22 Nov 2019

16.4



            முதன் முதலில் ஒரு வக்கீல் நோட்டீஸைப் பார்த்தால் எப்படி இருக்கும்? விகடுவின் வீடு அமளிதுமளிப் பட்டது.
            நட்புமுறையில் அழைத்த ஒருவர் நட்பு முறையில் அனுப்பிய நோட்டீஸ்.        நட்புக்காக தன்னையே தந்த மனிதர்கள் மத்தியில் நட்புக்காக நோட்டீஸ் தந்த மனிதர் மா.கா.பா.சோ.
            விகடுவின் தகப்பனார் சுப்பு வாத்தியாருக்கு பையன் சும்மா இருக்க முடியாமல் இப்படி விதியை வலியத் தேடிக் கொண்டு வருகிறானே என்ற வருத்தமும், கலக்கமும். அதை வெளிப்படையாக சொல்லியும் விட்டார், "ஒழுங்கா இருக்குறதுன்னா இரு!" என்ற ஒற்றை வாக்கியத்தில். என்ன இருந்தாலும் பெற்றெடுத்த மகனாயிற்றே! அதள பாதாள ஆபத்தில் சிக்கிக் கொண்டதாக நினைத்து அவர் ஆர்குடியில் பெரிய பெரிய ஆட்களை விசாரித்து வைத்துக் கொண்டு, விகடுவைக் கிளப்பிக் கொண்டு சந்திக்க வைக்கிறார்.
            சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் பாலிதீன் பை நிறைய பழங்கள் மற்றும் அரைகிலோ பால்கோவா, அரைகிலோ காராச்சேவு, ஒரு சால்வை சகிதம். அது பாலிதீன் பைகள் தடை செய்யப்படாத காலகட்டமாக இருந்ததால் எட்டணாவுக்கு ஒரு கடலை மிட்டாய் வாங்கினாலும் அதையும் பாலிதீன் பையில் போட்டுதான் தருகிறார்கள். தமிழ்நாட்டின் ஏக கலாச்சாரமாக அப்போது அது இருக்கிறது.
            சரி விசயத்துக்கு வந்து விடுவோம். அத்துடன் ஒரே மாதிரியாக டெம்ப்ளேட்டாக, "அண்ணே! நீங்கதாம் பார்த்து சரி பண்ணி விடணும்! நாம் பெத்த மவன் ச்சும்மா இருக்க முடியாம ஒண்ணு கெடக்கு பண்ணிட்டுத் திரிஞ்சுட்டு இருக்கான்! பாத்துப் பண்ணி விடணும் அண்ணே!" சுப்பு வாத்தியார் அண்ணே என்று அழைப்பவர் எப்படியும் தம்பி வயதிலுள்ளவராக இருக்கிறார். தம்பிகள் பெரிய மனிதர்களாகி விட்டால் அண்ணன்கள். தமிழ்நாட்டின் அரசியல் சந்தடி.
            ஆர்குடியைச் சுற்றி பெரிய மனிதர்களைச் சந்தித்தப் பிறகு, ஆர்குடி வக்கீல் பாலதண்டாயுதத்தைப் பார்க்காவிட்டால் எப்படி? ஆர்குடி முழுக்க சல்லடைப் போட்டு சலித்தும் அப்படி ஒரு வக்கீலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியானால் ஆர்குடி வக்கீல் பாலதண்டாயுதம் யார்? ஏலியனா? கற்பனையில் கண்டுபிடிக்கப்பட்டவரா? வதந்தியில் உலவுபவரா? இனிமேல்தான் பிறக்க இருப்பவரா?
            கடைசியில் சுப்பு வாத்தியார் சந்திக்க வைத்த அண்ணன்களில் (!) ஒருவர் சொல்கிறார், "பேசாம நீங்க மா.கா.பா.சோ.வயே பாத்துடுங்களேன். அவரு என்னா பண்ணச் சொல்றாரோ அப்படிப் பண்ணிட்டு சுமூகமாப் போயிடுங்களேன்!". இந்த யோசனைக்கும் ஒரு பாலிதீன் பை நிறைய பழங்கள், கால் கிலோ பால்கோவா, கால் கிலோ காரா சேவு சகிதம் ஒரு சால்வை போனதுதான் மிச்சம்.
            சுப்பு வாத்தியார் தன்னுடைய டி.வி.எஸ்.பிப்டியில் சீமந்திர புத்திரன் விகடுவைப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு மா.கா.பா.சோ. வீட்டை விசாரித்துக் கொண்டு அங்கே கொண்டு போயி நிறுத்துகிறார். ஆர்குடி கப்புக்காரத் தெருவில் நூற்று பதினேழாவது எண்ணுள்ள வீட்டில் குடியிருந்தார் மா.கா.பா.சோ. இவ்விடத்துத் தகவல்களை முன்னுக்குப் பின் சொல்வதற்காக வருந்த வேண்டியிருக்கிறது.
            மா.கா.பா.சோ.விற்கும் அதே பாலிதீன் பை நிறைய பழங்கள், கால் கிலோ பால்கோவா, கால் கிலோ காராச்சேவு அத்துடன் ஒரு சால்வையைத் தயார் பண்ணி வைத்திருக்கிறார் சுப்பு வாத்தியார்.
            வீட்டிற்கு முன் யாரும் உள் நுழைய முடியாத அளவுக்கு கன்றுக்குட்டி சைஸிற்கு ஒரு நாய் நின்று கொண்டிருக்கிறது. கடித்து எடுத்தால் கிலோ கணக்கில் சதை அதன் வாய்க்குள் போய் விடும் என்பதால் மா.கா.பா.சோ.வின் வீட்டிற்கு முன்னே பயந்து கொண்டே நிற்க வேண்டியதாகி விடுகிறது.
            அது பின்மதிய நேரம். கிட்டதட்ட சாயுங்காலத்தை நெருங்கும் நேரம். பால் பாக்கெட் போடுபவர் வந்து பாக்கெட்டை வீசி எறிகிறார். பெரிய நாய் பால் பாக்கெட்டை கவ்விக் கொண்டு வீட்டுக்குள் போன நேரத்தில் மிக சாமர்த்தியமாக விகடு கேட் ஏறிக் குதித்து அழைப்பு மணியை அழுத்தி விட்டுத் திரும்ப கேட் ஏறிக் குதித்து வெளியே வந்து நின்று கொள்கிறான்.
            அழைப்பு மணி ஓசையைக் கேட்டு எழுந்து கைலியைத் தன் தொந்தி வயிற்றைச் சுற்றி சுருட்டிக் கட்டிக் கொண்டு, ஓட்டை விழுந்த முண்டா பனியனை மறைக்கும் விதமாக ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு வெளியே வருகிறார் மா.கா.பா.சோ. அப்படியும் சில பனியன் ஓட்டைகள் மறைய மறுத்துக் கொண்டிருக்கின்றன.
            சுப்பு வாத்தியார் கேட்டைத் திறந்துதான் தாமதம் சால்வையைப் பாய்ந்து கொண்டு போர்த்துகிறார். அப்படிப் போர்த்தியதில் பனியனின் பெரும்பாலான ஓட்டைகள் மறைகின்றன.
            மா.கா.பா.சோ. முகத்தில் மில்லியன் வாட்ஸ் கணக்கில் புன்னகை. "வாங்க! வாங்க!" என்கிறார். அதற்குள் அவர் கைகளில் பழ, இனிப்பு, கார பாலிதீன் பையைத் திணிக்கிறார் சுப்பு வாத்தியார். விகடு நாயைப் போல தலையையோ, நாக்கையோ தொங்கப் போட்டுக் கொண்டு போகிறான். பெரிய மனிதர்கள் ஒன்று, வீட்டின் நாயை நாய் போல பழக்குகிறார்கள். அல்லது மனிதர்களை நாய் போல பழக்கி வைக்கிறார்கள். வீட்டின் முன் பெரிய நாய் இல்லாத குறையை விகடு நாய் போல நடந்து தீர்க்கிறான்.
            போர்ட்டிகோவில் சோபாக்கள் தயாரிக்கப்பட்ட காலத்தில் வாங்கப்பட்டிருந்த ரெண்டு சோபாக்கள் போடப்பட்டிருக்கின்றன. சுப்பு வாத்தியாருக்கும், விகடுவுக்கும் ஒரு சோபாவைக் கைகாட்டி விட்டு அவர் ஒரு சோபாவில் உட்கார்ந்து கொள்கிறார்.
            அந்தச் சூழலைக் கொஞ்சம் மெளனம் பிடித்து ஆட்டுகிறது.
            சுப்பு வாத்தியார் அந்த மெளனத்தில் சிதறு தேங்காயைப் போட்டு உடைக்கிறார். "பையன் கொஞ்சம் வெவரங்கெட்ட தனமா பேசிட்டதா சங்கதி. அண்ணே! நீங்கதாம் பெரிய மனசு பண்ணி..." என்று இழுக்கிறார். சுப்பு வாத்தியார் போல் நாட்டில் நான்கு பேர் இருந்த விட்டால் நாட்டில் அண்ணன்கள் கோடிக் கணக்கில் பெருகி விடுவார்கள்.
            "அப்டில்லாம் பேசக் கூடாதுங்க! நல்ல தெறமையா வர வேண்டிய பையன்! நான் இதெ அவங்கிட்ட எதிர்பார்க்கல. பேசுறப்ப என்னா ஒரு எகத்தாளங்றீங்க? நானா இருந்தபடிக்கு பொறுமையா கேட்டுட்டு வந்து நோட்டீஸை அனுப்புனேன். இதெ வேற யாராச்சிம் இருந்தா போலீஸைக் கொண்டாந்து வெச்சு ஸ்பாட் அரெஸ்ட்தான்!" என்கிறார் மா.கா.பா.சோ.
            "நீங்கதாம்..." என்று மறுபடியும் இழுக்கிறார் சுப்பு வாத்தியார். விகடு நாய் போல் நடந்து கொள்வதை நிறுத்தவில்லை.
            "வளர வேண்டிய பையன்!" என்கிறார் மா.கா.பா.சோ. விகடுவின் வளர்ச்சி நின்று போயி அவன் கிழக்கும் மேற்குமாக வளரத் தொடங்கிய காலகட்டத்தில் அவன் அப்படி ஒரு பேச்சைக் கேட்கிறான். கிழக்கும் மேற்குமாக என்றால் குண்டாக என்று பொருள்.
            பெரிய மனிதர் எவ்வளவு பதிவிசாகப் பேசுகிறார் என்பதைப் போல சுப்பு வாத்தியார் விகடுவைப் பார்த்து முறைத்துப் பார்க்கிறார். அதற்கு அர்த்தம் உடனடியாக மன்னிப்புக் கேள் என்று அர்த்தம்.
            விகடு உடனடியாக, "ஐயா! மன்னிக்கணும்!" என்கிறான்.
            மா.கா.பா.சோ. உடனடியாகப் பதறியவராக, "மன்னிப்புங்றது பெரிய வார்த்தை. பொறுத்துக்குங்க அப்பிடின்னு சொல்லணும்!" என்கிறார்.
            இந்த இடத்தில்தான் விகடுவுக்குள் ஒளிந்து கொண்டிருந்த கோபக்கார மனிதன் விழித்துக் கொண்டு விடுகிறான். "யோவ்! மன்னிப்புங்றது உருது சொல்யா! பொறுத்துக்குங்றது தூய தமிழ் சொல்யா! ரெண்டும் ஒண்ணுதாய்யா!" என்று பொங்கி விடுகிறான்.
            சுப்பு வாத்தியார் பதறி விடுகிறார். "அண்ணே! வெவரம் தெரியாத பையன் அண்ணே! வெவரம் தெரியாம பேசுறான். நீங்க சொல்றதுதான் சரிண்ணே!" என்கிறார்.
            "வளத்து விடலாம்ன்னு பாக்குறேன். வுட மாட்டேங்றானே!" என்று நமுட்டுச் சிரிப்புச் சிரிக்கிறார் மா.கா.பா.சோ.
            "ஏன்டா இப்படிப் பண்றே?" என்கிறார் சுப்பு வாத்தியார்.
            "நான் சொல்றதுதான் சரிப்பா!" என்கிறான் விகடு.
            "நீ சொல்றது தப்பு. அண்ணே சொல்றதுதாம் சரி! அண்ணே இப்போ என்ன பண்ணச் சொல்றாரோ அதெப் பண்ணு. எதிர்ப்பேச்சு பேசக் கூடாதுடா!" என்கிறார் சுப்பு வாத்தியார்.
            மா.கா.பா.சோ. எழுந்து உள்ளே போகிறார். ஒரு பரீட்சை அட்டையும், பேனாவும் எடுத்துக் கொண்டு வெளியே வருகிறார். 16.3.இல் நீங்கள் குற்றச்சாட்டுகளைப் பார்த்திருப்பீர்களே! அதையெல்லாம் வரிசையா இம்போஷிஷன் எழுத வைத்து எல்லாவற்றுக்கும் கீழே பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன், மீண்டும் இது போன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன் என்று எழுதி கையெழுத்துப் போடச் சொல்கிறார். விகடு கோழிக்கிறுக்கலாய் கையெழுத்தைப் போட்டுக் கொடுக்கிறான். அவன் கையெழுத்தை நீங்கள் பார்த்ததில்லையே! பார்க்காத வரைக்கும் நல்லது. அவன் எழுதி அவர் கையில் கொடுத்ததும், "நீயி! பெரிய ஆளா வரணும்டா! அதுக்குத்தாம் இதெல்லாம் பண்றேன்." என்கிறார் மா.கா.பா.சோ.
            விகடுவுக்கு அதை ஆமோதிப்பதா வேண்டாமா என்ற குழப்பமாக இருந்ததில் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. அவன் மண்டையிலிருந்து சரளமாக முடி உதிரும் 'முடி உதிர் காலம்' வேறு தொடங்கியிருந்ததால் சன்னமாக அதுவாக பிய்ந்து உதிர்ந்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான் விகடு.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...