21 Nov 2019

16.3



            இரண்டாவது அகல் கூட்டம் முடிந்து சரியாக அந்த ஏழாவது நாள் விகடுவின் பெயருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது.
            மா.கா.பா.சோமசுந்தரமூர்த்தி சார்பாக ஆர்குடியிலிருந்து வக்கீல் பாலதண்டாயுதம் அனுப்பியிருந்தார்.
அந்த நோட்டீஸின் விவரங்கள் அப்படியே :
            அனுமதியின்றி கூட்டம் நடத்தும் ருதுவிற்கான விளக்கம் கேட்கும் செயல்முறைகள் :
மணமங்கலம் - வடவாதி - அனுமதியின்றி கூட்டம் நடத்துதல் செயல்முறைகள் - ஒழுங்கு மற்றும் சமூக அமைதிக்கான குந்தகம் விளைவித்தல் மேல்முறையீடு - கீழ் நடவடிக்கைகள் - சார்பு
சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியின் நேரடிப் பார்வை
ஆரூர் மாவட்டம், ஆர்குடி வட்டாரம், மணமங்கலம் திரு இந்திரஜித் குமாரர் வில்சன் என்பாரின் நடுக்கூடத்தில் கடந்த 07.01.2012 - ல் அமைதியான இரவு நேரத்தில் மக்களின் மத்தியில் அகல் கூட்டவாதிகள் என்னும் பெயரில் நிகழ்த்தப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பாக நேரடி சாட்சியம் அடிப்படையிலான சமூக அமைதிக்கான குந்தகம் விளைவித்தல் மேல்முறையீடு விதிகளின் கீழ் விளக்கமளிக்கக் கோரப்படுகிறார்.
குற்றச்சாட்டுகள்
1) 07.01.2012 அன்று தாங்கள் கூட்டத்தை சமூக அமைதிக்கு எவ்வித குந்தகமும் இல்லாமல் நீங்கள் நடத்தியதாகக் கருதினால் அக்கூட்டத்தில் நீங்கள் கலந்து கொண்டீர்களா? இல்லையா?
2) கூட்டவாதிகள் பார்த்திருக்க தலைவர் முன்னிலையில் சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நிகழக் கூடாத சம்பவம் நிகழ்த்தப்பட்டது தங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?
3) தெரியும் எனில் தெரிந்தே ஏன் சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவித்தீர்கள்?
4) தெரியாது எனில் ஒன்றுமே தெரியாத தாங்கள் ஏன் கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டீர்கள்?
5) கூட்டவாதிகள் கூடிக் கொண்ட போது நீங்கள் நடுக்கூடத்தை விட்டு எங்கு சென்றீர்கள்? ஏன் சென்றீர்கள்?
6) சமூகத்தின் அங்கமாக இருந்து வரும் தாங்கள் அகல் இலக்கியக் கூட்டத்தை நடத்துவதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளீர்களா?
7) அன்றைய கூட்டத்தில் நட்பு எனும் தலைப்பில் பேசி நட்பை விமர்சனம் செய்து கொச்சைப்படுத்தியதற்குக் காரணம் என்ன?
            மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு ஏழு தினங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கு எதிரான விதிகளின் அடிப்படையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்காமல் இருந்தாலோ அல்லது மூன்றாம் நபர்கள் கொண்டு வாதிக்கு மிரட்டல்கள் விடுத்தாலோ உரிய சமூக - குந்தக - எதிர் விதிகளை மீறியதாகக் கருதி உரிய மேல்நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கலாகிறது. உரிய ஏழு நாட்களுக்குள் விளக்கம் வராத பட்சத்தில் வழக்குத் தொடரப்படும் என எச்சரிக்கலாகிறது.
                                                                                                            (ஓ-ம்)
பெறுநர்
            திரு விகடபாரதி அகல் ஒருங்கிணைப்பாளர்,
            அகல் - ஒருங்கிணைப்பாளர்,
            கம்மரசம் தெரு,
            திட்டை,
            வடவாதி அஞ்சல்.
            எல்லாம் ஏழு - ஏழு - ஏழு - ஏழு - ஏழு என்பதை இருப்பதைக் கவனித்தீர்களா? ஏழேழ் ஜென்மத்துக்கு மறக்க முடியாத நோட்டீஸ் என்று சொன்னால் அதுவும் ஏழு என்று அமைவதைக் கவனிக்கிறீர்களா?
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...