4 Nov 2019

12.0



            லெட்சுமாங்குடிக்கும், மாவூருக்கும் நடுமத்தி சென்டரில் இருக்கின்றன வடவாதியும், மணமங்கலமும். இரண்டும் கிராமமா? நகரமா? என்ற குழப்பம் பல நூற்றாண்டகளாக நீடித்து வருகின்றன. விலாங்கு மீனைத்தான் உதாரணம் சொல்ல வேண்டும். கிராமம், நகரம் என்று இரண்டு பக்கத்தையும் காட்டி கூடுதலாக ரெண்டுங்கெட்டான் என்ற இன்னொரு பக்கத்தையும் காட்டிக் குழப்பி விட்டு விடும் வடவாதியும், மணமங்கலமும்.
            இதில் வடவாதி விகடு பெயர் சூட்டி உருவாக்கிய கிராமம் / நகரம். மணமங்கலம் வில்சன் பெயர் சூட்டி உருவாக்கிய கிராமம் / நகரம். அவர்களுக்கு அப்படியொரு பெயர் சூட்டும் உரிமையை ரெண்டு கிராமங்களும் தந்திருந்தது உலகம் எங்கிலும் பொதுவாகக் காணப்படாதது. இரண்டு கிராமங்களும் வெண்ணாற்றின் தீரத்திலும், ஈரத்திலும் செழித்த அரைவேக்காட்டுக் கிராமங்கள் / அரைவேக்காட்டு நகரங்கள். ஒரு காலத்தில் வண்டல் செழித்திருந்திருக்கலாம். இப்போது களிமண் செழித்துக் கிடக்கிறது கால்களை இஷ்டத்துக்கு உள்வாங்கிப் போடுவதற்கு. அந்த இழுவையை அனுபவிக்க முடியாமல் இங்கே அரசியல் செய்பவர்கள் கப்பிப் பெயர்ந்து, தார் கழன்று கிடக்கும் சாலையைப் போட்டு பாரம்பரிய சாலையின் உன்னதத்தை அனுபவிக்க விடாமல் பண்ணி விட்டார்கள். வாகனத்தில் செல்லும் போது கவிஞர்கள் பாட்டோ, கவிதை எழுதும் வகையில் லட லொட சத்தம் ராக கதியில் நன்றாக எழும்பும். அது ஒன்றுதாம் அரசியல் சாலை வழியாக தந்த கொடை.
            நகரத்தில் கிடைக்கும் அத்தனைப் பொருட்களையும் வடவாதியிலோ, மணமங்கலத்திலோ பெரிதாக அலையாமல் கொள்ளாமல் வாங்கி விடலாம். அத்துடன் பேருக்குக் கொஞ்சம் சாக்கடை ஓடி நகரம் என்பதற்கான அடையாளத்தையும் மேற்காண் ரெண்டு கிராமங்களும் தக்க வைக்கத் தவறுவதில்லை.
            வடவாதியில் இருந்து கொண்டு ஆரூர் நகரத்தை நோக்கித் தொழிலை விரிவு செய்த தொழில் அதிபர் நாக்கியர் வடவாதியில் இருக்கிறார்.
            மணமங்கலத்தில் இருந்து கொண்டு மணமங்கலம் அளவோடு தொழிலை விரிவு செய்து வைத்திருக்கும் வில்சன் மணமங்கலத்தில் இருக்கிறார்.
            வடவாதி, மணமங்கலம் என்ற ரெண்டு கிராம நகரங்கள் இணைவதால் வடவாதி நாக்கியரையும் சந்தித்து ஆதரவு பெறுவது என்று கவிஞர் தீக்காபியும், விகடுவும் ஒருமனதாக விகடுவின் வீட்டில் சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பலவிதமாக உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.
            இது விசயமாக நாக்கியரைச் சந்தித்த போது அவர் இதுக்கு ஒத்து வரவில்லை. தொழிலைக் கவனிப்பதற்கே நேரம் போதவில்லை என்றார். நாட்டில் அவ்வளவு வேலைகள் தேங்கிக் கிடக்கும் போது உங்களால் எப்படி கவிதையெல்லாம் எழுதிக் கொண்டு இருக்க முடிகிறது என்று கவிஞர் தீக்காபியையும், விகடுவையும் பார்த்து ஆச்சரியப்பட்டார் நாக்கியர்.
            நாட்டில் அவ்வளவு வேலைகள், தொழில்களா இருக்கின்றன? எமக்குத் தொழில் கவிதை என்றல்லவா இவ்வளவு நாட்கள் பாரதியை நம்பி இருந்து விட்டோம் என்று இரண்டு பேருக்கும் அந்தச் சந்திப்புப் பேரதிர்ச்சியைத் தந்தது.
            அதே பேரதிர்ச்சியோடு மணமங்கலம் வில்சனைச் சந்திக்கச் சென்றார்கள் இரண்டு பேரும் கவிஞர் தீக்காபியின் இரு சக்கர வாகனத்தில். அந்த வாகனம் புறப்படும் போது பெரும் சத்தம் எழுப்பியது. இரண்டு பேரையும் இப்படி வேலையற்ற வேலையில் இறங்கி என்னை ஏன் கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று திட்டுவது போல இருந்தது அதன் டர்ரு, டுர்ரு சத்தம்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...