26 Nov 2019

ஏ.கே.செட்டியாரின் 'உலகம் சுற்றும் தமிழன்' - ஒரு குறிப்பான அறிமுகம்



ஏ.கே.செட்டியார் :
அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்பதன் சுருக்கமே ஏ.கே. செட்டியார்.
ஏ.கே.செட்டியார் தமிழ்ப் பயண இலக்கியங்களின் முன்னோடி என கருதத்தக்கவர்.
ஆவணப் படங்களின் முன்னோடி எனவும் கொள்ளத்தக்கவர்.
'உலகம் சுற்றிய தமிழன்' என்ற அவரது நூல் வாயிலாக உலகம் சுற்றிய தமிழர் என்றும் அறியத்தக்கவர்.
உலகம் சுற்றும் தமிழன்

            காந்தி குறித்த ஆவணப் படத்தை எடுப்பதற்காகவும், அதற்கான விவரங்களைச் சேகரிப்பதற்காகவும் ஏ.கே.செட்டியார் லட்சக்கணக்கான கிலோ மீட்டர் கடற்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். பயணம் என்றாலே உற்சாகமும், பிரமிப்பும்தானே என்று கேட்டால் அவர் பயணம் மேற்கோண்ட காலக் கட்டத்தைக் கூர்ந்து நோக்க வேண்டியிருக்கிறது. உலகம் இரண்டாம் உலகப்போரைச் சந்தித்துக் கொண்டிருந்த மிரட்சியான காலக்கட்டத்தில் ஏ.கே.செட்டியார் காந்தி குறித்த ஆவணப்படத்திற்காகத் துணிவான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
            உலகம் சுற்றிய தமிழராக மட்டுமல்லாமல் காந்தி குறித்த விவரணைப் படத்தை எடுத்த தமிழராகவும் அவர் அறியப்படுகிறார். காந்தி குறித்த ஆவணப் படத்திற்காக உலகத்தைச் சுற்றியலைந்த பயணக் கதையை அவர் 'உலகம் சுற்றிய தமிழன்' என்ற தலைப்பில் நூலாகத் தந்திருக்கிறார்.

நுட்பமான நுண்ணரசியல் :
            'உலகம் சுற்றும் தமிழன்'  நூலைத் தொடக்கத்தில் படித்த போது நான்கு கல்கண்டு இதழ்களையோ, நான்கு முத்தாரம் இதழ்களையோ சேர்த்து வைத்து படிப்பது போல இருந்தது. துணுக்குகளின் தொகுப்பு நூல் போன்ற வாடை அடித்தது அந்நூலில்.
            தமிழில் ஆற்றுப்படை நூல்கள் போன்ற பயணத்தைக் காட்சிப்படுத்தும் நூல்கள் இருந்த போதிலும், உலகெங்கிலும் மார்கோபோலோ, யுவான்சுவாங் போன்றோரின் பயணக் குறிப்புகள் இருந்த போதிலும் தமிழில் கட்டுரை வடிவிலும், உரைநடை இலக்கியத்திலும் தோன்றிய முதல் பயண நூலாக அது கொள்ளத்தக்கது என்பதைக் கவனிக்கும் போது அந்நூல் தனித்த கவனத்தைப் பெறுகிறது.
            உலகெங்கும் நிலவிய நிறவெறியை, தற்போது வரை நிலவிக் கொண்டிருக்கும் அதன் ஆணிவேரை ஏ.கே.செட்டியாரின் நூலில் நாடி பிடித்துப் பார்க்க முடிகிறது.
            நிறவெறிக்கு எதிரான போராட்டங்களுக்கான உலகளாவிய வித்துகளைத் தந்தவர் காந்தியடிகள் எனில் அஃது மிகையில்லாத கூற்று என்றே கூறலாம் என நினைக்கிறேன். அவரது வித்துகளை எடுத்துக் கொண்டு மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா வரை பலர் நிறவெறிக்கு எதிரான அரசியலில் சாதித்துக் காட்டியிருக்கின்றனர். உச்சமாக காந்தியடிகள் தன்னுடைய தலைமுடியைத் தானே வெட்டிக் கொள்வதற்கான பின்புலத்தை உருவாக்கியதில் நிறவெறிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வாசம் செய்த நாட்களில் வெள்ளைக்கார சலூன்காரரால் முடி வெட்டப்பட்டாமல் அவமதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். அதன் விளைவாக தன் தலைமுடியைத் தானே வெட்டிக் கொள்ளும் வழக்கம் அவருக்கு உண்டாகியிருக்கிறது. உலகெங்கும் நிலவும் நிறவெறியைச் சந்திக்க சந்திக்க ஏ.கே.செட்டியாரின் உள்ளத்தில் காந்தியடிகள் ஆதர்ச மனிதராக உயர்கிறார்.
            பிரிட்டிஷ் இந்திய பிரஜை எனும் அடையாளத்தின் கீழ் அவர் உலகெங்கும் பயணித்தாலும், காந்திய மண்ணிலிருந்து வந்தவர் என்ற அடையாளம் அவர் மீதான உலக மக்களின் பார்வையை உயர்த்திக் காட்டுவதை உணர்கிறார் செட்டியார்.
            உலக அளவிலான நிறவெறிக்கு எதிரான அரசியல், அகிம்சைப் போராட்டத்திற்கான அரசியல் ஆகியவற்றுக்கான குறியீடு அல்லது ஒரு ஐகானாகக் கொள்ளத்தக்கவர் காந்தியடிகள். செட்டியாரின் உள்ளத்திலும் அப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் இருக்கிறார் காந்தியடிகள். உலகம் சுற்றும் பயண அனுபவத்தில் காந்தியின் புகழ் பாடுவதை எந்த இடத்திலும் நிறுத்தவில்லை ஏ.கே.செட்டியார்.
            இப்பயணக் கட்டுரைகளால் ஆன இந்நூலில் எவ்வளவோ விசயங்களையும், சந்தித்த பலவிதமான மனிதர்களையும், உலக நாடுகளைச் சுற்றி வந்த அனுபவங்களையும் சொல்கிறார் ஏ.கே.செட்டியார். சில நுண்ணரசியல்களையும் நூலில் அவர் சுட்டிக்காட்டாமல் இல்லை. குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களில் தமிழர்களின் போராட்ட உணர்வும், அதற்காக அவர்கள் செய்த தியாகமும் அதிகம் என்றாலும், அப்போராட்டத்தின் பயனாக குஜராத்திகள் பெற்ற முன்னுரிமைகளே அதிகம் என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் ஏ.கே.செட்டியார். அது உண்மைதானே! தமிழர்களாகிய தமிழர்களிடமே அவர் காந்தியடிகள் குறித்த ஆவணப்படத்தின் ஒரு பிரதி கூட இல்லை எனும் போது அவரது அந்தக் கூற்றின் இன்னொரு பரிமாணத்தை உணர முடிகிறது.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...