6 Nov 2019

12.2




            பொதுவாக ஆங்கிலத்தில் 's' சேர்த்து எழுதப்பட்டால் அது பன்மையாகி விடுவதாகச் சொல்லப்படுவதுண்டு. Nucleus என்ற சொல்லுக்கு அது பொருந்தாதது மட்டுமன்று, அச்சொல் பன்மையும் அன்று. அச்சொல்லின் பன்மை வித்தியாசமாக nuclei என்று முடியும். பொதுவான விதிகள் எல்லா இடத்திலும் பொருந்தாது என்பதற்கு உட்கருவே உள்ளடி சாட்சி.
            யோசனைக்கு முடிவேது? யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான், விதிகளையும், விதிகளை விலக்கும் விதிவிலக்குகளையும். விதிகள் இருப்பதாலே விதிவிலக்குகள் இருக்கின்றன. விதிவிலக்குகள் உண்டாவதாலே விதிகள் அழுத்தம் பெறுகின்றன, தலைவிதி உட்பட.
            இலக்கியம் பேச நினைப்பவர்கள் சமூகத்தின் விதி விலக்குகள்.
            இலக்கியம் சமூகத்தின் காலாவதியாகிப் போன வடிவம். outdated version. வெர்ஷன் கணக்குச் சொன்னால் மைனஸ் இன்பினிட்டி. அது மைனஸ் இன்பினிட்டியிலிருந்துப் பல நவீனப் பாய்ச்சல்களைப் பாய்ந்து விட்டது. இலக்கியம் பேச நினைப்பவர்கள் மைனஸ் இன்பினிட்டியின் ஆதிப் பாய்ச்சல்களை இன்னும் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். அது இசையாகிக் காற்றில் பறக்க ஆரம்பித்து விட்டது. காட்சியாகி டிஜிட்டலைச் செதுக்க ஆரம்பித்து விட்டது. தாளை விட்டுக் கிட்டத்தட்ட பறந்து விட்டது. புத்தகங்களைக் காட்சிப்படுத்திக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது ஓர் அமானுஷ்ய உலகம். உலகம் இப்படியும், அப்படியுமாக இரண்டுக்கும் அத்துடன் அமானுஷ்யத்துக்கும் வாய்ப்பு உள்ள இடம்.
            அச்சடிக்கும் அடுத்த நொடியே அப்படியே தலைகீழாகி அப்டேட்டாகி மாறும் உலகிற்கு முன் காகிதம் விவரங்களை உறைய வைக்கிறது.
*
            கூட்டத்தில் என்ன பேசலாம்? என்றார் வில்சன்.
            கதை, கட்டுரை, கவிதை, வாசிப்பு, நாஸ்டால்ஜியா, சங்கத்தமிழ், தொல்காப்பியம், இசங்கள், திருக்குறள் - இப்படி எதாவது என்றான் விகடு.
            மெளனத்துக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அது தனக்குள் சிரித்துக் கொண்டது.
*
            வில்சன் அண்ணனின் தாத்தா காலத்திலிருந்து பலசரக்கு வியாபாரம் செய்வது அவர்களின் குடும்பத் தொழில் போல மாறியிருந்தது. வில்சன் அண்ணனை அதிலிருந்து மாற்ற வேண்டும் என்று கும்பகோணம் வரை கிளப்பிக் கொண்டு போய் பி.எஸ்ஸி. மேதமடிக்ஸ் படிக்க வைத்துப் பார்த்தனர். அதுவும் சீனிவாச இராமானுஜம் படித்த கும்பகோணம் ஆடவர் கல்லூரியில். சேர்த்ததற்குப் பாங்காக டிகிரியை வாங்கி வந்தவர் தி.ஜா.வின் புத்தகங்களோடு அப்பாவின் கடைப் பக்கத்தில் ஒரு மிட்டாய்க் கடையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். சீனிவாச ராமானுஜம் அப்படி ஏதோனும் நாவல் படித்தாரோ என்னவோ! சகலவித மிட்டாய்கள், மாச்சில்கள், கரிக்கோல்கள், தூவல்கள், அழிப்பான்கள், அளவுகோல்கள், புத்தகக் குறிப்பேட்டு அட்டைகள் அந்தக் கடையில் இருந்தன. அவர் கைகளில் தி.ஜா. உட்கார்ந்து கொண்டு மனசுக்குள் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். அம்மா வந்தாளையும், மோகமுள்ளையும் சலித்துப் போக முடியாதபடி கண்டபடிக்கு மீண்டும் மீண்டும் படித்துத் தள்ளினார்.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...