26 Nov 2019

வெளிரு பச்சைக் கலரு சட்டை!



செய்யு - 280

            கண்டியரு வாங்கியிருக்கிறது அஞ்சரை மா நிலம். அவருக்கு ஆவணத்தச் சுத்தி இருக்குற பத்து வேலி நிலத்துக்கு அது ஒரு கணக்குலயே வாராது. சுப்பு வாத்தியாரு குடும்பத்துக்கு ஒரு மா நிலங்றதே கனா.
            கண்டியரோட மீசைத் துடிக்கிறத வெச்சே விகடபிரசண்டரு அவரோட மனச படிச்சிடுறாரு. அதுக்கு ஏத்த மாதிரி இப்போ வார்த்தையைப் போட்டுப் பேசுறாரு, "வேற யாருட்டயும் நெலம் போயிருந்தா நாஞ்ஞ இப்பிடி வந்து பேச முடியா. ஒஞ்ஞகிட்ட மாறுனதால உக்காந்துப் பேச முடியுது. ஞாயம்னா ஒஞ்ஞளுக்கு உசுரு. இதுல நாஞ்ஞ சொல்றதுக்கு ன்னா இருக்கு. நீஞ்ஞளா பாத்து சொல்றதுதாம். ஒரு நல்ல வழிய நீஞ்ஞத்தாம் காட்டியாவணும்!"ன்னு விகடபிரசண்டரு பேச கண்டியருக்குள்ள ஒரு கர்வம் வந்துப் போகுது.
            குரல ஓங்கி எடுத்து கண்டியரு பேச ஆரம்பிச்சி, "இந்தாருப்பா மொதலியாரே! அத்து பொதுச் சொத்துன்னாலும் நமக்குத் தெரியாதுப்பா. வயலுக மொத்தம் அஞ்சரை மா. நல்ல வளமான வயலுக. நம்மட வயலுகள ஒட்டி வர்ற வயலுக. வாங்கிப் போட்டா ஒண்ணாப் போகும்னு வாங்குனது. இந்த வெவரம் நமக்குப் புரியாது மொதலியாரே. ஒங்க ஊரு, ஒங்க வூட்டு சமாச்சாரத்துல எல்லாம் நமக்கு அவ்வளவு வெவரம் பத்தாது. இப்பயும் ஒண்ணுங் கெட்டுப் போகல. வாங்குன பணத்த கொண்டாந்து வெச்சா வித்த நிலத்த கொடுக்குறதுல நமக்கு ஒண்ணும் அட்டியில்ல!" அப்பிடிங்கிறாரு.
            "வாங்குனத திரும்ப வாங்குறது நம்ம நோக்கமில்ல. இதுக்கு ஒரு ஞாயம் நீஞ்ஞத்தாம் பண்ணி வுடோணும். நீஞ்ஞளா பாத்து எத்து பண்ணாலும் சரித்தாம்!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "இஞ்ஞ குழிக்கணக்கு அறுவது அறுவத்து அஞ்சுத்தாம் போவுது. விருத்தியூரு ஆச்சாரி நமக்குத் தெரிஞ்சவேங்றதாலயும், குடும்பத்துல கஷ்டம்னு வந்து நின்னதாலாயும் குழிக்கு எழுவது ரூவா போட்டு வாங்கிட்டேம். ஊருல விசயம் தெரிஞ்சா கண்டியர்ரா இப்படிப் பண்ணாம்னு பேசுவாய்க. நெலத்தோட வெலைய ஏத்தி விட்டுட்டதா நாலு பேரு வீட்டு மின்னாடி வந்து நிப்பாய்னுங்க. இத்து ஞாயமான்னு வந்து கேட்டா நம்மகிட்ட பதிலு இல்ல. இதுல ஞாயம்லாம் ஒண்ணும் இல்ல. மனுஷனுக்கு மனுஷன் ஒத்தாசைத்தாம். கண்டியரு குழிக்கு எழுவது ரூவாய்க்கு வாங்கிட்டாங்ற விசயத்த வெளியில வுட்டுப்புடாதீயே. சோலியா போயிடும். சோலியா போனாலும் அதயும் சமாளிப்பேங்றது வேற விசயம். ஏம் தேவையில்லாம சோலியப் போட்டு இழுத்துக்கிட்டுங்றேம்?"ங்றாரு கண்டியரு.
            "ஒரு முடிவச் சொன்னீங்கன்னா... அவ்வேம் பாவம்! வந்தவனுக்கு ஒரு தெளிவு கிடைச்சிடும் பாருங்களேம்!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "அத்தாம் முடிவு. எத்தன வாட்டிக்குச் சொல்றதாம்? நெலம் ரண்டு பேருக்கும்தாங்றது ஞாயம். வித்த காசி விருத்தியூரு ஆச்சாரிட்டத்தான இருக்கும். பணத்தப் பிரிச்சிக்கிட்டாலும் சரித்தாம். அப்பிடியில்ல பணத்த கொண்டாந்து நெலத்த திரும்ப வாங்கிக்கிறதுனாலும் சரித்தாம். ரண்டுமே கண்டியருக்கு சரித்தாம். கண்டியரு நெலத்த அபாண்டமா பிடிச்சிப்புட்டான்னு மட்டும் நெனைச்சுப்புடாதீயே. நமக்கு இப்டில்லாம் வெசயம் இருக்கிறது தெரியாதுங்றேம்."அப்பிடிங்கிறாரு கண்டியரு.
            "பெறவு நாஞ்ஞ உத்தரவு வாங்கிக்கிறேம்!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "திடீர்ன்னு ஒண்ணுஞ் சொல்லாம கெளம்புனா எப்டி?"ங்றாரு கண்டியரு.
            "நீஞ்ஞ சொல்றதுதாஞ் சரி! அஞ்ஞயும் கலந்துட்டுத்தாம் முடிவ பண்ணணும். ஒஞ்ஞள வந்துப் பாத்ததுல ஒரு தெளிவு ஆயிருச்சு. அது போதும்."ங்றாரு கண்டியரு.
            "வேற நாம்ம ஏத்தாவது பண்ணணும்னு யோஜனை இருந்தாலும் சொல்லிப்புடுங்க மொதலியாரே! பண்ணிப்புடுவேம்!"ங்றாரு கண்டியரு.
            "கண்டியரு சொல்றதத் தாண்டியா ஞாயம் ஒண்ணு இருக்கப் போவுது? நீஞ்ஞ‍ சொல்றதுதாஞ் சரி. ரண்டு பக்கமும் இடைவெளி வுட்டுல்லா சொல்லியிருக்கீயே. பெறவு அதுக்கு மேல ஒண்ணுமில்ல!"ங்றாரு விகடபிரசண்டரு.

            "சித்த இருங்க! பையேம் வாத்தியாராயி மொத மொதலா நம்ம வூட்டுப்பக்கம் வார்றாம். ஒண்ணுஞ் செய்யாம அனுப்புறது எப்டி? ஏய் ஆயி! முந்தா நேத்திக்கு ஓம் தம்பிக்கார்ரேம் கொண்டாந்தாம்லே அதுல ஒரு சட்டைய எடுத்து வா!"ங்றாரு கண்டியரு.
            கண்டியரோட வூட்டுக்காரம்மா சொன்ன வேகத்துக்கு சட்டையோட வந்து நிக்குறாங்க. வெளிரு பச்ச நிற சட்டை. வெளிநாட்டுச் சட்டை. "இந்தாம்யா! மச்சாங்கார்ரேம் பாரீன்லேந்து அஞ்சாறு சட்டையைக் கொண்டாந்தாம். நாம்ம ஜிப்பாச் சட்ட போடுற ஆளுல்ல. இந்த மாதிரிக்கு கழுத்துல பட்ட வெச்சிப் போடுறதல்லாம் ஒம்மட மாரி இளவெட்டுங்க போடுறதுல்ல. நமக்கு ஒத்து வராதுன்னா கேட்க மாட்டேங்றாம். பிடிவாதாமா திணிச்சிட்டுப் போயிட்டாம். வெச்சிக்கும்யா!"ங்றாரு கண்டியரு வீட்டுக்காரம்மா கொண்டாந்த சட்டையை வாங்கி நீட்டிக்கிட்டு.
            சுப்பு வாத்தியாரு அந்தச் சட்டையைப் பவ்வியமாய் வாங்கிக்கிறாரு. அந்தச் சட்டையோட பித்தான்லாம் அமுக்குப் பித்தான். அதுவே அந்தச் சட்டைக்கு ஒரு பவுசைக் கொடுக்குது. காலரெல்லாம் ரொம்பப் பெரிசா முயலு காது கணக்கா நீட்டிக்கிட்டு கெடக்கும். அந்தச் சட்டையை ரொம்ப நாளு சுப்பு வாத்தியாரு பொட்டிக்குள்ளயே வெச்சிருந்தாரு போடாம. அப்பாக்காரரு வாங்கிப் போட்ட நெலத்துல நமக்குப் பாகம்னு வந்த சொத்துன்னு அந்தச் சட்டையைப் பத்திச் சொல்லுவாரு.
            "யம்பீக்கு ஒண்ணும் வருத்தமில்லயில. வூட்டுல கலந்துட்டு வாஞ்ஞ. எந்த முடிவுன்னாலும் பண்ணிக் கொடுத்திடுறேம். கொறையில்லாம போயிட்டு வாஞ்ஞ!" அப்பிடிங்கிறாரு கண்டியரு.
            விகடபிரசண்டரும், சுப்பு வாத்தியாரும் சைக்கிள கெளப்பிக்கிட்டு விருத்தியூருக்கு வாராங்க. வந்தவங்க நேரா செயராமு பெரிப்பாகிட்ட விவரத்தைச் சொல்லிக் கேக்குறாங்க. "இத்து ன்னப்பா நம்மள நம்பாம கேள்வியளா கேட்டுப்புட்டு? ஊரச் சுத்தி அம்மாங் கடேன். கொடுத்தாச்சி முடிச்சாச்சி. கடன்ல தம்பிக்காரேம் அவனுக்கும் பங்கு இருக்குல்ல. ஒத்த காசிக் கேட்டுருப்பனா அவனயே?"ங்குது அதுக்குப் பெரிப்பா.
            "கொறைக்கணக்கா போட்டாலும் குழிக்கு எழுவது ரூவா, மாவுக்கு ஏழாயிர ரூவா, அஞ்சரை மாவுக்கும் முப்பத்து ஏழாயிர ரூவாய்க்கு மேலல வருது. அம்மாங் காசியா கடன அடைக்க ஆனுச்சி? அப்படி யார்ட்ட ன்னா கடன்? எம்புட்டுக் கடன்?" அப்பிடிங்கிறாரு விகடபிரசண்டரு வாத்தியாரு.
            "ஒங்கள மாரில்லாம் படிச்சவேம் யில்ல வாத்தியார்ரே நாம்ம! வாங்குன கடன நாளு போட்டு எழுதி வைக்கத் தெரியாத கபோதிங்க வாத்தியார்ரே நாம்ம! கடன சுத்தமா கொடுத்தாச்சின்னா நம்புங்க. இனுமே அவன் தலைக்கும், எந் தலைக்கும் கடங் கப்பி ஒண்ணுமில்ல! அதெ நெனச்சிச் சந்தோஷப்பட்டுக்கணும்னு பாத்தா சந்தேகமுல்ல படுறீங்க வாத்தியார்ரே!"ங்குது பெரிப்பா.
            "பூர்வீகச் சொத்துன்னு ன்னத்தாம் தம்பிக்காரனுக்குக் கொடுக்குறதா உத்தேசம்ங்றேம்? ஒரு பேருக்காவது ஒரு துண்டு துணி நெலத்தையாவது கொடுக்கணும்ல! வயல வித்தாச்சி. வூட்டுல நீஞ்ஞ இருக்குறீங்க! அதாங் நமக்குப் புரிய மாட்டேங்குது?"ங்றாரு விகடபிரசண்டரு.
            "படிக்க வெச்சாச்சி. வேலைக்குப் போய்ட்டாம். சம்பாத்தியத்துல அவனவனும் வாங்கிக்கி வேண்டித்தாம். நம்மள யாரு படிக்க வெச்சா? யாரு வேல வாங்கிக் கொடுத்தா? தெனம் நாலு பேர பாத்து வேலயப் பிடிச்சி கட்டய அடிச்சாத்தாம் அன்னிக்குக் குடிக்கிறதுக்கு கஞ்சி! இல்லன்னா கொல பட்டினித்தாம். இருந்த நெலத்தையும் வித்தாச்சுல்ல. இனுமே அரிசிக்கும் ஒரு வழியில்ல!" அப்பிடிங்குது பெரிப்பா.
            இதுக்கு மேல என்னத்தப் பேசுறதுன்னு விகடபிரசண்டரு வாத்தியாருக்கும் புரியல. சுப்பு வாத்தியாருக்கும் புரியல. விகடபிரசண்டரு வாத்தியாரு சுப்பு வாத்தியார்ர தனியா அழைச்சிட்டு வந்து, "நீயி ஊரு நாட்டாமைக்காரங்ககிட்ட ஒரு பிராது பண்ணு. அப்பத்தாம் இதுக்கு ஒரு ஞாயம் பொறக்கும். ஒஞ்ஞ அண்ணம் பொய்யி சொல்ற மாதிரித்தாம் நமக்குப் படுது. ஞாயமா கேட்டாக்க இதுல ஞாயம் ஒண்ணும் பொறக்காது போலருக்கு. வெளியிலேந்து நாலு பேரு நொழைஞ்சாத்தாம் சரிபெட்டு வரும். எல்லாத்துக்கும் மலுவட்டையாப் பேசுனா ன்னா பண்றது? எல்லாத்துக்கும் ஒரே ராகம், ஒரே தாளம்ன்னா கேக்குறவேம் ன்னா கேணப் பயலா?"ங்றாரு விகடபிரசண்டரு.
            "வேண்டாங்கய்யா அதெல்லாம்! அண்ணம் தம்பி சொத்துத் தகராறுன்னு ஊருக்குள்ளப் பேச்சாப் போயிடும்! எஞ்ஞ அத்தாங்காரவுக ரண்டு பேரும் வேலங்குடியில இருக்காக. அஞ்ஞத்தாம் இஞ்ஞ வித்த நெலத்துக்கு அஞ்ஞ நெலம் வாங்கிப் போட்டிருக்கிறதா பேச்சு ஊருக்குள்ள அடிபடுது. அவங்ககிட்ட போயி ஒரு வார்த்தைப் பேசுறேம். அவங்க வந்து பேசி வுடட்டும். இல்லேன்னக்கா வேற ஒண்ணும் பண்ண வாணாம். அப்டியே விட்டுப்புடலாம்! நீஞ்ஞ சொல்ற மாரி அப்பங்காரரு சொத்துல ஞாபவார்த்தமா ஒரு துண்டு நெலத்தையாவது வெச்சிக்கணும்தாம்!"ங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...