செய்யு - 277
பள்ளியோடத்துக்கு புது வாத்தியாரு போட்ட
சேதியக் கேள்விப்பட்டு மறுநாளுதாம் வந்துப் பாக்குறாரு பெரிய வாத்தியாரு மாரிச்சாமி.
அவருக்குச் சொந்தமா நாலு லாரிக ஓடுது. அந்த நாலு லாரிகளையும் பாக்குறதுக்கே நேரம்
போதுறதில்ல அவருக்கு. நேரம் கிடைச்சா பொழுதுபோக்கா பள்ளியோடம் வருவாரு. லாரிகள
பாக்குறதுதாம் அவருக்கு முக்கியமான வேலை, பள்ளியோடத்தப் பாக்குறதுங்றது எடுபிடி வேலை.
ஊருல நல்லது, கெட்டது தேவைன்னா அவரோட லாரிதாம் முன்னால வந்து நிக்கும். இப்போ வேன்,
பஸ்லாம் வெச்சிக்கிட்டு கலியாணம், சாவு காரியத்துக்குப் போய்ட்டு வர்றது போல அப்போ
ஒழுகச்சேரியில மாரிசாமி வாத்தியாரோட லாரிய வெச்சித்தாம் சனங்க போய்ட்டு வந்துகிட்டு
கெடந்திருக்குங்க. அதுக்குக் காசு பணமெல்லாம் வாங்க மாட்டாரு. அதால மாரிச்சாமி வாத்தியாரு
பள்ளியோடம் வர்றதப் பத்தியோ, வராததப் பத்தியோ கேட்குறதுக்கு ஊர்ல ஒரு நாதியில்லாம
போயிடுச்சு.
புது அதிகாரிங்க யாராவது மாறுதலாயி வர்றதக்
கேள்விப்பட்டா போதும் மாரிசாமி வாத்தியாரு மொத ஆளா போயி அந்த அதிகாரிகளப் பார்த்து
வணக்கம் போட்டுடுவாரு. போடுறதோட இல்லாம அவங்க முன்னாடி வேலைப் பார்த்த ஊர்லேர்ந்து
இங்க குடி மாறில்ல வரணும். இவரு லாரிய கெளப்பிக்கிட்டுப் போயி சாமாஞ் செட்டுகளையெல்லாம்
லாரியில போட்டாந்து இங்க கொண்டாந்து எறக்கிப்புடுவாரு. பள்ளியோடத்துக்கு இன்ஸ்பெக்சன்னாலும்
லாரியில வெச்சித்தாம் அதிகாரிகள கொண்டு வருவாரு. ஊர்ல ஒரு விஷேசம்னாலும் சரிதாம்,
அதிகாரிங்களுக்கு எது தேவைன்னாலும் சரிதாம் கூப்டுறா மாரிச்சாமி வாத்தியாரோட லாரியங்ற
மாதிரி நெலைமை ஆகிப் போனதால அவரு லாரிகள மட்டும் பாத்துக்கிட்டுக் கெடக்குறதுக்கு
எல்லாம் தோதாப் போயிடுச்சு.
பள்ளியோடத்துக்கு வந்து சுப்பு வாத்தியார்ர
பார்த்த மாரிச்சாமி, "வாங்கய்யா வாரும்யா! எந்த ஊர்லேந்து வாராப்புல?" அப்பிடின்னு
அவரே வணக்கத்தக் கூட எதிர்பார்க்காம வந்து கேக்குறாரு.
"குடவாசலு பக்கம் விருத்தியூருங்கய்யா!
நேத்தியே வந்திட்டேம்! இன்னிக்குத்தாம் அய்யாவ பார்க்க முடியுது!" அப்பிடிங்கிறாரு
சுப்பு வாத்தியாரு.
இதைக் கேட்டதும் மாரிச்சாமி வாத்தியாரு
பகபகன்னு சிரிக்கிறாரு. "இந்தாருங்கய்யா! இந்தப் பள்ளியோடத்துக்குப் பெரிய வாத்தியாரு
யாரு? பள்ளியோடத்தப் பாத்துக்க வேண்டியத யாரு?" அப்பிடிங்கிறாரு மாரிச்சாமி.
"நீஞ்ஞதாம்ங்கய்யா!"ங்றாரு சுப்பு
வாத்தியாரு.
"தப்பு! ரொம்ப தப்புய்யா! இந்தப்
பள்ளியோடத்துக்கு இன்னிலேந்து பெரிய வாத்தியாரு நீஞ்ஞதாம்யா. பள்ளியோடத்தப் பாத்துக்க
வேண்டியதும் நீஞ்ஞதாம்யா. அப்போ நமக்கு ன்னா வேலைன்னு கேட்குறீங்களாய்யா? நமக்கு வேலை
ஒங்களப் பாத்துக்க வேண்டியதுதாம்யா. குடவாசல்லேந்து சாமாஞ் செட்டுகள எடுத்தாரணுமா ன்னா?
என்னிக்குப் போவோம் சொல்லுங்கய்யா? நம்மகிட்ட லாரி இருக்கு. லாரிய கெளப்பிக்கிட்டுப்
போவேம்யா!"ங்றாரு மாரிச்சாமி.
"சைக்கிள்லயே வந்துடலாம்னு பாக்குறேம்!"
அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
"சைக்கிள்லயா? அதுல எப்ப கெளம்பி
எப்ப வர்றதுயா? ரொம்ப ரோதனையால்ல போவும்!" அப்பிடிங்கிறாரு மாரிச்சாமி.
"சரியா வந்துடுவேம்ங்கய்யா!"ங்றாரு
சுப்பு வாத்தியாரு.
"தாமசமா வந்தாலும் சரித்தாம்! ஒண்ணும்
பெரச்சனையில்ல. நீஞ்ஞ பாட்டுக்கு வரலாம். பாடத்த நடத்தலாம். சீக்கிரமெ கெளம்புனாலும்
ஒண்ணும் பெரச்சனையில்ல. இது ஒங்க பள்ளியோடம்னு நெனைச்சிக்கணும். ஒரு பெரச்சனையின்னா
மாரிச்சாமி இருக்காங்ற தெகிரியம் இருக்கணும். ரொம்ப நாளா பள்ளியோடத்துல ஒத்த ஆளா
துணைக்குக் கூட ஆளில்லையேன்னு நெனைச்சிக்கிட்டுக் கெடந்தேம். அதாங் நீஞ்ஞ வந்திட்டீங்களே.
ன்னா மறுக்கா மறுக்கா சொல்றேன்னு நெனைக்கப்புடாது. பள்ளியோடத்தப் பாத்துக்க வேண்டியது
ஒங்க பொறுப்பு. ஒங்கள நல்லபடியா பாத்துக்க வேண்டியது நம்மளோட பொறுப்பு. ஒங்களுக்கு
என்ன வேணும்னாலும் நம்மகிட்ட கூச்சப்படாம கேக்கணும் ஆம்மா! ஒங்களுக்குல்லாம் ஒதவி பண்ணத்தாம்
நமக்கு ராத்திரியில தூக்கமே வரும்யா!"ன்னு சொல்லிட்டு மறுபயைும் பகபகன்னு சிரிக்கிறாரு
மாரிச்சாமி. சிரிச்சுப்புட்டு, "புள்ளியோல்லாம் நம்ம புள்ளியோத்தாம். நல்ல புள்ளியோ.
சொன்னதக் கேட்டுப்புட்டு பெரமாதமா படிப்பானுங்கோ. நமக்குத்தாம் சொல்லி கொடுக்க
நேரம் இருக்காது. நீஞ்ஞத்தாம் அதயும் பாத்துக்கணும்யா. ஒங்கள நாம்ம பாத்துப்பேம்யா!"ங்றாரு
மாரிச்சாமி. இப்படிச் சொல்லிப்புட்டு மேக்கொண்டு சுப்பு வாத்தியார்ர பேச வுடாம,
"பேசுனதுல நேரம் ஆனதே தெரியில பாருங்கய்யா! லாரியொண்ணு அணைக்கட்டுல மெளத்தாயிக்
கெடக்குது. நாம்ம போனாத்தாம் காரியம் ஆவும். கொஞ்சம் வெரசா கெளம்புறேம்யா!"ன்னு
சொல்லிட்டுக் கெளம்புனவருதாம் அடுத்த ஒரு வாரம் வரைக்கும் பள்ளியோடத்த எட்டிப் பார்க்கல.
சுப்பு வாத்தியாருக்குப் பள்ளியோடத்த
ரொம்பப் பிடிச்சுப் போச்சு. புள்ளைங்க ஒவ்வொண்ணும் அவரு கத்துக் கொடுக்குறத மணி
மணியா கத்துக்குதுங்க. அவரு படிச்சுக் காட்டுற மாதிரியே படிச்சுக் காட்டுதுங்க. அவரு
பாடுற மாதிரியே பாடிக் காட்டுதுங்க. அவரு கதை சொல்ற மாதிரியே கதை சொல்லிக் காட்டுதுங்க.
அவரு கணக்குப் போடுற மாதிரியே போட்டுக் காட்டுதுங்க. அவரோட எழுத்து ஒவ்வொண்ணும்
அச்சு அடிச்சாப்புல மாதிரியில்ல இருக்கும். அவரு எழுதுறதப் பாத்துட்டு அதெ மாதிரியே
புள்ளைங்களும் அச்சடிச்சாப்புல எழுதிக் காட்டுதுங்க. அத்தோட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
புள்ளையும் வெண்டைக்காயோ, அவரைக்காயோ, கத்திரிக்காயோ, சோளத் தட்டையோ, தேங்காயோ
எதாச்சிம் ஒண்ண, "எங்க வூட்டு கொல்லையில வெளைஞ்சது!"ன்னு கொண்டாந்து வேற
கொடுக்குதுங்க. அதுங்க கொண்டு வர்றத வெச்சால ஒரு காய்கறிக் கடைய வைக்கலாம் போலருக்கு.
சுப்பு வாத்தியாரு இதெல்லாம் வேணாம்னு சொன்னாலும் புள்ளைங்க கேட்குற பாடாயில்ல. சில
நாட்கள்ல அந்தப் புள்ளைங்கள பெத்தவங்களே வேற ஒரு மஞ்சப் பையில போட்டாந்து காய்கறிகளக்
கொடுத்துப்புட்டுப் போறாங்க.
சுப்பு வாத்தியாரு வந்த பிறவுக்குப் புள்ளைங்க
வூட்டுல போயி சத்தமா ராகம் போட்டு படிக்கிறதையும், படிச்சத பாடஞ் சொல்லிப் பாக்குறதையும்
பார்க்க பார்க்க பெத்தவங்களுக்கு சந்தோஷம் வந்துப் போவுது. அங்க ஊர்ல ஒரு நல்லது
கெட்டதுன்னாலும் சுப்பு வாத்தியாரு அங்கப் போயி நிக்க ஆரம்பிச்சாரு. ஊர்ல கடுதாசி
எழுதுறதனாலும், வர்ற கடிதாசிய படிச்சுக் காட்டுறதனாலும் இவர தேடிட்டுப் பள்ளியோடத்துக்கு
வந்துடுவாங்க உரு சனங்க. அதுல ஊர்ல சுப்பு வாத்தியாரு மேல ஒரு மருவாதிக் கூடிப் போவுது.
வூட்டுல ஒரு பலகாரம் செஞ்சாலும் அதுல நாலைஞ்ச ஒரு பாத்திரத்துல போட்டு வுட்டு புள்ளைங்ககிட்ட
கொடுத்து விட்டுடுவாங்க. அதுல உச்சகட்டமா ஒரு நாளு, ஒரு பையனோட தகப்பங்காரரு ரகசியமா
ஒரு பித்தளை உருளிய ஒரு பையில போட்டாந்து கொடுக்குறாரு. அந்தப் பைய வாங்கித் தூக்கிப்
பாத்தா அம்மாம் சொமையா இருக்கு. "வாத்தியார்ரே! பாத்துப் பக்குவமா எடுத்துட்டுப்
போங்க. மொதல கறி. சமைச்சுச் சாப்பிட்டீங்கன்னா ஒடம்பு ச்சும்மா கிண்ணுன்னு இருக்குங்.
ஒடம்புல ஒரு சொட்டு சளி இருக்காது. நாளு பட்ட இருமலு, தும்மலு, கணை கருமாந்திரம்னு
ஒடம்புல ஒண்ணு தங்காது. ஓடியே போயிடும்!"ங்றாரு. சுப்பு வாத்தியாருக்குத் தூக்கி
வாரிப் போடுது.
அங்க அணைக்கட்டுல கொள்ளிடத்து ஆத்துல
முதலைங்க சர்வ சாதாணமா அங்கிட்டும், இங்கிட்டும் போயிக்கிட்டு கெடக்கும்ங்க. அதெ ஊருல
இருக்கற சில விவகாரமான ஆளுங்க பாரெஸ்ட் ஆளுங்களுக்குத் தெரியாம பிடிச்சாங்கன்னா அன்னிக்கு
ஊரு முழுக்க முதலைக் கறிதாம். அப்படிப் பிடிச்ச முதலையிலிருந்துதாம் இந்த முதலைக்
கறி வந்திருக்கு. முதலையோட கறியில ஒரு சின்ன பிசுக்குக் கூட ரொம்ப சுமையாத்தாம் இருக்கும்பாங்க.
சுப்பு வாத்தியாருக்கு என்ன சொல்றதுன்னே
தெரியல. ரொம்ப பிரியமா கொடுக்குறத வாங்கிக்கிறதா? இல்ல, இது தப்பான்ன காரியம் இனுமே
செய்யாதீங்கன்னு சொல்றதான்னு தடுமாறுறாரு. வாத்தியாரு தடுமாறி நிக்குறதப் பாத்து முதலைக்
கறிய கொண்டாந்து கொடுத்தவரே ஒரு மாதிரியா புரிஞ்சிக்கிட்டு, "வாத்தியார்ரே!
இதல்லாம் நீஞ்ஞ சாப்புட மாட்டீங்க போலருக்கு. சைவச் சாப்பாட்டுக்காரரா வாத்தியார்ரே
நீஞ்ஞ? அதெ சொல்ல வேண்டித்தான்னே. இத்து தெரியாம எடுத்தாந்துப்புட்டேனே. பரவால்ல.
வூட்டுல ஒரு நாளு வட பாயாசம் பண்ற அன்னிக்கு வந்து நீஞ்ஞ சாப்புட்டுப் புடணோம்!"ங்றாரு.
அப்படிச் சொல்லிப்புட்டு அவரே பையைப் போட்டு பித்தளை உருளியில போட்டுருக்குற முதலைக்
கறியோட திரும்பப் போறாரு.
நாலு மாசம் வரைக்கும் ஒரு பழைய சைக்கிளைத்
தோது பண்ணிக்கிட்டு விருத்தியூருக்கும், ஒழுகச்சேரிக்கும் குறுக்குவழியக் கண்டுபிடிச்சி
அதுல போயிப் பாக்குறாரு சுப்பு வாத்தியாரு. அப்படிக் குறுக்கு வழிய கண்டுபிடிச்சுப்
போயும் இருபது மைலுக்கு மேல விருத்தியூருக்கும், ஒழுகச்சேரிக்கும் தூரம் வந்துச்சு.
காலையில அஞ்சரைக்கெல்லாம் விருத்தியூர்ல சைக்கிள எடுத்தார்ன்னா ஒம்போது மணிக்குள்ள
ஒழுகச்சேரி பள்ளியோடத்துல இருப்பாரு. பத்மா பெரிம்மாத்தாம் காலையில எழுந்திரிச்சி
இட்லிய சுட்டுப் போட்டோ, சாதத்த வடிச்சுக் கட்டிச்சோறாவோ காலைக்கும், மத்தியானதுக்குமா
ரெண்டு வேளைக்கும் கட்டிக் கொடுக்கும். பள்ளியோடத்திலேர்ந்து சாயுங்காலம் நாலரைக்குச்
சைக்கிள எடுத்தார்ன்னா ராத்திரி ஏழரை எட்டு மணி ஆயிடும் விருத்தியூரு வந்து சேர. அப்படி
சைக்கிள் மிதிச்சிட்டு வந்து ராத்திரி படுக்க முடியல. காலு வழி பின்னி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு.
மாரிச்சாமி வாத்தியாருக்கு சுப்பு வாத்தியாரு
பழைய சைக்கிளப் போட்டுகிட்டு கடமுடான்னு மிதிச்சுக்கிட்டு வர்ற சாகசத்தப் பாத்துப்
பாத்து ஆச்சரியமா போவுது. ஒரு நாளு அவரு அதிசயமா பள்ளியோடம் வந்த நாள்ல சுப்பு வாத்தியார்ர
பாத்து கேக்குறாரு, "யோவ் வாத்தியார்ரே! ஒன்னய போல கஷ்டப்படுற ஆள இப்பதாம்யா
பாக்குறேம். அப்டி என்னத்தய்யா மிச்சம் பண்ணி அள்ளிட்டுப் போவப் போறே? இஞ்ஞ ஒரு வூட்டப்
பாத்துத் தர்றேம். பக்கத்துல ஒரு வூட்டுல சாப்பாட்டுக்கும் சொல்லி வுடறேம். மிஞ்சி
மிஞ்சிப் போனா எல்லாத்துக்கும் சேர்த்து நாப்பது ஐம்பது ரூவாயி ஆவுமா? அதெக் கொடுத்துப்புட்டு
தின்னம்மா, தூங்குனமான்னு இருக்காம மாங்கு மாங்குன்னு சைக்கிள மிதிச்சிக்கிட்டு மாடு
மாதிரி கஷ்டப்பட்டுக் கெடக்குறீயேய்யா!"ங்றாரு.
சுப்பு வாத்தியாருக்கு ஒண்ணும் சொல்ல
முடியல. அவரோட மனசுல இருக்குற அப்படியே இல்ல சொல்றாரு மாரிச்சாமி வாத்தியாரு. அவரோட
கணக்கும் அதுதாம். இப்படிச் சைக்கிள்ல போய்ட்டு வந்தா வாடகைக்கு எடுத்துத் தங்குற
காசு மிச்சமாவுமுல்ல. அதெ சேத்து வெச்சா ஒரு செலவுக்கு ஆவுமுன்னே அவரோட நெனைப்பு.
தேமேன்னு நின்ன சுப்பு வாத்தியார்ர பார்த்த
மாரிச்சாமி வாத்தியாரு, "கொஞ்சம் சைக்கிள கொடும்யா! அணைக்கட்டு வரைக்கும் போயி
வாரணும். லாரியில போய்ட்டு வந்தா எண்ணெ காசுதாம் செலவழியும்!"ன்னு சொல்லிப்புட்டுப்
போனவரு திரும்ப வரும் போது இன்னொருத்தரோட சைக்கிள்ல வந்து எறங்குறாரு. வாத்தியாருமாருங்க
அப்போ நடந்தோ, மாட்டு வண்டியிலோ, சைக்கிள்லயோ பள்ளியோடத்துக்கு வர்றதுதாம் வழக்கம். நம்ம மாரிச்சாமி வாத்தியாரு மட்டுந்தாம்
லாரியில பள்ளியோடம் வந்து லாரியில வூட்டுக்குத் திரும்புற ஆளு. அவரே லாரிய ஓட்டிட்டு
வருவாரு. சமயத்துல டிரைவரு ஓட்டிட்டு வர்ற இவரு உக்காந்துட்டும் வருவாரு. அவரு அப்படி
வர்றதால அவரெ மாரிச்சாமி வாத்தியாருன்னு சொல்லாம லாரிச்சாமி வாத்தியாருன்னுதாம் ஊர்ல
சொல்லிப்பாங்க.
மாரிச்சாமி வாத்தியாரு இன்னொருத்தரோட
சைக்கிள்ல வந்து எறங்குறதப் பார்க்குற சுப்பு வாத்தியாரு சைக்கிளு பஞ்சராயிடுச்சு போலருக்குன்னு
நெனைச்சுக்கிறாரு. அதாங் சைக்கிள பஞ்சரு ஒட்டி எடுத்துட்டு வரச் சொல்லிப்புட்டு இவரு
இன்னொருத்தரோட சைக்கிள்ல வந்திருக்கிறார்ன்னு அவரா யோசிச்சுக்கிறாரு.
வந்து எறங்குன மாரிச்சாமி வாத்தியாரு,
"யோவ்! இன்னையோட விட்டுச்சுய்யா ஒன்னய பிடிச்ச சனி!"ங்றாரு.
சுப்பு வாத்தியாரு ஒண்ணும் புரியாம முழிக்கிறாரு.
"ஓஞ் சைக்கிள வித்துப்புட்டாச்சுய்யா.
நூத்தி இருவது ரூவாய்க்கு வித்துப்புட்டேம். இந்தாரும்யா காசப் புடி!"ன்னு அவரோட
சட்டைப் பைக்குள்ள திணிக்கிறாரு மாரிச்சாமி வாத்தியாரு.
எழுவது ரூவாய்க்கு வாங்குன சைக்கிள்ல நூத்தி
இருவது ரூவாய்க்கு வித்ததுல சுப்பு வாத்தியாருக்குச் சந்தோஷம்னாலும், சைக்கிளு இல்லாம
எப்படி விருத்தியூருக்குப் போறதுன்னு மண்டைக் கொழம்புது.
அதெ புரிஞ்சிக்கிட்ட மாதிரி மாரிச்சாமி
வாத்தியாரு பேசுறாரு, "இன்னிக்கு குடவாலுக்கு ஒரு சரக்குக் கொண்டுட்டுப் போவணும்.
நம்ம லாரியில போயிப்புடலாம். அப்டியே ஒம்மட ஊருக்கும் ஒரு ரவுண்ட வுட்டுப்புட்டு வூட்டுக்குப்
போயிடலாம்யா!"ன்னு சொல்லிப்புட்டு கண்ணடிக்கிறாரு மாரிச்சாமி வாத்தியாரு.
சொன்னபடியே மாரிச்சாமி வாத்தியாரு பள்ளியோடம்
விட்டதும் சுப்பு வாத்தியார்ர லாரியில உக்கார வெச்சி ஓட்டிக்கிட்டுக் கொண்டாந்து,
குடவாசல்ல சரக்க இறக்கிப்புட்டு, அதே லாரியில விருத்தியூருக்கு வுடுறாரு. விருத்தியூர்ல
இவரு சுப்பு வாத்தியாரு லாரியில வந்து எறங்குனா, "இதென்னடா பொழுது விடியறதுக்குள்ள
ஓட்டச் சைக்கிள்ல போனவேம், பொழுது மசங்குறதுக்குள்ள லாரியில வந்து இறங்குறானே!"ன்னு
ஊரே மூக்குல வெரல வெச்சிப் பாக்குது அந்தக் காட்சிய.
லாரி வீட்டுக்கு முன்னாடி கெடக்குறது ஒரு
பெருமையாத்தாம் இருக்கு. செயராமு பெரிம்மாவுக்கும், பத்மா பெரிம்மாவுக்கு இதுல ஒரு
தனி சந்தோஷமே வந்திடுச்சு. நம்ம தம்பி வாத்தியாரு வேலைக்குப் போயி பெரிய பெரிய ஆளுங்களத்தாம்
பிடிச்சி வெச்சிருக்காம்னு நெனைச்சுக்கிது செயராமு பெரிப்பா. அத்தோட மாரிச்சாமி வாத்தியாரு
அவரோட லாரி ஓட்டுற யேவாரத்தச் சொல்ல சொல்ல பத்மா பெரிம்மாவுக்கு மேல போன முழி கீழே
எறங்கல.
அன்னைக்கு ராத்திரி அங்கேயே தங்கிச் சாப்புட்டுப்புட்டு,
காலைச் சாப்பாட்டையும் முடிச்சுப்புட்டுக் கெளம்புறப்ப மாரிச்சாமி வாத்தியாரு சொல்றாரு,
"சாமாஞ் செட்டுகளையெல்லாம் எடுத்துக்குங்க வாத்தியார்ரே! நம்ம லாரியிலயே கொண்டு
போயிடலாங்! அஞ்ஞ ஒரு வூட்டைப் பார்த்து குடி வெச்சாத்தாங் ஒங்க நோவு கொறையும். வாரா
வாரத்துக்கு வூட்டுக்கு வந்து ஊரப் பாத்துக்குங்கய்யா!"றாரு.
"ஓ! வேற வூடு பாத்துக் குடி போகத்தாம்
கொழுந்தங்காரரு லாரிய கொண்டாந்தாரா? வேல கெடைக்குற வரைக்கும் இத்து வூடு. வேல கெடைச்சி
சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா தனிவூடா? நல்லா இருக்கே சங்கதி! இஞ்ஞ ன்னா சாமாஞ் செட்டு
இருக்கு? இருக்குற ரண்டு கரிக்குண்டானையும், நாலு வளைஞ்ச கரண்டியையும், ஒத்த ஒடைச டம்பளரையும்
எடுத்துட்டுப் போவச் சொல்லுங்க!" அப்பிடிங்குது பத்மா பெரிம்மா.
இதெ கேட்குறப்ப சுப்பு வாத்தியாருக்குச்
சங்கடமா போயிடுது. ஏம் இப்பிடி மாரிச்சாமி வாத்தியாரு தங்கிட்ட கலந்துக்காம ஒண்ணு
கெடக்கு பண்றார்ன்னு அவரு மேல கோவமாவும் வருது. கோவம் வந்து என்ன பண்றது? அவரு பெரிய
வாத்தியாராச்சே! அத்தோட நாலு லாரிக்கு வேற மொதலாளி, அதிகாரிகளுக்கு வேற நெருக்கமானவராச்சே.
வந்தக் கோபத்தை ஒண்ணும் பண்ண முடியாம பேசாம நிக்குறாரு சுப்பு வாத்தியாரு.
நெலமையைச் சட்டுன்னுப் புரிஞ்சிக்கிறாரு
மாரிச்சாமி வாத்தியாரு. "ஒத்த ஆளு ஒனக்கு ன்னய்யா சாமாஞ் செட்டு? ஒரு சின்ன வூடா
பிடிச்சித் தர்றேம். இருந்துக்கிட்டு வாரா வாரத்துக்கு வந்து ஒங்க அண்ணங் குடும்பத்த
நல்ல வெதமா பாத்துக்கோய்யா! குடும்பத்துல ஏதும் தப்பா நெனைக்க வாணாம். சைக்கிளு மிதிச்சிட்டு
வர்ற தூரம் அதியம். இப்பிடி சைக்கிளு மிதிச்சா ஒடம்பு ன்னத்துக்கு ஆவுறது? ஒடம்பப்
பாருங்க துரும்பா எளைச்சிக் கெடக்கு. ரண்டு மாசத்துக்குத் தங்கிப் பாக்கட்டும். பிடிச்சம்
இல்லன்னா திரும்ப நாமளே ஒரு புதுசா சைக்கிள ஒண்ணு வாங்கித் தர்றேம். வந்துட்டுப் போவட்டும்."ன்னு
சொல்லிப்புட்டு பையில கைய விட்டு எடுத்து பத்மா பெரிம்மா கையில இருவது ரூவாயி, செயராமு
பெரிப்பா கையில இருவது ரூவாயின்னு கொடுத்துக்கிட்டே, பொம்பளைப் புள்ளைங்க மூணு, ஆம்பளைப்
புள்ளைங்க மூணுன்னு தலைக்கு ஒவ்வொண்ணுத்தக்கு ஒத்த ரூவாயி காசக் கொடுக்குறாரு.
காசு கையில வந்ததும் எல்லாத்து மூஞ்சிலயும்
ஒரு சந்தோஷக் கலைத் தெரியுது. அந்தச் சந்தோஷக் கலை மறையறதுக்குள்ள மாரிச்சாமி வாத்தியாரு,
"எல்லா வாஞ்ஞ. லாரியில ஏறுங்க. ஒரு ரவுண்டு அடிச்சிக் கொண்டாந்து விட்டுப்புட்டு
நாஞ்ஞளும் பள்ளியோடம் கெளம்புறேம்!"ங்றாரு. எல்லாரும் லாரியில ஏறி ஒரு ரவுண்டு
போயிட்டு வந்து எறங்கிக்கிறாங்க.
மாரிச்சாமி வாத்தியாரு சுப்பு வாத்தியார்ர
லாரியில வெச்சுக் கெளப்பிக்கிட்டு அங்கேந்து வுட்ட வண்டிய ஒழுகச்சேரி பள்ளியோடத்துல
கொண்டாந்துதாம் நிப்பாட்டுறாரு. சுப்பு வாத்தியார்ர எறக்கிப்புட்டு ஒண்ணுஞ் சொல்லாம
லாரிய கெளப்பிக்கிட்டு அணைக்கட்டுப் பக்கமா போறாரு.
*****
No comments:
Post a Comment