9 Nov 2019

13.1



            வில்சன் அண்ணனைப் பொருத்த மட்டில் நாங்கள் பள்ளிக்கூடம் படித்த காலத்திலிருந்தே எங்கள் ஆதர்சம். பொறுமை என்றால் அப்படி ஒரு பொறுமை. அதிர்ந்து ஒரு வார்த்தை வராது. பேச்சில் எப்போதும் ஒரு மென்மை. பேசும் போது ஒருவேளை நாம் தவறாக பேசி விட்டாலும் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் லாவகம் என்று வில்சன் அண்ணனைப் பற்றி நிறைய சொல்லலாம். பேச்சு, செயல் என்று எல்லாவற்றிலும் ஒரு நாசுக்கு உண்டு.
            பள்ளிப் பிள்ளைகளான நாங்கள் போகும் நேரந்தான் அவருக்கு வியாபாரம். மற்ற நேரங்களில் ஆனந்தவிகடனோ, குமுதமோ, குங்குமமோ படித்துக் கொண்டிருப்பார். நாங்கள் போய் நின்றால் அதை நிறுத்தி விட்டு கேட்பதைக் கொடுப்பார். அதிகம் பேச மாட்டார். எல்லாவற்றுக்கும் சிரிப்புத்தாம். அவரை அதிகம் பேச வைக்க விகடு வளர்ந்து இலக்கியம் பேச வேண்டிய காலம் வரைக் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. பொதுவில் பேசுவது என்றால் எழுதி வைத்துப் பேசினால்தான் வரும் என்பார். அவரைப் பார்த்து அதுவே விகடுவுக்கும் பழக்கம் ஆகி விட்டது. தனிப்பட்ட அரட்டை என்றாலும் இவர்கள் இருவருக்கும் ஒத்து வரும் அளவுக்கு வில்சன் அண்ணனுக்குப் பிறரிடம் ஒத்து வராது. முடிவெடுப்பது என்றால் நிரம்பவே தயக்கம் இரண்டு பேருக்கும். யாராவது முடிவு எடுத்துக் கொடுத்தால் வசதியாக இருக்கும் என்பார்கள்.
            அது சரி! வாழ்க்கையில் முடிவு எடுக்க என்ன இருக்கிறது? என்பது ரெண்டு பேரின் பொதுவான கருத்து. அதன்படியே எந்த முடிவும் எடுக்காமல் வாழ்க்கை போகிற போக்கில் போய்க் கொண்டிருக்கிறார்கள் வில்சனும், விகடுவும். இடையில் ஏதாவது குறுக்கீடு என்றால் யாராவது வந்துதான் முடிவு எடுத்துக் கொடுத்தாக வேண்டும். அதுவரைக்கும் அங்கேயே உட்கார்ந்திருப்பதில் ரெண்டு பேருக்கும் சம்மதம்.
            விகடுவும், கவிஞர் தீக்காபியும் கேட்டு வீட்டில் நான்கு பேரைக் கூட்டிக் கூட்டம் போட வில்சன் அண்ணன் சம்மதித்ததே பெரிய விசயம் என்பார் மாறன்  அண்ணன். அந்த அளவுக்கு வில்சன் அண்ணனுக்குள் கூச்ச சுபாவமான மனிதன் ஒளிந்து கொண்டிருக்கிறான்.
*
            எப்படி படிக்க முடிகிறது? எப்படி எழுத முடிகிறது? என்கிறார்கள். வேலை வெட்டி இல்லாதவர்கள் வெறென்ன செய்ய முடியும்? எழுதுவது வேலையில்லையா? படிப்பது வேலையில்லையா? அதை வேலையாக எல்லாம் செய்ய முடியாது! அந்த வேலைக்கு யார் காசு தருவார்கள் சொல்லுங்கள்!
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...