4 Nov 2019

வேலங்குடி வந்த கதை



செய்யு - 258
            சுப்பு வாத்தியாருக்கு மூணு வயசு இருக்குறப்ப அவரோட அப்பா சாமிநாதம் ஆச்சாரி நெஞ்சு வலிக்குதுன்னு கையைப் பிடிச்சிட்டு உட்கார்ந்தவருதாம். போயிச் சேந்துட்டாரு. சுப்பு வாத்தியாரோட அண்ணன் செயராமு தோளுக்கு மேல வளர்ந்த புள்ளையா இருந்தாரு, அவரோட அக்கா செயா வளர்ந்த புள்ளையா இருந்துச்சு. அவரோட ரெண்டாவது அக்கா ரசாவுக்கு வெவரம் தெரியுற வயசு. அவரோட தங்கச்சி நாகு கைக்கொழந்தை. அது பொறந்த நேரந்தாம் அப்பாவ விழுங்கிடுச்சின்னு சொந்தபந்தங்க அந்தக் கைக்கொழந்தையைப் போட்டு கரிச்சிக் கொட்டிகிட்டு கெடந்துச்சுங்க. அப்படி அவங்க கரிச்சிக் கொட்டுறதால அந்தக் கொழந்தை அழுதுச்சா, இல்ல அப்பா போயிட்டார்ன்னு அழுதுச்சா, இல்ல வயித்து வலி மாதிரியான உடம்பு கோளாறால அழுதுச்சான்னு தெரியல. அது ரெண்டு ரெண்டரை வயசு வரைக்கும் அழுதுகிட்டே இருந்துச்சு. கிட்டதட்ட சுப்பு வாத்தியாரோட பொண்ணு செய்யு பொறந்து அழுதுகிட்டே கெடந்த கணக்கா அதுவும் அழுதுகிட்டே கெடந்துச்சு. சுத்தி இருக்குறவங்க எவ்வளவோ அசமடக்கிப் பார்ப்பாங்க. ம்ஹூம். அதுவா அழுவுறத நிறுத்துனாத்தாம் உண்டு. யாருக்கும் அசமடங்காது அது. அது பாட்டுக்கு அழுதுகிட்டே இருக்கும். இந்த மருந்து, அந்த மருந்து, ஒர மருந்துன்னு எவ்வளவோ மருந்துகள அரைச்சியும் கொடுத்துப் பாத்திருக்காங்க. எல்லா மருந்துக்கும் போடா பெப்பென்னு அது அழுதுகிட்டே கெடந்துருக்கு.
            புகழூர்ல இருந்த வேலங்குடி பெரியவரோட குடும்பம், விருத்தியூர்ல இருந்த சுப்பு வாத்தியாரோட குடும்பம் இவங்க எல்லாம் நெருக்கமான சொந்தம்ங்க. சுப்பு வாத்தியாரோட அப்பா சாமிநாதம் ஆச்சாரி இறந்த பிற்பாடு விருத்தியூர்ல அவங்க குடும்ப நெலைமை மட்டும் சிரமம் ஆகல, சுத்துப்பட்டுல இருந்த அவரோட சொந்த பந்தங்களோட எல்லாரோட நெலைமையும் ரொம்ப சிரமம் ஆயிடுச்சு. அந்த அளவுக்குச் சம்பாதிச்ச காசையெல்லாம் சொந்த பந்தங்களுக்கு இஷ்டத்துக்கு அள்ளிக் கொடுத்து வாழ்ந்திருக்காரு மனுஷன். அது வரைக்கும் நல்ல ராச வாழ்க்கைதாம் வாழ்ந்திருக்காங்க எல்லாரும். அந்த அளவுக்கு பெரிய வேலைக்காரர்னு பேரு வாங்கி பெரிசா சம்பாதிச்சவரு சாமிநாதம் ஆச்சாரி. அவரு இப்டி திடீர்னு போயிச் சேர்ந்து கஷ்டப்படுவோம்னு யாருக்கு என்னா தெரியும். அவருக்குப் பின்னாடி விருத்தியூர் குடும்பம் ரொம்பவே நிலைகுழைஞ்சிப் போயிடுச்சு. அப்போ புகழூரு, ஆவணத்துல இருந்த அவங்க சொந்தக்கார சனங்கதான் அடிக்கடி வந்துப் பாத்துட்டும் போய்ட்டும் இருந்திருக்காங்க. அதுல புகழூர்லேந்து பெரியவரு அடிக்கடி போயிட்டு வருவாரு. ஏதாவது பலகாரம் பண்ணா போதும் அதெ ஒரு தூக்குச் சட்டியில போட்டு எடுத்துகிட்டு விருத்தியூர்ல வந்து நிப்பாரு.
            விருத்தியூர்ல ஒரு விஷேசம்னா போதும் மொத ஆளா போயி நின்னு எல்லா வேலைகளையும் பாத்துக் கொடுத்துட்டு அங்கேயிருந்து சாப்பாடு, பலகாரம்னு எல்லாத்தையும் உருளியில போட்டு எடுத்துக்கிட்டு சுப்பு வாத்தியாரோட வூட்டுல போயி நின்னுடுவாரு. அவருக்கு அவரு செய்யுற பலகாரத்த செயா அத்தைச் சாப்பிட்டுப் பாத்து எப்படி இருக்கணும்னு சொல்லணும்னு ஒரு ஆசெ. சாமிநாதம் ஆசாரி உசுரோட இருந்த காலத்துல வண்டிய கட்டிகிட்டுக் கெளம்புனார்னா ஒண்ணு வேலைக்கா இருக்கணும், இல்ல சொந்தகார சனங்களோட புள்ளைகங்கள எல்லாத்தையும் கெளப்பிக் கொண்டாறதுக்காக இருக்கணும். அப்போ வில்லு வண்டியில போறதுன்னா ஏரோபிளானுல போற சந்தோஷம் பிள்ளைங்களுக்கு. அதால வில்லுவண்டியோட சத்தம் கேட்டாலே போதும் புள்ளைங்க அவங்க அப்பா, அம்மாகிட்ட கூட சொல்லாம கொள்ளாமல ஓடியாந்து வண்டியில ஏறிக்கும்ங்க.
            புள்ளைங்களை எல்லாம் கெளப்பிக் கொண்டாந்து வூட்டுல வுட்டுகிட்டு அதுக வெளையாடுறதைப் பாத்துட்டு உக்காந்திருக்கிறதுல சாமிநாத ஆச்சாரிக்குச் சந்தோஷம். புள்ளைங்கள கொண்டாந்தார்ன்னா வூட்டுல இருக்குற பொண்டுகளுக்கு அன்னைக்கு முதுகு ஒடையப் போவதுன்னு அர்த்தம். அந்தப் புள்ளைங்க என்னென்ன பலகாரங்கள செஞ்சிக் கேட்குதோ அத்தனையையும் அன்னைக்கு அந்தப் பொண்டுக செஞ்சுக் கொடுத்தாகணும். அப்படிச் செஞ்சுக் கொடுக்குற பலகாரங்களைப் புள்ளைங்க ஆசையா திங்றதைப் பார்த்து அப்படியே சொக்கிப் போயி உக்காந்திருப்பாரு சாமிநாதம் ஆச்சாரி. அவருக்கு மட்டும் பொரியரிசியையும், பயத்தம் பருப்பையும் வறுத்து ஒண்ணா கலந்து ஒரு சின்ன கொட்டான்ல போட்டு கொண்டாந்து வெச்சிடணும். அவரு வேற எந்த பலகாரத்தையும் சாப்புட மாட்டாரு. அந்த பொரியரிசி பயத்தம் பருப்பு ஒண்ணத்தான் வாயில கொஞ்சம் அள்ளிப் போட்டுக்கிட்டு எந்நேரமும் அசைப் போட்டுகிட்டு இருப்பாரு.
            அப்படி வெளையாட்டுக்குக் கொண்டு வந்த புள்ளைங்கள்ல வேலங்குடி பெரியவரும் ஒருத்தரு. அவரு மத்த பிள்ளைங்க மாதிரி எல்லா புள்ளைங்களோடயும் கலந்து வெளையாட மாட்டாரு. செயா அத்தைக் கூட மட்டுந்தாம் வெளையாடுவாரு. செயா அத்தையும் இவருக்கு மட்டும் பலகாரத்த பாவாடையில தனியா முடிஞ்சு கொண்டாந்து யாருக்கும் தெரியாமா கொடுக்கும். சமயத்துல ஒத்தப் பலகாரமா இருந்தா நீ மட்டும் தின்னுன்னு கொடுத்தா தாம் மட்டும் திங்க மாட்டாரு பெரியவரு. அதெ காக்கா கடி கடிச்சி ரெண்டு பாதியா திம்போம்பாரு. செயா அத்தையும் பாவாடையில வெச்சி காக்கா கடி கடிச்சி அது ஒரு பாதிய எடுத்துகிட்டு, இன்னொரு பாதிய பெரியவருகிட்ட கொடுக்கும். ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாம ஒளிஞ்சுகிட்டு அதெ திம்பாங்க. அதுல ரெண்டு பேருக்கும் ஒரு சந்தோஷம்.
            சாமிநாதம் ஆச்சாரி இறந்த பிற்பாடு அடிக்கடி விருத்தியூரு வந்து பாத்துகிட்டதுல முக்கியமானவரு பெரியவரு. அவரு குடும்பத்தப் பாக்க வந்தாரா? செயா அத்தைய பாக்க வந்தாராங்ற கேள்வி ரெண்டாம் பட்சம்தான். கொஞ்சம் வெவரம் தெரிஞ்ச வயசு வந்த பின்னாடி அவரோட கரிசனம் அதிகமாயிடுச்சி. விருத்தியூருக்கு வந்து வூட்டு வேலைகளையெல்லாம் பாத்துக் கொடுத்துட்டு அப்படியே செயா அத்தையையும் பாத்துட்டுப் போவாரு. வந்துப் பாத்துட்டுப் போறப்ப சும்மாவா வந்துப் போவாரு? செயா அத்தைக்குன்ன பூவு, வளையல், மணி, நாடான்னு பாத்து பாத்து வாங்கிட்டு வருவாரு. வந்து பாத்துட்டுப் போற சாக்குல அதையும் யாருக்கும் தெரியாம கொடுத்துட்டுப் போவாரு.
            சின்ன புள்ளையிலிருந்து வெவரம் தெரிஞ்ச வயசு வரைக்கும் இப்படி ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப பாசமாவும், அன்னியோன்யமாவும் வளந்தவங்கதாம் செயா அத்தையும், வேலங்குடி பெரியவரும். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தரு மனசார விரும்புனாங்க. எத்தனை பேருக்கு மனசார விரும்புனவங்கள கலியாணம் பண்ற பாக்கியம் வாய்க்குது? ஆனா நம்ம பெரியவருக்கு அந்தப் பாக்கியம் இருந்துச்சு. அவரு ரொம்ப அதிர்ஷ்டக்காரர்தாம். செயா அத்தை வயசுக்கு வந்ததும் மோத வேலையா ஒத்தக் காலுல்ல நின்னு அத்தைய கலியாணமும் கட்டிக்கிட்டாரு. அப்போ சுப்பு வாத்தியாருக்கு அஞ்சாறு வயசோ என்னவோ இருக்கும். அப்படி செயா அத்தைய கட்டிக்கிட்ட வகையில அவருதாம் விருத்தியூரு குடும்பத்துக்கு மூத்த மருமவப் பிள்ளை.
            கலியாணத்து அன்னிக்குக் கூட சமையல் பண்ற வேலை, பலகாரம் போடுற வேலைன்னு அத்தனை வேலைகளையும் அவருதாம் நின்னு பாத்தாரு. கல்யாண மாப்பிள்ளை இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு எல்லாரும் சொல்லிப் பார்த்தும் அவரு கேட்குறதா இல்ல. "இது எங் குடும்பம். எங் குடும்பத்துக் கல்யாணம். எங் குடும்பத்து வேலய நாம்ம பாக்காம யாரு பாக்குறதுன்னு?"ன்னு சொல்லியே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுகிட்டுப் பாத்திருக்காரு.
            கலியாணத்துக்குப் பிற்பாடு இவரு வூட்டோ மாப்பிள்ளையா விருத்தியூர்லயும் தங்கல, புகழூர்ல பொண்டாட்டிய அழைச்சிட்டுப் போயி குடும்பத்தோடயும் தங்கல. செயா அத்தைய கூட்டிக்கிட்டு, பெரியவரு ஜாகையா வேலங்குடியில இருக்குற நில புலத்தைப் பாத்துகிட்டு அங்கயே இருந்திடலாம்னு வந்துட்டாரு. புகழூருக்கும், வேலங்குடிக்கும் நிலபுலத்தைப் பார்க்க ஏம் அலைஞ்சிட்டுக் கெடக்கணும்? அதுவும் இல்லாம கலியாணம் வேற ஆயிடுச்சா? சமைச்சுப் போடறதுக்கும் பிரச்சனை இல்ல. அங்கயே இருந்தா நல்ல விதமா நெலத்தைப் பாத்துக்கலாம்னு பெரியவரோட அம்மாவும் ஒண்ணும் சொல்லாம நாலு பசு மாடுகளையும், ரெண்டு எருமை மாடுகளையும் கொடுத்து அனுப்பி வெச்சிடுச்சு. இப்படித்தாம் பெரியவரு வேலங்குடிக்குக் குடும்பத்தோட வந்தாரு.
            படுக்க கொள்ள ஒரு சின்ன கொட்டகையையும், மாடுகளுக்கு ஒரு கொட்டகையையும் போட்டுகிட்டாரு. அவரும், அத்தையுமா ஒத்த ஆளா நின்னு மண்ணால சுவர்ர வெச்சி கொஞ்சம் கொஞ்சமா சுவத்தை வெச்சி வீட்டைக் கட்டிக்கிட்டாங்க. வெளியாட்கள விட்டா காசு செலவாகுமே? அதுக்கு எங்கப் போறதுன்னு புருஷனும் பொண்டாட்டியுமா காலையில எழுந்திரிச்சதும் மண்ணை கொல்லைக் கடைசியிலேந்து எடுத்துப் போடுவாங்க. பெரியவரு மண்ணை வெட்டி தூக்கி விட்டார்ன்னா செயா அத்தைத் தூக்கிக் கொண்டாந்து சுவரு வைக்கிற எடத்துக்குப் பக்கத்துல போட்டுடும். அப்படி மண்ணை வெட்டி வெட்டி உண்டான அந்தக் குழிய மாடுக போடுற சாணியைக் கொண்டு போயிக் கொட்டிக்கிற எருக்குழிய வைச்சிக்கிட்டாங்க. வருஷா வருஷம் வயலுக்கு எரு அடிக்கிறப்ப அந்தக் குழியைப் பார்த்தா ஒரு குட்டையைப் போல ரொம்ப ஆழமாத்தாம் இருக்கும் அந்தக் குழி. சுவருன்னா அப்பா இப்போ மாதிரியா முக்காலு அடி அகலத்துல வெச்சாங்க. மண்ணு சுவருன்னா ஒன்றரை அல்லது ஒண்ணே முக்கால் அடி வரை அகலத்துக்கு வைப்பாங்க. அப்போ எவ்வளவு மண்ண அள்ளியிருப்பாங்க புருஷனும் பொண்டாட்டியுமா சேர்ந்து? அந்த எருக்குழியைப் பாக்குறப்பல்லாம் மண்ணு தூக்கிக் கொட்டுனக் கதையை சொல்லுவாரு பெரியவரு.
            ஓரளவுக்கு மண்ணு சேர்ந்ததும் கொளத்திலேந்து தண்ணிய பிடிச்சுக் கொண்டாந்து ஊத்துவாங்க ரெண்டு பேரும். செயா அத்தைக் கொடத்துல கொண்டாந்து ஊத்துனா, பெரியவரு ரெண்டு தகர டின்ன வாங்கி அதெ மூங்கிக் கழியில ரெண்டு பக்கமும் கயித்துல கட்டித் தோளுல தூக்கியாந்து ஊத்துவாரு. அப்படி அவரு தோள்பட்டையில மூங்கிக் கழியைத் தூக்கி ஊத்த ஊத்த ஒரு வாரத்துல எடது தோள்பட்டையில ஒரு வீக்கம் வந்துப் போயி அது காலத்துக்கும் அவரோட எடது தோள்பட்டையில இருந்துச்சி. அதுக்கு அவரு வைத்தியமும் பாத்துக்கல ஒண்ணும் பண்ணிக்கல. அதுவும் வடிஞ்சிடும்னு நெனைச்சி இருந்துட்டாரு. ஆனா அது வடியாமலே போயிடுச்சி. அந்த வீக்கத்துக்குப் பிற்பாடு தகர டின்கள மூங்கிக் கழியல வெச்சி தூக்குறத நிப்பாட்டிக்கிட்டு அவரும் குடத்துல தூக்க ஆரம்பிச்சிட்டாரு. குடத்துல தண்ணியத் தூக்கி தலையில வெச்சார்ன்னா குடத்தைப் பிடிக்காமலயே நடந்து வருவாரு. அவ்வளவு லாவகம் மனுஷனுக்கு.
            தண்ணிய கொண்டாந்தா மண்ணு கொட்டியிருக்கிறதுல, நடுவுல குழி பறிச்சி வுட்டு நல்லா தண்ணிய கலந்து விட்டு ரெண்டு பேருமா காலால ஏறி நல்லா மிதிப்பாங்க. மண்ணு சுவரு வைக்கிறப் பதத்துக்கு நல்லா கொழைவா வந்ததும் அதெ எடுத்து சுவத்தை வைப்பாங்க. அப்படிக் கொஞ்சம் கொஞ்சமா வெச்சி சுவத்தை வெச்சி அதுக்கு கீத்துப் போடுறதுக்குள்ள அவங்களுக்கு ஒன்றரை மாசத்துக்கு மேல ஆச்சுது. அதெ இப்பவும் பெரியவரு சொல்லிகிட்டு இருப்பாரு. அது சின்ன வீடுதாம். பிற்பாடு அதே வீட்டுக்கு முன்னாடி சின்னதா சுவத்தை வெச்சி அதுக்கு மேல மூங்கில் தட்டிய வெச்சு அடைச்சுகிட்டு வீட்டைக் கொஞ்சம் விரிவு பண்ணிகிட்டாரு. ஏதாச்சிம் சமையல்ன்னா வீட்டுக்குள்ள போறதும் மத்தபடி வெளிக்கொட்டாயில உக்காந்திருக்கிறதுமா இருக்க ஆரம்பிச்சாங்க.
            செயா அத்தை நல்ல பாட்டாளி. நிமிஷ நேரம் சும்மா இருக்காது. மாடுகளப் பாக்குறதும், வயல்களப் பாக்குறதும்னு சதா வேலைகளப் பாத்துகிட்டே இருக்கும். வயல் வேலைகள்ன்னா இவங்க ரெண்டு பேருமா எறங்கி அத்தனை வேலைகளையும் பாத்துப்புடுவாங்க. நாத்து நடுறதுக்கும், அறுவடைக்கும்தாம் வேலையாளுகள வெச்சிப்பாங்க. அப்படி வெச்சிக்கிட்டாலும் செயா அத்தையும், பெரியவருமா சேந்துகிட்டு அவங்களும் ஆளுக கணக்குக்கு வேலை பாத்துடுவாங்க. களைப் பறிக்கிறதுக்கு ஆளுகள விடுறதே கெடையாது. இவங்க ரெண்டு பேரும் எறங்குனா பன்னெண்டு மாவுக்கும் சேர்த்து களைப் பறிச்சி முடிச்சிடுவாங்க. அறுவடை ஆச்சுதுன்னா வேலங்குடியிலேந்து கட்டை வண்டிய வெச்சி பதினேழு நெல்லு மூட்டைகளக் கொண்டு போயி புகழூர்ல போட்டுட்டு வந்திடுவாரு பெரியவரு. அங்க புகழூர்ல எதாச்சிம் விஷேசம்னா வீட்டுலேந்து அஞ்சாறு நெல்லு மூட்டைகளக் கொண்டு போயிப் போட்டு வித்துக்கச் சொல்லிடுவாரு. இப்படித்தாம் போயிட்டு இருந்துச்சு அவரோட காலம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...