8 Nov 2019

13.0




            வில்சன் அப்பா வைத்திருந்த பலசரக்குக் கடை பல தலைமுறைகளுக்கு முன்பிலிருந்த கடை. அது பெரிய கடையாக உருமாறியது வில்சனின் தாத்தா காலத்திலிருந்து. மணமங்கலத்துக்கு அதுதாம் பெரிய கடை. கடையின் பெயரும் பெரிய கடைதான்.
            பெரிய கடையில போயி சீனி சர்க்கரை வாங்கிட்டு வா!
            பெரிய கடையில கொஞ்சம் இனிப்புப் பலவாரம் வாங்கியா?
            பெரிய கடையில பச்ச மிளகா, இஞ்சிக் கொத்தமல்லி வாங்கியா!
            பெரிய கடையில வளையலு மணி செட்டு வாங்கிட்டு வா!
            பெரிய கடையில போயி காலு கிலோவுக்கு ஆணியும், கட்டுக் கம்பியும் வாங்கியா!
            பெரிய கடைக்குப் போயி நல்ல பூட்டுஞ் சாவியும் வாங்கியா!
            பெரிய கடைக்குப் போயி ஓமம், வசும்பு, சித்தரத்தைக் கொஞ்சம் வாங்கியா!
                        இப்பிடித்தாம் சனங்க பேசும்.
            கிட்டத்தட்ட எல்லா சாமான்களும் கிடைக்கும். ஒரு பலசரக்கு மளிகைக் கடையைப் போல, பலகாரக் கடையைப் போல, இரும்புக் கடையைப் போல, நாட்டு மருந்துக் கடையைப் போல, வளையல் கடையைப் போல, காய்கறிக் கடையைப் போல எல்லா கடைகளும் அந்த ஒரு கடைக்குள் இருந்தது. அந்தக் காலத்திலிருந்தே  சூப்பர் மார்கெட்டின் கான்செப்டைப் பிடித்து நடந்த கடை அது. பேப்பரில் சுருள் போட, பொட்டலம் கட்ட, பொருட்களை எடுத்துக் கொடுக்க என்று தனித்தனி ஆட்கள். வாங்கியப் பொருட்களுக்கு விலை போடுவதும், பணத்தை வாங்கிப் போடுவதும் வில்சனின் அப்பாதாம் செய்வார். அவருக்கு மேலே ஒரு பெரிய படம் இருக்கும். அதில் கொழுத்த ஒரு மனிதரும், நோஞ்சான் போல உருக்குலைந்த ஒருவரும் இருப்பர். அவர்களுக்குக் கீழே லாபத்திற்கு விற்றவர், நட்டத்திற்கு விற்றவர் என்று எழுதியிருக்கும். வில்சன் அண்ணன் கடையில் அன்றிலிருந்து இன்று வரை கடன் வியாபாரம் மட்டும் கிடையாது. அந்தப் படம்தாம் கல்லாவுக்கு மேலே இருக்கும்.
            வாங்கியது ரெண்டு சரக்காக இருந்தாலும் அதை ஒரு தாளில் எழுதி கூட்டி, அந்தச் சீட்டைக் கொடுத்துதாம் கொடுக்க வேண்டியத் தொகையைச் சொல்வார்கள்.
            கடை நடத்துவதை நேர்ததியாகச் செய்வார்கள். பண்டம் கொள்முதல் பண்ணுவதற்கு ஒரு வாரத்தில் ஒரு நாள் வைத்திருப்பார்கள். வாங்கிய பண்டங்களைப் பிரித்து வகை செய்வதற்கு ஒரு முறை வைத்திருப்பார்கள். வாரத்தின் ஏழு நாட்களும் கடை இருக்கும். காலையில் ஏழு மணி வாக்கில் கடை திறந்தால் மதியம் ரெண்டு மணி வாக்கில் மூடி, நாலு மணி வாக்கில் திறந்து விடுவார்கள். இரவு ஒன்பது மணி வரைக்கும் கடை இருக்கும். மற்றபடி எந்த விடுமுறையும் கடைக்குக் கிடையாது. வில்சனின் தாத்தா இறந்த போது அந்த ஒரு நாள் மட்டுந்தாம் கடை மூடியிருந்தது. மறுநாளே கடையைத் திறந்து விட்டார்கள். ஏதேனும் ஒரு விஷேசத்துக்குக் குடும்பத்தோடு செல்ல வேண்டி கடையை மூடுவதாக இருந்தால் முதல் நாளே அட்டையில் எழுதித் தொங்கவிட்டு விடுவார்கள்.
            ரொம்ப காலம் தெற்குப் பார்த்த கடையாக இருந்ததை சில பத்தாண்டுகளுக்கு முன்பாக வடக்குப் பார்த்தக் கடையாக எதிர்திசையில் மாற்றியமைத்தார்கள். முன்பு முன்னால் கடை, பின்னால் வீடு என்றிருந்தது இப்போது கீழே கடை, மேலே வீடு என்றாகியிருக்கிறது. முன்பு வீடு, கடை எல்லாம் நாட்டு ஓடு போட்ட பெரிய கட்டடமாக இருந்தது. இப்போது மாடி கட்டடமாக மாறியிருக்கிறது.
*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...