மனதைக் கண்ணாடி என்கிறார்.
சினத்தைச் சிறுத்தை என்கிறார்.
சிறுத்தைச் சீறிப் பாய்வதால் சின்னபின்னமாகும்
பிம்பமே உடல் என்கிறார் ஒல்லியல் மருத்துவர் அருள்.
தேகத்தின் உறுப்புகள் ஒற்றுமையாக இருப்பதாகவும்,
மனங்கள் அப்படி இல்லையென்றும் மேலதிக கவிதைகளையும் வாசிக்கிறார் அருள்.
சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறேன்
இந்தக் கூட்டத்தில் கவிதைகள் அதிகம் என்று.
இன்னும் கவிதைகள் முடிந்து விடவில்லை.
கடலுக்கு முத்து அழகாக இருப்பதாகவும்
- அநேகமாக அது மூழ்கியே கிடந்தாலும்,
தலைவனுக்குத் தலைவி அழகாக இருப்பதாகவும்
- அநேகமாக அவள் எப்படி இருந்தாலும்,
படைப்பாளிக்குப் படைப்பு அழகாக இருப்பதாகவும்
- அநேகமாக அது எவ்வளவு கன்றாவியாக இருந்தாலும்,
சொல்லுக்குச் செயல் அழகாக இருப்பதாகவும்,
செயலுக்குப் பொருள் அழகாக இருப்பதாகவும்,
இவை எல்லாம் இடம்பெறும் இலக்கியக் கூட்டம்
அதை விட அழகாக இருப்பதாகவும் கவிதை சொல்கிறார் ராம்.
தம்பியைப் பற்றிய பட்டியல் கவிதை ஒன்றை
வாசிக்கிறார் பெருமாள் ஐயா. அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். ஓய்வுக்குப் பின் கவிதை எழுதுவது
சுகமான அனுபவம். அவரைப் பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
தற்போது அவர் கவிதை வாசிப்பது தடங்கல் பட்டு விடக் கூடாது. அவர் வாசிக்கிறார்,
இராமனுக்கு லட்சுமணன் தம்பி
பலராமனுக்கு கண்ணன் தம்பி
கர்ணனுக்கு தர்மன் தம்பி
துரியோதனனுக்கு துச்சாதனன் தம்பி
வாலிக்கு சுக்ரீவன் தம்பி
இராவணனுக்கு விபீஷணன் தம்பி
செங்குட்டுவனுக்கு இளங்கோ தம்பி
பெரிய மருதுவிற்கு சின்ன மருது தம்பி
வீரபாண்டியனுக்கு ஊமைத்துரை தம்பி
பொன்னருக்குச் சங்கர் தம்பி
அண்ணாவிற்கு ஆயிரம் தம்பி என்று. கூட்டத்தில்
கைதட்டல் பெற்ற கவிதைகளுள் இதுவும் ஒன்றாகிறது.
சிங்கக் கவிஞர் வேலு புத்தாண்டை வரவேற்று
ஒரு கவிதை வாசிக்கிறார். புதிய ஆண்டு மலர் போல் மலர்வதாகவும், பிறப்பால் வேறுபட்டாலும்,
உறவால் ஒன்றுபட்டு, வஞ்சகத்தை அழித்திட, பொதுப்பணியை ஆற்றிட, துன்பத்தைக் கொன்றிட,
எதிரிகளை வென்றிட அவர் பாயிரம் பாடுவதாகவும், ஆயிரம் இளைஞர்கள் வர வேண்டுவதாகவும் கூறுகிறார்.
ஒரு நாவலில் இத்தனைக் கவிதைகளின் பதிவுகள்
தேவையா? என வாசகர்கள் கேட்கலாம். அப்படியானால் இது நாவலா? கவிதைத் தொகுப்பா? என்ற
சந்தேகமும் அவர்களுக்கு வரலாம். இதில் வாசகர்களுக்கான நன்மை ஒன்றிருக்கிறது. இத்தனை
கவிதைகளைப் படித்ததும் உங்களுக்கு கவிதை எழுதும் உந்துதல் இந்நேரம் வந்திருக்கும்.
இதன் தாக்கத்தாலோ, அதிர்வுகளாலோ இதைப் போன்றோ, இதைப் போலில்லாத வேறொன்றோ - ஆக
நீங்கள் கவிதை எழுதும் உணர்வுக்கு இந்நேரம் தள்ளப்பட்டிருக்கலாம்.
இன்னும் பல கூட்டங்களில் இது போன்ற கவிதைகள்
இன்னும் நிறைய வர இருக்கின்றன. அனைத்தையும் வாசித்து முடித்த பின் நீங்கள் கவிஞராகவோ,
நாவலை வாசித்து முடித்ததால் நாவல் ஆசிரியராகவோ மாற வாய்ப்பிருக்கிறது. ஓர் எழுத்து
எழுத்தாளரைப் பிரசவிக்க வேண்டும் என்பார்கள். அதற்கு இருநூறு சதவீத வாய்ப்பு இந்த நாவலில்
இருக்கிறது என்று வாசகர்களின் தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறார் நாவலாசிரியர்.
*****
No comments:
Post a Comment