2 Nov 2019

11.21




            டீ, காபி என்ற சத்தம் விண்ணைப் பிளந்தது. டீ, காபி விற்பவர்களின் சத்தம். அது கவிஞர் தீக்காபியை அதிர்வேட்டு முழக்க 'தீக்காபி வருக! தீக்காபி வாழ்க!' என்று சொல்வது போலிருந்துதது கவிஞருக்கு. அப்படிப்பட்ட கற்பனைகளில் வாழ்பவர்தானே கவிஞர். கவிஞர் சம்சாரத்தை நோக்கி ஒரு பெருமிதமானப் பார்வையைப் படர விட்டார். சம்சாரத்தால் இதைப் புரிந்து கொள்ள முடியாமல் போய் அவர் தலைகுனிந்து கொண்டார். இச்செய்கை கவிஞரின் புளாங்காகிகத்தை அதிகம் செய்தது.
            அவர் எதற்காக அவ்வளவு அவசரப்பட்டு ஓடி வந்தாரோ அது நடக்கவில்லை. எட்டு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கூட்டம் ஒன்பது, ஒன்பதரை, பத்தைக் கடந்தும் ஆரம்பிக்கப்படுவதாகத் தெரியவில்லை. அடிக்கடி மேடைத் தொகுப்பாளர்களிடம் சென்று தான் கூறாய்வு செய்து கொண்டிருப்பதை ரகசியமாக காட்டியபடி பேரதிசயம் போன்ற பேரதிர்ச்சியை விளைவித்துக் கொண்டிருந்தார் கவிஞர் தீக்காபி. அதே நேரத்தில் கவிஞர் தன்னைத்தானே நொந்து கொண்டார். நான்கே கால் ரூபாய் பயணச்சீட்டில் வர வேண்டிய பயணத்துக்கு நாற்பது ரூபாய் எரிஎண்ணெய்யை ஊற்றி வந்து விட்டேனே என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டார். ஒரு வழியாக மசமசவென்று கூட்டம் பத்தரை மணி வாக்கில் ஆரம்பமானது. எட்டு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கூட்டம் பத்தரைக்கு ஆரம்பிக்கப்படுவது என்பது இந்திய நேர வழக்கப்படிச் சரி. இந்தியக் கடிகாரங்கள் இந்திய நேரத்தை அனுசரிக்கும் வகையில் தயார் செய்யப்பட வேண்டும்.
            கூட்டம் ஆரம்பித்ததும், "ஆங்காங்கே நிற்கும் கலை, இலக்கிய நேயர்கள் மேடை நோக்கி வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!" என்று பத்து முறைக்கு மேல் அறிவிக்கப்பட்டு கூட்டம் தொடங்கிய போது பத்தரை என்பது பத்து ஐம்பதாக ஆகியிருந்தது. தொடக்கத்தில் ஒரு பாடல் பாடப்பட்டது. கவிஞரும் நன்றாகப் பாடக்கூடியவர். அவர் கூறாய்வு செய்யப்பட்டதற்காக அழைக்கப்பட்டிருந்ததால் இந்த மேடையில் அவர் பாடுவது சாத்தியமாகாது. அது அவருக்குத் தெரிந்தே இருந்தது.
            குழல் விளக்குகள் ஆங்காங்கே திருடனைப் பிடித்துக் கட்டி வைத்திருப்பதைப் போல கம்பங்களோடு கம்பங்களாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. கட்டி வைத்திருந்தவர்களுக்கு எதிராக அவை ஒளியைக் காறித் துப்பிக் கொண்டிருந்தன. ஆங்காங்கே இரைச்சல் பெரிய அளவில் கேட்கும் அளவுக்கு பெரிய பெரிய ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டிருந்தன. அது ஒரு பிரமாண்டத்தைக் கொடுத்துக் கொடுத்து அவ்வபோது தும்மியும், இருமியும் கொண்டிருந்தது.
            பாடலைத் தொடர்ந்து பேச்சுகள், நாடகங்கள், பட்டிமன்றங்கள், ஆடல்கள் என்று மேடை பச்சோந்தியை விட மோசமாக நிறம் மாறிக் கொண்டிருந்தது. கிட்டதட்ட வெள்ளி முளைத்துக் கூட்டத்தை விரட்டி விடும் நேரத்தில் சுமார் மூன்றரை மணி வாக்கில் கவிஞர் தீக்காபி அழைக்கப்பட்டார். கூட்டம் அரைத் தூக்கத்திலும், கால் தூக்கத்திலும், முக்கால் தூக்கத்திலும், முழு தூக்கத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
            கவிஞர் தன் ஜோல்னாபைக்குள் கையை விட்டு பிரேத விரோத காரணியை எடுத்தார். கூட்டம் அதிர்ச்சிக்கு உள்ளாகும் என்று நினைத்தார். மாறாக அவர் அதிர்ச்சி அடைய வேண்டியதாகி விட்டது. கூட்டத்தில் எந்த சலனமும் இல்லை. நீ பாட்டுக்கு எதையாவது வாசித்து விட்டுப் போ என்று கூட்டம் கண்ணயர்ந்து கொண்டிருந்தது. ஒரு வகையில் அதன் செளகரியம் அநேகம். சொற்குற்றம், பொருட்குற்றம் எது இருந்தாலும் நக்கீரர் போன்ற ஒருவர் முளைத்தெழுந்து வந்து விட மாட்டார். ஒருவழியாக கவிஞர் தாம் கொலைசெய்து வைத்திருந்த கவிதையை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். பிணக்கூறாய்வை ஆச்சரிய அதிசயமின்றி கூட்டம் அலட்சியப்படுத்திக் கொண்டிருந்தது.
            கவிஞர் தீக்காபியைத் தொடர்ந்து விகடு அழைக்கப்பட்டார். அவரும் தன் பங்குக்கு கூட்டத்தைத் துயில் எழுப்ப முயலாமல் தாலாட்டைப் பாடி முடித்தார். கவிதை அமர்வு முடிந்தது என அறிவிக்கப்பட்டதும், கூட்டம் முடிந்ததென அனிச்சையாய் உணர்ந்து கூட்டம் எழுந்து கலைய ஆரம்பித்தது.
            மனிதப் பிட்டங்களால் நிறைந்திருந்த நாற்காலிகள் காலியாய்க் கிடந்தன. அத்தனை நேரம் சூடு காய்ச்சியிருந்த நாற்காலியில் குளிர்ச்சிப் பரவ ஆரம்பித்தது.
            கவிஞர் தீக்காபி விகடுவை நெருங்கி வந்தார். கவிதை அபாரம் அருமை என்றார். பதிலுக்கு அவரது கவிதையை விகடு அப்படிச் சொல்வார் என எதிர்பார்த்திருப்பார். விகடு அது குறித்து எதுவும் சொல்லாம் இருந்தது அவருக்கு ஏமாற்றத்தைத் தந்தது. அந்த ஏமாற்றத்தை மறைக்க, "தாங்கள் எந்த ஊர்?" என்றார் தீக்காபி.
            விகடு ஊரைச் சொன்னதும், "அட! ஒரே ஊர்தான்! ஒரே ஊரில் இருந்து கொண்டு எப்படித் தெரிந்து கொள்ளாமல் இருந்தோம்?" என்று அங்கலாய்ப்பு அடைந்தார் தீக்காபி.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...