19 Nov 2019

ரெண்டு பொறந்து ரெண்டும் போயிடுச்சி!



செய்யு - 273
            ரெண்டு வருஷம் கழிச்சி நாகு அத்தைக்கு ரெண்டாவது கொழந்தை பொறந்திச்சி. இந்த தடவெ பொறந்தது ஆம்பளைப் புள்ளை. இந்தப் புள்ளையாவது நிலைக்கணும்னு ரொம்ப படாதப்பட்டு பட்டு கொழந்தையைப் பாத்துக்கிட்டாங்க. சுப்பு வாத்தியாரும் கொழந்தைப் பொறந்தது கேள்விப்பட்டு அங்கேயே கெடந்தாரு. அவரு லட்சுமிப் பாப்பாவுக்காக செஞ்ச நடைவண்டி கூரைக் கொட்டாயில சின்னதா இருந்த பரண் மேல அழுக்குப் படிஞ்சி ஓட்டடை அடைஞ்சிக் கெடந்தது. அந்தப் பாப்பா அந்த வண்டிய தள்ளி வெளையாண்டு, அத்தோட இப்போ பொறந்திருக்குற புள்ளையும் தள்ளி விளையாட வேண்டிய வண்டி இல்லையா அது! இந்தப் புள்ளையாவது நல்ல விதமா வளர்ந்து அந்த நடைவண்டிய ஓட்டணும்னு அவருக்கு அம்புட்டு ஆசை. ஆசைப்பட்ட மாதிரியா வாழ்க்கையில எல்லாமும் நடக்குது? ஆசைப்பட்டதுக்கு நேர்மாறா நடந்துதான வாழ்க்கை மனுஷன அசரடிக்குது.
            வாழ்க்கையில மனுஷனுக்கு மனுஷன் சோக்காளிய தேடிக்கிறது போல, கஷ்ட நஷ்டமும் சோக்காளிய தேடிக்கும்னு சொன்னா நம்புவீங்களா நீங்க? ஒரு பாம்பு கால சுத்தி அந்த அதிர்ச்சி நீங்குறதுக்குள்ள, இன்னொரு பாம்பும் கால சுத்தி, ஒரு பாம்பு கொத்துன கால்ல அந்த இன்னொரு பாம்பு வந்து கொத்துனா எப்பிடி இருக்கும்? ஒரு கஷ்டம் போயிடுச்சேன்னு உக்காந்திருக்கப்ப இன்னொரு கஷ்டம் வந்தா எப்படி இருக்கும்? ஒரு புயலு அடிச்சு இப்பத்தானே ஓஞ்சிச்சுன்னு கொஞ்சம் கண்ணு அசறருப்ப இன்னொரு புயலு வந்து அடிச்சா எப்பிடி இருக்கும்? இப்பதானே ஒரு சோதனை முடிஞ்சிருக்கு அதுக்குள்ளயா இன்னொரு சோதனை வரப் போவுதுன்னு நெனைக்குறப்ப இன்னொரு சோதனையும் வந்தா எப்பிடி இருக்கும்? கஷ்ட நஷ்டங்கள் துன்பம் துயரங்கள் அப்படித்தான் வாழ்க்கையில வரிசைக் கட்டிட்டு வர்ருது. சந்தோஷம் ஒத்தை ஆளா வந்தாக்கா, துன்பமும், துயரமும் பட்டாளமா வந்து சேருது.
            நாகு அத்தைக்கு ரெண்டாவதா பொறந்த அந்தக் கொழந்தையும் ரொம்ப அழகான கொழந்தை. ரொம்ப அழகா கொழந்தைங்க பொறந்தா அது நெலைக்காதோ என்னவோ! கண்ணுக்குள்ளயே நின்ன அந்த கொழந்தைய கண்ணுக்கு கண்ணா பாத்துகிட்டும் அது ரெண்டு மாசத்துலயே திடீர்ன்னு காய்ச்சல் கண்டு இறந்துப் போச்சுது. அதுக்கும் ஒரு தொட்டில் பாடையைக் கட்டி சுடுகாட்டுல கொண்டு போயி புதைச்சானது. பொறக்குற கொழந்தைங்க வூடு தங்காம செத்துப் போயி இடுகாடுல புதையுறது பெருஞ்சோகமாக ஆயிப் போச்சு. அதைவிட, இப்போ கொழந்தை இறந்துப் போனது பெரிய துக்கமா சுப்பு வாத்தியாருக்குத் தெரியல. தங்கச்சிக்கு மறுபடியும் புத்தி பெசகிடுமோன்னு பயப்பட ஆரம்பிச்சிட்டாரு.
            நாகு அத்தையைப் பொருத்தவரைக்கும் அது பார்த்த சாவுங்க அதிகம். அது பொறந்து கொஞ்ச நாள்ல அதோட அப்பா சாமிநாதம் ஆச்சாரி நெஞ்சைப் பிடிச்சுகிட்டு உக்காந்தவருதாம். போயிச் சேந்துட்டாரு. அப்பவே நாகு அத்தையை அப்பன முழுங்குனவன்னு ஊருல பேசுனாங்க. பிற்பாடு அது வளர வளர அதோட அம்மாகாரிக ரெண்டு பேரும் போயிச் சேந்தாங்க. அதோட கல்யாணத்தப் பார்க்க்க கூட பெத்தவங்கன்னு ஒருத்தரும் இல்லாமப் போயிட்டாங்க. அதோட குழந்தைங்க ஒண்ணுக்கு ரெண்டா பொறந்து ரெண்டும் பார்க்க கொடுக்க வைக்காம போயிச் சேர்ந்ததுல்ல அதோட மனசே இப்போ மரத்துப் போச்சுதோ என்னவோ!
            அது நாது மாமா போல, "போனா போவட்டும் போண்ணே! பொறந்தது உசுரோட இருந்தா நாம்ம பாலு கொடுக்க மாட்டேன்னா? வளர்ந்தா நாம்ம துணியெடுத்துப் போட்டு அழகு பாக்க மாட்டேன்னா? பள்ளியோடம் அனுப்பி வுட்டு பெரிய படிப்பு படிக்க வைக்க மாட்டேன்னா? கண்ணுக்குக் கண்ணா வளத்து கல்யாணம் பண்ணிக் கொடுக்க மாட்டேன்னா? நமக்கும் அந்தக் கொடுப்பினை இல்ல! அந்தப் புள்ளையோளுக்கும் அந்தக் கொடுப்பினை இல்ல! செத்துப் போறதுக்குன்ன எம்மட வயித்துல வந்துப் பொறக்குதுண்ணே! நாம்ம யாருக்கு ன்னா பாவஞ் செஞ்சேம்? யாரு குடிய என்ன கெடுத்தேம்? ஏம்ண்ணே நமக்கு மட்டும் இப்பிடில்லாம் நடக்குது? அந்த ஆண்டவேம் நல்லவங்களத்தாம் சோதிச்சுப் பார்ப்பாம்! நல்ல மக்கா ஒண்ணுஞ் சொல்லாதா? அதால இவங்களுக்குச் சோதனெ மேல சோதனெ கொடுத்துட்டே இருக்கலாம்ன்னு அந்த ஆண்டவனே முடிவு பண்ணிடுவாம் போலருக்கு! பண்ணட்டும் பண்ணட்டும். நமக்கே சோதனெகள கொடுக்கட்டும். நமக்கு வந்த சோதனைய இன்னொரு பொண்ணு தாங்க மாட்டா! அதாம்ண்ணே இன்னொரு கொழந்தையைும் அவ்வேம் தங்கிட்ட அழைச்சுக்கிட்டாம். ஒரு சோதனைய தாங்குனப்பவே மனசு நொறுங்கியாச்சி. நொறுங்குன மனசுல மறுபடியும் நொறுங்க ன்னா இருக்கு?இதாங் தலவிதின்னா நாம்ம இன்னாண்ணா பண்ணுறது?" அப்பிடின்னு நாகு அத்தை அழுததோட சரி. மொத கொழந்தை செத்தப்ப நடந்துகிட்டது போல புத்தி பெசகியெல்லாம் போகல அதுக்கு. அது ஒண்ணே போதும்ன்னு இந்த விசயத்துல கொஞ்சம் திருப்திபட்டுக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.
            இதென்னடா குடும்பம்? கொழந்தைப் பொறந்தா செத்துப் போவுது? அம்மாகாரிக்கு பைத்தியம் பிடிச்சுப் போவுது? சரியான தரித்திரியம் பிடிச்ச குடும்பமா இருக்கும் போலருக்கு?ன்னு ஊர்லயும் பேச்சாப் போவுது. இதையெல்லாம் கேட்க கேட்க சங்கடமா இருக்கு சுப்பு வாத்தியாருக்கு. பேசாம தங்காச்சியையும், மச்சாங்காரரையும் அழைச்சுகிட்டு விருத்தியூருக்கே போயிடுவோமான்னு யோசிக்கிறாரு. 
            மச்சாங்காரரான நாது மாமாகிட்ட இதுபத்தி கேட்டாக்கா, "அது கெடக்குது மச்சாம்! அஞ்ஞப் போனா ன்னா? இஞ்ஞ இருந்தா ன்னா? நடக்குறது நடந்துட்டுத்தாம் போவும். அதுக்கு நாமென்ன பண்ணுறது? இப்போ ன்னா? இன்னொரு கொழந்த பொறந்தாப் போச்சு! பாத்துக்கிடலாம் போ!" அப்பிடிங்கிறாரு.
            அப்பதாம், "நமக்குக் கொழந்தைப் பாக்கியமே இல்லண்ணே! போவட்டும் போ! நாம்ம கொழந்த இல்லாமயே இருந்திடறேம். பொறந்து ஒவ்வொண்ணா போறத பாக்குற தெகிரியம் நம்மகிட்ட இல்ல. நல்லாத்தாம் பொறக்குது மூக்கும் முழியுமா. நல்லாத்தாம் கைய கால ஆட்டிட்டு மனசு பூரா அந்த உருவம் நெறைஞ்சுப் போவுது. நாம்ம நெலைகொழைஞ்சுப் போவணுங்றதுக்காகவே பொறந்து பொறந்து கொழந்தைகங்க செத்துப் போவதுண்ணே!" அப்பிடின்னு நாகு அத்தை மறுபடியும் வேறுவிதமா பேசி மனசொடிஞ்சுப் போயி அழுவுது. சுப்பு வாத்தியாருக்கு என்ன சொல்லித் தேத்துறதுன்னே தெரியல.
            "எம் தங்காச்சி! பேயாம விருத்தியூருக்கே போயிடுவோமா?"ன்னு அதுகிட்டயும் கேட்குறாரு சுப்பு வாத்தியாரு.
            "வேண்டாண்ணே! யண்ணிக்கு ரொம்ப எளக்காரமா போயிடும். போனாலும் அத்து நல்ல வெதமா வெச்சிக்காது. எம்மட வூட்டுக்காரரும் வேல வெட்டிக்குப் போவாம குடிகாரரா திரியுறவரு. போன மானம் இந்த ஊரோட போவட்டும். நாம்ம பொறந்த ஊர்லயும் போயி மானம் போவ வாணாம். நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் ஊருல நல்ல பேரு. அங்கப் போயி இருக்குற நல்ல பேர கெட்டடிக்க வாணாம். எங் கதெ இஞ்ஞயே கெடந்து இஞ்ஞயே போவட்டுண்ணே!" அப்பிடின்னு தெளிவாத்தாம் பேசுது நாகு அத்தை.
            ஒரு வெதத்துல தங்காச்சிக்கு மனசு கொழம்பி கிறுக்குப் புடிச்சில்லாம் பேசல கொஞ்சம் மனசொடிஞ்சித்தாம் இப்படி பேசதுன்னு சுப்பு வாத்தியாருக்கு கொஞ்சம் மனசுக்குத் தெம்பா இருந்தாலும், ரெண்டு புள்ளைங்க பொறந்து செத்துப் போன பிற்பாடு எப்படி கோவில்பெருமாள்லயே வெச்சிக்கிறதுன்னு அது ஒரு கொழப்பமா மனசுக்குள்ள நிக்குது. இதுக்கு மேல ஒண்ணு தங்காச்சிய குடும்பத்தோட அழைச்சுகிட்டு விருத்தியூருக்குப் போவணும், இல்ல தங்காச்சிக் குடும்பத்தோட இங்கயே கோவில்பெருமாள்ல தங்கணும்னு முடிவெடுத்து ரெண்டு பக்கமாவும் ஊசலாடிட்டு இருந்தவரு கடைசியா கோயில்பெருமாள்லயே தங்காச்சிக்குத் தொணையா வெலை செஞ்சிட்டுத் தங்கிடறதுன்னு முடிவு பண்ணாரு. அப்படி அவரு முடிவு பண்ணதுல ஒரு செரமம் வந்துப் போவுது.
            தங்காச்சிக் குடும்பத்துல நடந்த சம்பவங்க மனச பாதிச்சதுல அவருக்கு வாத்தியாரு படிப்புக்குப் படிச்சது, எப்படியிருந்தாலும் ஒரு நாளு தனக்கு வாத்தியாரு வேலை கெடைக்குங்ற ஞாபவமெல்லாம் சுத்தமா மறந்துப் போச்சுது. தாம் இப்பிடி விருத்தியூர வுட்டுப்புட்டு கோவில்பெருமாள்ல தங்குனா வேலை தேடி வர்ற கடுதாசி இங்க வராம, அங்கதான வரும்ங்ற யோசனையும் அவருக்கு இல்லாமப் போயிடுச்சு. கொழந்தைப் பொறந்த சேதிய‍ சொல்லியே வராத உறவுக்கார சனங்க, கொழந்தைச் செத்தத சொன்னதுக்கா வரப் போறாங்கன்னு கோவில்பெருமாள்லேந்து அந்தச் சங்கதியையும் பெரிசா யாருக்கும் சொல்லல. அப்படிச் சொல்லியிருந்து ஒருவேளை விருத்தியூரு பெரிம்மாவோ, பெரிப்பாவோ வந்திருந்து அவுங்க இது பத்தி ஞாபவம் பண்ணிருந்தா இடையிடையிலாவது சுப்பு வாத்தியாரு அங்கயும், இங்கயும்னு போயிட்டு வந்துட்டுக் கெடந்துருப்பாரு. அவரு விருத்தியூரு போனப்ப நாகு அத்தையோட மொத குழந்தைப் பொறந்து மூணு மாசத்துல செத்த சங்கதிய சொன்னப்பவும், "அய்யோ பாவமே!"ன்னு உச்சு கொட்டுனதோட பெரிம்மாவும், பெரிப்பாவும் நிறுத்திக்கிட்டாங்க. போயி துக்கம் விசாரிச்சுட்டு வந்தா அதுக்கு வேற செலவாவுமேன்னு, இருக்குற வேலையில அதெ வேற எங்கப் போயி பாக்க முடியுது சொல்லுன்னு அப்படியே போவாமலேயே இருந்துட்டாங்க.
            வேலங்குடியிலயும் உறவு நல்ல விதமா இல்லாம போனதுல இவ்வளவு நாட்கள்ல சுப்பு வாத்தியாரு அங்கயும் அவரு போகல. வேலங்குடியிலேந்தும் யாரும் வந்து கோவில்பெருமாள்ல பாக்கல. மொத்தத்துல கோவில்பெருமாள்ல இருந்த நாகு அத்தையோட நெலமை, சுப்பு வாத்தியார்ர தவிர வேற யாரோடயும் எந்த வித பந்தமும் இல்லாம தனித்தீவுல இருக்குறவங்களோட நெலமை போல ஆயிடுச்சு. நாகு அத்தைக்குக் கல்யாணம் ஆனதிலேந்து நாது மாமாவோட சொந்தப் பந்தங்களும் பெரிசா கண்டுக்கிடல.  ஏதோ கொழந்தைச் செத்தப்ப பேருக்கு வந்து நின்னுட்டுப் போனதோட சரி. அக்கம் பக்கத்துல இருக்குற சனங்க பண்ணுன உதவியைக் கூட அவுங்க பண்ணல. அக்கம் பக்கத்து சனங்க சொன்ன ஆறுதலைக் கூட அவுங்க சொல்லல.
            சுப்பு வாத்தியாரு கோவில்பெருமாள்ல தங்கியிருந்த நாள்ல அவருக்கு வாத்தியாரு வேலைக்கு தஞ்சாவூரு கலெக்டர் ஆபீஸ்லேந்து ஒரு இண்டர்வியூ கார்டு வந்துப் போவுது விருத்தியூருக்கு. அந்தச் சங்கதி வந்த வுடனே பத்மா பெரிம்மாவும், பெரிப்பாவும் கோவில்பெருமாளுக்கு ஒரு மஞ்சக் கடுதாசிய எழுதி வுட்டுத்தாம் பாத்துச்சுங்க. சுப்பு வாத்தியாரோட நேரமோ என்னவோ தெரியல அந்தக் கடுதாசி நாளு கழிச்சு வந்து சேந்ததுல அவரு விருத்தியூரு ஓடிப் போயி பார்த்தா கலெக்டரு ஆபீஸ்ல வரச் சொன்ன நாளு கடந்துப் போயி இருக்கு. இருந்தாலும் சுப்பு வாத்தியாரு தஞ்சாவூரு கலெக்டர் ஆபீஸ்ல போயி கேட்டுப் பார்த்தாக்கா, எல்லா எடத்துக்கும் ஆளு போட்டு வேகன்ஸியே இல்லன்னும், கடைசியா இருந்த ஒரு வேகன்ஸியையும் நேத்துதாங் போட்டு நெரப்புனோம்னு சொல்லி அனுப்பிட்டாங்க.
            அதிலேந்து வாரத்துல நாலைஞ்சு நாளு கோவில்பெருமாள்ல இருக்குறதும், அதுக்கு எடையில வாரத்துல ரெண்டு நாளு விருத்தியூர்ல வந்து கெடக்குறதும்னு மாறி மாறி இருக்க ஆரம்பிச்சாரு. ஊருல இல்லாத நாளுல்ல மறுபடியும் கடுதாசி வந்து வேலையை விட்டுப்புடுவோமாங்ற பயம் வேற அவரோட மனச ரொம்ப பாதிக்க ஆரம்பிச்சிது. வாத்தியாரு வேலைக்குப் போனாலாவது தங்காச்சிக் குடும்பத்துக்கு இன்னும் கொஞ்சம் உதவி பண்ணலாமேங்ற யோசனையில நல்ல வாய்ப்ப தவற விட்டுட்டோமேங்ற எண்ணம் வேற வந்து அவரோட மனச உறுத்த ஆரம்பிச்சிடுச்சு.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...