6 Nov 2019

வாத்தியாரு பள்ளியோடம் போன கதை!




செய்யு - 260
            ரொம்ப நாளைக்குப் பெறவு வூட்டுக்குள்ள மருமவனா காலடி எடுத்து வைக்கிறதா, பத்மா பெரிம்மாவுக்கு அண்ணனா காலடி எடுத்து வைக்கிறதான்னு ஒரு கொழப்பம் பெரியவரு மனசுல வந்துப் போவுது. திண்ணையிலத்தாம் அப்போ ரத்தினம் ஆத்தா உக்காந்துகிட்டு அரிசிப் பொடைச்சிகிட்டு இருந்துச்சு. அது மருமவன பாத்ததும் எழுந்துகிட்டு ஓடியாந்து திண்ணையோரமா நின்னுகிட்டு, "வாங்க! வாங்க!" அப்பிடிங்கிது. இவரு, "எல்லாஞ் செளக்கியமா இருக்கீங்களா?"ன்னு கேட்டுகிட்டே உள்ளே நுழையுறாரு.
            உள்ளார அறையில ரசா அத்தை துணிமணிகள மடிச்சி வெச்சிகிட்டு இருக்கு. நடுக்கூடத்துல இருக்குற முத்தத்துல மத்தியான வேளையில சாப்புட்டுப் பொழங்குன தட்டுமுட்டுச் சாமான்கள தையல்நாயகி ஆத்தா போட்டு வெளக்கிக்கிட்டுக் கெடக்கு. பத்மா பெரிம்மா மதியானஞ் சாப்பிட்டு அந்தச் சாப்பாட்டு மயக்கத்துல சுத்துக்கட்டுல அப்படியே தரையில கண்ணசந்து கெடக்குது. எல்லாத்தையும் ஒரு பார்வைப் பாக்குறாரு பெரியவரு. பாத்தவரு ரசா அத்தைகிட்ட வந்து மஞ்சப் பையில வாங்கி வந்த பலகாரத்தையும், பூவையும் கொடுத்து சாமிகிட்ட வையுங்றாரு. அது அதை வாங்கிகிட்டு சாமி படத்துக்கு முன்னாடி வெச்சிகிட்டு ஒதுங்கிக்கிது. அதுக்குள்ள ரத்தினத்து ஆத்தா ஓடியாந்து லோட்டாவுல குடிக்கிறதுக்கு தண்ணிய நீட்டி அறைக்கு எதுத்தாப்புலயே பாயைப் போட்டு உட்காரச் சொல்லி, "சாப்புடுங்கோ!" அப்பிடிங்குது.
            "சாப்புடுவோம்! பத்மா தங்கச்சி தூங்குது போலருக்கு. எழுப்ப வாணாம். அதுவா எழுந்திரிச்சதும் பேசிக்கலாம். புள்ளைங்கோ எங்கோ?" அப்பிடிங்கிறாரு.
            "பள்ளியோடம் போயிருக்குதுங்க! நாகு இஞ்ஞத்தாம் பள்ளியோடம் போயிருக்கு. அவ்வேம் சுப்பு குடவாசலு போயிட்டு இருக்காம். மணியடிச்ச சத்தம் கேட்டு முடிக்கிறதுக்குள்ள வூட்டுக்குள்ள நாகு வந்து நிப்பா! அவ்வேம் சுப்பு வாரதுக்கு ஆறு மணி ஆயிடும்!" அப்பிடிங்கிது ரத்தினத்து ஆத்தா. அதுக்குள்ள சாமான்கள வெளக்கிட்டுக் கெடந்த தையல்நாயகி ஆத்தா உள்ள ஓடியாந்து, ரத்தினத்து ஆத்தாவ அறைக்குள்ள கூப்புடுது. அதைப் புரிஞ்சிகிட்டுப் பெரியவரு, "டீத்தண்ணியல்லாம் போட வாணாம். சாப்பாடு உள்ள போவாது."ங்றாரு. சரிதான்னு அதுக்குள்ள ஒரு தட்டுல சோத்தப் போட்டு, கொழம்பு ஊத்தி, ஓரத்துல கொஞ்சம் வெண்டைக்காயில செஞ்ச தொடுகறிய வெச்சு தையல்நாயகி ஆத்தா ரத்தினத்து ஆத்தாகிட்ட நீட்டுது. அதெ அது ஒரு கையில வாங்கி முடிச்சதும், மறுகையில ஒரு செம்பு நிறைய தண்ணியையும் நீட்டுது. ரெண்டையும் ரெண்டு கையில வாங்கிகிட்டு அறைக்கு வெளிய வர்ற ரத்தினத்து ஆத்தா சாப்பாட்டுத் தட்ட கீழே வெச்சிட்டு தண்ணிச் செம்ப குனிஞ்சி நீட்டுது. அதெ வாங்கிகிட்டு முற்றத்துப் பக்கம் வந்து கையையும், மொகத்தையும் அலம்பிக்கிட்டு அப்படியே துண்டால தொடைச்சுகிட்டு சாப்பிட உட்கார்றாரு பெரியவரு.
            பெரியவரு சாப்பிட உட்கார்ந்தான்னா பேசிட்டுச் சாப்புடறதும், சாப்புட்டுகிட்டே பேசுறதுதாம் வழக்கங்றது ஒங்களுக்குத் தெரிஞ்ச சங்கதித்தாம். அப்படி ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரத்துக்கு சாப்பாடும், பேச்சுமா போவுது.
            "சுப்பு இஞ்ஞ படிக்கிறச்சே அலும்பும், விசமுமா பண்ண புள்ளையாண்டானாச்சே. குடவாசலு போயிப் படிக்கிதுன்னு கேட்குறப்ப அதிசயமால்ல இருக்கு!" அப்பிடிங்கிறாரு பெரியவரு.

            "அப்பிடித்தாம் இருந்தாம். ஒரு நா பள்ளியோடம் போய்ட்டு வாடான்னா அப்பிடி மொரண்டு பிடிப்பாம். இப்போ ன்னான்னா ஒரு நா பள்ளியோடத்துப் போவ வாணாம், வய வேல கொஞ்சம் கெடக்குடான்னா கேக்க மாட்டேங்றாம். பையைத் தூக்கிக்கிட்டு பள்ளியோடம் போனாத்தாம் போச்சுன்னு நிக்குறாம். நம்மூருலேந்து போறப் பிள்ளைகள்ல நல்லா படிக்கிற செட்டுல அவனும் இருக்காம் போலருக்கு. வாத்தியாருமாருவோளும் நல்ல வெதமாத்தாஞ் சொல்றாங்க. பாப்பேம். அவ்வேம் தலையில ன்னா எழுதியிருக்குன்னு?" அப்பிடிங்குது ரத்தினம் ஆத்தா.
            சுப்பு வாத்தியார்ர பள்ளியோடம் சேர்க்குற வயசு வந்த பிற்பாடு பள்ளியோடத்துல சேர்த்து விடுறதுக்குள்ள ரத்தினத்து ஆத்தா பட்ட பாடு சொல்லி மாளாது. ஆத்தா கொண்டு போயி விட்ட அன்னிக்கு ஒரு நாளு ஆத்தாவோட போயி ஆத்தாவோடயே திரும்பி வந்தாரு சுப்பு வாத்தியாரு. சரி மொத நாளுதானேன்னு வாத்தியாரும் விட்டாரு, ஆத்தாவும் சரின்னு இருந்திடுச்சி. மறுநாளு பள்ளியோடம் போவ மாட்டேன்னு அடம் பிடிச்சிட்டு உக்காந்துட்டாரு சுப்பு வாத்தியாரு. அதெ சமாளிச்சு ரத்தினம் ஆத்தா அவர்ர தூக்கிட்டுப் போனா அதோட தலைமயித்த இறுக்கிப் பிடிச்சுகிட்டுக் கீழே எறங்க மாட்டேங்கிறாரு. வாத்தியாருமாருக கம்ப வெச்சு மெரட்டிப் பாக்குறாங்க. அவங்க கம்ப வெச்சு மெரட்ட மெரட்ட இவரு ஆத்தாவோட மசுர இறுக்கமா பிடிச்சிக்கிறாரு. ஆத்தாவுக்கு வலி உசுரு போவுது. எப்படியோ எறக்கி விட்டுப் பார்த்தா அப்படியே தரையில மரவட்டைக் கணக்கா சுருட்டிகிட்டுப் படுத்திக்கிறாரு. எழும்ப மாட்டேங்றாரு.
            இதென்னடா பெருங்கூத்தாப் போவுதேன்னு மறுநாள்லேர்ந்து ரத்தினத்து ஆத்தா, சுப்பு வாத்தியார பள்ளியோடம் கொண்டு போயி விட்டுட்டு வர்ற பொறுப்பை ரசா அத்தைக்கிட்ட ஒப்படைச்சுட்டு அது வேற வேலைய பாக்க ஆரம்பிச்சிடுச்சு. வூட்டுலயும், வயல்லயும் அதுக்கு வேலைன்னா வேலை அப்படி கெடக்கும். அதெ பாத்துச் செஞ்சாத்தான்னே குடும்பத்த கரையேத்த முடியும். இவர்ர பள்ளியோடம் கொண்டு போயி வுடுற வேலையையே பாத்துட்டு இருந்தா குடும்பம் என்னாவுறது?
            பள்ளியோடம் போற நேரத்துல ரசா அத்தையோட கண்ணுல படாம எங்கேயாவது ஒளிஞ்சிக்குவாரு சுப்பு வாத்தியாரு.      எங்க ஒளிஞ்சிருந்தாலும் கண்டுபிடிச்சித் தூக்கிடும் ரசா அத்தை. அதெ பள்ளியோடத்துக்கு தூக்கிகிட்டுக் கொண்டு போவ முடியாதபடி அதைப் போட்டு அடிப்பாரு, முடியைப் போட்டு பிய்ச்சு எடுத்திடுவாரு சுப்பு வாத்தியாரு. இவரு பண்ற அத்தனை சித்திரவதைகளையும் பொறுத்துகிட்டு ரசா அத்தை அவரைக் கொண்டு போயிப் பள்ளியோடத்துல விட்டுட்டு வந்தா அது வூடு வந்து சேர்றதக்கு முன்னாடி இவரு வூடு வந்து நிப்பாரு. பெறவு என்ன? மறுபடியும் மொதல்லேர்ந்து சுப்பு வாத்தியாரு அடிக்கிற அடியையும், முடியைப் போட்டு பிய்ச்சி எடுக்குற கொடுமையையும் தாங்கிக்கிட்டு ரசா அத்தை மறுபடியும் பள்ளியோடத்துக்குக் கொண்டு போவும். அதெ தூக்கிக்கிட்டு பள்ளியோடத்துப் போவ முடியாதபடி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணித்தாம் பார்ப்பாரு சுப்பு வாத்தியாரு. ரசா அத்தை எதுக்கும் அசமடங்காம அவர்ர கொண்டு போயி பள்ளியோடத்துல வுட்டுட்டுத்தாம் மறுவேல பார்க்கும்.
            பள்ளியோடம் போவ விருப்பமில்லாம அப்படி என்னத்தான் சுப்பு வாத்தியாரு பண்ணுவார்ன்னா? திண்ணை முழுவதும் களிமண்ணப் போட்டு அதுல வெளையாட்டு சாமான்களா பண்ணிக்கிட்டு கெடப்பாரு. சட்டிப், பானை, வண்டி, மனுஷன்னு அவரோட கையி எதையாவது பெசைஞ்சு செஞ்சுகிட்டே கெடக்கும். அப்படிச் செய்யுறது சின்ன புள்ளைங்க செய்யுற மாதிரி ஏனோ தானோன்னு இல்லாம பெரியவங்க செய்யுற கணக்கா அம்சமா வேற இருக்கும். இதுக்குன்னே ஊருக்குள்ள சுப்பு என்னமா களிமண்ணுல அம்சமா பண்றான்னு பாக்குறதுக்கு ஒரு கூட்டமே உண்டாகிப் போச்சுன்னா பாத்துக்குங்களேன். பள்ளியோடம் விட்டு வந்தா களிமண்ணைப் பிடிக்க ஆரம்பிச்சிடுவாரு சுப்பு வாத்தியாரு. பள்ளியோடம் இல்லாத நாளுன்னா சொல்ல வாணாம். அன்னிக்குக் கொண்டாட்டம்தான் அவருக்கு. திண்ணை முழுக்க சாமானுங்களா செஞ்சி வைச்சிப்புடுவாரு. அவரு அப்படிச் செய்யுறது பாக்குறதுல ரத்தினத்து ஆத்தாவுக்கு தனியான சந்தோஷம். "அப்படியே அவுங்க அன்னபட்சி பண்ண மாரில்லா பண்றாம் எம் பயெ!"ன்னு மடியில தூக்கி வெச்சிக்கிட்டுக் கொஞ்சும். ஒரு நாளு கோயில்ல பார்த்த அன்னபட்சிய அதே மாதிரி களிமண்ணுல செஞ்சும் வைச்சிட்டாரு சுப்பு வாத்தியாரு. அதெப் பாத்து ரத்தினத்து ஆத்தா அன்னைக்கு முழுக்க அவரைக் கட்டிப்பிடிச்சுகிட்டு அழுதுகிட்டே இருந்துச்சு. அதுக்கு தாத்தாவோட நெனைப்பு வந்திருக்கும் போலருக்கு.
            இப்படி அஞ்சாவது உள்ளூரு பள்ளியோடத்துல படிக்கிற வரைக்கும் கோளாறு கொடுத்துகிட்டு இருந்த சுப்பு வாத்தியாரு ஆறாப்புக்கு குடவாசலு ஹை ஸ்கூலுக்குப் போன பிற்பாடுதாம் ஒழுங்க பள்ளியோடம் போவ ஆரம்பிச்சது என்ன அதிசயமோ? ஆச்சரியமோ? யாருக்கும் புரிபடல. அவரு பாட்டுக்கு பள்ளியோடம் கெளம்பிப் போய்ட்டே இருப்பாரு. ஒரு நாளைக்கிப் பள்ளியோடம் போவ வேணாம்னு சொன்னாலும் அவரால போவாம இருக்க முடியல. காலையில எழுந்திரிச்சி ஆடுக கட்டியிருக்கிற கொட்டில்களயெல்லாம் கூட்டிச் சுத்தம் பண்ணிட்டு, முடிஞ்சா அதுக்குள்ள ஒரு ஓட்டமா ஓடி கொஞ்சம் இலை, தழைகளையும் ஒடைச்சுப் போட்டுட்டுத்தாம் பள்ளியோடம் கெளம்புவாரு. சாயுங்காலம் பள்ளியோடம் விட்டு வந்த உடனே வயக்காட்டுக்கு ஒரே ஓட்டமா ஓடி ஒரு கட்டு புல்ல அறுத்து வந்து போட்டுட்டுத்தாம் ஒரு வாயி டீத்தண்ணியே குடிப்பாரு. பெறவு வூட்டு வேலை எதாச்சிம் இருந்தா பார்ப்பாரு. படிப்புல்லாம் ராத்திரி எட்டு மணிக்கு மேலத்தாம். சிமிழி விளக்க கொளுத்தி வெச்சிக்கிட்டு படிக்க ஆரம்பிச்சார்ன்னா பத்து பதினோரு மணி வரைக்கும் படிச்சிட்டுக் கெடப்பாரு. படிப்புல்லாம் திண்ணையிலத்தாம் நடக்கும். அதால தெருவுல போற சனம், வர்ற சனம்லாம் அவரு படிக்கிறதைப் பாத்துட்டு கண்ணு வெச்சிட்டுத்தாம் போவும், "சுப்புப் பய ன்னம்மா ரா முச்சூடும் வுழுந்து வுழுந்து படிக்கிறாம்!"ன்னு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...