24 Nov 2019

யம்மாக்கெழவியும், வில்லியாண்டவர் கோயிலும்!



செய்யு - 278

            சாயுங்காலமா பள்ளியோடம் முடியுற நேரத்துக்கு லாரியில வர்ற மாரிச்சாமி வாத்தியாரு, அதே லாரியில சுப்பு வாத்தியார்ர கெளப்பிக்கிட்டு அணைக்கட்டுக் கிராமத்துக்குள்ள போறாரு. போற வழியில வில்லியாண்டவர் கோயில் இருக்குது. லாரிய நிப்பாட்டி சுப்பு வாத்தியாரையும் இறக்கிக்கிட்டு ஒரு சூடத்தைக் கொளுத்தி வெச்சி வேண்டிக்கிறாரு மாரிச்சாமி வாத்தியாரு. அந்த வழியா போற அத்தனை வாகனங்களும் அந்தக் கோயிலுக்கு முன்னாடி நின்னு ஒரு சூடத்தைக் கொளுத்திப்புட்டுத்தான் போகுதுங்க. நடந்து போறவங்களும், சைக்கிள்ல போறவங்களும் போறப் போக்குலயே கன்னத்துல போட்டுக்கிட்டுப் பேறாங்க. அந்தச் சாமிய வேண்டிக்கிட்டா நல்லதா நடக்குங்றது ஒரு நம்பிக்கை.
            "எந்த ஒரு காரியத்துக்குக் கெளம்புனாலும் வாத்தியார்ரே! வில்லியாண்டவர்கிட்ட வேண்டிக்கிட்டு சூடத்தைக் கொளுத்தி வெச்சிட்டா போதும். மித்தத அவரு பாத்துப்பாரு. நம்ம நாலு லாரியில ஒண்ணு கூட மோதி வந்ததில்லன்னா பாத்துக்குங்க. எல்லா வில்லியாண்டவர்ரு பாத்துக்கிறது. புது லாரி வாங்குனா இஞ்ஞதாஞ் பூசைப் போடுறது. இப்போ எதுக்கு சூடம் கொளுத்துறேன்னா ஒங்களுக்கு வூடு பாத்திருக்கேம்ல. எல்லாம் நல்லபடியா இருக்கணும்னுதாம். ஒங்களுக்கு ஒழுகச்சேரியிலயே வூடு பாத்திருப்பேம். எப்பயும் ஒரு விசயம் புரிஞ்சிக்குங்க. வேலை பாக்குற எடத்துல குடியிருக்கக் கூடாது. குடியிருக்குற எடத்துல வேலை பாக்கக் கூடாது. மட்டு மருவாதி இருக்காது. மானம் போயிடும். அதாங் அணைக்கட்டுல வூடு பாத்திருக்கேம். ந்நல்ல அம்சமான கூரை வூடு.  நமக்குத் தெரிஞ்சவங்கதாம். ந்நல்ல வெதமா பாத்துப்பாங்க. ஒரு கொறையும் இருக்காது! வாடவ பன்னெண்டு ரூவாதாம்."ங்றாரு மாரிச்சாமி வாத்தியாரு. சொல்லிக்கிட்டே சூடத்தைக் கொளுத்துறாரு. பவ்வியமாக ரெண்டு பேரும் கும்பிட்டுக்கிட்டு எரியுற சூடத்துல கையைக் குமிச்சி ஒத்திக்கிட்டு, அதெ அப்படியே எடுத்து கண்ணுல ஒத்திக்கிறாங்க.
            "கோயில்ல பாத்தா ஐயனாரு கோயில்லு மாதிரில்ல இருக்கு!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "ஐயனாரேதாம் வாத்தியார்ரே!"ங்றாரு மாரிச்சாமி வாத்தியாரு.
            "நமக்கு ஐயனாருதாங் குல தெய்வங் வாத்தியார்ரே!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "நமக்கும் அதாங்! அதாங் பாத்தீங்களா நம்மள ரண்டு பேரையும் ஒண்ணுச் சேத்திருக்கு குல தெய்வம்! குலத்த குலத்தோட சேக்குறதுதான்ன குல தெய்வம்!"ன்னு சொல்லிட்டுச் சிரிக்கிறாரு மாரிச்சாமி வாத்தியாரு. கொஞ்சம் சிரிக்கிறத நிப்பாட்டிப் புட்டு, "பொழுது மசங்குறதுக்குள்ள வூட்டுக்குள்ள போயிடுவேம். பொழுது மசங்கிட்ட்டா வூட்டுக்குள்ள வுடாது அந்த யம்மாக்கெழவி! நாளைக்கு வந்துக்குங்கன்னு சொல்லிப்புடும் கெழவி. நல்ல கெழவின்னாலும் வாயீ இருக்கே! யம்மா யம்மாம்மாத்தாம்!"அப்பிடின்னு சுப்பு வாத்தியார்ர வெரசா கெளப்பிக்கிட்டு அவரு பார்த்த வாடகை வூட்டுக்கு முன்னாடி லாரியில போயி எறங்குறாங்க ரெண்டு பேரும்.
            லாரி நிக்குற ரோட்டை ஒட்டிச் சின்னதா ஒரு கூரை வீடு இருக்கு. அந்த கூரை வீட்டுக்குப் பின்னாடி ஒரு மச்சு வூடு இருக்கு. அந்த மச்சு வூட்டுக்கிட்டப் போயி மாரிச்சாமி வாத்தியாரு குரலு கொடுக்குறாரு, "யேய் யம்மாக்கெழவி! சாவிய எடுத்துட்டு வாறீங்களா? வாடவைக்கு ஆள பிடிச்சாந்து கொண்டாந்திட்டேம். ஆளு வந்திருக்காப்புல!"
            யம்மாக்கெழவி மச்சுவீட்டுக்குள்ளேயிருந்து வெளியில வருது. "யேம்டாப்பா! இன்னுஞ் செத்த பொழுது மசங்குன பிற்பாடு வர்றது?" அப்பிடிங்குது யம்மாக்கெழவி.
            "பள்ளியோடம் முடிஞ்சுத்தான்னே வாரணும்! ஒங்க அவசரத்துக்கு வுட்டுப்புட்டு வார முடியுங்களா?"ங்றாரு மாரிச்சாமி வாத்தியாரு.
            "எல்லாம் தெரியும்டா! நீயி பள்ளியோடம் போற யோக்கியத! பள்ளியோடத்துல வேல பாக்குறங்குற பேருல லாரிய ஓட்டிட்டுத் திரியுற பயதான நீயி! ஏம்டா ஒனக்கு ஒம்மோட பள்ளியோடம் எஞ்ஞ இருக்குமுன்னாவாது தெரியுமாடா? அதெ நீயி கண்ணால பாத்திருப்பீயாடா? ஒங்கிட்ட எந்த புள்ளீயோட பாடம் படிச்சிது? நீயும் ஒரு ஆம்பளன்னு வேட்டியயும் சட்டையயும் வெள்ளையுஞ் சொள்ளையுமா மாட்டிக்கிட்டு கெளம்பிட்டே!" அப்பிடிங்குது யம்மாக்கெழவி.

            "அட நீஞ்ஞ வேற யம்மாக்கெழவி! என்னவோ ஊரு ஒலகத்துக்கு தெரியாத சங்கதிய பேசுறாப்புலல்ல பேசுறீங்க! அது கெடக்கு வுடுங்க! ஊரு ஒலகத்துல எவம் பண்ணாத தப்ப பண்ணிப்புட்டேம்? வருஷத்துக்கு ரண்டு தடவ வில்லியாண்டவரு கோயிலுக்கு வேண்டிக்கிட்டுக் கறிச்சோறுல போடுறேம் பள்ளியோடத்துக்கு. எந்த வாத்தியாருப் பண்ணுவாம் அம்மாஞ் செலவு பண்ணி?"ங்றாரு மாரிச்சாமி.
            "நீயி பண்ற பாவத்துக்கு வில்லியாண்டவனயும் தொணைக்கு வெச்சிக்கிறே! ஒம் பாவத்த சொமந்து சொமந்துதாம்டா அவரு பாவம் ஊருக்கு ஒதுக்குப்புறமா கெடக்குறாரு. பேசிட்டே நின்னுகிட்டு இருந்தா பொழுது மசங்கிடும். இந்தா சாவி! போயித் தெற. உள்ளார போயி பால எடுத்தார்ரேம். நீயி வாங்கித் தந்த சாமாஞ் செட்டுகள எல்லாத்தியும் வூட்டுக்குள்ள வெச்சித்தாம் பூட்டியிருக்கேம். சீமெண்ணெய் ஊத்தி அடிக்கிற பம்பு ஸ்டவ்வையும் அஞ்ஞத்தாம் வெச்சிருக்கேம். வெரசாப் போயி தெறந்துட்டு உள்ள போங்க. பாலோட வர்ரேம்!" ன்னு சொல்லிப்புட்டு உள்ளே போயி பாலோடு வருது யம்மாக்கெழவி.
            மாரிச்சாமி வாத்தியாரு பூட்டத் தொறந்துகிட்டு வீட்டுக்குள்ள நொழைஞ்சா அங்க அவரு வாங்கிக் கொடுத்த சாமாஞ் செட்டுக, ஸ்டவ் அடுப்பு எல்லாம் இருக்குது அங்க. ரெண்டு சின்ன குண்டான், நாலு தட்டு, நாலு கரண்டி, ரெண்டு உருளி, நாலு தம்பளரும் வட்டாவும், ஒரு பெரிய குண்டான் அதோட ஒரு குடம், கொஞ்சம் அரிசி, பருப்புன்னு மளிகை சாமானுங்களையும் வாங்கியாந்து கொடுத்திருக்காரு மாரிச்சாமி வாத்தியாரு.
            அந்த கூரை வீட்டுக்கு ஒரு பக்க வழிதாம். தெருபக்கமாத்தாம் வர முடியும். கொல்லைப் பக்கத்துக்கு வழியில்லாம் இல்ல. அடைச்சி இருக்கு. முன்னாடி ஒரு திண்ணை. ஒரு பெரிய கூடம் மாதிரி பின்னாடி ஒரு இழுப்பு. அதுல கடைசியா இடுப்பு அளவுக்கு ஒரு சின்ன சுவத்து தடுப்பு. அதுதாம் சமைக்கிறதுக்குன்னா எடம். அவ்வளவுதாம் அந்த வூடு.
            "யே யப்பாடி! இதாஞ் நீயி சொன்ன வாத்தியார்ரா! கருப்பா கட்டையால்ல இருக்காரு! எந்தக் கொலத்த சார்ந்த ஆசாமிங்க?"ங்குது யம்மாக்கெழவி.
            "தச்சுக் கொலமுங்கோ!"ங்றாரு மாரிச்சாமி வாத்தியார்ரு.
            "செரி பரவாயில்ல! ஏம்டா வாடவ பத்தியில்லாம் சொல்லிட்டீயா?"ங்குது யம்மாக்கெழவி.
            "சொல்லாமங்களா?"ங்றாரு மாரிச்சாமி வாத்தியாரு.
            "இந்தாடா! இந்த அடுப்பையெல்லாம் நமக்குப் பத்த வைக்க வராது. நீயே சீமெண்ணய்ய ஊத்தி அடிச்சி பத்த வையி!"ங்குது யம்மாக்கெழவி.
            மாரிச்சாமி வாத்தியாரு லாரியிலயே போயிட்டுக் கெடக்குறவரு இல்லையா. அதால வண்டியிலயே இது மாதிரி அடுப்பை வெச்சிருப்பாரு. அரிசி, பருப்பு சாமானுங்களையும் ஒரு மூட்டையாக் கட்டிப் போட்டு வெச்சிருப்பாரு. தோதுபடுற எடத்துல லாரிய நிப்பாட்டிக்கிட்டு சமைச்சிச் சாப்புட்டுக்குறது அவருக்குப் பழக்கமாப் போனதால அவரே அடுப்பைப் பத்த வெச்சி பாலைப் பொங்கி ஆளுக்குக் கொஞ்சம் தம்பளர்ல ஊத்திக் கொடுக்கிறாரு.
            வாத்தியாரு வேலைன்னாலும் வண்டியில அலையுற பொழைப்புங்றது மாரிச்சாமி வாத்தியார்ரா தேடிக்கிட்டது. அவரோட குடும்பம் திருப்பனந்தாள்ல இருந்துச்சு. பள்ளியோடம் வர்றது போறது மாதிரித்தாம் வீட்டுக்கும் வாரத்துக்கு ஒரு தபா போவாரு, வருவாரு. லாரிதாம் அவரோட உசுரு. அவரோட உசுரு ஓடிட்டு இருந்த நாலு லாரியிலத்தாம் நாலா பிரிஞ்சி ஓடிட்டு இருந்துச்சு. அவரோட லாரிங்க அங்க இங்க எங்க ஓடிட்டு இருந்தாலும் அணைக்கட்டுல வில்லியாண்டவர் கோயிலுக்குப் பக்கத்துலதாம் ஹால்ட் அடிக்கணும். அங்க வெச்சித்தாம் டிரைவரு, கிளினருக்கெல்லாம் காசு பிரிச்சிக் கொடுப்பாரு. இவரு ஓட்டிட்டுப் போற லாரியில மட்டும் கிளினருன்னு யாரயும் வெச்சிக்க மாட்டாரு. அது வேற ஏம் தண்டச் சம்பளம்பாரு. அப்படி ஓர் ஆளு அவரு.
            யம்மாக்கெழவி ஒண்டிக்கட்டை. புருஷங்காரரு மிலிட்டரியில இருந்தவரு. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சண்டை நடந்தப்போ அதுல செத்துப் போனவரு. கெழவிக்கு ஒரே ஒரு பொண்ணுதாம். அதெ திருப்பனந்தாள்ல கட்டிக் கொடுத்த பிற்பாடு இங்க அணைக்கட்டுல ஒண்டிக்கட்டையாயிடுச்சு. அப்பைக்கப்போ  மவளும், மருமவனும், பேரப் புள்ளைகளும் வந்துப் பாத்துக்கிறதோடு சரி. மத்தபடி ஊருல இருக்குற சனங்கத்தாம் அதுக்குச் சொந்த பந்தங்க எல்லாம். மொதல்ல மாரிச்சாமி வாத்தியாரு யம்மாக்கெழவிகிட்டதாம் சுப்பு வாத்தியாருக்குச் சமைச்சுப் போடச் சொல்லிக் கேட்டிருக்காரு.
            அதுக்கு அது, "அட போடா! நாம்ம இருக்குற ஒடம்புக்கு நமக்குச் சமைச்சிச் சாப்புடவே முடிய மாட்டேங்குது. ஏத்தோ அரையும் கொறையுமா உப்புப் போட்டா காரத்த போடாம, காரத்த போடாம உப்ப போடாம நாயீ திங்குமாடா நாம்ம சமைக்குறதெ? அதெ தின்னுகிட்டு குத்துயிரும் கொல உயிருமா கெடக்குறேம்டா! நீயி ன்னடா வாத்தியாரு புள்ளய கொண்டாரேன்னு சொல்லிட்டு அதுக்கு இந்த கணக்கா சமைச்சிப் போட்டா அந்தப் புள்ள என்னத்தடா நெனைச்சிக்கும்? வூடு இருக்கு. குடிய வெச்சிக்கோ. சாப்பாட்டுக்கு அந்தப் புள்ளயயே பாத்துக்கச் சொல்லு. யில்ல நீயே ஒரு பொண்ண பாத்து கல்யாணத்த கட்டி வெச்சுப்புடு. அந்த மாரி காரியம்னாத்தாம் மொதோ ஆளா நின்னு பண்ணுற ஆளாச்சே நீயி! பள்ளியோடம் போறதுன்னத்தாம் கசக்கும் ஒனக்கு!" அப்பிடின்னிருக்கு. அதுக்கு பிற்பாடுதாம் சமைக்குறதுக்கு வேண்டிய சாமாஞ் செட்டுகள அதே ஓட்டத்தோட வாங்கியாந்து போட்டிருக்காரு மாரிச்சாமி வாத்தியாரு.
            சுப்பு வாத்தியாரு காலையில எழுந்து சமைச்சார்ன்னா அதெ எடுத்துக் கட்டிக்கிட்டு அணைக்கட்டுலேந்து கொள்ளிடத்துப் பாலத்து வழியா நடந்தே ஒழுகச்சேரிப் பள்ளியோடத்துக்குப் போயிடுவாரு. காலையிலயும், சாயுங்காலத்திலேயும் யம்மாக்கெழவி டீத்தண்ணிய மட்டும் சரியா போட்டாந்து சுப்பு வாத்தியாருக்குக் கொடுத்துடும். என்னைக்காவது அதுவா நெனைச்சுக்கிட்டுப் பலகாரம் எதாச்சிம் போட்டுச்சுன்னா அதயும் கொண்டாந்து கொடுக்கும். சுப்பு வாத்தியாரு நடந்துக்குற மொறை, பழகுற விதம் எல்லாத்தையும் பார்த்த யம்மாக்கெழவிக்குச் சுப்பு வாத்தியார்ர ரொம்ப பிடிச்சுப் போயிடுச்சு. சில நாட்கள்ல அதுவாவே வந்து, "ஏம்டா வாத்தியாரு யம்பீ! இன்னிக்குச் சமைக்க வாணாம். நாமளே சமைச்சித் தர்றேம்!"ன்னு சொல்லவும் ஆரம்பிச்சிச்சு. சுப்பு வாத்தியாரும் சில நாட்கள்ல, "ஏம் பாட்டியம்மா! நீஞ்ஞ இன்னிக்கு சமைக்க வாணாம். நாம சமைச்சித் தர்றேம்!"ன்னு சமைச்சிக் கொடுப்பாரு. "ஏம்டா யம்பீ! ஒரு ஆம்பளப் புள்ள சமைச்சி பொம்முனாட்டிச் சிறுக்கிச் சாப்புடுறதா? வேடிக்கையால்லடா இருக்கு ஒலகம்!"ன்னு சிரிச்சிக்கிட்டே அவரு சமைச்ச சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டுக்கும். மனசுல எது பட்டாலும் அத படபடன்ன பேசுறதுதாம் யம்மாக்கெழவியோட சுபாவம். மத்தபடி மனசுல எதையும் வெச்சிக்காது. உதவின்னா திட்டிட்டாவது செய்யுமே தவிர உதவாம மட்டும் இருந்திடாது.
            சுப்பு வாத்தியாருக்கு அணைக்கட்டுக்குக் குடி வந்த பிற்பாடு நிறைய நேரம் கிடைச்சிது. பள்ளியோடம் போறதும், வர்றதும்தான் அவருக்கு இருந்த ஒரே வேலை. மத்தபடி சமைச்சிக்கிறதுதாம் அவருக்கு இருந்த அடுத்த வேலை. அந்தச் சமையலுக்கும் வேலையில்லாம சில நாட்கள் ஒழுகச்சேரியில இருக்குற பள்ளியோடத்து புள்ளைங்களோட பெத்தவங்க இவர்ர சாப்பிடறதுக்காக கொண்டுட்டுப் போயிடுவாங்க. சுப்பு வாத்தியாருக்குப் பொழுது ரொம்ப இனிமையா ஓட ஆரம்பிச்சிது.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...