5 Nov 2019

12.1




            எனக்கு வலிகள் வேண்டும்.
            வலி தரும் வேதனைகள் வேண்டும்.
            நானே நடந்தால்தான் அவை உண்டு.
            என்னை வாகனத்தில் ஏற்றிச் செல்ல நினைக்கும் உன்னால்
            அதை எனக்குத் தர முடியாது.
            வலித்து வலித்து வலி மரத்துப் போக வேண்டும்.
            வேதனைப்பட்டு வேதனைப்பட்டு மனமற்றுப் போக வேண்டும்.
            அழைத்துச் செல்கிறேன் என்று சொன்ன உன்னோடு
            ஏறி வர மறுத்ததற்காக என்னை மன்னித்து விடு.
            என்னை என் நடையில் போக விடு.
            என் நடை பாதையில் எப்படி வேண்டுமானாலும்
            திசைகள் மாறாலாம்.
            உன்னோடு வந்தால் நீ போகும் பாதையே என் பாதை.
            நீ காட்டும் திசையே என் திசை.
            என் பாதை எதுவென்று, என் திசை எதுவென்று எனக்குத் தெரியாது.
            எனக்குத் தெரிந்ததெல்லாம் நடப்பது மட்டுமே.
            என் கால்களால் நடப்பது மட்டுமே.
            என் கண்கள் நடக்கும் திசையை மட்டுமே காட்டும்.
            நான் நடக்க வேண்டிய திசையை அது ஒரு போதும் காட்டாது.
*****
            எழுத்து என்பது எழுதப்பட முடியாதது. அதுவே எழுதிக் கொள்வது. அது வலிகளிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் புறப்படுவது. வலிகள், வேதனைகள் தங்களைத் தாங்களே எழுதிக் கொள்கின்றன. அதற்கு மனிதர்களைக் கருவிகளாய்ப் பயன்படுத்திக் கொள்கின்றன எழுத்துகள். இது புரியாது தான் எழுதுவதாய் நினைக்கும் எழுத்தாளர் எழுத்தராகி விடுகிறார். இது புரிந்து எழுதும் எழுத்தர் எழுத்தாளராகி விடுகிறார். எழுதுவதற்கு எழுத்தறிவு தேவையென்பது அன்று. அது ஒரு பாடலாக, ஓவியமாக, நடிப்பாக தன்னை எப்படியோ வெளிப்படுத்திக் கொள்ளும். அதுவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். அது வெளிப்படுத்திக் கொள்வதற்கு எழுத்தாளர் ஒரு வாசலாக இருக்க வேண்டும். அது புரியாது எழுத்தாளர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் எழுத்து எழுந்து ஓடி விடும். எழுத்தை எழுந்து ஓட வைப்பவரை மாபெரும் மாவீரர் என்றெல்லாம் பட்டம் சூட்டிக் கொண்டாட முடியாது. அவர் மனித குலத்தின் ஆன்மாவை உறிஞ்சிய பாவி ஆவார்.
*****
            விகடுவும், கவிஞர் தீக்காபியும் வில்சனைச் சந்தித்து விசயத்தைச் சொன்ன போது... விசயம் என்னவென்பதை முன் அபத்தியாயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
            சுந்தர ராமசாமி நடத்திய காகங்கள் போன்றா? என்றார் வில்சன்.
            காகங்கள் ரொம்ப பெரியது. இது சிறியது. சிட்டுக்குருவியைப் போன்று... இல்லையில்லை... அதை விடவும் சிறிய பறவை ஏதேனும் இருப்பின்... இல்லாவிட்டால் மிகச்சிறிய பூச்சி ஏதேனும் இருப்பின்... அநேகமாக அதைப் போன்றது என்றான் விகடு.
            அந்தச் சிறிய பூச்சியின் பேரைச் சொன்னால் பேர் வைத்து விடலாமே என்றார் வில்சன்.
            அந்தச் சிறிய பூச்சியின் பெயருக்கு எங்கே போவான் விகடு? மரவட்டை, மண்புழு, நாடாப்புழு, உருளைப் புழு, நாக்கட்டான் பூச்சி, காண்டாமிருக வண்டு, ஈசல், தட்டான், பட்டாம்பூச்சி, கொசு, ஈ என்று சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் உருவங்கள் உருண்டோடத் தொடங்கின அவன் நியூரான் சிக்குண்டுக் கிடந்த மூளைக்குள்.
            பெரும்பாலான பூச்சிகள் டியூப்லைட்டைப் போட்டவுடன் வருகின்றன என்பதால் டியூப்லைட் என்று பூச்சியோடு தொடர்புடைய பெயரை வைக்கலாம் என்று முதலில் யோசித்தான் விகடு. டியூப்லைட் என்று மனதுக்குள் சொல்லிப் பார்த்த போது அதில் சந்தம் இல்லாமல் அதாவது ரைமிங் மிஸ் ஆவது போலத் தோன்றியதால் டியூப்லைட்டுக்கு ஆதியான மண்ணெண்ணெய் காடா விளக்கை மனதில் பிரார்த்தித்து அதுவும் சரிபட்டு வராது என்று அகல் விளக்குப் பரவாயில்லை என்று அதில் வந்து நின்றான் விகடு.
            என்ன யோசனை? என்றார் வில்சன்.
            அகல் என்றான் விகடு.
            அகலா? அகழா? என்றார் வில்சன்.
            கொஞ்சம் தெளிவதற்குள் அடுத்தக் குழப்பம் என்றால் என்ன செய்வான் விகடு.
            அகலின் அகழ்! அகழின் அகல்! என்றான் விகடு.
            ம்ஹூம்! ஏதாவது ஒன்றுதான் நல்லது! என்றார் வில்சன்.
            அகழ் - தமிழின் சிறப்பு ழகரம் - உச்சரிக்க சிரமமாய்ப் போய் விடும் தமிழர்களுக்கு. தமிழர்களின் சிரமம் கருதி அகழை விட அகலே நல்லது என அந்த நொடியில் தீர்க்கமாய் முடிவெடுத்த விகடு சொன்னான் அகல் என்று.
            அகல் - பெயர் நன்றாகத்தான் இருக்கிறது என்றார் வில்சன்.
            அகல் - இந்தக் காலத்தில் யாரும் அதிகம் பயன்படுத்தாதது. காபிரைட் பிரச்சனை அறவே இருக்காது.
            அகல் - அப்படியென்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?
            ஒரு காலத்தில் மண்ணால் செய்து சுட வைக்கப்பட்ட சிறு கிண்ணம் போன்ற அமைப்பே அகல். அதில் எண்ணெயை ஊற்றி விளக்காக எரிய வைத்திருக்கிறார்கள். இந்த விளக்கத்தை நாவலில் சேர்ப்பதால் இது ஒரு அகராதி போலாகி விடுமோ என்ற அச்சம் நிலவுவதால் இது குறித்து வாசகர்கள் குலுக்கல் முறையில் முடிவு செய்து கொள்ளுமாறு நாவலாசிரியர் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறார். விகடு அகல்களையெல்லாம் சேகரித்து வைத்து இட்டிலி, தோசை தின்னும் நேரங்களில் சட்டினியோ, சாம்பாரோ, எண்ணெய் ஊற்றிய மிளகாய்ப் பொடியோ வைத்துத் தின்ன வசதியாய் தொடு கிண்ணங்களாய் வெகு காலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தான். அந்தத் தொடுகிண்ணங்களான அகல்களை திருக்கார்த்திகை நாட்களில் அவனுக்குத் தெரியாமல் எடுத்து அதில் கார்த்திகை தீபங்களை எறிய விட்டிருக்கிறார்கள் அவன் வீட்டு தாய்குலங்கள்.
            இப்போதும் அவனிடம் இரண்டு அகல்கள் இருக்கின்றன. ஒன்று போனால் இன்னொன்று என்பதற்காக அந்த இரண்டில்லை. ஒன்றில் மெலிந்துப் போய்க் கிடக்கும் குண்டூசிகளைப் போட்டு வைத்திருக்கிறான். இன்னொன்றில் பிய்ந்து விழுந்த பித்தான்களையும், ஸ்டேப்ளர் பின்களையும் போட்டு வைத்திருக்கிறான். குண்டூசிகளையோ, பிய்ந்து போன பித்தான்களையோ, ஸ்டேப்ளர் பின்களையோ பயன்படுத்தி நாட்களாகி விட்டன. செராக்ஸ் கடையில் இஷ்டத்துக்கு அடித்துக் கொள்ள ஸ்டேப்ளர் பின்கள் கிடைக்கும் போது நாம் ஏன் ஸ்டேப்ளர் பின்களை வைத்துக் கொள்ள வேண்டும்? பிய்ந்துப் போன பித்தான்களுக்குப் பதில் குத்திக் கொள்ள ஊக்குகள் இருக்கும் போது அதுவும் தேவையில்லைதான். குண்டூசிகளைப் பயன்படுத்தியது எல்லாம் ஒன்ஸ் அபான் எ டைம், லாங் லாங் எகோ.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...