25 Nov 2019

ஆவணத்து நிலம்



செய்யு - 279
            அணைக்கட்டுக்குக் குடிவந்த பிற்பாடு மாசத்துக்கு ஒரு தபா கோவில்பெருமாள் தங்காச்சி வீட்டுக்கு முறை தவறாம போயிட்டு வந்திடுவாரு சுப்பு வாத்தியாரு. எப்பயாவது விருத்தியூருக்குப் போறதையும், வரதையும் வழக்கமா வெச்சிருந்தாரு.
            அப்படி ஒரு தடவ விருத்தியூருக்குப் போனப்போ ஆவணத்துல அவங்க குடும்பத்துக்கு இருந்த நிலத்தையெல்லாம் அண்ணங்காரரு வித்துட்டாருங்ற சங்கதி அரசல் புரசலா தெரிய வருது. கேட்குறதுக்கு வதந்தி போல இருக்குற இந்த சங்கதிய எப்படி நேரடியா அண்ணங்காரருக்கிட்ட கேட்குறதுன்னு யோசனைப் பண்ணிக்கிட்டு விகடபிரசண்டரு வாத்தியார்கிட்ட போயி நிக்குறாரு சுப்பு வாத்தியாரு. "அப்டில்லாம் மோசமா எறங்கக் கூடிய ஆளில்லப்பா ஒங்க அண்ணங்காரரு! பொறு விஜாரிப்பேம்"ங்றாரு விகடபிரசண்டரு வாத்தியாரு. அப்படிச் சொல்லிட்டு ஒடனே சுப்பு வாத்தியாரோட சைக்கிள எடுத்துக்கிட்டுக் கெளம்புறாரு.
            ரெண்டு பேருமா கிளம்பி செயராமு பெரிப்பாகிட்ட வந்து விசாரிச்சா, "ஆமாங் வாத்தியாரே! கடங் கப்பி, நாகுக்குக் கல்லாணம் பண்ண செலவுன்னு நெலமைய சமாளிக்க முடியல. அதாங் விக்க வேண்டியதாப் போச்சு!" அப்பிடிங்குது அலட்சியமா.
            இப்போ விகடபிரசண்டரு வாத்தியாரு பிடிச்சிக்கிறாரு, "அது செரி! ஒங்க அப்பங்காரரு சேத்த சொத்து அத்து. பாகம்னு வந்தா ஒனக்கும் ஒந் தம்பிக்கும்னு ரண்டால்ல ஆகணும். ஒந் தம்பிக்குப் பாகம் இருக்குற அத்தையெப்படி நீயி ஒந் தம்பிய கேக்காம வித்துப்புடலாம்?"ங்றாரு.
            "வாத்தியாரய்யா! அத்த ஒண்ணும் எந் சொந்தத் தேவைக்கு வித்துப்புடல. மூணு தங்காச்சிகளுக்கு கலியாணம் ஆயிருக்கு. தம்பிக்காரன படிக்க வெச்சு ஆயிருக்கு. நமக்கும் கொழந்தை குட்டிங்க ஆயிருக்கு. இத்தனை நாளும் குடும்ப சொமை எந் தோளுல்லல வுழுந்து கெடந்திருக்கு. இப்பதாங் அதெயெல்லாம் வித்து கொஞ்சம் தலைநிமுறுறேங். நமக்கோ, நம்மட குடும்பத்துக்கோ பைசா காசி அதில்லேந்து எடுத்துக்கல வாத்தியார்ரே! அன்னாடம் கட்டை அடிச்சத்தாங் காசி நமக்கு. அதெ வெச்சி இம்முட்டையும் பாக்குறதுன்னா ன்னா பண்ணுவேங் நாம்ம சொல்லுங்க!" அப்பிடிங்கிது பெரிப்பா.
            "எல்லாந் வாஸ்தவம்தாம்! தம்பிக்கார்ரேம் வாத்தியார்ரா ஆயிட்டாம். அவ்வேம் அப்டி ஆவுறதுக்கு மின்னாடி விக்கலேங்றதுலாம் சரிதாம். அவ்வேனும் ஒங் கூட பொறந்த பொறப்பில்ல. நீயி குடும்பத்தத் தாங்கியிருக்கிறே. இல்லன்னே சொல்ல முடியா. அந்தக் கடமைக்கு ஒரு பங்கு நீயி கூட எடுத்துக்கலாம் பாகத்துல தப்பில்ல. அப்படிப் பாத்தாலும் நீயி ரண்டு பாகம் போட்டு எடுத்துக்கோ. தம்பிக்கு ஒத்த பாகத்தையாவது கொடுக்கலாமுல்ல!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "அஞ்சுப் பொண்ண பெத்தா அரசனும் ஆண்டியாவாங்றது ஒங்களுக்குத் தெரியாதா வாத்தியார்ரே! மூணு பொண்ண பெத்தா ஆச்சாரி என்னாவாம்? ஒண்ணுமில்லாம கெடக்கிறேம் வாத்தியார்ரே! ஒண்ணுமில்லாததுல ஒத்த பங்கு ன்னா? ரெட்ட பங்கு ன்னா? எல்லா பங்கையும் அவ்வனேயே வெச்சுக்க சொல்லுங்க!" அப்பிடிங்குது பெரிப்பா.
            "யோவ் யப்பா! நல்லா பேசுறீயே யப்பாடா! ஒந் தலையைக் கரண்டி ஒண்ணும் தரச் சொல்லல. ஊருல எது ஞாயம்னு சொல்லுவாளோ அதெத்தாம் பண்ணச் சொல்றேம். வூடு இருக்குல்ல. எதுத்தாப்புல ஒரு கொல்ல கெடக்குல்ல!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "வூட்ட வுட்டுப்புட்டு நாம்ம நடுரோட்டுலயா நிக்குறது? எங் கொழந்தைக் குட்டிங்க நம்மள கட்டிட்டு வந்தவ ன்னா பண்ணுவா? ன்னா வாத்தியார்ரே பாடஞ் சொல்லிக் கொடுக்குற நீஞ்ஞளே இப்டிப் பேசுனா நாம்ம ன்னா ஞாயத்தை வைக்கிறது போங்க!" அப்பிடிங்கிது பெரிப்பா.
            "யே யப்பாடா! ஒங்க வூட்டு ஒங்க ஊரு ஞாயம் நமக்குப் புரியாதுடப்பா! ஒங்க ஊரு ஆளுககிட்டயே கேட்டாத்தாம் அத்துப் புரியும். ஒங்க ஊரு நாட்டாமைக்காரங்களுக்கிட்டயே கேப்பேம். அவங்களே முடிவு பண்ணட்டும்!" அப்பிடிங்கிறாரு விகடபிரசண்டரு.
            இதுக்கு இடையில ஊருல இருக்குற நாலு பேருங்க சுப்பு வாத்தியாரு காதுல ஒரு விசயத்தப் போடுறாங்க. அது என்னான்னா... செயராமு பெரிப்பா ஆவணத்துல இருந்த நிலத்த கஷ்டத்துக்கு விக்கலண்ணும், அதெ அங்க வித்துப்புட்டு வேலங்குடியில நிலத்த வாங்கியிருக்கிண்ணும் சேதியச் சொல்றாங்க.
            பெரிப்பா ஒருத்தர்கிட்ட நிலத்த வித்தா அதெ ஒருத்தரு வாங்கியிருக்கணும்ல. அத்து யாருன்னு விசாரிச்சுட்டுப் போனா, அது ஆவணத்து மிராசு ஆனிமுத்து கண்டியரு. கண்டியரு நல்ல வாட்டசாட்டமான ஆளு. மீசைய ரெண்டு பக்கமும் நாலு வட்டத்துக்குச் சுத்தி விட்டிருப்பாரு. அதுவும் சுருளு சுருளா பாக்கிறதுக்கு விநோதமாவும், பயங் காட்டுறதாவும் இருக்கும். சிலுக்கு ஜிப்பா போட்டுகிட்டு குதிரை வண்டியில போறவரு. குதிரை வண்டியிலயே உக்கார்ற பலகைக்குக் கீழே ஒரு வீச்சரிவாள செருகி வெச்சிருப்பாரு. ஆவணத்துல அவரு பெரும்புள்ளி. அட்டாதுட்டி வேலையில எறங்குனார்ன்னா ஆள காலி பண்ணாம விட மாட்டார்னு பேசிப்பாங்க. அவர்கிட்டயா போயி விசாரிக்கிறதுன்னு சுப்பு வாத்தியாருக்குப் பயம் கண்டுப் போயிடுச்சி. பேசிட்டு அடிக்குற ஆளு இல்ல அவரு. அடிச்சிப்புட்டுத்தாம் பேசுவாரு. இருந்தாலும் ஞாயம்ன்னா கட்டுப்படுவார்ன்னு அவரப் பத்திச் சொல்லிப்பாங்க.
            விகடபிரசண்டரு வாத்தியார்தான் எதயும் விசாரிக்காம ஒரு முடிவு பண்ணக் கூடாதுன்னு சுப்பு வாத்தியார்ர கெளப்பிக்கிட்டு கண்டியர்ட்ட கொண்டு போறாரு. விகடபிரசண்டரு வாத்தியாருக்குக் கண்டியர்ட்ட ஒரு நல்ல பேரு இருந்துச்சு. வாத்தியாரு எது பேசுனாலும் அதெ ஏத்துப்பாரு கண்டியரு. கண்டியர்ர பொருத்தமட்டில விகடபிரசண்டரு வாத்தியாரு இல்ல, முதலியாருதாம். அவரு முதலியார்ன்னுதாம் கூப்புடுவாரு.
            இவங்க போன நேரத்துல கண்டியரு வீட்டுத் திண்ணைக்கு முன்னாடித்தாம் நின்னுகிட்டு இருக்கிறாரு.
            விகடபிரசண்டரு சுப்பு வாத்தியார்ர கொண்டுட்டுப் போயி கண்டியர்டட நின்னதுமே, "என்னடாப்பா இது! வாராத ஆளுக எல்லாம் வூட்டுப்பக்கம் வந்திருக்கு? ஏய் ஆயி! மொதலியாரு கூட ஒரு ஆள கெளப்பிட்டு வந்திருக்காக! காப்பித்தண்ணியும் பலகாரத்தையும் கொண்டுப்புட்டு வா!"ன்னு உள்ளார குரல கொடுக்குறாரு. கண்டியரு வீட்டம்மா குரலு வந்த வேகத்துக்கு ரண்டு வட்டாவுல தம்பளர வெச்சிக் காப்பித்தண்ணியோடயும், ஒரு தட்டுல நாலு பிடி சீடையையும் கொண்டாந்து கொடுக்குது. எந்நேரமும் அந்தம்மா கண்டியர்ட்டேயிருந்து எப்போ குரலு வரும், எப்போ காப்பித்தண்ணியும், சீடையையும் கொண்டுட்டுப் போவணும்னே நிப்பாங்க போலிருக்கு. காப்பித்தண்ணியையும், சீடையையும் கொண்டாந்து அங்க இருந்த சிமெண்ட் கட்டையில வெச்ச அந்தம்மா முகத்தப் பாக்குறதுக்குள்ள மின்னல் கணக்கா வூட்டுக்குள்ள போயி மறைஞ்சிடுச்சி.             கண்டியரு சுருளு மீசைக்குள்ள விரல விட்டு வட்டம் போட்டுக்கிறாரு. போட்டுக்கிட்டே, "கட்டையில உக்காருங்க!"ன்னு கையைக் காட்டுறாரு. திண்ணைக்கு முன்னாடி சிமெண்ட்டுலயே பெஞ்சு போல கட்டைகள உட்கார்றதுக்குத் தோதா கட்டி வெச்சிருக்காரு கண்டியரு. அவரு ஒரு கட்டையில உக்கார எதிர்க் கட்டையில விகடபிரசண்டரு உக்காந்திருக்காரு. சுப்பு வாத்தியாரு விகடபிரசண்டரு பின்னாடி நிக்குறாரு. உட்காரல்ல.
            "வூட்டுல எல்லாஞ் சவுரியமா? பொண்ணு கல்லாண ஏற்பாடுல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?"ன்னு ஆரம்பிக்கிறாரு விகடபிரசண்டரு.
            "மொதலியாருதாம் நம்ம வகையில ஒரு நல்ல பையனா பாக்குறது? காப்பித்தண்ணிய குடிங்க மொதல்ல. யே யம்பீ நீயொண்ணு எடுத்துக்கிறது?"ன்னு சொல்லிட்டு ரெண்டு பேரையும் பார்த்துட்டுப் பெரிசா சிரிக்கிறாரு.
            "ஒங்க சொத்துக்கும் பத்துக்கும் பவுசுக்கும் நாங்க எங்கப் போயி பையனப் பிடிக்கிறது? கலியாணத்துத் தேதியச் சொன்னாக்கா தின்னுட்டுப் போவேம். அவ்வளவுதாங் நம்மால முடிஞ்சது!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "தையில முடிச்சிர்லாம்னு பாக்குறேம்! மன்னார்குடி பக்கமாமுல்ல, பரவாக்கோட்டையில ஒரு பையங் இருக்குறதா கேள்வி. நல்ல பையன். நல்ல குடும்பம். தூரமா இருக்கேன்னு யோசிக்கிறேம். ஒத்தப் பொண்ணு. ஆயியை அஞ்ஞ கொண்டு போயி கட்டிக் கொடுத்துப்புட்டு அலைஞ்சிட்டுக் கெடக்கணும்னு பாக்கிறேம். அத்து ஒரு யோஜனையிலத்தாம் ஓடிட்டு இருக்கு. இல்லாட்டி நாளைக்கே கல்லாணத்த முடிச்சிப்புடலாம். அதாங் அப்படியே கெடக்கட்டும். தை பொறந்தா வழி பொறக்குமுல்ல. அது வரைக்கும் பார்ப்பேம். வேற எங்காச்சியும் அதுக்குள்ள பக்கத்துலேந்து சம்பந்தம் வந்துடாதான்னு பாக்கிறேம். இல்லன்னக்கா அந்த பையம்தாம். அதுல மாத்தமுல்ல!"ங்றாரு கண்டியரு.
            "ஒரு சங்கதி விசயமா வந்திருக்கேம்!"ன்னு விகடபிரசண்டரு மெதுவா ஆரம்பிக்கிறாரு.
            "ன்னா சங்கதியா இருந்தா ன்னா? பொட்டுன்னுப் போட்டு ஒடைக்க வேண்டித்தான்னே? நம்மகிட்ட ன்னா தயக்கமுங்றேம்?"ங்றாரு கண்டியரு.
            "ஒங்களுக்கு இல்லாத நெலபுலமா? சொத்துபத்தா? கொட்டிக்கெடக்குது எல்லாமும். இப்போ விருத்தியூரு ஆச்சாரிட்டேயிருந்து நெலம் வாங்குனதா கேள்விப்பட்டேம்!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "நம்ம செயராமு ஆச்சாரிய சொல்லுறீயளோ! ஏத்தோ குடும்பக் கஷ்டம்! நெலத்த விக்கணும்னு வந்து நின்னாம். நல்ல பெய இல்ல. நம்ம வூட்டு வேலயெல்லாம் அவந்தேம். பொண்ணு கல்யாணத்துக்கு சாமாஞ் செட்டுக எல்லாத்தியும் அவந்தாம் பண்ணணும்னு சொல்லிப்புட்டேம். ஒரு கஷ்டம்னு வந்து நிக்கிறவனெ ன்னா பண்றது? அதும் காசிய கைமாத்தாவும் கேக்கல. கடனாவும் கேக்கல. வயல வெச்சிட்டுத்தான்னே கேக்குறானேன்னுட்டுக் கொடுத்துப்புட்டேம்."ங்றாரு கண்டியரு.
            "அதாங் சமாச்சாரம்! அதுலதாங் சங்கதி!" அப்பிடிங்றாரு விகடபிரசண்டரு.
            "அதுலென்ன சமச்சாரம் சங்கதி வேண்டிக் கெடக்கு? நமக்கு வெவரம் தெரிஞ்ச நாள்லேந்து அத்து அவங்க அப்பம் சாமிநாதம் ஆச்சாரியோடதுதாம். மவ்வேன் அவ்வேம். அதுல ன்னா சமாச்சாரம் சங்கதி வேண்டிக் கெடக்குதுங்றேம்!"ங்றாரு கண்டியரு.
            "சாமிநாதம் ஆச்சாரிக்கு ரண்டு புள்ளீயோ!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "அத்து தெரியாதா நமக்கு? ரண்டாவது பயெ கூட வாத்தியாராயிட்டான்னு கொஞ்ச நாளுக்கு மின்னாடி பேச்சா கெடந்துச்சே!"ங்றாரு கண்டியரு.
            "அந்த ரண்டாவது புள்ள இதாங்! பேரு சுப்பு!"ன்னு விகடபிரசண்டரு சொன்னதும், சுப்பு வாத்தியாரு கையக் கும்பிட்டு வணக்கம் சொல்றாரு.          
            "நீதான்னா அந்தப் புள்ள? நல்லதாப் போச்சு!"ங்றாரு கண்டியரு. சொல்லிட்டு, "சுத்தி வளைச்சு வார்ற மாரில்லா தெரியுது. எதா இருந்தாலும் பொட்டுன்னு போட்டு உடைங்க பாப்பேம்!" ங்றாரு.
            "அந்த வித்த நெலத்துல இவ்வேம் ரண்டாவது புள்ளைக்கும் ஒரு பாகம் இருக்குமில்லீங்களா?"ங்றாரு விகடபிரசண்டரு.
            கண்டியரு முகத்துல ஒரு கோபம் எட்டிப் பார்த்து மீசை ஒரு துடி துடிக்கிது. ஸ்பிரிங்கில ஓர் அதிர்வு அதிர்ந்தா எப்படி இருக்குமோ அப்பிடி இருக்கு அந்த மீசையோட துடிப்பு.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...