7 Nov 2019

12.3



            இலக்கியம்,
            தொழில்நுட்பம்,
            அரசியல்,
            பொருளாதாரம்,
            மருத்துவம்,
            சமூகம்
                        இப்படி எத்தனையோ உருப்படிகள் இருக்கின்றன. நாவலாசிரியர் இதில் படிப்புகளைச் சுட்டிச் சொல்லவில்லை. வேலைவாய்ப்புகளை இந்தப் பதங்களைப் பயன்படுத்திச் சொல்லவில்லை. இதில் எது முதன்மையானதோ? எது கடைநிலையில் நிற்பதுவோ? இந்திய உள்நாட்டுக் கல்லூரிகளில் இலக்கியம் கடைசி இடத்தில் இருக்கிறது. ஆனால் இலக்கியம் உசத்தி. அவை எல்லாமுமாக இலக்கியம் சிந்திக்கிறது. அதன் தலையெழுத்து, தலைவிதி அப்படியிருக்கிறது. அவை எல்லாவற்றுக்கும் இலக்கியத்தில் இடம் இருக்கிறது. அவை எல்லாவற்றையும் இலக்கியம் அனுமதிக்கும். அவை அப்படியல்ல. இலக்கியத்தை அனுமதிக்காது. இதில் மார்க்ஸ் வித்தியாசமானவர். இலக்கியத்தின் ஊடாக விஞ்ஞானத்தை உலவ விடுவார். மார்க்ஸின் எழுத்துகளை அழிக்க முடியாமல் போனதற்கு அது காரணமாகி விட்டது.
            அவை எல்லாம் எப்படி சிந்திக்க வேண்டும் என்று இலக்கியம் சிந்திக்கிறது. எப்படிச் சிந்தித்தால் அவைச் சரியாக இருக்கும் என்றும் இலக்கியம் ஒவ்வொன்றையும் தரிசிக்கிறது. தலைமை உபாத்தியாயர் ஆகிறது இலக்கியம்.
*
            ஒரு முடி இல்லாமல் மொத்த முடியும் கொட்டிப் போனவர்கள் அதிர்ஷ்டத்தின் பிள்ளைகள். தலை வார சீப்பு வேண்டியதில்லை. தலை குளிக்க சிகைக்காய், ஷாம்பூ தேட வேண்டிய அவசியமில்லை. தலை உலர்த்த மெனக்கெட வேண்டியதில்லை. உடம்பைத் துவட்டுதலைப் போல ஒரே இழுப்பில் மண்டையையும் இழுத்தால் காரியும் முடிந்து விடுகிறது. பேன், பொடுகு தொல்லை இல்லவே இல்லை. மழையில் நனைவது குறித்த கவலையில்லை. உடம்பு நனைவதைப் போல மண்டையும் நனைகிறது. நனைய வேண்டிய தலைமுடி பாக்கியமின்றி போய் விட்டது. அந்த மண்டைகளைத் தொழுதல் நன்று. மண்டை முடியில் என்ன இருக்கிறது? மண்டைச் சுரப்பிலன்றோ இருக்கிறது எல்லாம். எம் கடவுளர்களில் ஒருவரேனும் அப்படியின்றிப் போனது யார் செய்த துரதிர்ஷ்டம்? காலத்தின் துருதிர்ஷ்டம்.
            இலக்கியம் காலத்தின் மண்டையிலிருந்து உதிர்ந்த முடி. வழுக்கை மண்டையில் விழும் ஒற்றை மழைத்துளி தத்துவம்.
*
            வில்ஸ் அண்ணன் கேட்டார், கூட்டம் போட்டால் எத்தனை நபர்கள் வருவார்கள்?
            விகடு சொன்னான், கூட்டமாக வர மாட்டார்கள். வருபவர்களைக் கூட்டமாக காட்டிக் கொள்ளலாம்.
            ஓர் அவசியமான உப குறிப்பு :
            இலக்கிய கூட்டம் நடத்தும் எவரும் தொடர்ந்து இலக்கியவாதிகளாக இருக்க மாட்டார்கள். அவர்கள் காலப்போக்கில் தத்துவவாதிகளாகி விடுவார்கள்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...