செய்யு - 276
சுப்பு வாத்தியாருக்கு ஒழுகச்சேரியில வாத்தியாரு
வேலை போட்டிருந்தாங்க. அவரு அதுக்கான ஆணையை வாங்கிக்கிட்டு கெளம்புனாரு. கும்பகோணத்திலிருந்து
திருப்பனந்தாள் போயி அங்க இருக்குற பள்ளியோடத்து இன்ஸ்பெக்டரு ஆபிஸ்ல அதெ தாக்கல்
பண்ணிட்டு, அவரு தந்த ஆணைய வாங்கிக்கிட்டு, அங்கேயிருந்து அணைக்கட்டுங்ற ஊருக்குப்
போனா, அணைக்கட்டிலிருந்து மூணு கிலோ மீட்டர்ல இருக்குது ஒழுகச்சேரி. விருத்தியூர்லேர்ந்து
கணக்குப்பண்ண இருபத்தஞ்சு மைலு வந்துச்சு. நல்ல வளமான ஊரு ஒழுகச்சேரி. கொள்ளிடத்து
ஆற்றுத் தண்ணியில ஊரே பச்சைப் பசேல்ன்னு இருக்கு.
இவரு போயிச் சேர்ந்த ஒழுகச்சேரியில இவரையும்
சேர்த்தா ரெண்டே வாத்தியாருதாம். அஞ்சாப்பு வரையுள்ள பள்ளியோடம். இவரு பள்ளியோடம்
போன அன்னைக்குப் பள்ளியோடம் அது பாட்டுக்கு நடந்துட்டு இருக்கு. ஆனா ஹெட்மாஸ்டர்ங்ற
பெரிய வாத்தியாரைக் காணும். வாத்தியாரே இல்லாத பள்ளியோடத்துல புள்ளைங்க படிக்குற கணக்கால்ல
இருக்குன்னு இவரு போயிப் பார்த்தா கொஞ்சம் உசரமான பையன் புள்ளைங்கள உக்கார வெச்சி
அவனுக்குத் தெரிஞ்ச ஆனா, ஆவன்னாவையும், ஒண்ணு, ரெண்டு, மூணையும் சொல்லிக் கொடுத்துட்டு
நின்னுகிட்டு இருக்கான். புள்ளைங்களும் அதெ சொல்றதும், சிலேட்டுல எழுதுறதுமா இருக்குதுங்க.
மொத்தம் புள்ளைங்க எப்படியும் அறுவது, எழுவது இருக்கும்ங்க. அத்தனைப் புள்ளைங்களும்
அம்புட்டு அமைதியா உக்காந்து இருக்குதுங்க. இவரு போயி நின்னதும் புள்ளைங்க மிரட்சியா
பாக்குதுங்க. உசரமானப் பையன் இவரைப் பார்த்து கிட்டக்க வந்து, "ஒங்களுக்கு ன்னா
வேணும்? யாரு நீஞ்ஞ?" அப்பிடிங்றான். சுப்பு வாத்தியாரு அவனெப் பார்த்து,
"நாந்தாம் ஒங்க பள்ளியோடத்துக்குப் புதுசா வந்திருக்குற வாத்தியாரு. பெரிய வாத்தியாரு
எஞ்ஞ?" அப்பிடிங்றாரு!
"நம்ம பள்ளியோடத்துக்குப் புது வாத்தியாரு
வந்திட்டார்டோய்!" அப்பிடின்னு சத்தம் போடுறான் உசரமான பையன்.
அதைக் கேட்டதும் உக்காத்தியிருக்குற புள்ளைங்க
எல்லாம், "ஹோய்! புது வாத்தியார்டோய்!"ன்னு சத்தம் போடுதுங்க.
"ஹெட்மாஸ்டரு எஞ்ஞ?" அப்பிடிங்கிறாரு
சுப்பு வாத்தியாரு மறுபடியும்.
"அவுக மெதுவாத்தாம் வருவாக. செல நாளு
வர மாட்டாக. நீஞ்ஞ வாங்க. இந்தப் பொட்டியில உக்காருங்க!" அப்பிடிங்றான் உசரமான
பையன்.
அந்தப் பள்ளியோடம் நல்ல உசரமான ஓட்டுக்கட்டடம்.
வெளியில வராந்தா இருக்கு. உள்ளார ஓன்னு எந்தத் தடுப்பும் இல்லாம இந்த மூலைக்கும் அந்த
மூலைக்கும் ஒரு பொட்டி இருக்கு. பொட்டிக்குப் பக்கத்துல தலா ஒரு மேசை இருக்கு. அதுக்கு
எடையில புள்ளைங்க உக்காந்திருக்காங்க.
சுப்பு வாத்தியாரு பொட்டி மேல மேசையை
நகத்திப் போட்டுக்கிட்டு உக்காந்தவரு, "ரிகார்ட்டு எல்லாம் எஞ்ஞ?"ன்னு அந்தப்
பையனப் பாத்து கேட்குறாரு.
"நீஞ்ஞ உக்காந்திருக்குறப் பொட்டிக்குள்ளத்தாம்
இருக்கு வாத்தியாரே! எழுந்திரிச்சிப் பொட்டியத் தொறந்துகிட்டு எடுத்துக்கணும். எடுத்துக்கிட்டு
பொட்டிய மூடிக்கிட்டு உக்காந்திக்கணும்." அப்பிடிங்றான் அந்த உசரமானப் பையன்.
சுப்பு வாத்தியாரு பொட்டியைத் திறந்து
அதுல இருக்குற ரிகார்ட்டுகளையெல்லாம் பாக்குறாரு. பாத்துப்புட்டு வாத்தியாருங்க கையெழுத்துப்
போடுற ரிகார்டு இல்லையேன்னு கேட்குறாரு.
"எதுத்தாப்புல இருக்குற அந்தப் பொட்டியில
இருக்கும் வாத்தியாரே!" அப்பிடிங்றான் அந்தப் பையன். அது பெரிய வாத்தியாரு உக்கார்ற
பொட்டியா இருக்கும்னு அவரு எழுந்துப் போயி அந்தப் பொட்டிய பார்க்குறாரு. அதுல இருக்கு.
அதுல அவரு பேரை எழுதி கையெழுத்துப் போடுறாரு. இந்தப் பொட்டி ஹெட்மாஸ்டரு உட்காருற
பொட்டின்னும், எதுத்தாப்புல இருக்குற பொட்டி வாத்தியாரு உக்கார்ற பொட்டின்னும் சுப்பு
வாத்தியாரு புரிஞ்சிக்கிறாரு. நாற்காலி இல்லாத பள்ளியோடத்துல பொட்டிதானே நாற்காலி.
பொட்டின்னாலும் பொட்டி அது தேக்கு மரப் பொட்டி. நல்லா வழுவழுன்னு என்னமா இருக்கு!
ஹெட்மாஸ்டரு வரபடி வரட்டும். நாம எதாச்சும்
பாடத்த நடத்துவோம்னு ஆரம்பிக்கிறாரு சுப்பு வாத்தியாரு. மொதல்ல புள்ளைங்க எல்லாத்தையும்
வரிசைப்படுத்தி உக்கார வைக்கிறாரு. அஞ்சு வகுப்புக்கும் சேர்த்து புள்ளைங்க அதது அண்ணன்,
தம்பி, அக்கா, தங்கச்சி, சோக்காளிகளோடு கலந்து கட்டி உக்காந்திருக்குங்க. அதுகள வகுப்பு
வாரியா சரி பண்ணதும், "ஒங்களுக்கு என்னென்ன பாடந் தெரியும் சொல்லுங்க?"
அப்பிடிங்கிறாரு. புள்ளைங்க ஒண்ணு, ரெண்டை ஆரம்பிச்சி நூறு வரைக்கும் கோரஸா சொல்லுதுங்க.
ஆனா, ஆவன்னான்னு ஆரம்பிச்சி அஃகேன்னா வரைக்கும் சொல்லி, க்கு, ங்குன்னு ஆரம்பிச்சி
ன்னு வரைக்கும் சொல்லுதுங்க. சொல்லிட்டு அணில், ஆடு, இலை, ஈன்னு ஒளடதம் வரைக்கும்
சொல்லுதுங்க. "அவ்வளவுதாம் வாத்தியாரே எங்களுக்குத் தெரிஞ்ச பாடம்!"ன்னு
உசரமான பையன் எழுந்திரிச்சிச் சொல்றான். ஒவ்வொரு புள்ளையா சோதிச்சுப் பார்த்தா ஒண்ணாப்பு
புள்ளைக்கும் அதுதாங் தெரியுது, அஞ்சாப்பு புள்ளைக்கும் அதுதாங் தெரியுது. இந்தப் பக்கமும்,
அந்தப் பக்கமும் இருக்குற கருப்பு வண்ணம் அடிச்சிருக்குற கரும்பலகையில பார்த்தா அதுதாங்
எழுதியிருக்கு. அதெ எழுதி எத்தனை நூற்றாண்டு ஆவுதோ! அப்பிடி இருக்கு அந்த எழுத்துங்க
பாக்குறதுக்கு மங்கலா.
"வேற ன்னா பாடம் நடத்திருக்காங்க?"
அப்பிடின்னு இப்போ ஒரு கேள்விய கேட்டு வைக்கிறாரு சுப்பு வாத்தியாரு.
"அதாங்க பெரிய வாத்தியாரு வந்தா இதெ
ஒரு தபா படிச்சுக் காட்டி எங்கள சொல்லச் சொல்லுவாங்க. பெறவு நாம்ம படிப்பேம். புள்ளைங்க
எல்லாம் சேர்ந்து சத்தமா சொல்லணும். பெறவு ஒவ்வொரு புள்ளையா படிக்கும். எல்லா புள்ளைங்களும்
சேர்ந்து சொல்லணும். பெறவு மணியடிச்சிடும். அவ்வளவுதாங் படிப்பேம்!" அப்பிடின்னு
சொல்றான் உசரமான பையன்.
"செரி! இந்தப் பாடம் கெடக்கட்டும்!
ஒரு பாட்டுப் பாடுவமா" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
" எயந்தப் பயம் பாட்டா வாத்தியார்ரே?"
அப்பிடிங்கிது அதுல ஒரு புள்ள எழுந்திரிச்சி.
சுப்பு வாத்தியாரு சிரிச்சிக்கிட்டே கையி,
கால ஆட்டி, முகத்துல ஒரு பாவனைய வரவழைச்சிக்கிட்டுப் பாட ஆரம்பிக்கிறாரு. புள்ளைங்களும்
அவரு பண்ற மாதிரியே பண்ணிக்கிட்டு அவரப் பின்தொடர்ந்து பாடுதுங்க.
"டம் டம் டம் டமாரமாம்" அப்பிடின்னு
கொஞ்சம் இழுத்தாப்புல பாடிட்டு "டமாரம் பெருமை அபாரமாமாம்!" அப்பிடின்னு
பாடி கைய ரெண்டையும் அகல விரிக்கிறாரு. புள்ளைங்களும் அப்படியே பாடி கைய அகல விரிக்குதுங்க.
"டும் டும் டும் மேளந்தான்!"
அப்பிடின்னு பாடி மோளம் அடிக்கிறாப்புல பாவனைக் காட்டிட்டு, "டும்மோடு சேரும்
தாளந்தான்!" அப்பிடின்னு பாடி தாளம் போடுறாப்புல பாவனைக் காட்டுறாரு. புள்ளைங்களும்
அப்படியே பண்ணுதுங்க.
"டிக் டிக் டிக் கடிகாரம்!"
அப்பிடின்னுப் பாடி கையில சொடுக்குப் போட்டுட்டு, "தினமும் காலையில் பலகாரம்!"
அப்பிடின்னுப் பாடி பலகாரம் திங்குறாப்புல பாவனைக் காட்டுறாரு. புள்ளைங்க அப்படியே
வாயில உச் கொட்டிக்கிட்டு அவரு பண்ற மாதிரியே பண்ணிட்டுப் பாடுதுங்க.
"சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயில்
வண்டி!" அப்பின்னு பாடி ரயிலு வண்டிச் சக்கரம் போறாப்புல கைகள மடக்கிக்கட்டு
இழுத்து இழுத்து ஆட்டி, "சீறிப் போவுது ரயில் வண்டி!" அப்பிடின்னு பாடிட்டு
"க்கூ க்கூ க்கூ!" அப்பிடின்னு வாயில கைய வெச்சிக்கிட்டுக் கூவுறாரு. பிள்ளைங்களுக்கு
இது பிடிச்சுப் போயி ஒவ்வொண்ணும் எழுந்து நின்னுகிட்டு ரயில் போற மாதிரியே பண்ணிக்கிட்டுப்
பாடுதுங்க. புள்ளைங்களுக்கு இந்தப் பாட்டைப் பாடுனதும் சுப்பு வாத்தியார்ர ரொம்பப்
பிடிச்சுப் போச்சுது. எல்லா புள்ளைங்களும் எழுந்திரிச்சி வந்து அவரோட மேசையைச் சுத்தி
நின்னுகிட்டு அவரோட கையை தொட்டுப் பார்க்குதுங்க. அவரோட வேட்டிச் சட்டைன்னு ஒண்ணு
விடாம தொட்டுப் பாக்குதுங்க.
"வாத்தியார்ரே! வாத்தியார்ரே! இன்னொரு
பாட்டு பாடுதீயளா?" அப்பிடின்னு கேட்குதுங்க.
"பாட்டு வேணுமா? கதெ வேணுமா?"
அப்பிடிங்றாரு சுப்பு வாத்தியாரு.
"கதெ! கதெதாம்!" அப்பிடின்னு
சத்தம் போடுதுங்க புள்ளைங்க.
"கதெ வேணும்ன்னா சத்தம் போடக் கூடாது!
எல்லாம் போயி எடத்துல உக்காருங்க. அப்பத்தாம் கதெ வரும்!" அப்பிடிங்கிறாரு. புள்ளைங்க
ஒவ்வொண்ணும் பதிவிசா அதது எடத்துல அவரு உக்கார வெச்ச எடத்துல உக்காந்துக்குதுங்க.
சுப்பு வாத்தியாரு கதெய ஆரம்பிக்கிறாரு.
"ஒரு ஊருல ஒரு வாத்தியாரு இருந்தாரு.
அவருக்கு ஒங்கள மாதிரி புள்ளைங்க." அப்பிடின்னதும் புள்ளைங்க கண்ண உருட்டிக்கிட்டு
கேட்குதுங்க.
"அந்த வாத்தியாரு எஞ்ஞ போனாலும்
நடந்துகிட்டே போனாரா, அதால வாத்தியாருக்கு ஒரு குதிரை வாங்கிக் கொடுக்கணும்னு புள்ளைங்களுக்கு
ஆசெ!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
"ஐ! குதுரயா?" அப்பிடின்னு புள்ளைங்க
வாயைப் பொளக்குதுங்க.
"ம்! குதிரைத்தாம். அப்போ குதிரை
எம்மாம் விலை தெரியுமா?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
புள்ளைங்க ஒவ்வொண்ணும் தெரியாதுங்ற மாதிரி
மூஞ்சை வெச்சுக்கிட்டு உக்காந்துக்குதுங்க.
"ஒரு குதிரையோட வெல நூறு காசி. புள்ளைங்ககிட்ட
ரெண்டு காசித்தாம் இருந்துச்சுங்க. அந்த ரெண்டு காசிய வெச்சுக்கிட்டு புள்ளைங்க குதிரை
யேவாரிக்கிட்டு போனுச்சுங்க! போனுச்சுங்களா? யேவாரி என்னச் சொன்னாம் தெரியுமா?"
ங்றாரு சுப்பு வாத்தியாரு.
"குதிரை இல்லன்னுட்டாம்!" அப்பிடிங்கிதுங்க
புள்ளைங்க.
"சரிதாம்! ரண்டு காசிக்லாம் குதுர
இல்ல அப்பிடின்னிட்டான். ஒடனே புள்ளைங்க ரண்டு காசிக்கு என்னதாம் தருவீங்க? அப்பிடின்னு
கேட்டதுக்கு அந்தப் புள்ளைங்கள பார்த்த யேவாரி இது சரியான முட்டாப்பய புள்ளைங்களா இருக்கும்னு
நெனைச்சுக்கிட்டு, ரெண்டு ரூவாய்க்கு குதிரை முட்டைத்தாம் கெடைக்கும்னுருக்கான்."ங்றாரு
சுப்பு வாத்தியாரு.
"குதுர முட்டப் போடாது வாத்தியார்ரே.
குட்டில்லா போடும்!" அப்பிடிங்குதுங்க புள்ளைங்க.
"அப்பிடின்னா அந்தப் புள்ளைங்க நீங்க
இல்லா. அது வேற புள்ளைங்க!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
"யில்ல யில்ல நாஞ்ஞதாம் அந்தப் புள்ளைங்க!"
அப்பிடிங்குதுங்க புள்ளைங்க.
"அப்டியா! செரி இருந்துட்டுப் போங்க!
நீஞ்ஞதாம் அந்தப் புள்ளைங்க!" அப்பிடின்னு சுப்பு வாத்தியாரு சொன்னதும், புள்ளைங்க
"ஹோய்"ன்னு ஒரு சத்தம் போடுதுங்க.
"இப்போ புள்ளைங்க என்ன பண்ணுனுச்சின்னா...
ரண்டு காசிக்குக் குதிரை முட்ட தாங்க!" அப்பிடின்னு கேட்டிச்சுங்க. இது ன்னாடா
வம்பாப் போச்சு! சரியான கிறுக்குப் பய புள்ளையோளா இருக்கும் போலருக்குன்னு யோஜனைப்
பண்ண குதிரை யேவாரி சுத்திலும் கண்ண சொழல விட்டு ஒரு பார்வைப் பாத்தாம் பாருங்க! அவங்
கண்ணுல கொஞ்சம் எட்டாப்புல இருந்த பூசணிக் காய்ங்க பட்டுச்சு. ஒடனே அவ்வேம் அந்தா
இருக்குப் பாருங்க குதிரை முட்ட அப்பிடின்னு சொல்லிப்புட்டு, நாந்தாம் அதுலேந்து குதிரைக்
குஞ்சு வந்தா ஓடிப் போயிடுமேன்னு அதெ கொடிங்களப் போட்டு கட்டி அடை வெச்சிருக்கேம்.
நீஞ்ஞ போயி ஒண்ண கொடியப் பிய்ச்சி பறிச்சுக்குங்க. கொஞ்ச நேரத்துல அதுலேந்து குதிரைக்
குஞ்சு வெளியில வந்துடும். வந்துச்சுன்னா வேகமா ஓடிப் போயிடும் பாத்துக்குங்க. கவனமா
பிடிச்சி வெச்சுக்குங்க. அது வளந்துச்சுன்னா குதிரையாயிடும் அப்பிடிங்கிறான். புள்ளைங்களும்
எட்டாப்புல ஆசையா ஓடிப் போயி இருக்குறதுலயே பெரிய பூசணிக் காயா பறிச்சிக்கிட்டு எல்லாஞ்
சேந்து தூக்கிட்டுப் போச்சுதுங்க. தூக்கிட்டுப் போறப்ப நான் தூக்குவேம், நீ தூக்குவேம்ன்னு
ஒண்ணுக்கு ஒண்ணுக்குப் போட்டி. இந்தப் போட்டியில கை மாத்தி கை மாத்தி தூக்கிட்டு
இருக்குறப்போ என்னாச்சுன்னா..." அப்பிடின்னு நிறுத்துனாரு சுப்பு வாத்தியாரு.
புள்ளைங்களும், "என்னாச்சு வாத்தியார்ரே?"
அப்பிடின்னு கேட்குதுங்க.
"என்னாச்சுன்னா... பூசணிக்காயி டமார்ன்னு
வுழுந்து படார்ன்னு ஒடைஞ்சிப் போச்சி!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
"யய்யய்யோ! ஒடைச்சுப் போச்சா? குதுர
குஞ்சு?" அப்பிடிங்குதுங்க புள்ளைங்க.
"டமார்ன்னு வுழுந்து படார்ன்னு விழுந்து
ஒடைஞ்ச சத்தத்துல பக்கத்துல இருந்த புதர்லேந்து ஒரு மொசக்குட்டி பயந்துப் போயி மெரண்டு
போயி பாஞ்சி ஓடிச்சிப் பாருங்க! அந்த மொசக்குட்டித்தாம் குதுர முட்டையிலேந்து வந்துருக்குற
குதிரைக் குஞ்சுன்னு நெனைச்சுக்கிட்டு புள்ளைங்க எல்லாம் அதெ தொரத்துதுங்க!"
அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
"யய்யய்யே! மொசக்குட்டி குதுர குஞ்சா?
பெறவு?" அப்பிடிக்குதுங்க புள்ளைங்க.
"மொசக்குட்டி ஓடுற வேகத்துக்கு,
அம்மாம் வேகத்துக்கு ஓடி அதெ தொரத்த முடியுமா? அம்மாம் வேகத்துக்கு ஓடுறேன்னு புள்ளைங்க
ஓடி மேல வுழுந்து, கீழே வுழுந்து புள்ளைங்க கையி கால ஒடைச்சுக்கிட்டு ஒடம்பெல்லாம்
ரத்தம் சொட்ட, வாத்தியார்ட்டப் போயி..." அப்பிடின்னு நிப்பாட்டுறாரு சுப்பு
வாத்தியாரு.
"வாத்தியார்ட்டப் போயி...?"
அப்பிடின்னு புள்ளைங்களும் கேள்விக் கேட்குறாப்புல நிப்பாட்டுதுங்க.
"யய்யோ வாத்தியார்ரே! ஒங்களுக்காக
குதிரை வாங்கணும்னு குதிரை முட்ட வாங்கியாந்தா... முட்ட ஒடைஞ்சு அதுலேந்து குதிரைக்
குஞ்சு வெளியாந்து, ஓடுன ஓட்டத்துல அதெ பிடிக்க முடியாம அதெ தொரத்தி ஓடி எங்களுக்குல்லாம்
இப்படி ஆயிப்புடிச்சி! யய்யோ வாத்தியாரே! ஒங்களுக்கு ஒரு குதிரைய கொண்டாராமலே போயிட்டோமோன்னு
அழுகாச்சியோட புள்ளைங்க சொன்னாக்கா..." அப்பிடின்னு நிறுத்துறாரு சுப்பு வாத்தியாரு.
"சொன்னாக்கா...?"ன்னு புள்ளைங்களும்
கேள்வியா கேட்டு நிறுத்துதுங்க.
"யேய் யப்பாடி! குஞ்சா இருக்குறப்பவே
அந்தக் குதிரை இப்டி ஓடி காயம் பண்ணுதுன்னா, அது பொல்லாத குதிரையா வளந்து அது மேல
ஏறி நாம்ம போனா நம்மள ன்னா காயம் பண்ணும்? நல்ல வேள அது ஓடிப்போச்சி. நமக்கு குதிரையும்
வேணாம். ஒண்ணும் வாணாம். இப்டியே இருந்துப்புடறேம் காயம் படாம! அப்பிடின்னிட்டாரு வாத்தியாரு."
அப்பிடின்னு கதையை நிறுத்துறாரு சுப்பு வாத்தியாரு. புள்ளைங்க எல்லாம் கைதட்டிச் சிரிக்குதுங்க.
அப்படியே "வாத்தியார்ரே! வாத்தியார்ரே! இன்னொரு கதெ!" அப்பிடிங்குதுங்க.
"இன்னொரு கதெயா? அது நாளைக்கி! இப்போ
பாடம்!" அப்பிடின்னு சொல்லிப்புட்டு சுப்பு வாத்தியாரு அஞ்சாப்பு புத்தகத்த ஒண்ணு
வாங்கி பாடத்தை நடத்த ஆரம்பிக்கிறாரு. பாட்டும், கதையும் கேட்ட ஒண்ணாப்பு புள்ளையிலேந்து
அஞ்சாப்பு புள்ளைங்க வரைக்கும் அவரு நடத்துற பாடத்தை கண்ணை உத்துப் பாத்துக்கிட்டுக்
கேட்க ஆரம்பிக்குதுங்க!
*****
No comments:
Post a Comment