செய்யு - 275
சுப்பு வாத்தியாருக்கு இதுக்கு இடையில
வாத்தியாரு வேலைக்கு ரெண்டு இண்டர்வியூ கார்டுகள் வருது. சந்தோசமாய்ப் போய்ப் பார்க்குறாரு. சங்கடமாய்த்
திரும்பி வர்றாரு. வேல கிடைச்சபாடில்ல. அவருக்கு வேலை கிடைக்குற மாதிரி இருந்த சந்தர்ப்பத்துல
அந்த கார்டு, நேரத்துக்கு அவரு கையில கிடைக்கல. இப்போ கார்டு நேரத்துக்குக் கிடைக்குற
நேரத்துல அவருக்கு வேலை கிடைக்கல. ஏம் இப்பிடி போயி வேலைக் கெடைக்கிலங்றதுக்குக் காரணம்,
ஒரு எடத்துக்கு வாத்தியாரைப் போடுறதுக்கு பத்து பேரு வரைக்கும் அழைச்சு இண்டர்வியூ
பண்ணுவாங்கங்ற சேதி அவருக்குப் பெறவுதான் தெரிய வருது. சேர்மேன்ங்க பணத்த வாங்கிட்டு
வேலைப் போடற காலத்துல பணத்தைக் கொடுத்து ஏமாந்தாச்சு, வேலை கெடைக்க வேண்டிய நேரத்துல
கையில கெடைக்க வேண்டிய கார்டு கெடைக்காம போயிடுச்சு, இப்போ கார்டு கெடைச்சி ஒவ்வொரு
தபாவும் வேலை கெடைக்கப் போயிடுச்சி, இந்த வேலையும் வேணாம், ஒண்ணும் வேணாம்ன்னு ஒரு
முடிவுக்கு வந்தவரு மரவேலையில தீவிரமா எறங்கறதுங்ற முடிவுல ஊரு ஊராய்ப் போயி வேலையப்
பிடிக்க ஆரம்பிச்சாரு.
வேலை பாக்குறதுக்கு கொடுக்குற கூலி கம்மியோ,
அதிகமோ அதையெல்லாம் பாக்குறதில்ல. வேலைய சட்டுபுட்டுன்னு முடிச்சுக் கொடுத்துட்டுப்
போயிடுவாரு சுப்பு வாத்தியாரு. அதால வேலைய சிக்கனமா முடிக்கணுமா, கூப்புடு சுப்புவன்னு
சுத்து வட்டத்துல பேரா ஆயிப் போயிடுச்சி. வேலை பாக்குற அன்னன்னைக்கு கூலியைக் கொடுக்கணுங்குறதுலயும்
பிடிவாதமா நிக்க மாட்டாரு சுப்பு வாத்தியாரு. கொடுத்தா வாங்கிப்பாரு, இல்லைன்னா பிறவு
பாத்துக்கலாம்னு போயிட்டே இருப்பாரு. அதால சுப்பு வாத்தியார்ர வெச்சித்தாம் வேலயப்
பாக்கணுங்றதுக்கு அதுவும் ஒரு காரணமா போயிடுச்சி. அப்படி ஊருல அவருக்கு வர வேண்டி
அங்கங்க நின்னுகிட்டு இருக்குற ரூவாயே ஆயிரத்த தாண்டிடிச்சு.
சுப்பு வாத்தியாரால ஒரு ரெண்டு நிமிஷத்துக்குச்
சும்மா இருக்க முடியாது. சதா அவரோட கைகளுக்கு எதையாவது செஞ்சுகிட்டே இருக்கணும். பகல்
முழுக்க வேலையப் பாத்துட்டு ராப்பொழுது வூட்டக்கு வந்தா சும்மா இருக்க மாட்டாரு. கொஞ்சம்
கைக்காசப் போட்டு பலகை, சட்டத்தை வாங்கிப் போட்டுகிட்டு பீரோவக் கோத்துப் போடுற
வேலைய செஞ்சுகிட்டு இருப்பாரு சுப்பு வாத்தியாரு. அப்படி நாலைஞ்சு பீரோக்கள் விருத்தியூரு
வூட்டுல திண்ணையில எந்நேரத்துக்கும் நின்னுகிட்டு இருக்கும். விருத்தியூரு செயராமு
ஆச்சாரி தம்பி சுப்புவ பிடிச்சா எத்தனை பீரோ வேணாலும் வாங்கிக்கலாம்னு அது வேற ஊருக்குள்ள
பேச்சாப் போயி அதுல வேற யேவாரம் நல்ல சூடு பிடிக்குது.
காசு நல்லா பொழங்க ஆரம்பிக்குது அவரு
கையில. என்னதாம் காசு பொழங்குனாலும் அதெ பெரிசா சேர்த்து வைக்கணுங்ற எண்ணம் அவருக்கு
இல்லாம போச்சுது. கொஞ்சம் காசு சேர்ந்தா கோவில்பெருமாளுக்குப் போறதையும், வேலங்குடிக்குப்
போறதையும் வழக்கமா வெச்சிருந்தாரு. கோவில்பெருமாளுக்குப் போனா ரெண்டு நாளோ, மூணு
நாளோ தங்கிக்கிட்டு கிளம்புறப்ப அம்பதோ, நூறோ கொடுத்துட்டுதாம் கெளம்புவாரு. மச்சங்காரரான
நாது மாமாவுக்கு அது ரொம்ப சந்தோஷமா இருக்கும். "எனக்குன்னா மச்சாம் தனியாத்தாம்
செய்யும்! மித்தவங்களுக்குச் செய்யுறத வுட ஒரு காசு கூடத்தாம் செய்யும்!" அப்பிடின்னு
சொல்லிட்டே இருப்பாரு நாது மாமா.
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஓராவது
வருஷத்துல அவரு கைக்கு ஒரு வேலைன்னு சொல்லிட்டு ஒரு இண்டர்வியூ கார்டு வருது. வேலைய
நல்லா பிடிச்சிட்டதாலயும், வருமானம் நல்லா வரதாலயும் சுப்பு வாத்தியாருக்கு இண்டர்வியூவுக்குப்
போயி என்னா ஆவப் போவுது?ங்ற கேள்வி உண்டாயிடுச்சு. வேலை கெடைச்சாத்தாம் உண்டு, இல்லைன்னாலும்
இல்லைதான். இண்டர்வியூவுக்குப் போயி வேலை இல்லைன்னு ஆச்சுன்னா ஒரு நாளு வேலைத்தாம்
கெட்டுப் போவும்னு நெனைச்சுக்கிட்டு இண்டர்வியூ கார்டைப் பார்க்காமலே அவரு பாட்டுக்குத்
தூக்கி அவரு செஞ்சு வைச்சா ஒரு பீரோல்ல வெச்சி சாத்திட்டாரு.
சுப்பு வாத்தியாருக்குப் பாடஞ் சொல்லிக்
கொடுத்தார்ல கண்ட்ரமாணிக்கம் விகடபிரசண்டரு வாத்தியாரு. அவருக்கு ஒரு பொண்ணும், ஒரு
பையனும். அவரு பொண்ணுக்குக் கலியாணம் வெச்சிருக்காரு. அவரு முதலியாரு வகையறா. அவரு
வகையறாவுல கலியாணத்த பிரமாதம் பண்ணி பொண்ணுக்கு நெறைய செஞ்சுத்தாம் அனுப்புவாங்க.
பொண்ணு கலியாணத்துக்கு நகை, நட்டு, சீரு சனத்தியோட ஒரு நல்ல பீரோவா செய்யச் சொல்லி
கொடுக்கணும்னு அவருக்கு ஆசெ. யாருகிட்டயோ வேலையக் கொடுக்கறத விட படிச்சுப்புட்டு
வேலையில்லாம கெடக்குற நம்மகிட்ட படிச்சப் பயலான்னா சுப்புவுக்குக் கொடுத்தா அவனுக்கு
ஒரு பொழைப்பாகும்முன்னே அவரு விருத்தியூர்ல சுப்பு வாத்தியாரத் தேடிகிட்டு சைக்கிள்ல
வந்து எறங்குறாரு. அவரோட இந்த நினைப்பால ஏற்கனவே அவர் வூட்டு மரவேலைகள் எல்லாத்தையும்
பாத்துக் கொடுத்தது சுப்பு வாத்தியாரும், அவரோட அண்ணங்காரரான செயராமு ஆச்சாரியும்தாம்.
அவரு வந்து எறங்குன நேரத்துல திண்ணை முழுக்க
பீரோவா ஏழு பீரோ நின்னுருக்கு. இது என்னடா பீரோ செய்யச் சொல்லணும்னு பார்த்தா திண்ணை
முழுக்க பீரோவா நிக்குதுன்னே அவருக்கு ஆச்சரியமா போயிடுச்சி. அவரு மனசுக்குள்ள இது
ஒரு நல்ல சகுனமா பட்டிருக்கு. ஆரம்பமே அசத்தலாயிருக்கேன்னு ஒவ்வொரு பீரோவா பார்க்க
ஆரம்பிச்சாரு. சுப்பு வாத்தியாருக்கு தனக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்து, வாத்தியாரு
வேலைக்குப் படிக்கிறதுக்கு ஒத்தாசைப் பண்ண வாத்தியார்ர பார்த்ததுல சந்தோஷம் தாங்கல.
ஒவ்வொரு பீரோவா தொறந்துக் காட்டி ஒவ்வொண்ணுலயும் அவரு செஞ்சிருக்கற வேலைப்பாடுகள
விளக்கிச் சொல்றாரு. அப்படி ஒரு பீரோவ தொறந்துக் காட்டி விளக்கம் சொல்லிட்டு இருக்குறப்பத்தாம்
அந்த பீரோக்குள்ள வெச்ச இண்டர்வியூ கார்டு விகடபிரசண்டரு வாத்தியாரு கண்ணுல படுது.
"இது என்னடாப்பா முக்கியமான காயிதத்த
விக்கப் போற பீரோக்குள்ள வெச்சிருக்கே? பீரோவ வாங்க வந்தவேம் அதயும் எடுத்துட்டுப்
போனா ன்னா பண்ணுவே? ஏதாச்சிம் முக்கியமான சங்கதியா இருந்து தொலையப் போவுது?"
அப்பிடிங்கிறாரு விகடபிரசண்டரு.
"இண்டர்வியூ கார்டு வந்திருக்குங்கய்யா!
அதாங்!" அப்பிடின்னிருக்காரு சுப்பு வாத்தியாரு அலட்சியமாய். அவரு அப்படி அலட்சியமாய்ச்
சொன்னதைக் கேட்ட விகடபிரசண்டரு வாத்தியாருக்குத் தூக்கி வாரிப் போடுது. "அதெ
என்னடாப்பா இம்மாம் அலட்சியமா சொல்றே? என்னிக்கு அது? எப்போ கெளம்பணும் யப்பாடா?"ங்றாரு
விகடபிரசண்டரு.
"அதெ யாருங்கய்யா பார்த்தா? ரெண்டு
நாளுக்கு மின்னாடியோ என்னவோ வந்திடுச்சி. அப்படியே தூக்கி... அப்போ இந்த பீரோவத்தாம்
வேல செஞ்சிட்டு முடிக்கிற தறுவாய்ல இருந்தேம். தூக்கி அதுல போட்டுட்டேம்!" அப்பிடிங்கிறாரு
சுப்பு வாத்தியாரு.
விகடபிரண்டரு வாத்தியாரு அந்தக் காயிதத்த
எடுத்து என்னிக்கு இண்டர்வியூன்னு பாக்குறாரு. பாத்துட்டு, "யேயப்பா! யப்பாடா!
நாளாநாளிக்குல்லா போட்டு அனுப்பிருக்காம். நல்லதாப் போச்சுது நாம்ம வந்தது. நீயி
அன்னிக்குப் போயி பாத்துட்டு வாடா யப்பாடா!" அப்பிடிங்கிறாரு.
"அதுக்குப் போனா வேலையா கெடைக்குதுங்கய்யா?
ஒரு நாளு பொழைப்புத்தாம் போவுது. எனக்கென்னமோ பிடிக்கலைங்கய்யா! இப்டியே வேலைய செஞ்சுட்டு
இருந்திடலாம்னு நெனைக்கிறேம்!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
"இந்தாருப்பா! ஒரு நாளு பொழைப்புன்னு
பாக்காதே. கவருமெண்டு உத்தியோகடா யப்பாடா! காக்காசுன்னாலும் அது காசு. கெடைச்சுதுன்னா
அதாங் பொழைப்பு புரிஞ்சிக்கோ. நீயி யாருக்காவவும் போவ வாணாம்டா யப்பாடா! நமக்காக
போயிப் பாருப்பா யப்பாடா! இதாங் ஒனக்குக் கடைசி. இதுல கெடைக்கலன்னா பெறவு நீயி எதுக்குப்
போவ வேணாம். இந்தா இதெ வெச்சிக்க!" அப்பிடின்னு சொல்லி பையில இருவரு ரூபாய்
நோட்ட திணிக்கிறாரு விகடபிரசண்டரு.
"காசில்லாம் இருக்குங்கய்யா!"
அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
"அது இருக்கட்டும். இதெ பீரோலுக்கு
முன்பணமா வெச்சிக்க. வேலைக்கு வரச் சொல்லிக் கடுதாசிப் போட்டத்துக்குப் பெறவு போவாம
இருக்கக் கூடாதுப்பா யப்பாடா! ன்னா ஏதுன்னாவாது பாத்துப்புட்டு வந்துடணும்!"அப்பிடின்னு
கெளப்பி விடுறதுல்ல குறியா நின்னு விகடபிரசண்டரு சுப்பு வாத்தியார்ர கெளப்பி விட்டாரு.
இண்டர்வியூவுக்குன்னு தஞ்சாவூரு கெளம்புன
சுப்பு வாத்தியாரு நம்பிக்கையில்லாமத்தாம் கெளம்புறாரு. விருத்தியூர்லேந்து கும்பகோணம்
போயி அங்கேயிருந்து பஸ்ஸ பிடிச்சி தஞ்சாவூரு போனவரு இண்டர்வியூவுக்குல் போவணும்.
ஆனா நேரா இண்டர்வியூக்குப் போவாம தியேட்டர்ல போயி 'இன்று போய் நாளை வா'ங்ற படத்த
பாத்திருக்காரு. படத்தப் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சுப்புட்டு அந்தச் சிரிப்போடயே
அழிச்சாட்டியமா மொல்லமா இண்டர்வியூவுக்குப் போயிருக்காரு. அதுக்குள்ள இவர்ர நாலைஞ்சு
தடவ கலெக்டர் ஆபீஸ்ல இவர்ர வந்திருக்காரா இல்லையான்னு தேடிப் பாத்திருக்காங்க. இவரு
பாட்டுக்கு தாமசமா தமாசா இவரு போக்குக்குப் போயி நின்னவர்ர கலெக்டரு முன்னாடி கொண்டு
போயி நிறுத்தியிருக்காங்க. கலெக்டரு தமிழு தெரியாத ஆளு. ஒரிஸ்ஸாகாரரு. அவரு பேசுறத
பக்கத்துல நிக்குற தமிழு ஆளுதாம் வாங்கி தமிழ்ல சொல்றாரு.
அதுல கலெக்டரு கேட்ட மொத கேள்வியே, படிச்சு
முடிச்சு இம்மாம் வருஷமாயிருக்கே அதுவரைக்கும் என்ன பண்ணேங்றதுதானாம். சுப்பு வாத்தியாரு
மரவேலை செஞ்சுகிட்டுக் கெடந்ததைச் சொல்லியிருக்காரு. அதைக் கேட்டதும் கலெக்டரு அப்போ
ஒனக்கு பாடமெல்லாம் மறந்து போயிருக்குமேன்னு கேட்டிருக்கிறாரு. அதெல்லாம் எதுவும்
மறக்கல எது வேணாலும் கேளுங்க? நாம் படிச்சப் புத்தகத்துல அதெ எத்தனாவது பக்கத்துல படிச்சேங்ற
நம்பரு வரைக்கும் சரியாச் சொல்றேம்ன்னு தெனாவெட்டா பதிலச் சொல்லிருக்காரு. கலெக்டரு
ஏதோ அன்னிக்கு நல்ல மூடுல இருந்திருப்பாரு போல. இவரோட துடுக்குத்தனமான பதிலப் பாத்துட்டு
பாடத்திலேந்தெல்லாம் எந்தக் கேள்வியும் கேட்காம அப்பா, அம்மா, குடும்பத்த பத்தியெல்லாம்
கேட்டிருக்கிறாரு. இவரோட குடும்பக் கதைதாம் சோகக் கதையாச்சே. கையில நாலு கர்ச்சீப்ப
வெச்சிகிட்டுக் கேட்டாலும் நாலும் நனைஞ்சு அதெப் பிழிஞ்சா நாலு லிட்டரு தண்ணில்ல ஊத்தும்.
கலெக்டரு அதெ கேட்டு என்ன நெனைச்சாரோ, ஏது நெனைச்சாரோ வேலையப் போட்டுக் கொடுத்திட்டாரு.
*****
No comments:
Post a Comment