27 Nov 2019

ஒட்டுமில்லே! ஒறவுமில்லே!



செய்யு - 281

            வேலங்குடிக்கு விகடபிரசண்டரு வாத்தியாரையும் அழைச்சுக்கிட்டு வந்து பெரியவரு வூட்டுக்குள்ள நொழைஞ்சா, "வாத்தியாரு ஆனதுக்கப்புறம் இப்பத்தாம் மச்சாங்காருக்கு அத்தாம் வூட்டு நெனைப்பு வருதாங்? பாடஞ் சொல்லிக் கொடுத்த வாத்தியாரய்யாவுமால்ல வாரீங்க! வாஞ்ஞ வாஞ்ஞ"ங்றாரு வேலங்குடி பெரியவரு. அவரு அப்பிடிக் கேக்குறதுல தப்பு ஒண்ணும் இல்ல. சுப்பு வாத்தியாரு தங்காச்சி நாகுதாம் கஷ்டப்படுதுன்னு அங்க மட்டுந்தான போய்ட்டும், வந்துட்டும் இருந்தாரு. வேலங்குடிப் பக்கம் வாத்தியாரு வேலை கெடைச்சப் பிற்பாடு பெரிசா போகல.         
            "நாமளே வந்துப் பாக்கணும்னுதாம் நெனைச்சிட்டு இருந்தேம். வேல சோலியில ஆகாமப் போயிடுச்சி. நாம்ம வாரணும்னு வாரணும்னு நெனைச்சிட்டு இருந்தேம். நீஞ்ஞ வந்திட்டீங்க! நல்லதாப் போயிடுச்சி. நேரங்காலங் கூடி வந்தா வெசயங்க தானா நடக்கும்பாங்க. அதாங் நடக்குது!"ங்றாரு பெரியவரு.
            "ஏதோ முக்கியமான விசயமால்ல இருக்கும் போல! மொதல்ல என்னான்னு நீஞ்ஞ அதெ சொல்லுங்க!" அப்பிடிங்கிறாரு விகடபிரசண்டரு.
            "நீஞ்ஞ கெளம்பி வந்துருக்குற சோக்கப் பாக்குறப்ப நீஞ்ஞல்ல முக்கியமான வெசயமா வந்திருக்கிறாப்புலப் படுது! நீஞ்ஞ மொதல்ல சொல்லுங்க!"ங்றாரு பெரியவரு.
            "ஒங்களுக்குத் தெரியாம இருக்காது. ஒங்க மூத்த மச்சாங்காரரு இஞ்ஞ வேலங்குடியில நெலம் வாங்கியிருக்கிறதா கேள்வி. நெலத்த எஞ்ஞ வாணாலும் யாரு வாணாலும் அவங்கவங்க காசியில வாங்கிக்கலாம். யாரும் ஒண்ணுஞ் சொல்லப் போறதில்ல. ஆனா மூத்த மச்சாங்காரரு பாகத்துல உள்ள நெலத்த வித்து இஞ்ஞ வாங்கியிருக்கிறதா ஊருல கேள்வி. இஞ்ஞ வேலங்குடியில நெலம் வாங்கியிருக்கிறதால ஒங்களுக்குத் தெரியாம வாங்கியிருக்க வாய்ப்பில்ல. குடும்பத்துக்கு மூத்த மருமவேம் நீஞ்ஞ. எத்து நடந்திருந்தாலும் அதெ நீஞ்ஞ சரி பண்ண வுட வேண்டிய மொறையிலயும் இருக்கீங்க! அதாங் ஒங்களப் பாத்துக் கலந்துட்டுப் போவலாம்னு வந்திருக்கேம்!" அப்பிடிங்கிறாரு விகடபிரசண்டரு.
            "அதெப் பத்தி நம்மட்ட பேச வாணாம். விருத்தியூர்ல குடித்தனம் பண்றது எம்மட ஒறவும் இல்ல, மொறையும் இல்ல. பொம்பளப் புள்ள இல்லங்ற கொறைக்கு தூக்கியாந்து வளர்த்தேம். இப்பத்தாம் யோசிக்கிறேம் ஏந் தூக்கியாந்து வளத்தேம்னு? வளத்தக் கொறைக்கு அத்து பண்ண வேண்டியதப் பண்ணிட்டு. அத்து நமக்குத் தங்காச்சியும் இல்ல. நாம அதுக்கு அண்ணணும் இல்ல. நீஞ்ஞ சொல்றீங்களே! மூத்த மருமவேன்னு நாம ஒண்ணும் மூத்த மருமவேனும் இல்ல, பீத்த மருமவனும் இல்ல. பக்கத்துல இருக்காங் பாருங்க! எந் தம்பின்னு சொல்லிட்டு ஒரு கொலபாதகம் பிடிச்சப் பயெ அவந்தாம் இனுமே மூத்த மருமவேம். அந்தக் குடும்பத்தோட ஒட்டும் வாணாம், ஒறவும் வாணாம்னு முடிவு பண்ணிட்டேம்."ன்னு பெரியவரு சொல்ல சொல்ல அவரு என்ன சொல்ல வரார்ன்னு புரியாம அதிர்ச்சியா இருக்கு சுப்பு வாத்தியாருக்கும், விகடபிரசண்டருக்கும்.
            இடையில ஏதோ பெரிசா சம்பவங்கள் நடந்திருக்குங்றது புரியுது. ஆனா என்னான்னு அது தெரியாம அவங்க ரெண்டு பேருக்கும் தெகைப்பா இருக்குது.
            "நீஞ்ஞ சொல்றது ஒண்ணும் புரியலயே! தலயும் இல்லாம வாலும் இல்லாம! என்னத்த புரிஞ்சிக்கிறதுன்னு தெரியலயே!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "புரியிறதுக்குல்லாம் ஒண்ணும் இல்ல. நாஞ் செத்தாலும் தங்காச்சின்னு சொல்லிட்டு அவ்வா குடும்பம் இஞ்ஞ வாரக் கூடாது. அவ்வா செத்தாலும் நாம்ம அண்ணன்னு சொல்லிட்டு அஞ்ஞ போக மாட்டேம். இதுல ஒண்ணும் மாத்தம் இல்ல!"ங்றாரு பெரியவரு.
            "இப்பயும் ஒண்ணும் புரியல! ஏம்யா ஒனக்கு எத்தும் புரியுது? ஏத்தோ நடந்திருக்கு! என்னான்னு சொல்ல மாட்டேங்றீயளே? சுத்தி வளைச்சி, சுத்தி வளைச்சி... என்னான்னு..."ங்றாரு விகடபிரசண்டரு.
            "ஒண்ணு - இனுமே அதெ பத்தி நம்மகிட்ட பேசாதீயே! நமக்குப் பிடிக்கல. ரெண்டு - நமக்கும் அந்தக் குடும்பத்துக்கும் ஆகாது. மூணு - அந்தக் குடும்பத்த பொருத்த மட்டுல ஒறவு அத்துக்கிறதுன்னு முடிவு பண்ணியாச்சி. நாலு - இனி வாரக் காலத்துக்கு அவுங்க யாரோ, நாமோ யாரோத்தாம்! அஞ்சு - இதுக்கு மேல வேற ன்னா சொல்லணும்னு எதிருபாக்குறீங்க?"ங்றாரு பெரியவரு வெரல ஒவ்வொண்ணா நீட்டிக்கிட்டும் நம்பரைப் போட்டுக்கிட்டும்.

            இப்பத்தாம் சுப்பு வாத்தியாரு பேச ஆரம்பிக்கிறாரு. "என்னத்தாம் நல்லாத்தானே வந்துட்டும் போய்ட்டும் இருந்தீங்க! இப்பிடி ஏதோ ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிருக்குன்னு அண்ணனும் ஒண்ணுஞ் சொல்லல, அண்ணியும் ஒண்ணுஞ் சொல்ல. எத்து நடந்திருந்தா ன்னா? நீஞ்ஞதானே நின்னு அதெ தீத்து வைக்கணும். அதெ வுட்டுப்புட்டு இப்டி பேசுறது ஒங்களுக்கு ஞாயமா படுதா?"ங்றாரு.
            "அத்தில்லீங்க யம்பீ! நீஞ்ஞ விசயத்தப் பாக்கணும். ஒஞ்ஞ வாத்தியார்ட்டயே ஞாயத்த வைக்கிறேம். வாத்தியாரய்யா நீஞ்ஞத்தாம் ஒரு ஞாயத்த சொல்லணும். யம்பீ யாரு? எம்மட வூட்டுக்காரிக்கு யம்பீயில்லயா? எம் பொண்ணு யாரு? அக்காக்காரிக்கு பொண்ணு இல்லயா? அப்ப ரண்டுக்கும் மொறை வருதா இல்லையா? மொறை வருதுன்னாக்கா ஏம் சம்பந்தம் பேசக் கூடாதுங்றேம்? அதத்தாம் கேட்டுட்டு விருத்தியூருக்குப் போயிருந்தேம். போனாக்கா இந்தப் பேச்ச பேசிட்டு இஞ்ஞ வாராதேங்றா, நாஞ்ஞ அஞ்ஞ பாத்துக் கொண்டு போயி வெச்ச பிடாரிக்குப் பொறந்த பிடாரி. எங் கொழுந்தேம் வாத்தியார்ர ஆறதுக்கு முன்னாடி இந்தப் பேச்ச பேசிட்டு வந்தீயா? இப்ப வாத்தியார்ரா ஆனதுக்குப் பின்னாடி இப்படி பேசிட்டு வாரீயே? ஒனக்கு வெட்கமாயில்லங்றா நாம்ம பாக்க கொழந்தையா இடுப்புல ஒட்டுத் துணி யில்லாம திரிஞ்சிட்டுக் கெடந்தவ? ன்னா கொழுப்புங்றேம்? அண்ணங்கார்ரேம், அந்தக் குடும்பத்துக்கு மூத்த மருமவ்வேம்னு ஒரு மட்டு மருவாதி இருக்காங்றேம்? இனுமே நாம்ம எதுக்கு அந்த வூட்ட மிதிக்கணும்? நாம்ம ன்னா மொறையில்லாத சங்கதியய்யா பேசிட்டுப் போயி நின்னேம்? மொறை இருக்கு. கேக்குறதுக்கு உரிமெ இருக்கு. கேட்டுட்டுப் போயி நின்னேம். அதுக்கு இந்தப் பேச்ச பேசிட்டு வூட்டுப்பக்கம் வாரதன்னா பெறவு ன்னா ஒறவு? வந்ததுக்கு ரண்டு வாயிச் சோத்த தின்னுப்புட்டு திரும்பிப் பாக்காம கெளம்புங்றா. நாஞ்ஞ ன்னா சோத்துக்கு வீங்கிய அஞ்ஞப் போனேம்? கொடுக்க இஷ்டம் இல்லன்னாக்கா அதெ சொல்றதுக்கு ஆயிரத்தெட்டு வார்த்தைங்க இருக்கா இல்லியா? யம்பீய கேட்டுட்டு ஒரு வார்த்தை சொல்றேம்னு கூட சொல்லிருக்கலாம். அத்து ன்னா வூட்டுப் பக்கம் இத்த பேசிட்டு வாராதன்னா? ரண்டு வாயிச் சோத்த தின்னுட்டுக் கெளம்புன்னா? அம்மாங் கொழுப்பு வளந்துப் போச்சா அவளுக்கு? அன்னிக்கே கொண்ட மசுர அறுத்து கையில கொடுத்துட்டு வந்திருப்பேம் பாத்துக்குங்க. கேட்டுப் போனது நாமளா ஆச்சேங்றதால பேயாம வந்திட்டேம். அன்னிக்கு படிய வுட்டு எறங்குறப்ப ஒரு முடிவுக்கு வந்தேம். இனுமே‍ செத்தாலும் அந்த வூட்டு வாசப்படியில கால எடுத்து வைக்கக் கூடாதுன்னு! அத்தேத்தாம் அந்த நாயிக்கும். நாஞ் செத்தா இந்த வூட்டு வாசப்படிய அந்த கேடுகெட்ட நாயி மிதிக்கக் கூடாது. அதாஞ் சொல்றேம்! அந்த வூட்டுக் கதைய நம்ம வூட்டுல வெச்சிப் பேச வாணாம். நாதாரி நாயிங்க ஊரு ஊரா நக்கி நெலத்த வாங்குங்க! வாங்கமாப் போகும்ங்க! அதெப் பத்தி நமக்கென்ன? கையில காசி இருந்தா யாரு வேணாலுந்தாம் வாங்குங்க! அந்தக் கேடு கெட்ட நாயி வாங்குறதுக்கு ன்னா கொறைச்சலு வேண்டிக் கெடக்கு?" அப்பிடிங்கிறாரு பெரியவரு.
            இப்பத்தாம் விகடபிரசண்டருக்கும், சுப்பு வாத்தியாருக்கும் பெரியவரோட கோபமான பேச்சைக் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்க முடியுது.
            விகடபிரசண்டரு கொஞ்சம் கொஞ்சமா இதைக் கேட்டுட்டு இப்போ பேச ஆரம்பிக்கிறாரு,  "நீஞ்ஞ ஏத்தோ முக்கியமான வெசயம்னு சொல்ல வந்தீயளே?" அப்பிடின்னு.
            "அதாஞ் சொல்லிப்புட்டேனே பேச்சோடு பேச்சா? நமக்கு சுத்தி வளைச்சல்லாம் வாரத் தெரியாது வாத்தியார்ரே! இந்தோ இருக்கு மூத்தப் பொண்ணு. யம்பீத்தாம் சொல்லணும். யம்பீய என்னான்னு கேட்டுச் சொல்லுங்க. உம்முன்னா யம்பீ காசி பணம் ஒண்ணும் செலவு பண்ண வாணாம். எல்லாத்தியும் நாம்ம பாத்து நல்ல வெதமா செஞ்சி விட்டு நல்ல வெதமா குடி வைக்கிறேம்! அவ்வளவுதாங் நமக்குத் தெரிஞ்சிது! நீஞ்ஞ அத்தோட வாத்தியாரு. நீஞ்ஞ பாத்து நல்ல வெதமா சொல்லி நல்ல வெதமா பண்ணுவீங்கன்னு நம்புறேம்!" அப்பிடிங்கிறாரு பெரியவரு.
            இதென்னடா நாம்ம ஒண்ணு கேட்க வந்து, இவரு ஒண்ணு கேட்குறாரேன்னு விகடபிரசண்டருக்குக் கொஞ்சம் இப்போ தவிப்பா இருக்கு. இருந்தாலும் பிடிச்சிக்கிறாரு, "ஒங்க பொண்ண கட்டிக்காம வேற யார கட்டிக்கப் போவுது யம்பீ? இருந்தாலும் அஞ்ஞ கொஞ்சம் நெலமை சரியில்லன்னுல சொல்லுதீங்க. அதயும் கொஞ்சம் சரி பண்ணி வுட்டுப்புட்டுத்தாம் மேக்கொண்டு இதெப் பத்திப் பேசோணும். அதெப் பேசுவோம். இந்த நில வெவகாரம்தாம் ஒண்ணும் புரிய மாட்டேங்குது."ன்னு தலையைச் சொரியுறாரு விகடபிரசண்டரு.
            "அத்து வந்து ன்னா நடந்துச்சுன்னா..." அப்பிடின்னு வந்த பெரியவரு, "வுடுங்க அதெப் பேச வாணாம். நன்றிக் கெட்ட சென்மங்க! நல்லதெப் பேசுவேம்."ங்றாரு பெரியவரு.
            இவுங்க இப்பிடிப் பேசிட்டு இருக்கிறப்ப டீத்தண்ணியோட வர்ற செயா அத்தை, "நீதாம்டா யம்பீ! ஒரு நல்ல முடிவாச் சொல்லணும். ஒங் கையிலத்தாம்டா இருக்கு எல்லாமும். அத்தான பத்தி ஒனக்குத் தெரியும். எப்டி வெச்சிப் பாத்துப்பாருன்னு. ஒம் முடிவுதாம்டா யம்பீ!" அப்பிடிங்கிது.
            டீத்தண்ணிய குடிச்சி முடிச்சதும், சுப்பு வாத்தியாரு, "ரசா அக்காவயும் ஒரு எட்டுப் பாத்துட்டு வந்திடறேம்!"ங்றாரு.
            "வந்தது வந்தாச்சி. அஞ்ஞயும் ஒரு எட்டுப் போயிட்டு சின்னத்தாங்காரரையும் பாத்துட்டு வாரதுதான மொறை!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "செரி! செரி! பாத்துட்டு வந்து நல்ல முடிவா சொல்லுங்க!"ங்றாரு பெரியவரு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...