7 Nov 2019

கட்டி வைக்க காரணங்கள்!



செய்யு - 261
            "அதது நல்லா இருந்தா சரித்தாம் யத்தே! வூட்டுல ரண்டு பொண்ணு நிக்குது. ஆக வேண்டிய காரியத்த ஆவ வேண்டிய நேரத்துல முடிச்சுப்புட்டா நல்லது பாருங்க. அது சம்பந்தமாத்தாம் யத்தே பேசலாம்னு வந்திருக்கேம்!" அப்பிடிங்கிறாரு ஒரு வாயி சாப்பாட்டை எடுத்து வாயில் போட்டுகிட்டே வேலங்குடி பெரியவரு.
            "ரசாவுக்கு நல்ல எடமா பாத்து கொண்டாந்திருக்கீயேளா?" அப்பிடிங்கிது ரத்தினத்து ஆத்தா.
            "வாண்ணே! எப்போ வந்தே? வூட்டுப்பக்கமே வர மாட்டேங்றீயே?" அப்பிடின்னு இவங்களோட பேச்சு சத்தத்துல லேசா முழிச்சுகிட்டு எழுந்து வந்து கேட்குது பத்மா பெரிம்மா.
            "இப்பதாங் ஆயி வந்து சித்த நேரம் இருக்கும். நீயி களைப்பா ஒறங்கிகிட்டு இருந்தே. ஒம்மட மாமியா சாமாஞ் செட்டுகள போட்டு வெலக்கிக்கிட்டுக் கெடந்துச்சு. தூங்குற ஒன்னய தொந்தரவு பண்ண வாணாம்னுதாம், சாமாஞ் செட்டுகள வெளக்கிக்கிட்டுக் கெடந்த இவுகள கொண்டாந்து செரமப்படுத்திக்கிட்டு இப்படிக்கா வந்திட்டேம்!"ங்கிறாரு பெரியவரு.
            "இதிலென்ன செரமங்றேம்? தூங்கிகிட்டுக் கெடந்தா எழுப்ப வேண்டியத்தானே. மதியஞ் சாப்புட்டேன்னா, அதாஞ் செத்த கண்ணசருவேம்னு கொஞ்சம் தலய சாய்ச்சேம். அப்டியே ஒறங்கிட்டேம். செரி, அதெ வுடு. வூட்டுல அண்ணி, கொழந்தை எல்லாஞ் சவுக்கியமா இருக்காங்களா? கிட்டு அண்ணேம் அங்க வந்திட்டதா பேச்சு. அத்து ந்நல்லா இருக்கா?" அப்பிடிங்கிது பத்மா பெரிம்மா.
            "அவ்வேம் வெசயமாத்தாம் தங்கச்சி வந்திருக்கேம்!" அப்பிடிங்கிறாரு பெரியவரு.
            "சொல்லுண்ணே! இஞ்ஞ எதாச்சியும் பொண்ண பாத்திருக்கீயா?"ன்னு சட்டுன்னு விசயத்துக்கு வருது அதாங் பத்மா பெரிம்மா.
            "வெத்தலய உள்ளங்கையில வெச்சுகிட்டு, சுண்ணாம்ப பொறங்கையிலய தடவி வைச்சுகிட்டு நாம்ம ஏதுக்கு வெத்தலைக்குச் சுண்ணாம்பு வேணும்னு ஊரு ஊரா அலையணும்? வூட்டுல வெண்ணெய் இருக்குறப்போ வெளியில நெய்க்கு அலைஞ்ச கதையால்ல ஆயிடும்? யோஜனைப் பண்ணிப் பார்த்தேம். ரசாவ ஏம் கடைசிப் பெய சின்னவனுக்குக் கட்டி வைக்கக் கூடாதுன்னு யோஜனை? அதாங் எல்லாத்தியும் பாத்துக் கலந்துகிட்டுப் போவலாம்னு வந்தேம்!" அப்பிடிங்கிறாரு பெரியவரு.
            "பொண்ண பெத்து வெச்சிருக்கவங்ககிட்ட ஒரு வார்த்தைக் கேக்கணுமே?" அப்பிடிங்கிது பத்மா பெரிம்மா.
            "யத்தே! நீஞ்ஞதாம் சொல்லணும். குடும்ப கதெய பேசிகிட்டே சாப்புட்டு முடிச்சிட்டு இந்தக் கதெக்கு வரலாம்னு பாத்தா, தங்காச்சி வந்ததுல எந்தக் கதெ மொதல்ல வாரணுமோ, அந்தக் கதெ மொதல்ல வந்திடுச்சி. அதாங் சங்கதி. ஒங்க அபிப்ராயத்த யத்தே நீஞ்ஞதாம் சொல்லணும். நாம்ம சரியா நெனைச்சிருக்கேன்னா ன்னாங்றது ஒங்க வார்த்தையிலத்தாம் இருக்கு!"ங்றாரு பெரியவரு.
            "மொதல்ல சாப்புட்டு முடியுங்க! பெறவு பேசுவேம்!"ங்குது ரத்தினத்து ஆத்தா.
            "பொண்ணு கேக்க வந்த வூட்டுல கை நனைச்சு சாப்பிட்டும் ஆச்சு. பெறவு ன்னா? எல்லாஞ் சம்மதந்தாம். எங் யண்ணண வுட்டா வேற எந்த ஒசத்தியான மாப்புள வந்து இந்த வூட்டுல பொண்ண கட்டிக்கிட்டுப் போவப் போறாம்? நீயி கலியாணத் தோத பாரு! வூட்டுலயும் தல ஒண்ணு கொறையுதுல்ல!" அப்பிடிங்கிது பத்மா பெரிம்மா. இரத்தினத்து ஆத்தாவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அது அப்படியே அமைதியா உக்காந்தது உக்காந்தபடியே இருக்குது. கொஞ்ச நேரத்துக்கு அந்த எடத்துல எந்தச் சத்ததும் எழும்பல. மெளனம்னா மெளனம். அப்படியொரு மெளனம். அந்த மெளனம் கொஞ்சம் பயமுறுத்துறாப்புல இருக்கு.
            போதும் சாப்பாடுன்னு எழுந்திரிக்கிற பெரியவர்கிட்ட முற்றத்துல தண்ணிச் செம்பை எடுத்துக் கொடுக்க ஓடுது பத்மா பெரிம்மா. "நல்ல சரியான புடியா புடிச்சிருக்கே! பதிலு ன்னா வருதுன்னு பாப்பேம்?" அப்பிடிங்கிது பத்மா பெரிம்மா பெரியவருக்கு மட்டும் கேட்கும்படி குசுகுசுன்னு.
            கையை அலம்பிக்கிட்டு தோள்ல போட்டிருக்கிற துண்டால துடைச்சுக்கிட்டு மறுபடியும் அங்கேயே வந்து உட்காருறாரு பெரியவரு.
            "ஒங்க கடைசித் தம்பிக்குக் கேட்குறீங்க. வூட்டோட மூத்த மாப்பிள்ள நீங்க. ஒங்க முடிவுதாம். ஒங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. நாளைக்குத் தேவை திங்கன்னாலும் நின்னு செய்யப் போறோவோ நீஞ்ஞதாம். ஆனா ன்னா ஒரு வெசயம்ன்னா நீஞ்ஞ சொல்ற ஒங்க கடைசித் தம்பியோளப் பத்தி நல்ல வெதமா சேதி பொழங்கலையே? நாளைக்கு எம் பொண்ணுக்கு எதாவது ஒண்ணுன்னா பொம்பளைங்க நாஞ்ஞ. நாஞ்ஞ ன்ன பண்ணுவேம்ங்றதையும் நீஞ்ஞதாம் மனசுல வெச்சுகிட்டு, நல்ல முடிவா நீஞ்ஞத்தாம் சொல்லணும்!" அப்பிடிங்குது ரத்தினத்து ஆத்தா.
            "நெனைச்சேம்ண்ணே! நாம்ம தேடி வந்து கேட்டாக்கா இப்பிடித்தாம் எளக்காரமா போவும்ண்ணே! அப்படியே ஆயிடுச்சுப் பாரு. இருக்குறது ஒண்ணுமில்லன்னாலும் இந்த வக்குக்கெல்லாம் ஒண்ணும் கொறைச்சலில்ல. ஏம் எங் அண்ணனுக்கு ன்னா கொறைச்சலு? நம்மள பிடிக்கலன்னா நம்மட அண்ணனயும் பிடிக்கலன்னு ஆயிடுமா? செரி அதெ வுட்டுட்டுப் போங்க. வந்து கேக்குற எஞ்ஞ அண்ணம்தான்னே குடும்பத்துக்கு மூத்த மருமவ்வேம்? அத்து இம்புட்டு மருவாதியா பணிஞ்சுக் கேட்குறதுக்கு இந்த வூட்டுல ன்ன மருவாதி இருக்கு? நீயி யண்ணே இந்த வூட்டோட பொண்ணக் கட்டுனதே தப்புண்ணே. வேற குடும்பத்துல பொண்ண கட்டியிருந்தே ஒன்னய வெச்சு தாங்கு தாங்குன்னு தாங்கியிருப்பாவோ. என்னவோ ஒந் தலையெழுத்து இந்த வூட்டுப் பொண்ணோட கஷ்டப்படணும்னு எழுதிக் கெடக்கு. என்னோட தலையெழுத்து இந்த வூட்டு மனுஷனோட கஷ்டப்படணும்னு எழுதிக் கெடக்கு. தலையெழுத்த யாரால மாத்த முடியும் சொல்லு?" அப்பிடிங்கிது இதையெல்லாம் கேட்டுக்கிட்டு பத்மா பெரிம்மா.
            "வாய்க்கு வந்த படியெல்லாம் யாரும் பேச வாணாம். நாம்ம பேசுனதுல எதாச்சிம் தப்பு இருந்தா அதெ மட்டும் சொல்லுங்கோ?" அப்பிடிங்கிது ரத்தினத்து ஆத்தா.
            "தப்புல்லாம் ஒண்ணும் இல்ல யத்தே! வூடு தேடி, படியேறி வந்து ‍கேக்கிறேம். முடியும், முடியான்னு சொல்லிட்டா வெசயம் முடிஞ்சிப் போயிடும். அடுத்தடுத்த சோலிகள அவங்கவங்களும் பாக்கலாம் பாருங்க!" அப்பிடிங்கிறாரு பெரியவரு.
            "ஒங்க பேச்சுக்கு மறுபேச்செல்லாம் இல்லீங்கம்பீ! திருச்சியில கலியாணம் பண்ணிட்டுப் போயிருக்குங்களே ஒங்க தம்பிங்க. அதுங்களோட வெவாகத்துக்கு வந்தப்பவே அந்தத் தம்பியப் பத்தி ஊருல நல்ல வெதமா பேசிக்கல. அதாஞ் யோஜிக்கிறேம்!" அப்பிடிங்கிது ரத்தினத்து ஆத்தா.
            பெரியவரு உக்காந்து காலை நீட்டி விட்டுகிட்டு வேட்டி மடிப்புல வெச்சிருக்கிற வெத்தலைப் பொட்டணத்தை எடுத்து அவித்து எதுத்தாப்புல வெச்சிக்கிறாரு. நல்ல கும்பகோணத்து வெத்தலையா ஒண்ணு எடுத்துக்கிட்டு அதோட காம்ப கிள்ளிகிட்டு அது எடது உள்ளங்கையில வெச்சிக்கிட்டு வலது கையால நல்லா நீவி விட்டுட்டு அதோட நுனிய லேசா கிள்ளி விடுறாரு. வெத்தலைய அப்படியே திருப்பி அதோட முதுகுல தட்டிக் கொடுக்குறது போல பின்னால சுண்ணாம்ப தடவுறாரு. தடவிப்புட்டு ஒரு கொட்டப் பாக்க எடுத்து வாய்க்குள்ள கொடுத்து ஒரு கடி கடிச்சி அதுல கொஞ்சத்த எடுத்து வெத்தலைக்குள்ள வெச்சிகிட்டு வெத்தலைய ரெண்டா, நாளா மடிக்கிறாரு. மடிக்கிறதுன்னா ரொம்ப மெல்லாம மடிக்கிறாரு. அவர்ர இப்போ பாக்கிறப்போ எல்லாத்தையும் கவனத்த விட்டுட்டு அதுல மட்டுந்தாம் கவனமா இருக்கார்ன்னு தோணுது. மடிச்சத வாய்க்குள்ள போடல. அது கைக்குள்ளேயே சுருட்டிச் சுருட்டிப் பாத்துக்கிறாரு. அதெ அப்படியே உள்ளங்கையில கொண்டாந்துகிட்டு சுட்டு வெரல நீட்டி, "ஒண்ணு!"ங்றாரு பெரியவரு.பெரியவரு பாய்ண்ட போட ஆரம்பிச்சிட்டாரு. அவரு பாயிண்ட் போட ஆரம்பிச்சிட்டார்ன்னா வரிசைக் கட்டி வெளாசுவாரு.
            "ஒண்ணு, பயெ இப்ப நம்ம கூடத்தாம் இருக்காம்! எந்தத் தப்புத் தண்டால்லாம் கெடயாது. நம்ம கவனிப்பு எப்டி இருக்கும்னு நாமளே சொல்லிக்க விரும்பல.
            ரெண்டு, வேலங்குடியிலத்தாம் இப்ப அவ்வேம் ஜாகை. அஞ்ஞ நல்ல வேலையப் பிடிச்சிட்டாம். அவ்வேம் நல்ல வேலைக்காரம். வெளிப்படையா சொல்லணும்ன்னா நமக்கு சுத்தியப் பிடிச்சி ஆணி அடிக்கவே வாராது. அவ்வேம் பெரமாதமா நெலை, சன்னலு, பத்தாயம், பேழைங்கன்னு செஞ்சிப் போடறது ன்னா? அவனெ எங்க வுட்டாலும், எப்டி வுட்டாலும் பொழச்சுக்கிட்டுக் காலத்தத் தள்ளிப்புடுவாம்!
            மூணு, நமக்குப் பக்கத்திலயே ஒரு வூட்டையும் போட்டுக் கொடுத்திட்டேம். அஞ்ஞ தனியாத்தாம் குடித்தனம் இருக்கப் போறாம். மாமியா, நாத்துனான்னு எந்தப் பிக்கலு, பிடுங்கலு எதுவும் கெடையாது. எதாச்சிம் ஒதவி, ஒத்தாசைன்னா ஓடிப் போயிப் பாக்க பக்கத்துலயே இருக்கேம். ஏம் என்னான்னு கேள்வி கேக்க ஆளு இருக்கு.
            நாலு, கலியாணத்த கட்டிட்டு வாரது புது எடம் மாரி தெரிஞ்சாலும் அஞ்ஞதாம் அவுங்களோட யக்காக்காரி அதாங் எம்மட பொண்டாட்டிக்காரி மொதல்லயே போயிக் கெடக்கா. ஆக, போவப் போற எடம் புது எடம் கெடையாது. யக்காக்காரி யம்மாவ போல பாத்துப்பா.
            அஞ்சு, காலா காலத்துல ஆவ வேண்டியத பாத்துட்டா, அடுத்து ஒண்ணு இப்பயோ அப்பயோ நின்னுகிட்டு இருந்தாலும் கவலயில்ல. சொம எறங்கிப் போயிடுது.
            ஆறு, ரெண்டு பொண்ண ரெண்டு எடத்துல கட்டிக் கொடுத்துப்புட்டு ரெண்டு எடத்துக்கு அலய வேண்டிய அவசியம் இல்லாம போயிடுது பாருங்க. ரெண்டு பொண்ணும் ஒரே எடத்துல கட்டிக் கொடுத்திட்டால அந்த ஒத்த எடத்துக்குப் போனா ரண்டையும் பாத்துப்புடலாம்.
            ஏழு, ஒரு பேச்சுக்குச் சொன்னாக்கா... இப்ப ரசாவுக்கு மாப்பிள்ள பாக்க ஆரம்பிச்சாலும் அங்க பாத்து இங்க பாத்து, அங்க விசாரிச்சி, இங்க விசாரிச்சின்னு எவ்வளவு காலம் ஆவும்னு கணக்கெல்லாம் இல்ல. ஆவுறப்பத்தாம். கலியாண யோகம் எப்பவோ அப்பத்தாம். இத்து அப்பிடியில்ல. எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு வந்தாச்சி. சட்டுப்புட்டுன்னு கலியாணத்த முடிச்சிப்புட்டா வீணா அலையுறதும், தேடுறதும் மிச்சமாவுது பாருங்க.
            எட்டு, பழம் நழுவிப் பாலுல விழுறதெல்லாம் எப்பவாச்சுத்தாம் நடக்கும். அப்படி நடக்குறப்பவே அதெ பிடிச்சிக்கிறதுதாம் யோகங்றது. நமக்கு என்னவோ இத்து நல்ல வெதமாப் படுது. அதுவா அமைஞ்சி வாரதை நாம்ம தடுத்துப்புடக் கூடாது.
            ஒம்போது, வயசுக்கு வந்த புள்ளயோள வூட்டுல வெச்சிக்கிறங்றது வவுத்துல நெருப்ப வெச்சுக் கட்டிக்கிற கதைதாம். காட்டுல கெடைக்குற சந்தனமும், வூட்டுல பொறக்குற பொம்பளயைும் பொறந்த எடத்த வுட்டு கழண்டு இன்னொரு எடத்துல போயி அமைஞ்சாத்தாம் அதுகளுக்கு மவுசு. இதயும் மனசுல வெச்சிக்கணும்.
            பத்து, காத்து அடிக்கிறப்ப தூத்திக்கிட்டத்தாம். அய்யரு வந்துட்டு போற வரைக்குல்லாம் அமாவாசெ நிக்காதும்பாங்க. கனிஞ்சி வாரப்பவே பழத்தப் புட்டு வாயில போட்டுக்கணும். அழுவிட வுட்டுடக் கூடாதுல்ல.
            பதினொண்ணு,..."ன்னு பெரியவரு ஆரம்பிக்கிறாரு, ரத்தினத்து ஆத்தா குறுக்கால புகுந்து, "புரியுதுங்கம்பீ! அவ்வேம் பெரியவ்வேம் செயராமு வேலய முடிச்சிட்டு வந்திடட்டும். ஒரு வார்த்தை அவனயும் கலந்துக்கணும் இல்லையா. அவ்வேம் சின்னவேம் சுப்பு வெவரம் பத்தாத வயசு. அவ்வேங்கிட்ட வேண்டில்ல. இருந்தாலும் ஒரு வார்த்தைச் சொல்லிப்புடுவேம். நீஞ்ஞ கொஞ்சம் செரம பரியாரம் பண்ணிக்குங்கோ!" அப்பிடிங்குது ரத்தினத்து ஆத்தா. அது பாயை எடுத்துப் போட்டதும் சட்டையைக் கழட்டி சுவத்து ஆணியில தொங்க விட்டுட்டு ஒண்ணுக்கு ரெண்டாய் தலையணையை வாங்கி தலைக்கு வெச்சிட்டுப் படுத்த ரெண்டாவது நிமிஷமே கொறட்டையை விட ஆரம்பிக்கிறாரு பெரியவரு.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...