20 Nov 2019

16.2



            இரண்டாவது அகல் கூட்டத்திலேயே சூடு பிடிக்கும் என்று நினைக்கவில்லை விகடு. அகலைக் கொளுத்தி வைத்து விட்டு சூடு பிடிக்கவில்லை என்றால் எப்படி? கூட்டத்திற்கு நிறைய ஆட்கள் சேர்க்க வேண்டும் என்ற நினைப்பில் கண்மண் தெரியாமல் ஆள் பிடிக்க ஆரம்பித்து விட்டான் அவன். அநேகமாக இரண்டாவது கூட்டம் வில்சன் அண்ணனின் வீட்டின் நடுக்கூடம் நிரம்பி வழியும் அளவுக்கு ஆகி விட்டது. நட்பு முறையில் நிறைய பேர் வந்திருந்தார்கள். விகடு நட்பைப் பற்றிப் பேசினான் அந்தக் கூட்டத்தில். நட்பு - நட்பு! என்ன ஒரு தொடர்பு?!
            மா.கா.பா.சோமசுந்தரமூர்த்தி கூட்டத்திற்கு வந்தவர்களும் ஒருவர். பெரிய அதிகாரி. விடுவின் அழைப்பின் பேரில் வந்தவர். அவரை அழைத்து வந்ததில் அந்தக் கூட்டத்துக்கே தனி அந்தஸ்து கிடைத்தது போலிருந்தது.
            விகடு நட்பைப் பற்றிப் பேசிய விவரத்துக்கு வருவோம். பேசியது என்பது கூட பொருட்குற்றம். பொதுக்கூட்டங்களில் பேச வராத சடத்துக்குப் பேச்சு எங்கேயிருந்து வருவது? எழுதி வைத்துதான் வாசித்தான் விகடு.
            "எல்லாப் பூக்களும் அழகானது.
            நட்பைப் போல அழகான பூ உண்டா?
            பூக்களுக்கு நிறம் உண்டு.
            நட்புக்கும் நிறம் உண்டு.
            பூக்களுக்கு மணம் உண்டு.
            நட்புக்கும் மணம் உண்டு.
            நட்பின் நிறமென்ன?
            உலகின் அழகான நிறம்.
            அதைப் பார்க்க முடியாது.
            நட்பின் மணமென்ன?
            உலகின் இனிமையான மணம்.
            இதை நுகர முடியாது.
            திருக்குறளில் நட்பிற்கு மட்டுந்தான்,
            1.நட்பு,
            2. நட்பாராய்தல்,
            3. பழைமை,
            4. தீ நட்பு,
            5. கூடா நட்பு
என்று பஞ்ச பாண்டவர்களைப் போல ஐந்து அதிகாரங்கள் இருக்கின்றன.
            நாம் அரசியலைப் பற்றி அதிகம் பேசுகிறோம்.
            அரசியல்வாதிகள் நட்பைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள்.
            ஒரு தேர்தல் முடிவு வெளிவந்த நேரத்தில் கூடா நட்பு கேடாய் முடியும் என்றார் ஒரு முன்னாள் முதல்வர்.
            முதல்வர்களில் அவரது தோழியராய் இருந்த ஒருவர் நட்பைப் பற்றி அதிகம் பேசுகிறோம்.
            அரசியலில் நட்பு இருக்கிறது.
            உண்மையான நட்பிற்குள் அரசியல் இல்லை.
            அரசு வேலை - ஆலை வேலை - நூறு நாள் வேலை என அனைத்திற்கும் ஊதியம் உண்டு.
            நட்பிற்கு உண்டா ஊதியம்?
            உண்டு.
            ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
            கேண்மை ஒரீஇ விடல்
            வேலையில் ஆதாயத்தைப் பெற்றுக் கொள்வது ஊதியம்.
            பேதையார் நட்பில் ஆதாயத்தை விட்டு விடுவது ஊதியம்."
என்று பேசி / வாசித்து முடித்தான் விகடு.
            மா.கா.பா.சோமசுந்தரமூர்த்தி நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர் எழுந்து வந்து விகடுவைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து, "தமிழுக்கு மிகச் சிறந்த ஆய்வறிஞன் கிடைத்து விட்டான்!" என்று உச்சி முகர்ந்தார். இதில் பேசியதற்கும், ஆய்வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. கூட்டங்களில் இப்படித்தான், பாராட்ட வேண்டும் என்பதற்காக எப்படி எப்படியோ பாராட்டுவார்கள். அதைத் தாங்கிக் கொள்ளும் மனோ தைரியம் இருப்பவர்கள்தாம் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். அத்துடன் அவர் விகடு எழுதி வாசித்த காகிதத்தை மிகச் சிறப்பாக இருப்பதாகக் கூறி வாங்கிக் கொண்டார். இந்த இடத்தைத் தயவு செய்து குறித்துக் கொள்ளுங்கள்.
            இப்போது விகடு எப்படி இருந்திருப்பான்? வாசகர்களாகிய உங்களக்குச் சொல்ல வேண்டியதில்லை. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான் அவன்.
            ஆனால் நாவலாசிரியர் சில விசயங்களைச் சொல்ல விழைகிறார். வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே இல்லை. விகடு எழுதும் ப்ளாக்கில், 'மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது?' என்று எழுதியிருப்பான். அது தவறு. வாழக்கை துக்கமயமானது. துக்கத்தின் சுவை தெரியவே அவ்வபோது கொஞ்சம் மகிழ்ச்சி வழங்கப்படுகிறது.
            வெறும் இனிப்பு திகட்டி விடும். கொஞ்சம் காரம் இடையில் கொடுக்கப்படுவதுண்டு. வாழ்க்கை மாறுபாடானது. காரமும், கசப்பும் திகட்டும் அளவுக்கு வழங்கப்பட்டு ஒரு தேன்சொட்டு நாவின் நுனியில் எப்போதாவது வைக்கப்படும். அந்த ஒரு துளி தேன் சொட்டுக்காக வாழ்க்கையின் அத்தனை கசப்பும், காரமும் நிறைந்த அண்டாக்களை மூச்சு முட்ட குடித்தாக வேண்டும். வாசகர்களே நீங்கள் குடிப்பீர்களா? அதென்ன வாழ்க்கை உங்களிடம் அனுமதிக் கேட்டுக் கொண்டா ஊற்றும்? அது பாட்டுக்கு ஊற்றிக் கொண்டிருக்கும். நீங்கள் குடித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...