19 Nov 2019

16.1



கூட்டம் : 2
            ஒவ்வொரு இலக்கியக் கூட்டத்திற்கும் வருபவர்கள் மறுகூட்டத்திற்கு வரும் போது இன்னொருவரை அழைத்து வருமாறு வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றன. இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி, எட்டு பதினாறாகி, பதினாறு முப்பத்து இரண்டாகி, முப்பத்து இரண்டு அறுபத்து நான்காகி, அறுபத்து நான்கு நூற்று இருபத்தெட்டாகி, நூற்று இருபத்தெட்டு இருநூற்று ஐம்பத்தாறாகி... அப்படியே லட்சம் கோடியாகி, கோடி கோடி மேல் கோடியாகி இலக்கியக் கூட்டத்திற்கென செவ்வாய் கிரகத்திலோ, வியாழன் கிரகத்திலோ தனி இடம் வாங்கிப் போட வேண்டும் என்ற ஆசை எழாத கூட்டவாதிகள் யார் இருக்கிறார்கள்?
            பொதுவாக கூட்டவாதிகள் அதற்கு நேர் எதிரான சூழ்நிலையைச் சந்திக்கிறார்கள். முதல் கூட்டத்திற்கு பதினாறு பேர் வருகை தந்தால், இரண்டாம் கூட்டத்திற்கு எட்டு பேர் வருகை தருகிறார்கள். மூன்றாம் கூட்டத்திற்கு நான்கு பேர் வருகை தருகிறார்கள். நான்காம் கூட்டத்திற்கு இரண்டு பேர் வருகை தருகிறார்கள். ஐந்தாம் கூட்டத்திற்கு ஒருவர் வருகிறார். ஆறாம் கூட்டத்திற்கு ஒன்றில் பாதியாக பாதி மனிதர் வருவாரோ? என்று கேட்காதீர்கள். பிறகு பாதி கால் ஆகும். கால் அரைக்கால் ஆகும். இப்படி பின்னமாக்கிக் கொண்டே போனால் சுழியம் என்பது வராது. ஆனால் சுழியத்தை நெருங்கும் ஓர் எண் வரும். அதுதான் எண் அமைப்பு. இலக்கிய கூட்ட அமைப்பு வேறானது. அது சுழியம் ஆகி விடும்.
            முதல் கூட்டத்திற்கு வந்து, இரண்டாவது கூட்டத்திற்கு வருகை தராத ஒருவரை எதேச்சையாகச் சந்தித்த போது அவரிடம், ஏன் வரவில்லை? என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் பின்வருமாறு பதில் அளித்தார். "கூட்டத்தின் நிறைவில் நண்பர் ஒருவரோடு அடுத்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாலும், அப்படி அழைத்துக் கொண்டு வர நண்பர் ஒருவர் கிடைக்காததாலும் வர இயலாமல் போகிறது!" நண்பர் கிடைக்காவிட்டால் நீங்கள் மட்டுமாவது வாருங்கள் என்று அவரிடம் சொல்லப்படுகிறது. "அதெப்படி எனக்கு நண்பர் கிடைக்காமல் போய் விடுவார்? நண்பர் கிடைக்கும் வரை காத்திருப்பேன். நண்பர் கிடைத்தவுடன் நண்பரோடுதான் வருவேன்!" என்கிறார் அவர். இலக்கியக் கூட்டத்தில் வேண்டப்படும் அறிவிப்புகள் இப்படிப்பட்ட அபாயத்தில் அடிக்கடி சென்று முடிகிறது. இலக்கியக் கூட்டம் என்பதால் ஓரிரு அறிவிப்புகளாவது செய்ய வேண்டியிருப்பது அதன் துரதிர்ஷ்டம்.
            இரண்டாவது கூட்டத்திலிருந்து இலக்கியக் கூட்டத்தை விஸ்தீரணப்படுத்தி, விரிவுப்படுத்தும் நோக்கோடு விளம்பரதாரர்களின் உதவியை நாடுவது என்றும், பதிலுக்கு அவர்களுக்கு விளம்பர உதவியைச் செய்வதென்றும் தீர்மானிக்கப்படுகிறது. அந்தத் தீர்மானத்தில் அதிசயமான ஒரு மாற்றம் நிகழ்கிறது. விளம்பரதாரர்களாக கூட்டத்திற்கு டஜன் எண்ணிக்கையில் வருகிறார்கள். வந்த ஒவ்வொருவரும் ஆளுக்கொரு கவிதை படிக்கிறார்கள். இதில் எது விளம்பரம்? என்ற குழப்பம் மிஞ்சுகிறது.
            நாவலாசிரியர் இரண்டாவது கூட்ட நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். முதல் கூட்டத்தை விட இரண்டாவது கூட்டத்தில் கொஞ்சம் மெருகு இருக்கிறது. இல்லாவிட்டாலும் இருப்பதாக நினைத்துக் கொள்ள வாசகர்கள் கடமைப்பட்டவர்கள். இந்தக் கூட்டத்தில் வாசகர்கள் முதன்மை சாட்சிகளாய் இருப்பதால் அவர்களும் கலந்து கொள்வது ஏற்புடையது. வாசிக்கும் நீங்கள் ஏதேனும் எழுதிப் போட்டால்... அதை காலத்தின் பின்னோக்கி நடந்த இஃதில் சேர்த்தால், காலத்தின் முன்னோக்கிய திசையில் நகர்த்திக் கொண்டு வந்து விட வாய்ப்பிருக்கிறது. சமகால இலக்கியக் கூட்டமாக அது நல்லதொரு உபாயம். வாசகர்கள் செய்வார்களா? உட்கார்ந்து எழுத வேண்டும்... அஃது ஒரு கொடுமையான செயல். பிறகு அதை வாசிப்பவர்களுக்காக ஏங்க வேண்டும்... அஃது ஒரு துர்பாக்கியமான நிலை. வாசகராய் மட்டும் இருப்பதில் செளகரியம் இருக்கிறது. விரும்பினால் வாசிக்கலாம் வாசிக்காமல் இருக்கலாம். எழுத்தாளராய் இருப்பதில் அசெளகரியம் இருக்கிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எழுதியதை யாராவது வாசிக்க வேண்டும் என்ற பரபரப்பு, படபடப்பு இருந்து கொண்டே இருக்கும். ஒரு விதத்தில் வாசகராய் மட்டும் இருந்து விடுவது புத்திசாலித்தனமான முடிவு. எழுத்தாளராய் தொடர நினைப்பது துர்பாக்கியமான முடிவு.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...