25 Nov 2019

17.1



            வில்சன் அண்ணன் ஒரு கதை கூறுகிறார்.
            ஒரு ஹோட்டலில் குடிகாரன் வந்து சாப்பிடுகிறான். பாயாசக் கிண்ணத்தை சோற்றில் கவிழ்க்கிறான். பிசைந்து சாப்பிடுகிறான். இது சாம்பார் இல்லையென்று சத்தமிடுகிறான். சர்வர் ஓடி வந்து அது சாம்பார் இல்லையென்றும் பாயாசம் என்றும் விளக்க முற்படுகிறார். சர்வர் கன்னத்தில் ஓங்கி அறைகிறான் குடிகாரன். பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்த ரகளையைப் பார்த்து குடிகாரனைக் கண்டிக்க முற்படுகிறார்கள். குடிகாரன் அவர்கள் மேல் தட்டுகளையும், கிண்ணங்களையும் பறக்க விடுகிறான்.
            வில்சன் அண்ணன் அவன் அப்படிச் செய்வதை ஊழிக்கூத்து என்கிறார்.
            ஊழிக்கூத்தை முடித்து விட்டு குடிகாரன் வாந்தி எடுத்து மயங்கி விடுகிறான். அந்த இடத்தைச் சுத்தம் செய்து விட்டு குடிகாரனைத் தூக்கி தூரப் போடுகிறார்கள் சர்வர்கள். ஹோட்டல் முதலாளி குடிகாரனின் மனைவியை கூட்டி வரச் சொல்கிறார்.
            ஒடிசலான தேகத்தோடும், பஞ்சடைந்த கண்களோடும், பரட்டைத் தலைமயிரோடும் வருகிறாள் குடிகாரனின் மனைவி. ஹோட்டல் முதலாளி அந்தப் பெண்ணை உட்கார வைத்து இலை போடச் சொல்கிறார். அந்தப் பெண்ணுக்கு முதலாளியே பரிமாறுகிறார். தயக்கத்தோடும், பயத்தோடும் சாப்பிட்டு முடித்த பெண்ணிடம் ஹோட்டல் முதலாளி சொல்கிறார், "இவனோட குணத்தை நிமிஷ நேரத்துக்கு எங்களால பொறுத்துக்க முடியலையே! இவனைக் கட்டிக்கிட்டு ஆயுளுக்கும் குப்பைக் கொட்டிட்டு இருக்கியே நீதாம்மா தெய்வம்!" என்கிறார். அந்தப் பெண் முதலாளியைக் கும்பிட்டு விட்டு குடிகாரக் கணவனைச் சுமந்து செல்கிறாள்.
            இதுதான் வில்சன் அண்ணன் சொன்ன கதை. கதையைக் கேட்டு முடித்ததும் கேட்டவர்கள் கண்களில் எல்லாம் கண்ணீர்த் துளி எட்டிப் பார்க்கிறது. எல்லாரும் கை தட்டுகிறார்கள். கண்களில் துளி. கைகளில் ஓசை.
            அதைத் தொடர்ந்து மாணிக்கம் ஐயா கவிதை வாசிக்கிறார். குழந்தைகளைப் பூக்கள் என்கிறார். பெண்களை ஓவியம் என்கிறார்.
            ஆயிரம் உயிர்களை அழிக்கின்ற ஆயுதம் வாங்கிய காசிற்கு அரிசி வாங்கியிருந்தால் உயிர்கள் மாண்டிருக்காது என்கிறார் கூட்டத்திற்கு அபூர்வமாய் வந்திருக்கின்ற கவிதாயினி.
            அந்தக் கூட்டத்தில் கவிதைகள் அதிகம். எழுத்தாளர்கள் முதலில் கவிஞர்களாக உருப்பெறுகிறார்கள். பிறகு சிறுகதை எழுதுபவர்களாகவோ, நாவல் எழுதுபவர்களாகவோ, கட்டுரை எழுதுபவர்களாகவோ மாறுகிறார்கள். முதலில் கவிதை. பிறகே பிறகு என்பது எல்லாம். எப்படி எழுதினாலும் கவிதை கவிதையாகி விடும். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட தெரிந்தால் போதும். மனிதருக்கு உணர்ச்சிவசப்படுதலா சிரமம்? எழுத்தாளார்கள் ஆக முடியவில்லை என்று கவலைப்பட வேண்டியதில்லை. கவிதை எழுதிப் பார்த்தால் எளிதில் எழுதி விடலாம். ஒரு கவிதை எழுதி விட்டால் போதும், நீங்களும் எழுத்தாளரே!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...