5 Nov 2019

ஒரு வீடு ரெண்டு குடும்பம்




செய்யு - 259
            இப்ப வேலங்குடிக்குத் தன்னோட தம்பியும் வந்துட்டதால அவனுக்கு ஒரு வழிய பண்ணணுமேன்னு வேலங்குடி பெரியவருக்கு யோசனை ஓடுது. ஆளு நல்ல வேலைக்காரன்தாம். அதுக்கே கண்ண மூடிட்டுப் பொண்ண எங்க கேட்டாலும் கொடுப்பாங்க. அத்தோட சொந்தமா ஒரு வூடு இருந்துட்டா சொல்லவே வாணாம். பொண்ண வூட்டுல கொண்டாந்து எறக்கிட்டே போயிடுவாங்க. வடக்குப் பாத்து இருந்த மனைக்கட்டுல மேற்கால இருந்தாரு பெரியவரு. கெழக்கால இருக்குற எடத்த சுத்தம் பண்ண ஆரம்பிச்சாரு பெரியவரு. ஏம் திடீர்ன்னு இப்படி பண்றாருன்னு தம்பிக்காரரான சின்னவருக்கு கேள்வியா போனதும் அவரு பெரியவர்கிட்ட கேட்குறாரு. "காலா காலத்துல ஒனக்குன்னு ஒரு குடும்பம்னு ஒண்ணு ஆச்சுன்னா நல்லா இருக்கும் பாரு. ஒரு வூடு இருந்துச்சுன்னா கண்ண மூடிட்டுப் பொண்ண கொடுத்திடுவாங்க. அதாங் இந்த எடத்தை சுத்தம் பண்ணி ஒனக்கு ஒரு வூட்டைக் கட்டிப்புடலாம்னு பாக்கிறேம்." அப்பிடிங்கிறாரு பெரியவரு. தம்பிகாரருக்குச் சந்தோஷம் தாங்க முடியல. புகழூர்ல உண்டான பிரச்சனையிலேந்து வேற எங்காச்சிம் போயிருந்தா நெலமை ன்னா ஆயிருக்கும்? தெய்வந்தாம் வேலங்குடியில கொண்டாந்து சேர்த்திருக்குன்னு கண்ணுல தண்ணிக் கட்டிக்கிது சின்னவருக்கு.
            பெரியவரோட வூடு எல்லா சுவரும் மண்ணு சுவருதாம். தம்பிக்கு நல்ல விதமா வூடு கட்டிக் கொடுக்கணும்னு நெனைப்பு அவருக்கு. மண்ணு சுவர்ரா இல்லாம செங்கல்லுகளா இருந்தா சுவரு பலமா காலா காலத்துக்கும் கெடக்கும்னு நெனைக்குறாரு பெரியவரு. அவரு நெதமும் சம்பாதிச்சுத் தர்ற காசு கையில இருக்கு. அந்தக் காசுல நல்ல செங்கல்லா வாங்குனா பாதிச் செங்கல்லு வாங்குறதுக்கே மொத்த காசும் போயிடும். மண்ணைக் கொழப்பி வைக்கப் போற சுவருக்கு அரையும், குறையுமா வெந்த செங்கல்லுகளாவும், அலுவினி கல்லுகளாகவும் வெச்சாக் கூட பலம்தானேன்னு நெனைக்குறாரு. செவரும் ஒரு ஒழுங்கு மொறையில பாக்க அழகாவும் இருக்கும்ங்றதால அதுதாம் சரின்னு முடிவு பண்ணுறாரு. அதுவும் இல்லாம அந்த மாதிரி சூளையில ஒதுங்குற கல்லுகள கேட்குற வெலைக்குக் கொடுப்பாங்க. இருக்குற காசுக்கு வூட்டைக் கட்டி முடிக்க அதுவும் ஒரு வசதியால்ல போவுது. செலவும் சிக்கனமா போவுங்றதால அப்படிப் பண்ணாரு பெரியவரு. இன்னும் செலவ சிக்கனமா பண்ண இவரே கொத்தனாரு கணக்கா நின்னு மண்ணைக் கொழப்பி, செயா அத்தைய கூட மாட வெச்சிகிட்டு செங்கல்ல வெச்சி சுவத்தை வைக்குறாரு. இவரு வெச்ச சுவத்துக்கு இவரே மண்ணைக் கொழப்பி சுவத்து மேல பூசி அம்சமா வேலையையும் முடிச்சிடுறாரு. மூணு நாளு மாசம் இதே வேலையா கெடந்து வேலையை முடிக்கிறாரு பெரியவரு.
            "ன்னா யத்தாம் தம்பிக்காரனுக்கு பைசா காசு செலவில்லாமல்ல வூட்டக் கட்டித் தர்றீங்க! ஒங்கள போல ஒரு அண்ணங்காரம் இருந்தா போதும். நமக்கு எங்க அந்தக் கொடுப்பன இருக்குதுங்க சொல்லுங்க. இருக்குற அண்ணங்காரம் எல்லாம் தம்பியிட்ட எப்டி புடுங்குறதுன்னே நிக்குறாம்."ங்றாரு இதெப் பாத்துட்டு காக்காப்புள்ள.
            "ரொம்ப சமத்தாப் பண்ணிப்புட்டீரய்யா! இப்டி அவனவனும் ஆரம்பிச்சா ஊருல ஒருத்தனுக்கும் வேல இல்லாம போயிடும்யா! பாத்து கரிசனமா பண்ணுங்கய்யா!"ங்றாரு தம்பு செட்டி.
            சுவத்தை வெச்சி முடிச்சதும் சின்னவரு ராமூர்த்திய வெச்சிக்கிட்டு மூங்கிலால கூரை வைக்கிறதுக்கு ஏத்தாப்புல தைச்சி கூரை போடுறதிலேந்து, நெலை வெச்சி கதவு வைக்கிற வரைக்கும் எல்லாத்தையும் பண்ணி முடிச்சாங்க. கட்டி முடிச்ச பிற்பாடு பாத்தா வூடு பக்கவா அம்சமாத்தாம் இருக்கு. தம்பி வூட்டுக்கு இப்படி நெலை, கதவுன்னு மரத்துல இருந்தாலும் பெரியவரோட வூட்டு கதவுக மூங்கிலு தட்டியாத்தாம் இன்னும் இருக்கு. அந்த தட்டியில சாக்குகளை வெச்சி அடைச்சி அப்படித்தாம் அவரால அப்போ கதவுகள தயாரு பண்ண முடிஞ்சிச்சு. ரொம்ப காலத்துக்கு பிற்பாடுதாம் முன்னாடி கட்டுன வூட்டுக்கு மட்டும் இருக்கட்டும்னு நெல கதவு செஞ்சி வைச்சாரு பெரியவரு.
            இப்படியெல்லாம் பைய பைய யோசனைப் பண்ணி தம்பிக்கு வூட்டைக் கட்டி முடிச்சிட்டாலும் பெரியவருக்கு இன்னொரு யோசனை ஒடுது. என்னத்தாம் இருந்தாலும் இப்படிப் பாத்துப் பாத்து தம்பிக்குச் செஞ்சாலும் வர்ற பொண்ணு அண்ணன் தம்பிகள பிரிச்சிடாம இருக்கணுமேன்னு யோசிக்கிறாரு பெரியவரு. வேத்துக் குடும்பத்துப் பொண்ணுங்களா இருந்தாத்தாம் பிரிச்சிடும். ஒரே குடும்பத்துப் பொண்ணா இருந்தா அந்தப் பிரச்சனை இருக்காதுன்னு யோசனை பண்ணவரு, செயா அத்தையோட தங்கச்சியான ரசா அத்தைய ஏம் தம்பிக்குக் கல்யாணம் பண்ணி வைக்கக் கூடாதுன்னு யோசிக்கிறாரு. அந்த யோசனை வந்ததும் வூட்டுல முழுசா விசயத்தைப் போட்டு உடைக்காம திருவாரூர்ல ஒரு சோலி இருக்கிறதா சொல்லிட்டு விருத்தியூருக்குக் கெளம்புறாரு. 
            திருவாரூ பஸ்ஸூ ஏறி, அங்கேருந்து குடவாசலுக்குப் பஸ்ஸூப் பிடிச்சி, குடவாசல்லேந்து நேஷனல்னு ஒரு பஸ்ஸூ பிடிச்சா விருத்தியூர்ல போயி எறங்கிடலாம். நம்ம பெரியவருதாம் கால்நடை மன்னனாச்சே. அதுக்குக் காச செலவு பண்ணி என்னத்துக்கு ஆவப் போவுது? அதுக்கு ஒரு சீமை சிகரெட்ட வாங்கி சுகமா அடிக்கலாம்ன்னு கால்நடையாவே நடந்து திருவாரூ வந்தவரு அங்க சிவராம ராவு பலகாரக் கடையில கால் கிலோ இனிப்புச் சேவும், கால் கிலோ காரச் சேவும் வாங்கிக்கிட்டு அப்படியே பக்கத்துப் பூக்கடையில நாலு மொழத்துக்கு மல்லியப்பூவும் வாங்கி மஞ்ச துணிப் பையில போட்டுக்கிறாரு. அத்தோட நூறு கிராமுக்கு அல்வாவும், அதுக்குக் கொஞ்சம் மணி காரச்சேவும் வாங்கி ஆச தீர தின்னுக்குறாரு. இன்னொரு நூறு கிராமுக்கு அல்வாவும், அதுக்குக் கொஞ்சம் மணி காரச்சேவும் வாங்கி வேட்டி மடிப்புல கட்டிக்கிறாரு. போற வழியில திங்கலாம்னு. அப்படியே ஒரு சீமை சிகரெட்ட வாங்கி ஒனக்கையா புஸ் புஸ்ஸூன்னு ஊதிக்கிட்டே கும்பகோணத்து ரோட்டுல நடையைக் கட்டுறாரு. புகை விட்டு முடிஞ்சதும் அவரு மனசு பூரா முன்னாடி நடந்தது எல்லாம் அலை அலையா நினைவுக்கு வருது.
            பெரியவரோட தங்கச்சி மொறையில வர்ற பொண்ணு ஒண்ணு புகழூர்ல இருந்துச்சு. அதோட பேரு பத்மா.  அந்தப் பொண்ணு வூடு வேறன்னாலும் இவங்க வூட்டுலயே வளந்த பொண்ணு. அங்க அந்தப் பொண்ணோட வூட்டுல பொறந்ததெல்லாம் பொண்ணா போனதால பொம்பள புள்ளைங்க மேலயே வெறுப்பாகி இது இன்னொரு வூட்டுல வளர்றத பத்திப் பெரிசா கண்டுக்கிடாம விட்டுட்டுங்க. அதாவது எந்த அளவுக்குக் கண்டுக்கிடாம விட்டாங்கன்னு கேட்டாக்கா... கல்யாணத்த வரைக்கும் ஒங்க குடும்பத்துலயே பண்ணி வெச்சுக்குங்கடாங்ற அளவுக்குக் கண்டுக்கிடாம வுட்டுட்டுங்க. அதே போல கலியாணத்தப்பயும் பேருக்குப் பெத்தவங்க வந்து நிக்கணுமேன்னு வந்து நின்னாங்களே தவிர ஒரு சின்ன துரும்ப கூட இங்க கிள்ளி அங்க போடல.
            பொறந்த நாலும் ஆம்பளைப் புள்ளையா போனதால பெரியவருக்கு பொம்பள அலங்காரமெல்லாம் பண்ணி அந்த ஆசையைத் தீத்துகிட்ட அவரோட அம்மாவுக்கு இந்தத் தங்கச்சி வந்தது ரொம்ப வசதியாப் போச்சுது. இந்தத் தங்கச்சி வராம போயிருந்தா பெரியவரையே வயசுக்கு வர வெச்சு தாவணி சட்டையையே போட வெச்சிருக்கும் அவங்க அம்மா. அந்த அளவுக்கு அவங்க அம்மாவுக்குப் பொம்பள புள்ள மேல அம்புட்டு ஆசை. இவரு உட்பட அவுங்க தம்பிங்க எல்லாருக்கும் அந்த தங்கச்சி மேல அம்புட்டு பாசம். இவ்வளவு பாசமான தங்கச்சிய வெவரம் தெரியாத எவனுக்குக் கொண்டு போயி கட்டி வைக்கிறதுன்னு பெரியவரே யோசனை பண்ணி ரொம்ப நாளைக்குக் களைச்சுப் போயிருக்காரு. கடைசியில அவருக்கு ஒரு யோசனைப் பட்டுச்சு. செயா அத்தைகிட்ட வந்து, "நம்ம பத்மா தங்கச்சி இருக்குல்ல. பொண்ணு எப்டி?"ங்றாரு. "அதுக்கெனன கொறைச்சலு? எங்க அண்ணனுக்கே கட்டி வெக்கலாம்!"னு எதார்த்தமா அதுவும் அடிச்சி வுட்டுருக்கு.

            பெரியவரு புடிச்சிக்கிட்டாரு, "கட்டி வெச்சா ன்னா கொறைஞ்சுப் போயிடுது? கட்டி வெச்சிடுவோம்!"ன்னுருக்காரு. அப்பதாம் செயா அத்தை, "யய்யே! அவசரப்பட்டு நாக்க வுட்டுப்புட்டோம்"ன்னு நுனி நாக்க தன்னையறியாம தம் பல்லால கடிச்சிருக்கு. ஒடனே காரியத்துல இறங்கிட்டாரு பெரியவரு. புகழூருக்கும், விருத்தியூருக்கும் நடையா நடந்து விருத்தியூரு மாரியம்மன் கோயில்ல வெச்சு காரியத்தை முடிச்சிப்புட்டாரு. அப்போ சுப்பு வாத்தியாரு நாலாப்புப் படிச்சிட்டு இருந்திருக்காரு. அதுல பெரியவருக்கு ரொம்ப நல்ல பேரு. மூத்த மருமவனா பொறுப்பா நடந்துகிட்டதா அவருக்குப் பேரு ஆயிடுச்சி. சாமிநாதம் ஆச்சாரி இல்லாத கொறைய புகழூருகாரன் மருமவனா வந்து சரி பண்ணிப்புட்டான்னு விருத்தியூர்ல ஆளாளுக்குப் பேச ஆரம்பிச்சிட்டாங்க. 
            மனுஷனோட வாழ்க்கையில நல்ல பேரு வர்றப்பா கூடவே கெட்ட பேரும் வந்து ஒட்டிக்கும்பாங்க. அப்படித்தாம் ஒரு கதை கலியாணத்துக்குப் பிற்பாடு நடந்துச்சு.
            செயராமு பெரிப்பாவுக்குக் கல்யாணம் ஆவுற வரைக்கும் ஒண்ணா இருந்த குடும்பம், பத்மா பெரிம்மா வந்த பிற்பாடு ரெண்டா போயிடுச்சு. அதுவும் பத்மா பெரிம்மாவுக்கு ஒத்த மாமியாளா என்ன? ரெட்டை மாமியாளு இல்லையா! அந்தக் கதையெல்லாம் ஒங்களுக்கு முன்னமே தெரியும். இருந்தாலும் சுருக்கமா சொல்லிப்புடறேம். சாமிநாதம் ஆச்சாரிக்கு ஆவணத்திலேந்து பண்ண மொத சம்சாரமான ரத்தினம் அம்மாளுக்குக் கொழந்தை இல்லாம போக, எவளோ ஒருத்தி தனக்குச் சக்களத்தியா வர்றதுக்கு தன்னோட தங்கச்சியே வரட்டும்னு ரத்தினம் அம்மாளே அதோட தங்கச்சியான தையல்நாயகியைப் பிடிச்சு கலியாணம் பண்ணி வெச்சது. அதுக்குப் பொறந்த பொறப்புகதான் செயராமு பெரியப்பாவிலிருந்து, செயா அத்தை, ரசா அத்தை, சுப்பு வாத்தியாரு, நாகு அத்தை உட்பட. கொழந்தைகளை தையல்நாயகி ஆத்தா பெத்துப் போட்டுச்சே தவிர, கொழந்தைகளைப் பாத்துகிட்டது எல்லாம் ரத்தினத் ஆத்தாதான். பொம்பளையா இருந்தாலும், ஆம்பளைக்கு ஆம்பளையா நின்னு குடும்பத்தைத் தாங்குனுது அதுதான்.
            செயராமு பெரிப்பா வளந்து ஆளாயி வேலைக்கிப் போற வரைக்கும் ஆடுகள வாங்கி வளத்து, வயல்ல எறங்கி நெல்லு விவசாயம் பாத்து, அதுக்கு எடையில பருத்திப் போட்டுன்னு ஆம்பளைக்கு ஆம்பளையா நின்னு குடும்பத்தைக் காபந்து பண்ணிச்சுது. செயராமு பெரிப்பா வேலை கத்துகிட்டு வேலைக்கிப் போன பிற்பாடும் அதுதாம் அப்பவும் அத்தனை வேலைகளையும் பார்த்து குடும்பத்தை நிமுத்திக்கிட்டு இருந்துச்சு. இருந்தாலும் பத்மா பெரிம்மாவுக்கு குடும்பத்துல இருந்த மொத்த தலைகளோட எண்ணிக்கை மனசுல உறுத்தியிருக்கணும்.
            கலியாணம் ஆன இவங்க மொத்தம் ரெண்டு பேரு. அங்க ரெண்டு மாமியாளுங்க, ரசா அத்தை, சுப்பு வாத்தியாரு, நாகு அத்தைன்னு அவங்க அஞ்சு பேரு. ஆக மொத்தம் ஏழு பேரு. ஒத்த ஆளு சம்பாதிச்சு நாம ரெண்டு பேரும் சாப்புடுறதா? இல்லே ஏழு பேத்துக்கும் பகுந்து சாப்புடுறதா?ன்னு ஒரு வினவு வந்துப் போயிடுச்சு பத்மா பெரிம்மாவுக்கு. வினவு வந்த பிற்பாடு வாயக் கட்டி சும்மாவா வெச்சிக்க முடியும்? "ஒத்த ஆளு சம்பாதிச்சி ஏழு வவுத்துக்குக் கொட்டுறதுன்னா யாரு வூட்டுல பெத்து விட்டுருக்காக எம் புருஷன? நாளைக்கி கொழந்தைக் குட்டிகன்னு ஆயிடுச்சுன்னா அதுக கலியாணம், தேவ, திங்கன்னு நாலு காசு சொத்து பத்து சேக்கிறதா ன்னா? ஓட்டாண்டியா நிக்குறதா ன்னா?" அப்பிடின்னு ஒரு நாளு சத்தத்தை எடுத்து விட்டிருக்குப் பெரிம்மா.
            அன்னைக்கு வீட்டை ரெண்டா பிரிச்சிடுச்சி ரத்தினம் ஆத்தா. வூட்டுக்கு நடுவுல சரிபாதியா ரெண்டா கோட்டைப் போட்டெல்லாம் பிரிக்கல. வீட்டுக்கூடம், சமையல்கட்டு எல்லாம் பெரிம்மா, பெரிப்பாவுக்கு. திண்ணையும், திண்ணையைத் தாண்டி இருக்குற அறையும் இவுங்களுக்கு. அந்த அறையில ஒரு அடுப்பை வெச்சி சமையல்கட்டாவும், அதுலேயே ஒரு ஓரத்துல காமாட்சி விளக்கையும், ரெண்டு சாமி படத்தையும் மாட்டி சாமி அறையுமா வெச்சிக்கிடுச்சி தையல்நாயகி ஆத்தா. தையல்நாயகி ஆத்தாவும், ரசா அத்தையும் அந்த அறைக்குள்ளயே படுத்துப்பாங்க. ரத்தினம் ஆத்தாவும், சுப்பு வாத்தியாரும், நாகு அத்தையும் திண்ணையில படுத்துப்பாங்க. மழை, சாரல் அடிக்கக் கூடாதுன்னு திண்ணைக்கு மேல ஒரு கம்பைக் கொடுத்து ஒரு படுதாவையும் எப்போதும் தயாரா தொங்க போட்டு வெச்சிருக்கும் ரத்தினம் ஆத்தா.
            இப்படி ஒரு வூட்டுக்குள்ளயே ஒரு வீடு ரெண்டு வீடா, ஒரு சமையலுகட்டுக்குப் பதிலா ரெண்டு சமையலுகட்டாவும் ஆயிப் போச்சு. இப்படிக் குடும்பம்தான் ரெண்டாப் போச்சுதே தவிர ஒரு பலகாரம் அது இதுன்னு எதாவது செஞ்சா போதும் தையல்நாயகி ஆத்தா மொதல்ல அதெ கொண்டு போயி செயராமு பெரிப்பாவுக்குக் கொடுத்துட்டு அது ஆசெ தீர திங்குறத பாத்துட்டுத்தாம் மறுவேலைப் பாக்கும். அது மட்டுமில்லாம பெரிம்மாவுக்குப் புள்ளைங்க பொறந்ததும் அதையெல்லாம் தூக்கி எடுத்து வளர்த்தது ரத்தினம் ஆத்தாவும், சுப்பு வாத்தியாருந்தாம். அதாலயே அந்தப் புள்ளைங்களுக்குப் பிற்காலத்துல அப்பன், ஆயி மேல இருந்த பாசத்தை விடவும் அதிகமா சித்தப்பா, சித்தப்பான்னு சுப்பு வாத்தியாரு மேல பாசம் இருந்துச்சு. அது பின்னாடி உள்ள கதை.
            இப்படிக் குடும்பம் ரெண்டுபட்டுப் போச்சுங்குற விசயம் தெரிஞ்ச உடனே பெரியவரு வந்து என்னென்னமோ பேசி சமாதானம் பண்ணி வெச்சுப் பாத்தாரு. ஒண்ணும் வேலைக்கு ஆகல. "என்ன யத்தே! இப்பிடி ஓர வறண்டைப் பிடிச்சாப்புல இருந்தா ஏத்துக்குமா?" அப்பிடின்னாரு பெரியவரு ரத்தினம் ஆத்தாளைப் பார்த்து, அதாவது அவரோட மூத்த மாமியாரைப் பார்த்து.
            "குடும்பத்துக்கு மூத்த மருமவேம் நீங்க! ஒங்க மின்னாடி வந்து நின்னு கூட பேசக் கூடாதுங்றது சம்பிரதாயம். ஒங்கள தட்டி விட்டுப் பேசுறதா நெனைக்க வாணாம். ஒடைஞ்ச பானையோ, ஒடைஞ்ச கண்ணாடியோ ஒட்டாதும்பாங்க. மனசும் அப்படித்தாம். அப்படி ஒடைஞ்சு ஒட்டாமப் போயிடக் கூடாது பாருங்க! இப்பிடிச் சித்தே தள்ளித் தள்ளி இருந்தா நாளைக்கி ஒரு தேவ திங்கன்ன போயி ஒட்டிக்கிடலாம். ஒட்டிகிட்டே இருக்கணும்னு ஆசெபட்டு வெட்டிக்கிட்டு போவுறாப்புல ஆயிடப்படாது பாருங்க. ஒங்களுக்குப் புரியாத சங்கதி இல்ல. ஏத்தோ இப்பிடி இருந்தாலாவது கொஞ்ச நஞ்ச ஒறவாவது இருக்கும். ஒறவு இல்லாட்டிப் போனாலும் பேச்சு வார்த்தையாவது கடைசி வரைக்கும் நிக்கும்னு நெனைக்கிறேம். யோஜிச்சுப் பாக்குறப்ப அதாங் சரின்னும் படுது. மித்தப்படி நீஞ்ஞ சொல்றதுதாம் முடிவு எத்தா இருந்தாலும்!" அப்பிடின்னிடுச்சி ரத்தினம் ஆத்தா அதோட பேருக்கு ஏத்த மாதிரி அத்தனைப் பிரச்சனைகளையும் சொல்லாம சொல்லி அதுக்குத் தீர்வும் தர மாதிரி ரத்தினச் சுருக்கமா.
            பெரியவரு எல்லாத்தையும் மெளனமா உக்காந்து மனசுக்குள்ள ஓட விட்டு ஒரு கணக்குப் போட்டுப் பாத்தாரு. சரி இப்ப ஒட்டிக்கச் சொன்னாலும் நாலு நாளு கழிச்சி வெட்டிக்கிட்டா சோலியா போயிடும். ஒரு தேவ திங்கன்னு வந்தா தானா ஒண்ணு சேந்துப்பாங்க. அப்ப வெச்சு ஒண்ணாக்கி விடுவோம்னு மனக்கணக்க நீட்டிச்சிகிட்டு, "யத்தே! நீங்க சொல்றது வாஸ்தவம்தாம். ஒங்க அனுபவந்தேம் யத்தே எம்மட வயசு. ஒங்களுக்குத் தெரியும் எப்ப எத்த பண்ணணும்னு. ஒண்ணா இருந்தா நல்லா இருக்கும்னு மனசு சொல்லுது. அதே நேரத்துல ஒங்க மனச சங்கடப்படுத்தி அத்தெ சாதிக்கணும்னு நாம்ம நெனைக்கல!" அப்பிடின்னு சொல்லிட்டு அப்ப கெளம்பிட்டாரு பெரியவரு. இருந்தாலும் நாம்ம பாத்து வளந்த பொண்ணு, நாம்ம பாத்து கட்டி வெச்ச பொண்ணு குடும்பத்த இப்டி ரண்டு பண்ணிட்டுதேங்ற கவலை அவருக்கு இருந்துச்சி. அதாலயே செயராமு பெரிப்பா கலியாணத்துக்குப் பிற்பாடு அடிக்கடி விருத்தியூருக்குப் போறத கொறைச்சிக்கிட்டாரு. கொஞ்சம் அப்படி போக்குவரத்து நின்னதுல அவருக்கு ரெண்டாவது புள்ளை பொறந்த சங்கதி கூட விருத்தியூருக்குத் தெரியாமப் போச்சுங்குற சமாச்சாரத்தையும் இந்த எடத்துல சொல்லியாகணும். இதையெல்லாம் மனசுல நெனைச்சுகிட்டேதாம் நடையில பாதி கவனமும், மனசுக்குள்ள ஓடுற நெனைப்புல பாதிக் கவனமுமா நடந்துகிட்டு இருக்காரு பெரியவரு விருத்தியூரை நோக்கி. இப்படி அவரு எதையோ நெனைச்சுக்கிட்டோ அல்லது அரையும் கொறையுமா தூங்கிகிட்டோ நடந்து பாதையில படுத்துக் கெடந்த காளைமாட்டு மேல தடுமாறி விழுந்த கதையெல்லாம் உங்களுக்குத் தெரியாதது இல்ல.
            திருவாரூலேந்து பஸ்ஸூல போறதுனாத்தான் குடவாசலு போயிச் சுத்தி, அங்க ஒரு பஸ்ஸ பிடிச்சி விருத்தியூருக்குப் போறதெல்லாம். நடந்து போறதுன்னா கும்பகோணத்து ரோட்டுல புதுக்குடி வரைக்கும் நடந்து வந்து குறுக்கால சேங்காலிபுரம் பாதையைப் பிடிச்சு கொஞ்ச வேக நடை நடந்தா போதும் விருத்தியூருக்கு திருவாரூலேந்து மூணு மணி நேர நடைக்குள்ள போயிடலாம். அப்படித்தாம் காலையில பத்து மணி வாக்குல கெளம்புன பெரியவரு மூணு மணி வாக்குல விருத்தியூர்ல சுப்பு வாத்தியாரு வீட்டுல போயி நிக்குறாரு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...