8 Nov 2019

பொம்பளைக்கேது பொழுது?



செய்யு - 262

            விருத்தியூரு போன பெரியவரு ரெண்டு நாளு கழிச்சுதாம் வேலங்குடி திரும்புனாரு. ஆளு இப்படி திடீர்னு சொல்லாம கொள்ளாம எங்க போயித் தொலைஞ்சார்ன்னு வேலங்குடியில ஆளாளுக்கு அங்க தவிப்பாப் போச்சுது. இப்படிச் சொல்லாம கொள்ளாம எங்கயும் போயித் தங்குற ஆளு கெடையாது அவரு. ஆனா திடீர்னு திடீர்னுத்தாம் கெளம்புவாரு வேட்டியையும், சட்டையையும் சோக்கா மாட்டிகிட்டு. கெளம்பும் போது "நாலு நாளாவே ஒரே நெனைப்பாக் கெடக்கு. போயி ஒரு எட்டு பாத்துட்டு வந்திடுறேம்!"ன்னு சொல்லிட்டுத்தாங் கெளம்புவாரு. எங்க போனாலும் ராப்பொழுது தங்கிப் பேச வேண்டியத பேசிட்டுத்தாம் வருவாரு. அவரு எந்த வூட்டுக்குப் போனாலும் அந்த வூட்டுக்கு ராவும் கெடையாது, தூக்கமும் கெடையாது. வெளக்க கொளுத்தி வெச்சி விடிய விடிய பேசிட்டுத்தாம் கெளம்புவாரு மனுஷன். ஆனா மறுநாளு கருக்கல்லயே வூட்டுக்காரங்களுக்கு முன்னாடி எழும்பி அவங்களையும் எழுப்பி விட்டுட்டு நடையைக் கட்டிக்கிட்டுக் கெளம்பி வந்துடுவாரு. இந்த ஒண்ணுலத்தாம் தம்பிக்காரனுக்கு எப்படியாவது காரியத்தை முடிச்சிடணும்னு எங்கே போறேன்னு கூட சொல்லாம கொள்ளாம விருத்தியூர்லயே ரெண்டு நாளைக்கு டேராவப் போட்டு வசமாப் பேசிக் காரியத்தை முடிச்சிட்டு வாராரு.
            ரத்தினத்து ஆத்தாவுக்கு ரசா அத்தையைச் சின்னவருக்குக் கொடுக்குறதுக்கு அரை மனசுதான். ஆளு சின்னவரு வேற ஒரு மார்க்கமா பொண்ணுங்க பின்னாடி சுத்துறவங்றது தெரிஞ்ச மனசுக்குள்ள ஒரு பயம்தான் அதுக்கு. தையல்நாயகி ஆத்தாவுக்கு ரத்தினத்து ஆத்தா எடுக்குறதுதாம் முடிவு. செயராமு பெரிப்பாகிட்ட கேட்டதுக்கு அது பாலிசா காலா காலத்துல பண்ண வேண்டிய பண்ணி முடிச்சிக்குங்கன்னு ஒதுங்கிக்கிடுச்சு. எப்படியோ காசு செலவில்லாம கலியாணம் முடிஞ்சா போதும்னு அது நெனைச்சுச்சு. இந்த விசயத்துல பெரியவர தட்டக் கழிச்சிட்டா பின்னாடி ஒரு தேவைன்னா அவர்கிட்ட மூத்த மருமவேங்ற முறையில வந்து நில்லுங்கன்னு எப்படிப் போயி நின்னு கேக்குறதுன்னு ரத்தினத்து ஆத்தாவுக்கு யோசனை.
            "எம் வூட்டுக்குப் பக்கத்துல தடுக்கி வுழுந்தா அவ்வேம் வூட்டுலத்தாம் வுழுந்தாவணும். அம்மாம் பக்கத்துல கைக்குள்ளயே வெச்சுக்கிற மாதிரி, கண்ணுக்குள்ளயே வெச்சுக்கிற மாதிரி வூட்டக் கட்டி ‍வெச்சிக்கிறேம். நம்பிக் கட்டிக் கொடுங்க எம்மட தம்பிக்கு. எங்க வூட்டுப் பொண்ணு மாதிரி வெச்சிருப்பேம். அக்கா, தங்கச்சி ரண்டும் பக்கத்துப் பக்கத்துல இருக்கா. ஒண்ணுக்கொண்ணு ஒத்தாசையா இருந்துக்குங்க. நம்மள வுட்டா அது பாத்துக்கும். ‍அது வுட்டா நாம்ம பாத்துப்பேம். வேறெதும் மனசுல இருந்தாலும் சொல்லிப்புடுங்க. சம்பாத்தியமெல்லாம் நம்மள விட அதிகந்தாம். தெனமும் நிறுத்தி வெச்சாலும் நிறுத்த முடியாது. வேலைக்குப் போயிட்டுத்தாம் மறுவேல பாப்பாம். இப்போ வேலைன்னா இவந்தான்னு ஆயிப் போச்சு. கூப்புடு வேலங்குடி ஆசாரியன்னு அவனவனும் வூட்டுக்கு முன்னாடி வந்து நிக்குறாம். அந்த வகையில தொழிலுகார்ரேம். கூடப் பொறந்தவேம்." அப்பிடின்னு ராப்பொழுது முழுவதும் எடுத்து விட்டுகிட்டே இருந்தாரு பெரியவரு. இவ்வளவு சொல்ற பெறவு வேறென்ன மறுத்துச் சொல்றதுன்னு அரையும் கொறையுமா ரத்தினத்து ஆத்தா தலையை ஆட்டி ‍வைச்சிது.
            ஒரு பண்டிகை, விஷேசம்னா வளர்க்கிற ஆடுக கொறைஞ்சிப் போயிடும் விருத்தியூர்ல. அதெ வித்துத்தான் விஷேசத்துக்கு உண்டான செலவுகள பாத்துக்கும் ரத்தினத்து ஆத்தா. பெரியவரு கலியாணத்துக்கு முன்னாடி நாப்பத்திரண்டு ஆடுக இருந்தது, கலியாணத்துக்குப் பின்னாடி பன்னெண்டு ஆடுகளா ஆயி இப்போத்தாம் இருபத்தெட்டு ஆடுக நின்னுகிட்டு இருந்துச்சு. கலியாணம்னு முடிவு ஆன பிற்பாடு இருபத்து ரெண்டு ஆடுகளப் பிடிச்சி வித்து விருத்தியூரு மாரியம்மன் கோயில்ல கலியாணத்த முடிச்சு வைச்சிது ரத்தினத்து ஆத்தா. கலியாணத்துக்கு உண்டான நகை நெட்டு, பாத்திரம் பண்டம், பட்டு உடுப்புக, கலியாணச் செலவுன்னு எல்லாத்துக்கும் ஆடுக வித்த காசுதாம் உதவியா இருந்துச்சு. செயராமு பெரிப்பாவும், பத்மா பெரிம்மாவும் பேருந்து கலியாணத்துல வந்து நின்னதோட செரி. அப்பயும் போல, எப்பயும் போல பெரியவருதாம் கலியாணச் சாப்பாட்டுலேந்து, பலகாரம் பண்ற வரைக்கும் பம்பரமாய்ச் சொழன்று காரியத்த முடிச்சாரு. கலியாணத்த முடிச்சி ஒரு கட்ட வண்டிய ஏற்பாடு பண்ணி வேலங்குடியில பொண்ணையும், மாப்பிள்ளையையும் சுப்பு வாத்தியார வெச்சிக் கொண்டாந்து விட்டுட்டும் போகவும் வெச்சிடுச்சி ரத்தினத்து ஆத்தா.

            பிற்பாடு சுப்பு வாத்தியாருக்கு விடுமுறைன்னு விட்டாக்கா கையில கொஞ்சம் காச கொடுத்து வேலங்குடி போயி ரெண்டு அத்தைகளையும் பாத்துட்டு வரச் சொல்லிடும் ரத்தினத்து ஆத்தா. பாத்துட்டு வாரதுன்னா சொகமாப் போயிப் பாத்துட்டு விருந்துத் தின்னுட்டு படுத்துக் கெடந்துட்டு வாரது மாதிரில்லாம் கெடையாது. போயிப் பாத்துட்டு ரெண்டு வீடகள்ளயும் கெடக்குற அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டுச் செஞ்சாகணும். சின்னவரு வூட்டுல பெரிசா வேலை இருக்காது. ஆனா அவரு வேலைக்கு இழுத்துட்டுப் போயிடுவாரு. பெரியவரு வூட்டுல ஒரு நாளைக்கு நாற்பத்தெட்டு மணி நேரம் கொடுத்தாலும் வேலைக்குப் பஞ்சமிருக்காது. வேலைகள செஞ்சும் முடிக்க முடியாது. மாட்டு வேலைக முடிஞ்சா, வயல் வேலை முடியாது. வயலு வேலை முடிஞ்சா மாட்டு வேலைக முடியாது. இந்த ரெண்டு வேலைகளும் முடிஞ்சா சமையலு வேலை ஆயிட்டு இருக்கும்.
            சின்னவரு வூட்டுல சாப்பாடெல்லாம் நேரா நேரத்துக்கு ஓர் ஒழுங்குல இருக்கும். பெரியவரு வூட்டுல அது சாத்தியப்படாது. வேலைக முடிஞ்சாத்தாம் அங்க சாப்பாட்டு ஞாபவத்துக்கே வருவாங்க. அதுக்கு பிற்பாடுதாம் ஒலையக் கொதிக்க விட்டு, கறிகாய்கள அரிஞ்சுப் போட்டு வேலையை ஆரம்பிப்பாங்க. ஆனா டீத்தண்ணிய மட்டும் காலைல எழுந்திரிச்ச ஒடனேயே டான்னு போட்டுக் குடிச்சிட்டுத்தாம் வேலைய ஆரம்பிப்பாங்க. இடையிடையில எத்தனை மொறைக்கு ஒரு தடவ டீத்தண்ணிப் போடுறாங்க, குடிக்கிறாங்கிறதெல்லாம் கணக்குல வெச்சிக்க முடியாது. நாளு பூரா வேலை கெடந்தா டீத்தண்ணியிலேயே அந்த நாளை ஓட்டிப்புடுவாங்க.
            அதே நேரத்துல என்னத்தாம் வேலை கெடந்தாலும் மத்தியானச் சாப்பாடு ஆயிடுச்சுன்னா ஒரு தூக்கத்தப் போட்டுட்டுத்தாம் பெரியவரு மறுக்கா வேலைய ஆரம்பிப்பாரு. இது பெரியவருக்கு மட்டுந்தாம். செயா அத்தைக்கு முச்சூடும் வேலைதாம். அது அடங்கி ஒடுங்கிப் படுக்காது. பெரியவரு படுத்துக் கெடக்கற நேரத்துலயும் உக்காந்துகிட்டு கைவேலையா பாக்க முடிஞ்ச வேலையைப் பாத்துகிட்டுக் கெடக்கும் செயா அத்தை. அதால சித்த நேரத்துக்குச் சும்மா இருக்க முடியாது. கையி எதாச்சிம் ஒரு வேலையைப் பாத்துகிட்டே கெடக்கணும் அதுக்கு. அதோட உழைப்புதாம் பெரியவர்ர  தூக்கி விட்டிச்சி.
            வயவேலை ஆரம்பிச்சாச்சின்னா நடவாளுக்கு நடவாளா நின்னு வேலை பார்க்கும் செயா அத்தை. மாடுகளுக்கு புல்லு அறுக்கிறதுன்னு செயா அத்தை எறங்குனுச்சுன்னா திரும்ப அந்த எடத்துல மறுபுல்லு முளைக்க எப்படியும் மூணு மாசம் ஆவும். அப்படி புல்லருவாளா வெச்சி மண்டையில செரச்சி வுட்டா எப்படி இருக்குமோ அப்படி செரைச்சி எடுத்துட்டு வந்துடும். உளுந்து, பயிறு எடுக்குறதுன்னா புருஷன், பொண்டாட்டி, புள்ளைங்கன்னு குடும்பமே எறங்கி எடுத்துப்புடும்ங்க. ஒத்த ஆள வயல்ல எறங்க விடாதுங்க. அப்படி எடுத்த உளுந்து பயித்த செயா அத்தை ஆம்பளை கணக்கா நின்னு தென்னை மட்டைய தயாரு பண்ணி வெச்சிக்கிட்டு போட்டு அடிச்சி அலசி பீராய்ஞ்சு தூத்தி எடுத்து மூட்டை மூட்டையா வூட்டுல கொண்டாந்து சேத்துப்புடும்ங்க.
            இப்படி செயா அத்தையோட ஒப்பிடுற அளவுக்கு வேலைச் செரமம் கெடையாது ரசா அத்தைக்கு. ஆனா சின்னவர்ர சமாளிக்கிறது சாதாரண காரியம் கெடையாது. அடிக்கடி அவருக்கு மூச் மூச்சுன்னு கோவம் வந்திடும். சாப்பாடு சரியில்லன்னா தட்டுப் பறந்துடும். உப்பு, புளி, காரம்லாம் ரொம்ப துல்லியமா இருக்கணும் சாப்பாட்டுல. நாசுக்குன்னா அப்படி ஒரு நாசுக்குப் பார்ப்பாரு. ரொம்ப சுத்தமா இருந்தாவணும். இல்லன்னா அதுக்கும் சேர்த்து அவரு வூட்டுல பறக்கும் தட்டுகள நிமிஷத்துக்கு ஒண்ணாப் பாக்குறது போல ஆயிடும். இதுல ஆச்சாரம் அது இதுன்னு ஆயிரத்தெட்டு லொட்டு லொசுக்குகள வேற வெச்சிக்கிட்டு அதுக்கு ஏத்தபடி ரசா அத்தைய போட்டு உருட்டி மெரட்டிப் பிழிஞ்சு எடுத்துடுவாரு. ரசா அத்தைக்கு சின்னவர்ர சமாளிக்கிறதுல பாதி பிராணன் போறதுல உசுரு போயி உசுரு வந்த மாதிரி இருக்கும்.
            செயா அத்தைக்கு வேலைத்தாம் கடுமையே தவிர, பெரியவரால எந்த இம்சையும் இருக்காது. ரொம்ப கொணமா வெச்சிப்பாரு. என்ன அவருகிட்ட ஒரு கெட்டப் பழக்கம்ன்னா வேலை நேரத்துலயும் அப்படியே கண்ண மூடிட்டுத் தூங்கிடுவாரு. அவரு வேலையையும் எடுத்து செயா அத்தைத்தாம் செய்யணும். சமயத்துல படுத்தார்ன்னா படுத்ததுதாம். எழுப்பக் கூடாது. அவரு பாட்டுக்குத் தூங்கிட்டு இருப்பாரு. தூக்கம்னா கும்பர்கணன் கணக்கா நாலு நாளைக்கு, அஞ்சு நாளைக்குன்னு தூங்கிக்கிட்டே கெடப்பாரு. வேலை பாட்டுக்கு நடந்துகிட்டு இருக்கணும். அவரு தூங்குறார்ன்னு அவரோட வேலைகளப் போட்டுடக் கூடாது. அதையும் இழுத்துப் போட்டுகிட்டுச் செஞ்சாகணும். அதோட அவரு பாட்டுக்கு மாடுகளப் போட்டுகிட்டு, அங்க அவங்களப் பாக்கப் போறேம், இங்க இவுங்களப் பாக்கப் போறேம்னு வேற கெளம்பிப் போயிடுவாரு. அவரு திரும்பி வர வரைக்கும் செயா அத்தைத்தாம் அத்தனை மாடுகளையும் ஒத்தை ஆளா நின்னு பாத்தாகணும். இதுக்கு எடையில மாட்டுத் தரவும் பண்ணப் போயிடுவாரு. நெலம் வாங்கி வித்துக் கொடுக்குற வேலையிலயும் இருப்பாரு. நெல்லு மூட்டைகளை வாங்கிக் கொடுக்குறது, உளுந்து பயிறு வாங்கிக் கொடுக்குறது இப்படியும் சில வேலைகளை அப்பைக்கப்போ செய்வாரு. அப்போல்லாம் ஆளு வூட்டுல இருக்க மாட்டாரு. பரலோக சஞ்சாராம்தான்.
            உண்மையிலேயே பக்கத்துப் பக்கத்துல இருந்தா ஒருத்தருக்கொருத்தரு பாத்துப்பாங்கன்னு கட்டிக் கொடுத்தாலும் செயா அத்தைக்கு ரசா அத்தையை வந்துப் பாக்குறதுக்குக் கூட நேரம் ஒழியாதுங்றதுதாம் உண்மையா இருந்துச்சி. பெறவு அதுஅதுக்குக் கொழந்தைக் குட்டிங்கன்னு பொறக்க ஆரம்பிச்சதும் அததுக்கு அததோட குடும்பத்தைப் பார்க்கத்த்தாம் நேரம் சரியா இருந்துச்சு. செயா அத்தைக்கு அஞ்சு ஆம்பளைப் புள்ளைங்களும், மூணு பொம்பளைப் புள்ளைங்களுமா அதோட குடும்பம் ஓடுச்சு. ரசா அத்தைக்கு ரெண்டு ஆம்பளைப் புள்ளைங்களும், மூணு பொம்பளைப் புள்ளைங்களுமா அதோட குடும்பம் ஓடுச்சு.
*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...