23 Nov 2019

16.5



            முறைப்படி இதை இப்போது எழுத முடியாது. எழுதவும் கூடாது. கால வரிசைப்படி நான்கு ஆண்டுகளைக் கடந்து நடக்கிறது இது. ஏற்கனவே நாவல் கண்ட இடத்தில் கடித்துக் குதறியபடி இருப்பதால் நாவலின் தொடர்ச்சிப் புரியாமல் வாசகர்கள் சிரமப்படுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. நாவலின் தொடர்ச்சி எந்த இடத்திலும் அறுந்து விடவில்லை. ஆனால் பத்திகள் கண்டபடி இடமாறியிருக்கின்றன. நான்காவது அத்தியாயத்தில் இடம்பெற வேண்டிய பத்தி முதல் அத்தியாயத்தில் இருக்கலாம். முதல் அத்தியாயத்தில் இடம்பெற வேண்டிய பத்தி எட்டாவது அத்தியாயத்தில் இருக்கலாம்.
            ஏன் நாவலாசிரியர் இப்படிச் செய்கிறார்? கிட்டதட்ட வாசகர்கள் விரக்தியின் விளிம்பை எட்டிப் பார்த்திருப்பார்கள். இது ஒரு மர்மமான புதிர். துப்பறிவதற்கானத் தன்மை. நாவலின் தனிக்கவர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்பதற்காக எல்லாம் இது சேர்க்கப்படவில்லை. வாழ்க்கை அநேகமாக அப்படி இருக்கிறது. பத்தாவது வயதில் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய விடையை நாற்பதாவது வயதில் கொண்டு தருகிறது வாழ்க்கை. அதற்காக வாழ்க்கையைக் கொன்று விட முடியாது. வாழ்க்கை என்ன தருகிறதோ அதை ஏற்றுக் கொண்டு வாழ்வதைத் தவிர என்ன வழி இருக்கிறது? வாழ்க்கையில் எல்லாரும் மர்மமான புதிர் விளையாட்டை விளையாடியபடி இருக்கிறோம். வாழ்க்கையில் வெளிப்படும் ஒருவகை குறுக்கெழுத்துப் புதிர் நாவலில் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.
            கடந்தோடி ஓடி விட்ட வாழ்க்கையில் எதை நினைக்க நேரம் இருக்கிறது? உயிருடன் இருக்கும் போது தன்னை குறித்து நினைவு இல்லாத மனிதன் செத்தப் பின் தன்னைப் பற்றி மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த அளவுக்குச் சரியாக இருக்கும்? மனிதர்கள் எல்லாவற்றிற்கும் ஏற்பாடுகளைச் செய்து வைத்துள்ளனர். மனிதர்களுக்கு மனிதர்கள் உயிருடன் இருக்கும் போது நினைவு இருப்பதில்லை. செத்த மனிதர்களை நன்றாக நினைவு வைத்துள்ளார்கள். அப்படி நினைவு வைத்துக் கொண்டு அந்த நாளில் நன்றாக சமைத்து உண்கிறார்கள், மதுவருந்தி மகிழ்கிறார்கள், கூத்தடிக்கிறார்கள். மதுவருந்தி, கூத்தடித்து மகிழ்வதற்கு செத்துப் போன மனிதரின் இறந்த நாள் தேவையாக இருக்கிறது. நிறைய மனிதர்கள் செத்துப் போகப் போக மதுவருந்திக் கூத்தடிப்பதற்கான நாட்கள் நிறைய சேர்கின்றது. ஞாபகங்களின் ஒரே நன்மை இது.
            நான்காண்டுகளில் கிட்டதட்ட ஞாபகம் செத்துப் போன மனிதனாக இருக்கிறான் விகடு. அந்த நாளில் அவனுக்கு தினக்கேசரி எனும் நாளிதழின் பக்கங்கள் காட்டப்பட்டதில் அதில் மா.கா.பா.சோ. மிடுக்காக அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் மா.கா.பா.சோ.வுக்கு நிகராக சஃபாரி வகையிலான ஆடையணிந்த மற்றொரு அதிகாரி போட்டிக்குப் போட்டியாக மிடுக்காக அமர்ந்திருக்கிறார். இரண்டு அதிகாரிகளும் ஒரே பணியிடத்திற்கு நியமிக்கப்பட்டு விட்டதாகவும், இருவரும் இருந்த இடத்தை விட்டு அசைய மறுப்பதாகவும் தினக்கேசரி பேசுகிறது. மறந்து போயிருந்த மா.கா.பா.சோ. இப்படித்தான் விகடுவின் நினைவில் நிழலாடுகிறார். அடுத்தடுத்த நாட்களில் இதே செய்தி தினஅல்வா, தினப்பூந்தி, தினசாம்பார் நாளிதழ்களிலும் வெளிவருகிறது. எல்லா நாளிதழ்களிலும் அதே மிடுக்கோடு அமர்ந்திருக்கிறார்கள் இரு அதிகாரிகளும்.
            மா.கா.பா.சோ. தொடர்ச்சியாக எழுதிப் போட்ட மொட்டைக் கடுதாசிகளால் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டதையும், மொட்டைக் கடுதாசி எழுதிப் போடத் தெரியாத காரணத்தால் சஃபாரி அணிந்த மற்றொரு அதிகாரி அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் இன்னொரு இடத்திற்கு வேறு வழியின்றி மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதையும் எந்த ஒரு நாளிதழும் வெளியிடவில்லை.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...