20 Nov 2019

மூக்குல குத்துன காப்புத்தடை!



செய்யு - 274
            இப்படியா அப்படியான்னு வருஷங்கள் ஓடிட்டு இருக்கு. வருஷங்கள் ஓட ஓட மனுஷரோட மனசுல மாத்தங்கள் உண்டாகுது. யாரு எவ்வளவு நல்ல விதமா எடுத்துச் சொன்னாலும் வராத மாத்தங்கள் எல்லாம் வருஷங்கள் உருண்டோடுறப்ப தானா வந்துடுது. அதுக்குள்ள எவ்வளவோ விசயங்கள் நடந்துப் போயிடுது. ஒரு துன்பத்தையும், துயரத்தையும் ஒண்ணா இருந்த ஒருத்தருக்கொருத்தரு ஆறுதலா இருந்து எதிர்கொள்றது எப்படி? ஒருத்தருக்கொருத்தரு பிரிஞ்சிப் போயி தர்மசங்கடமா எதிர்கொள்றது எப்படி? ரெண்டுக்கும் பெரிய அளவுல வித்தியாசம் இருக்குல்ல.
            வேலங்குடிப் பெரியவருக்கு ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவையாவது வந்துப் போற சுப்பு வாத்தியாரோட நெனைப்பு வந்துப் போவுது. பொசுக்கு பொசுக்குன்னு வந்துட்டுப் போற புள்ள இந்தப் பக்கமே அடியெடுத்து வைக்கலையேங்ற நெனைப்பு அவரோட மனச உறுத்துது. தங்காச்சியோட கலியாணத்துக்கு வந்துப் போகலன்னு மனசுல தம் மேல ஒரு கொறை இருந்தாலும் அக்காகாரியான அதையாவது வந்துப் பாத்துட்டுப் போவலாமேன்னு ஒரு நெனைப்பு சுப்பு வாத்தியாருக்கு வரலையேங்குற நெனைப்பு அவருக்கு வந்துப் போவுது. ஏதோ குடும்பத்துல ஒண்ணு கெடக்க ஒண்ணு நடந்துப் போனதாலத்தாம் அது வரலையோன்னு அப்படியும் இன்னொரு நெனைப்பு அவருக்கு ஓடுது. நெனைப்பு இப்படியும் அப்படியும் ஓடுனதுல ஒரு எட்டு விருத்தியூருக்குப் போயி பாத்துட்டுத்தாம் வந்தா என்னாங்குற முடிவுக்கு வராரு அவரு.
            அங்க இருக்குறது யாரு? அவரோட தங்காச்சி பத்மா பெரிம்மாத்தான்னே. அதோட முகமும் அவரோட நெனைப்புல வந்துப் போவுது. தூக்கத்துல அது கனவுல வந்து, என்னாண்ணே ஒரு எட்டு வந்து பாக்க மாட்டேங்றீயே?ன்னு அது கேட்குற மாதிரியே கனவு காணுறாரு. அத்தோட அவரோட மூத்தப் பொண்ணு வயசுக்கு வந்து பத்தாப்பு முடிச்சு, அது பள்ளியோடத்துலயே மொதலாவதா வந்து அத்தோட படிப்ப முடிச்ச சங்கதியும் அவருக்குள்ள ஓடுது. அது பத்தியும் பேசி ஒரு முடிவுக்கு வரணும்னு அவரு கெளம்பி விருத்தியூருக்குப் போறாரு.
            வழக்கமா அவரு விருத்தியூருக்குக் கெளம்பிப் போற அதே மொறையிலத்தாம் இப்பவும் போறாரு. திருவாரூ வரைக்கும் நடந்தவரு, அங்க சிவராமராவு கடையில காலு கிலோ அல்வாவ வாங்கிச் சாப்புட்டுப்புட்டு, பக்கத்துக் கடையில வெள்ளைச் சிகரெட்டை ஒரு ஊதி ஊதிப்புட்டு, போற வழியில ஊத ஒரு சிகரெட்டையும் வாங்கிக்கிட்டு, விருத்தியூருக்குக் கொஞ்சம் பலவாரத்தையும், பூவையும் வாங்கிக்கிட்டு, பஸ் ஸ்டேண்டு கடையில ஒரு பேப்பரை வாங்கிக் கொஞ்ச நேரத்துக்கு நாலு பேரு பார்க்குறாப்புல படிக்குற மாதிரி படத்தைப் பாத்துப்புட்டு, அதெ கக்கத்துல மடிச்சு வெச்சுக்கிட்டு போட்டுருக்குற வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையும், கையில கைக்கடியாரமாவும் திருவாரூர்லேந்து நடையைக் கட்டி புதுக்குடி வழியா உள்ளார புகுந்து சேங்காலிபுரத்துக்க வந்து அங்கேயிருந்து விருத்தியூருக்குப் போறாரு.
            அங்க விருத்தியூருக்குப் போனா நாகு அத்தைக்கு ரெண்டு கொழந்தைங்க பொறந்து ரெண்டும் இறந்துப் போன சங்கதியெல்லாம் தெரிய வர வேலங்குடி பெரியவருக்கு  அப்படியே தூக்கி வாரிப் போடுது."நாம்மதாம் அந்த எடம் வேணாம்னு சொன்னேம். கேக்காம மீறிட்டுப் போயி பண்ணிட்டு, இப்போ மாப்ளகாரனும் சரியில்ல. பொறக்குற கொழந்தையும் நிலைக்கல. ஆனது ஆயிப் போச்சி. இனி யாரு என்ன பண்றது? போனது போவட்டும்! நாம்ம ஒட்டும் இல்ல, ஒறவும் இல்லன்னு ஒதுங்கியிருந்ததுல இவ்வளவு ஆயிப் போயிடுச்சே!"ன்னு ஒடனே அங்கேயிருந்து மொத முறையா நேஷனலு பஸ்ஸப் புடிச்சி குடவாசலு வழியா கும்பகோணத்துக்கு வந்து, மறுக்கா அங்கேயிருந்து பஸ்ஸப் பிடிச்சு கோவில்பெருமாளுக்கு வந்து இறங்கிட்டாரு. அவரு பஸ்ஸூ பிடிச்சி ஊரு போன மொத பயணம் அது. அந்தச் சேதிகள கேட்டதுக்குப் பெறவு அவரால நடந்து வர்ற அளவுக்கு மனசுல தெம்பு இல்லாமப் போயிடுச்சு. அதால அவரு பஸ்ஸப் பிடிச்சே வந்துட்டாரு.
            அங்க அத்தாங்காரர பார்த்ததும் நாகு அத்தை, "யாரும் இல்லாத அனாதியா போயிட்டேன்னே அத்தாம்! யாரு வந்து பாக்காட்டியும் நீஞ்ஞலாவது ஒரு எட்டு வந்துப் பாத்துட்டுப் போவப்புடாதா? நாம்ம அஞ்ஞ வேலங்குடி வந்து ஒங்கள பாக்குற நெலமையிலயா இருக்கோம்? ரெண்டு சாவு காரியம் ஆயிப் போயிடுச்சி அத்தாம்! யண்ணன் மட்டும் இல்லன்னா இந்நேரத்துக்கு இந்தக் குடும்பம் இல்லத்தாம்! நாமளும் புள்ளைங்க போயிச் சேந்ததோட போயிச் சேந்திருப்பேம்! இஞ்ஞ வந்து யண்ணன் கெடந்ததுல அதுக்குக் கெடைக்க வேண்டிய வேலயும் கெடைக்காம போயிடுச்சி. நம்ம குடும்பத்துக்கு மூத்த மருமவ்வேம் நீஞ்ஞ. ஒங்க மனசுலயும் ஈரம் இல்லாம போயிடுச்சே!"ன்னு கதறி அழுவுது. பெரியவருக்கு மனசு ஒரு மாதிரியாத்தாம் போயிடுச்சி. தம் மேலயே அவருக்கு ஒரு கோபம் வந்துப் போவுது. ஆனா நடந்துப் போனதுக்கு என்னா பண்றது?
            அவரு வந்து பார்த்த அந்த நேரத்துல நாகு அத்தை அஞ்சு மாசக் குழந்தைய வயித்துல சுமந்துட்டு இருக்கு. அந்தச் சேதிய தெரிஞ்சிக்கிட்டவரு, "வயித்துப்புள்ளக்காரி கதறி அழுவக் கூடாது. அது கொழந்தைக்கு நல்லதில்ல. யாரு மேல குத்தம் இருந்தாலும் சரித்தாம். அதெப் பேச இப்போ நேரமில்ல. நீயி கெளம்பு. ஒன்னய வேலங்குடிக்குக் கொண்டு போயி நல்ல வெதமா கொழந்தையை பொறக்க வெச்சி கொழந்தைய நல்ல வெதமா வளக்க ‍வெச்சித்தாம் ஒன்னய இஞ்ஞ கொண்டாந்து விடுவேம்!"ன்னு கண்டிஷனா பேச ஆரம்பிச்சிட்டாரு.
            வேலங்குடி பெரியவரு வந்த சேதிய நாகு அத்தை அங்க வெளையாடிட்ட இருந்த கொழந்தைக்கிட்ட சொல்லி விட்டு, அந்தக் கொழந்தை ஓடிப் போயி சுப்பு வாத்தியா‍ரு வேலை செய்யுற எடத்துல சொல்ல, அவரு அங்க இங்க இலைக்கொட்டாய்கள்ல தேடிப் பார்த்து அங்க போதையில சுருண்டு கெடக்குற நாது மாமாவையும் கூப்புட்டுகிட்டு வந்து சேருறாரு. அவரு வந்துப் பார்த்ததும், வேலங்குடி பெரியவரு, "என்ன யம்பீ நீஞ்ஞ? நீஞ்ஞலாவது ஒரு எட்டு வந்து விசயத்த இத்து இத்துன்னு சொல்லிட்டுப் போவப்படாதா? இம்மாம் நடந்திருக்கே! அப்டியே கல்லு கணக்கா கெடந்திருக்கீங்களே! யாரு செஞ்ச பாவமோ? நம்ம குடும்பம் இப்பிடிக் கெடக்கணும்னு எழுதியிருந்திருக்கு. இனுமே அப்படிக் கெடக்கணும்னு இல்ல. நாம்ம நாகுவ அழைச்சிட்டு வேலங்குடிக்குப் போறேம். அதாஞ் சரி. அஞ்ஞ வெச்சுப் பாத்தாத்தாம் சரிப்படும்!" அப்பிடிங்கிறாரு. சுப்பு வாத்தியாருக்கும், நாது மாமாவுக்கும் என்ன சொல்றதுன்னே தெரியல. அன்னைக்கு ராத்திரி பெரியவர்ர தங்க வெச்சி நல்ல விதமா ராத்திரியில சாப்பாட பண்ணி விட்டு மறுநாளு காலையில எல்லாருமா கெளம்பி வூட்டைப் பூட்டப் போட்டுட்டு வேலங்குடிக்குப் போறாங்க.
            வேலங்குடி பெரியவருக்கு மாட்டுலேந்து மனுஷன் வரைக்கும் கொழந்தை குட்டிப் பொறந்தா அதெ எப்படிப் பார்த்து என்னென்ன செய்யணுங்றதெல்லாம் அத்துப்படி. அதுபடி அவரு நல்ல விதமா நாகு அத்தையை வெச்சிப் பாத்துகிட்டாரு. செயா அத்தையும் நல்ல தொணையா இருந்து பாத்துகிடுச்சி. வேலங்குடி சின்னவரு வேலைக்குப் போன பிறபாடு ரசா அத்தையும் வந்து பாத்துக்கிடுச்சு. அங்க செயா அத்தை, ரசா அத்தைங்களோட பிள்ளைகள்னு அதுகளப் பாக்குறப்போ நாகு அத்தைக்கு மனசுல ஒரு நம்பிக்கை உண்டாச்சி. நாகு அத்தை பெரியவரு வூட்டுக்கு வந்து ரொம்ப நாளு ஆகியும், சின்னவரு பெரியவரோட வூட்டுல வந்து நாகு அத்தைய பார்க்கல. அது கொல்லைப் பக்கம் எப்பயாவது வந்து நிக்குறப்போ இவரு கொல்லப் பக்கம் வந்தாக்க, "யாந் தங்காச்சி!"ன்னு ஒரு கொரல கொடுத்து வேலிக்கு அந்தாண்ட பக்கம் நின்னு பேசுறதோட சரி. அந்த அளவுக்கு அண்ணங்காரரு மேல கோவப்பட்டுகிட்டு ரோஷமா இருக்குறதா அவரு நடந்துகிட்டாரு.
            அப்பப்போ கொடுக்க வேண்டிய பச்சிலை மருந்துகள போட்டு அரைச்சிக் கொடுக்கிறதிலேந்து, என்னென்ன சாப்பாடு எப்பிடிச் சாப்பிடணுங்ற வரைக்கும் பெரியவருக்கு அத்துப்படிங்கிறதால அதுபடி அவருதாம் வெச்சி ரொம்ப பதனமா நாகு அத்தையை நித்தமும் பாத்துக்கிட்டாரு. வேலைன்னு வந்துட்டா செயா அத்தை ரெண்டு ஆளு, மூணு ஆளு வேலையப் பாக்குற ஆளாச்சுங்றதால பெரிசா நாகு அத்தைக்கு வேலங்குடியில வேலையும் இல்ல. அத்தோட செயா அத்தையோட புள்ளைங்க வேற வளந்து ஆளாளுக்கு ஒவ்வொரு வேலைய பாத்துக்கிட்டு கெடந்துச்சுங்க. ரெண்டு பிரசவமும் தாய் வூட்டுல இல்லாம மூணாவது பிரசமாவது இப்பிடி தாய் வூட்டுல அமையுற மாதிரி அக்காக்காரி வூட்டுல அமைஞ்சதுல நாகு அத்தைக்கு அதுல மனசு பூரா ஒரு பூரிப்பு. மொத பிரசவமே இப்பிடி இங்க வந்து நடந்திருந்தா கொழந்தை நல்ல விதமா சாவாம இருந்திருக்குமோன்னு அதுக்கு ஒரு நெனைப்பும் வந்துப் போவுது. அப்படி அது நெனைக்கிறது பிற்பாடு உண்மையாவும் போயிடுச்சி.
            நாகு அத்தைக்கு மூணாவது கொழந்தையா பொம்பளைப் பிள்ளைப் பொறந்திச்சு. கொழந்தைப் பொறந்து ஒரு வருஷம் வரைக்கும் அவரு நாகு அத்தையை கோவில்பெருமாளுக்கு விடல. அவரே வெச்சி பாத்துக்கிட்டாரு. அங்கக் கெடந்த கொழந்தை குட்டிங்களும் கொழந்தைய தூக்கி வெச்சிக்கிட்டு நாகு அத்தைக்கு பெரிசா எந்த வேலையும் இல்லாம பாத்துக்கிடுச்சுங்க. கொழந்தையை நல்ல வெதமா வெச்சி அதுக்குக் கொடுக்க வேண்டிய உரை மருந்துகள எல்லாத்தியும் கொடுத்து எந்தக் கொறையும் இல்லாம பாத்திக்கிட்டாரு பெரியவரு. செயா அத்தை கூட மாட நின்னு வேலைகள செஞ்சிக் கொடுத்தாலும் மேம்பார்வை எல்லாமும் பெரியவரு முன்னாடித்தாம் நடந்தாகணும். கொழந்தை இடையில இறந்துப் போயிடுமோங்ற ஒரு பயம் எல்லாருக்கும் இருந்திச்சி. அதுக்கும் அவரு ஒரு வழி பண்ணாரு.
            தொறைக்குடியில சியாமளா தேவி அம்மன்னு ஒரு கோயில். ரொம்ப பிரபலமான கோயில் அது. தொறைக்குடிங்றது பெரிய ஊரு கெடையாதுன்னாலும் அந்த அம்மனுக்கு இருந்த விஷேச சக்தியால வண்டிக் கட்டிக்கிட்டு சனங்க அந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிகிட்டும், வேண்டுதல நிறைவேத்துனதுக்கு செய்ய வேண்டிய மொறைகளையும் செஞ்சிக்கிட்டும் போயிட்டே இருக்கும்ங்க. கோயிலச் சுத்திலும் நாலா பக்கமும் வயல்வெளிங்கதாம். கோயில்லேந்து சனங்க இருக்குற தெருவுக்கு வரணும்ன்னா அதுக்கே ஒரு மைல் தூரம் வெளியே வந்தாகணும். ஒரு பொட்டலான வயக்காட்டுக்கு நடுவே அந்தக் கோயிலு இருந்துச்சு. அவ்வளவு தனிமையா இருந்த அந்தக் கோயிலுக்குத் தொணையா வலது பக்கமா அல்லிக் கொளம் ஒண்ணு இருந்துச்சி. கோயிலுக்கு வர்றவங்க போறவங்க அந்தக் கொளத்துல மூழ்கி எழுந்துதாம் அம்மன வழிபாடு பண்ணுவாங்க.
            அந்தக் கோயிலுக்கு வேலங்குடி பெரியவரு மாட்டு வண்டியும், கட்டுச்சோறும், நாலு குடத்துல குடிக்கக் கொள்ள நல்ல தண்ணியையும்  கட்டிக்கிட்டு, இருந்த சனங்கள எல்லாத்தியும் வண்டியில போட்டுக்கிட்டு, நாகு அத்தையைக் குழந்தையோட அழைச்சிட்டு வந்தாரு. அவ்வளவு சக்தி வாய்ந்த அம்மன் இருக்குற அந்த ஊருல குடிக்கிறதுக்கு நல்ல தண்ணி கெடையாதுங்றது ஒரு அதிசயந்தான். ஊருல தோண்டுன அத்தனை எடத்திலயும் உப்புத் தண்ணியாத்தாம் இருந்துச்சி. அந்த ஊரு சனங்களே நல்ல தண்ணிக்கு ரெண்டு ஊரு குடத்த தலையில வெச்சி அலஞ்சித்தாம் தண்ணிய பிடிச்சாந்து வெச்சுக்கும்ங்க. குளிக்க கொள்ள அந்த அம்மன் கோயிலு குளத்தைத்தாம் அந்த ஊரு சனங்க பூரா பயன்படுத்தும். அப்படி ஒரு ஊரு அது. ஆனா அந்த ஊருக்கு அம்மன வேண்டிக்கிட்டு வர்ற சனங்களுக்கு மட்டும் எந்தக் கொறைச்சலும் இருக்காது. தொறைக்குடி திருவிசான்னா சுத்துப் பட்டியில ஊருல ஒரு மக்கள் இல்லாம அத்தனையும் வண்டிய கட்டிக்கிட்டோ, கால்நடையாவோ நடந்து அந்தக் கோயிலுக்கு வந்துப்புடும். அன்னிக்கு பள்ளியோடம் வெச்சா ஒரு புள்ளைங்க பள்ளியோடம் போவாது. எல்லாமும் கோயிலு திருவிசாவுலத்தாம் போயி சேவண்டி அடிச்சிட்டு நிக்கும்ங்க.
            அந்த அம்மன வேண்டிக்கிட்டு காப்புத்தடை பண்ணி குழந்தைக்கு மூக்குக் குத்திப்புட்டா எந்த கொறையும் வர்றாதுங்றது ஒரு ஐதீகம். வேலங்குடி பெரியவரு அதையும் பண்ணி அந்தக் கொழந்தைக்கு அம்மன் பேரான சியாமளாங்றதையே பேராவும் வெச்சாரு. "இனுமே பாரு! ஒங் கொழந்தைக்கு எந்தக் கொறையும் இருக்காது! இந்த அம்மன் கோயிலுக்கு வந்துட்டுப் போனா எமன் கிட்ட வர்ற பயப்படுவாம். இந்த அம்மன் நெனைச்சா எமனையே கொன்னுப் போட்டுப்புடும் பாத்துக்கோ. அம்மாம் சக்தி வாய்ந்த தெய்வம்! நீயும் நல்லா வேண்டிக்கோ! கொழந்தை நல்லபடியா இருந்தா இங்க வந்து ஒனக்குத்தாம் தாயே முடி எறக்குறேம்ன்னு நல்லா வேண்டிக்கோ. இந்த அம்மன ‍வேண்டிக்கிட்டு கட்டுன காப்புத்தடைய மீறி ஒங் கொழந்தைய எதுவும் ஒண்ணும் பண்ணிட முடியாது. நோய் நொடி பில்லி சூன்யம் ஏவல் துர்மரணம்ன்னு எது இருந்தாலும் அத்து அடிபட்டுப் போவும். ஒனக்கும் ஒம் பாப்பாவுக்கும் இனி ஒரு கொறையும் இல்ல!" அப்பிடின்னாரு பெரியவரு.
            கிட்டதட்ட கொழந்தைப் பொறந்ததிலேந்து ஒரு வருஷம் வரைக்கும் வேலங்குடி பெரியவருதான் நாகு அத்தையையும், கொழந்தையையும் நல்ல விதமா வெச்சிப் பாத்துக்கிட்டு பிற்பாடுதாம் கொண்டு போயி கோவில்பெருமாள்ல விட்டாரு. அது வரைக்கும் நாகு அத்தையோட சுப்பு வாத்தியாரும் வேலங்குடியிலத்தாம் கெடந்து பாத்துக்கிட்டாரு. நாது மாமா இடையிடையில வரும். ஒரு வாரம் வரைக்கும் தங்கும். கெளம்பும். இப்படியே இருந்துச்சி. தாயையும், சேயையும் நல்ல விதமா காபந்து பண்ணிக் கொண்டு போயி விட்டதுல எல்லாருக்கும் பெரியவரு மேல ரொம்ப நல்ல அபிப்ராயமும் சந்தோஷமும் உண்டாச்சு. வேண்டிக்கிட்டபடி நாகு அத்தையும் தொறைக்குடி சியாமளாதேவி அம்மனுக்கு கொழந்தையோட வந்து முடி எறக்கிட்டு, அத்தோட அந்த அம்மன் கோயிலுக்கு கும்பகோணத்துலேந்து வாங்கியாந்தா ஒரு சரவிளக்கையும் காணிக்கையா வெச்சிட்டுப் போச்சுது. அதுக்குப் பிறகு நாகு அத்தைக்கு ரெண்டு ஆம்பளைப் புள்ளைங்க பொறந்திச்சி. எந்தக் கொழந்தையும் அற்பாயுசுல சாவல.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...