10 Nov 2019

13.2



            வில்சன் அண்ணனின் கடைக்கு எதிர்த்தாற் போல வடபுலத்தில் பழைய கடை இருந்த இடம் தெற்குப் பார்த்தபடி தெக்குணாமூர்த்தி போல அப்படியேக் கிடந்தது. மணமங்கலம் நகரமாக இருந்திருந்தால் அப்படி ஓர் இடம் கிடந்திருக்க முடியுமா? மணமங்கலம் ஒரு கிராமமா? நகரமா? கிராம நகரமா? நகர கிராமமா? என்ற குழப்பத்தில் நெடுநாட்கள் கிடந்ததால் பழைய கடை இருந்த இடம் பழைமை மாறாமல் அப்படியேக் கிடந்தது. அதை உபயோகத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் நெடுநாட்கள் பலவிதமான யோசனைகளில் பலமாக இருந்தார் வில்சன் அண்ணன்.
            உபயோகத்தில் மட்டும் உபயோகம் இல்லை. உபயோகம் அற்றதிலும் உபயோகம் இருக்கிறது. அந்த இடம் அணில்களுக்கும், அணில் குஞ்சுகளுக்கும், கிளிகளுக்கும், மைனாக்களுக்கும், ஓணான்களுக்கும், ஓணான் குஞ்சுகளுக்கும் நெடுநாட்கள் உபயோகமாக இருந்தது. நீங்கள் ஓணான் குஞ்சுகளைப் பாத்திருக்கிறீர்களா? ஓர் இலக்கியக் கூட்டத்தைப் பார்ப்பதற்கு முன் நீங்கள் ஓணான் குஞ்சைப் பார்க்க வேண்டும். உங்கள் வசிப்பிடத்துக்கு அருகே ஓணான் குஞ்சைப் பார்க்கக் கிடைத்தால் அவசியம் பார்க்கவும். இல்லாது போனாலும் கூகுள் பண்ணியாவது ஓணான் குஞ்சைப் பார்த்து விடவும். கிட்டத்தட்ட அதுவும்‍ டைனோசர் குஞ்சைப் போல இருக்கும். டைனசோர்கள் செத்ததிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட ஓணான்கள் டைனோசரைப் போல பெரிதாக வளரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து விட்டன. அது ஒரு தனி வரலாறு. இலக்கியக் கூட்டத்துக்கு இடையே நேரம் இருந்தால் பார்க்கலாம். அநேகமாக இலக்கியக் கூட்டம் ஆரம்பித்து விட்டால் நேரம் இருக்காது என்றே நினைக்கிறேன்.
            ஓணான் குஞ்சுகள் ஒசிந்து விளையாடிய அந்த இடத்தில் ஓராயிரம் முடிவுகளுக்குப் பின் ஒரு கல்யாண மண்டபத்தைக் கட்டும் முடிவுக்கு கடைசியாக வந்து இருந்தார் வில்சன் அண்ணன். கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதால் ஓராயிரம் முடிவுகளுக்குப் பின்னே கல்யாணம் மண்டபம் கட்டும் முடிவுக்கு வர இயலும். பள்ளிப் பிள்ளைகள் அந்த இடத்தில் சமயங்களில் யாருக்கும் தெரியாமல் ஒணான்களைப் பிடித்து அதன் வாயில் புகையிலையை வைத்து அதன் தலையை ஆட்டுவித்து விடுகிறார்கள். அதை விடவும் ராமர் பாலம் கட்டிய போது மூத்திரத்தைப் பெய்து வைத்து விட்டதாக அதைப் பிடித்துக் கொன்று போட்டு விடுகிறார்கள். வாலில் கயிற்றைக் கட்டி அதை தரதரவென்று தலைகீழாக, கீழ் மேலாகப் போட்டு அதனைச் சிக்கிக் கொண்டால் ரணகளம் செய்து விடுகிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்ட கல்யாண மண்டபம் கட்டுவது என்ற முடிவெடுத்த அண்ணனின் தீர்மானம் சரியாக இருந்தது. அப்படிக் கல்யாணம் கட்டுவதன் மூலம் ஓணானைப் பிடித்து புகையிலை வைக்கும் பழக்கம், ஓணானை அடித்துப் போடும் பழக்கம், ஓணானுக்குக் கயிறு கட்டும் பழக்கம் விடுபட வாய்ப்பிருக்கிறது. கல்யாண மண்டபம் என்று அந்த இடம் ஆகி விட்டால் ஓணான் வாயில் புகையிலை வைப்பதற்குப் பதிலாக கலியாணப் பார்ட்டி என்ற பெயரில் மனிதர்களின் வாய்களில் டாஸ்மாக் சரக்கு ஊற்றப்பட்டு ஓணான்களின் விடுதலைச் சாத்தியமாக வாய்ப்பு இருக்கிறது. குடித்து விட்டு தங்களைத் தாங்களே அடித்துக் கொள்வதன் மூலம் ஓணான்கள் அடிபடுவது தவிர்க்கப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்களின் கழுத்துகளில் தாலிக்கயிறு கட்டப்படுவதன் மூலமாக ஓணாண்கள் கயிறு கட்டப்படுவது நின்று போகவும் வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.
            விகடுவும், தீக்காபியும் இலக்கியக் கூட்டம் நடத்த கேட்ட நேரத்தில் மண்டப வேலைகள் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தன. மண்டபம் கட்டி வேலையாகி விட்டால் மண்டபத்திலேயே கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என்றதும், "இப்படி ஓர் இலக்கியக் கூட்டம் நடத்துவதற்காகத்தாம் நீங்கள் மண்டபத்தையே கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்!" என்று வில்சன் அண்ணனைப் பெருமைப்படுத்தித் திக்குமுக்காடச் செய்த கவிஞர் தீக்காபி, "அப்படியானால் மண்டப வேலைகள் முடிந்த உடனே இலக்கியக் கூட்டத்தையும் ஆரம்பிப்போம்!" என்றார் அளவிட முடியாத புளங்காகிதத்தோடு.
            "ஏன் அது வரைக்கும் தள்ளிப் போடணும்? மண்டப வேலைகள் முடியறபடி முடியட்டும். அதுவரைக்கும் நம்ம வீட்டுக்கூடத்திலே கூட்டத்தைப் போடுவோம்!" என்றார் வில்சன் அண்ணன். இப்படியாக இலக்கியக் கூட்டத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்து இரண்டு நாட்களிலேயே கூட்டத்தைக் கூட்டும் வகையில் ஓர் உற்சாகம் கலாராவை விட மிக மோசமாகத் தொற்றிக் கொண்டது எல்லாருக்கும். இப்படியாக இலக்கிய காலரா வியாதித் தொற்றிக் கொண்டவர்களாக ஆகி விடுகிறார்கள் கூட்டவாதிகள்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...