! நமக்குன்னு வந்து சேருதுங்களே! இத்தனெ நாளு வேலைக்கி வந்து சுத்தில நாலு தட்டு தட்டி ஒரு துளை போடத் தெரியுதா? சுல்லாப்பா ஒரு ஆணி அடிக்கத் தெரியுதா? இப்டில்லாம் இருந்தா ன்னா பண்றது? வேல கொடுக்க நெனைக்குறவனும் இதெப் பாத்த கொடுக்க மாட்டாம்!"ன்னு லேசா தலையில அடிச்சிக்கிட்டு முகத்தைச் சுளிப்பாரு.
            ஒரு நாளு சின்னவரு அப்படிப் பேசிட்டுப் பண்ணதை லேசா தூக்கத்திலேந்து கண்ணு முழிச்சிக்கிட்டுப் பாத்துட்டாரு பெரியவரு. அவருக்குத் திடீர்ன்னு சுரீர்ன்னு கோவம் வந்திடுச்சு. "ஆமா! இவரு பாக்குற வேலைக்கி தங்கத்துல காப்புச் செஞ்சிப் போடப் போறாங்க! வைரத்துல கடுக்கம் பண்ணிப் போடப் போறாங்க! வேல முடிஞ்சா ஒனக்குத் தர்ற காசத்தாம் எனக்குத் தரப் போறாங்க! எனக்குத் தர்றப் போற காசத்தாம் ஒனக்குந் தரப் போறாங்க! என்னவோ மைசூரு மகராசா பட்டத்த தலையில வெச்சிக் கட்டுற மாரில்லா பேசுறாம்?" அப்பிடின்னிட்டாரு பெரியவரு.
            சின்னவருக்கு அவரோட வேலையைப் பத்திச் சொன்னதும் அவருக்குக் கோவம் வந்திடுச்சு. "ஏம் வேலைக்குத் தங்கக் காப்புப் பண்ணிப் போடாம தூங்கி வழியுற விடியாமூஞ்சிக்கா கழுத்துல மாலையப் போடுவாங்க? ஒமக்குத் தர்ற காசு ஒண்ணும் எமக்கில்ல. நம்மாலத்தாம் ஒமக்கே காசு வர்றது. என்னவோ மைசூரு மகராசா பட்டத்தைப் பத்தியெல்லாம் பேசுறாரு. நாம்ம பாக்குற வேலைக்கி மைசூரு மகராசா ன்னா? வெளிநாட்டுக்கார்ரனோ, வெள்ளைக்காரனோ  பாத்தான்னாக்கா வெச்சிக்கோ பட்டம் கொடுத்துக் கொண்ட்டுப் போயிடுவாம். நாம்மத்தாம் ஒங்களுக்கெல்லாம் செரமமா போயிடுமேனு ஒங்களுக்குகாக இஞ்ஞ கெடந்து நஷ்டபட்டுக்கிட்டுக் கெடக்கேம்! பேசுறத ஒழுங்கா மரிவாதியா பேசணும்!" அப்பிடின்னிட்டாரு சின்னவரு.
            "போங்கடா! ஒங்க வேலயும் மசுரும். வேலைக்கி வெச்சிக்க இஷ்டம் இல்லைன்னா சொல்லிட வேண்டித்தானே. அதுக்கு ன்னா நம்மாலத்தாம் காசி வந்திச்சி, பணம் வந்திச்சின்னா ன்னா அர்த்தம்? ஏம்டாம்பீ! நீயி இந்த ஊருக்கு வந்த கதெயெல்லாம் மறந்துப் பூயிடுச்சின்னு நெனைச்சியா? என்னிக்கும்டாம்பீ! பழச மறக்கக் கூடாது. ஏறி வந்த ஏணிய ஏறுன பிற்பாடு எட்டில்லாம் ஒதைக்கக் கூடாது. என்னிக்காவது அந்த ஏணி தேவைப்படும் ஒனக்கு."அப்பிடின்னிட்டுத் துண்ட ஒதறி தோள்ல போட்டவருத்தாம். வேட்டிய மடிச்சிக் கட்டிட்டுக் கெளம்பிட்டாரு. சுத்திலும் வேல பார்த்து ரண்டு மூணு ஆளுக ஓடியாந்துத் தடுக்கப் பாத்தாங்க. பெரியவரு கேக்குறப்ப இல்ல. முண்டியடிச்சுகிட்டுக் கெளம்புனாரு.
            "அடச்சே! வுடுங்கய்யா! நாலு நாளைக்கு வூட்டுல பட்டினி கெடந்து வவுறு காய்ஞ்சிக் குண்டிச் சுருங்குனா தானா வேலைக்கி வருவாருய்யா! வேல தெரியாத மண்ணுமுட்டுக்கே இம்மாம் ரோஷம் இருந்தா நமக்கு எம்மாம் இருக்கும்"ங்றாரு பெரியவரு.
            "யாரு மண்ணுமுட்டு? யாரு தட்டுமுட்டு?ங்றதுல்லாம் கூடிய சீக்கிரம் தெரியப் போவுது பாரு! பேச்ச மருவாதியாப் பேசணும். வாயி இருக்கேங்றதுக்கு வாயில வந்ததயல்லாம் பேசக் கூடாது. எம்மட வவுரு சுருங்குனா எம்மகிட்ட கெடக்குது. எம்மட குண்டி சுருங்குனா எம்மடகிட்டுக் கெடக்குது. அதுக்கு ஏங் இவங்கிட்ட வாரணும்? எம்மட வூட்டுல நாம்ம சுருட்டிக்கிட்டு ராசா மேரி கெடக்குறேம். இவங் கால நாம்ம ஏம் வந்து நக்கிறேம்?"ங்றாரு பெரியவரு.
            "ம்! பாப்பேம்! பாப்பேம்!"ங்றாரு சின்னவரு.
            "பாப்பேம்டா! வா! நேத்திப் பொறந்த பயெ ன்னா போடு போடுறாம்? ன்னா ரூட்டு வுடுறாம் நம்மடகிட்டயே?"ங்றாரு பெரியவரு.
            அன்னிக்கு ஆரம்பிச்ச மனத்தாபம்தான் ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பிச்சிது.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...