செய்யு - 272
மொத கொழந்தைப் பொறந்து செத்துப் போனதுல
நாகு அத்தைக்குப் பேய் பிடிச்சாப்புல ஆயிப் போயிடுச்சு நெலமை. சாமிக் குத்தமா ஆயிப்
போயித்தாம் இப்படி கொழந்தைச் செத்துப் போயி, அம்மாகாரிக்கும் பைத்தியம் பிடிச்சிடுச்சின்னு
ஊருல பேச ஆரம்பிச்சிட்டாங்க. நடுராத்திரியில தூக்கம் கலைஞ்சி எழுந்திருச்சிச்சுன்னா
"எங்க எம்மட புள்ள? எங்க எம்மட புள்ளய பொதைச்சீங்க?"ன்னு சத்தம் போட்டுகிட்டே
அது பாட்டுக்கு சுடுகாட்ட பாக்க ஓட ஆரம்பிச்சிடும். கதவ தொறந்துட்டு நாகு அத்தை ஓடுறதப்
பாத்துட்டு சுப்பு வாத்தியாரும், நாது மாமாவும் தூக்கதிலேந்து முழச்சிக்கிட்டு கண்ண
கசக்கிக்கிட்டுப் பின்னாடியே ஓடுவாங்க. நாகு அத்தை பேய் பிடிச்சாப்புல ஓடுற ஓட்டத்துக்கு
அவங்களால ஈடு கொடுத்து அவ்வளவு வேகமா ஓடி முடியாது. நாகு அத்தை எட்டு அடி வைச்சு ஓடுனா,
இவங்களால நாலு அடி வைச்சுத்தாம் ஓட முடியும்.
சுடுகாட்டுல போயி மண்ண பெராண்டுறது,
"எழுந்திரிச்சி வாடி எந் தங்கமே!"ன்னு மண்ண போட்டு அடிக்கிறதுன்னு நாகு
அத்தைப் பண்றதை சரி பண்ணி வூட்டுக்குக் கொண்டு வர்றதுக்குள்ள நாது மாமாவுக்கும், சுப்பு
வாத்தியாருக்கும் போதும் போதும்ன்னு ஆயிடும். ரெண்டு பேரும் ரெண்டு பக்கத்துலயும்
உள்ள கைகள பிடிச்சிக்கிட்டா நாகு அத்தை காலைத் தூக்கிக்கிட்டுத் அப்படியே பல்லை நறநறன்னு
கடிச்சிக்கிட்டுத் தொங்கும். அப்படி தொங்குற நெலமையோடயே ரெண்டு பேருமா அத தூக்கிக்கிட்டே
வூட்டுக்கு வருவாங்க. வூட்டுக்குக் கொண்டாந்ததும், எங்க மறுபடியும் இது மாதிரி ஓடிப்
போயிடுமோன்னு வூட்டுக்குள்ள போட்டு கதவ சாத்துனா, கதவப் போட்டு படார் படார்ன்னு
அது அடிக்கிற அடியில அக்கம் பக்கத்துல இருக்குற சனங்க எல்லாம் எழுந்திரிச்சிடும்.
தாதிமாரு கெழவியும் வந்து பாத்துட்டு அதுக்குத்
தெரிஞ்ச மூலிகையை எல்லாம் அரைச்சி, நல்லெண்ணெய்ல போட்டு கொதிக்க வெச்சி, சூடு ஆறுன
பிற்பாடு அதை நாகு அத்தை தலையில வெச்சி குளிப்பாட்டி விட்டுப் பாத்துச்சு. ஒரு நாளைக்கு
ரெண்டு மூணு தடவை அப்படிக் குளிப்பாட்டும் தாதிமாரு கெழவி. அது குளிப்பாட்ட குளிப்பாட்ட
நாகு அத்தைக்கு மூக்குலேந்து சளி சளியா ஊத்துனுச்சே தவிர மனசுல பிடிச்ச பிரமை போகல.
ஒருவழியா தாதிமாரு கெழவி யோசிச்சுப் பார்த்து, "நம்ம சாமியாடிப் பயல கொண்டாந்தாத்தாம்
சரியாவும் போலருக்கு. அவ்வேம் வந்து உடுக்கை அடிச்சி, வேப்பலையப் பிடிச்சி, விபூதிய
அடிச்சான்னாக்கா பிடிச்சப் பேயி துண்ட காணும் துணியக் காணும்னு ஓடிப் போயிடும். பிடிக்க
வர்ற பேயி சொல்லிக்காம கொள்ளிக்காம ஓடிப் போயிடும். செத்துப் போன பிள்ளத்தாம் இவள
பிடிச்சிக்கிட்டு ஆட்டுது. அதெ வெரட்டுனத்தாம் யம்பீ காரியம் ஆவும்."ன்னு அது
சொன்னதும் நாது மாமா சாமியாடிய கொண்டாந்தாரு.
நாது மாமா கூப்புட்டு சாமியாடி வராம இருக்க
முடியுமா என்ன? சாமியாடி நாது மாமா கோஷ்டியில ஒரு ஆளு. சாராயத்த வாங்கி நாது மாமா
கொடுக்குற கோஷ்டியில அவருதாம் மொத ஆளா இருந்தாரு. அதால நாது மாமா கூப்புட்டவுடனே
கூப்ட்ட வேகத்துக்கு ஓடியாந்துட்டாரு.
சாமியாடி நல்ல உருண்டு ரெண்ட உருவம். மின்னலு
அடிக்கிற மாதிரிச் செவப்பு நெறம். கையி, காலு, ஒடம்பு எல்லாம் பார்க்க கெழங்காட்டம்
அம்சமா அதெ நேரத்துல மிரட்டலாவும் இருக்காரு. அவரு வந்து நாகு அத்தைய தூரத்துலப் பாத்தவுடனே,
"ஆமாம்டா யம்பீ! கொறை வயசு கொழந்தைதாம்டா ஒம் பொஞ்சாதிய பிடிச்சு ஆட்டுது.
நம்மகிட்ட நடக்குமா? ஒண்ணு நாம்ம இருக்கணும். இல்ல அது இருக்கணும். நாமளா அதுவாமான்னு
பாத்துடுவோமடா யம்பீ!"ன்னு ஆரம்பிச்சி உடுக்கைய எடுத்து வெச்சி, வேப்பிலைத் தழைகள
அப்படியே கொத்தா சுத்திப் போட்டு வெச்சாரு. நாது அத்தைய கொண்டாரச் சொல்லி வேப்பிலைத்
தழைகள சுத்தி போட்டு வெச்ச எடத்துல நடுவாப்புல குந்தச் சொல்லி உடுக்கைய அடிக்க ஆரம்பிச்சாரு.
சாமியாடி பேயோட்ட வந்துட்டார்ன்னு தெரிஞ்சதும் அக்கம் பக்கத்து சனங்க எல்லாம் ரவண்டு
கட்டி வந்து நின்னுட்டுங்க. ஓடுற பேயைக் கண்ணால பாக்கணும்னு அத்தனை சனங்களும் முழிச்ச
முழி மாறாம நிக்குதுங்க.
"ஏய் சண்டாமுனி! யாருகிட்ட ஒம் வேலய
காட்டுறே! முனிக்கெல்லாம் முனிடா இந்தச் சாமியாடிடா! காளியம்மா பக்தனுல்ல இந்தச் சாமியாடிடா!
வந்த வழியே ஓடிப் போயிடு! இந்தச் சாமியாடி எழுந்து வந்து ஒதைக்குறதுக்குள்ள ஓடிப்
போயிடு! ஒத்த அடி தாங்க மாட்டே! ஓடும்புல ஒத்த இடம் வுட மாட்டேம்! வெளுத்து எடுத்துப்
புடுவேம்! அடே சண்டாமுனி! சொல்லுறது கேக்கலையா? உடுக்கை அடி பத்தலையா? விபூதிய எடுத்து
அடிச்சா தாங்குவியா? வேப்பலை அடிக்கு நீயி இருப்பீயா? வெரட்டுறப்பவே மருவாதிய ஓடிப்
போயிட்டா ஒனக்கு நல்லது. போனாப் போவுது பொழைச்சிப்
போயிடுன்னு விட்டுப்புடுவேம். ஓடாம நின்னீன்னா சொம்புக்குள்ள அடைச்சி வைச்சி பூட்டிப்புடுவேம்.
ஆயிரம் வருஷம் ஆனாலும் வெளியில வர முடியாதுடா சண்டாமுனி! ஓடிப் போயிடுடா! ஒழுங்கா
ஓடிப் போயிடுடா சண்டாமுனி எஞ் சண்டாள முனி!"ன்னு சொல்லி அடிச்சிட்டு இருந்த
உடுக்கைய கீழே வெச்சிட்டு வேப்பலைய பிடிச்சி, இடுப்பு மடிப்புல வெச்சிருக்குற விபூதிய
எடுத்து நாகு அத்தை மேல அடிச்சிட்டு வேப்பலைக் கொத்தால அடிக்கிறாரு சாமியாடி.
வேப்பலைய மேல அடிச்சதும் நாகு அத்தை கண்ண
உருட்டி மிரட்டி மொறைச்சி சாமியாடிய பாக்குறப் பார்வையப் பார்த்தா சுத்தி நிற்குற
சனங்க எல்லாத்துக்கும் பயமா இருக்கு. "என்னடா சண்டாமுனி! எங்கிட்டயே மொறைப்பு?
எங்கிட்டயே ஓம் வேலைய காட்டுறீயா? ஒன்னய இப்ப பண்ணப் போறோம்னு பாரேம்?"ன்னு
வேப்பலைய கொத்தா ரெண்டு கையிலயும் எடுத்து நாகு அத்தையைப் போட்டு அடிக்கப் போனா,
நாகு அத்தை சாமியாடிய போட்டு மடார் மடார்ன்னு நாயடி பேயடி அடிக்குது. இதுவரைக்கும்
சாமியாடி இந்த மாதிரி பேயோட்டி அடிவாங்காததால திடீர்ன்னு விழுந்த அடியில நெலைகொழைஞ்சிப்
போயி கீழே விழுந்துட்டாரு. கீழே விழுந்துட்ட சாமியாடிய நாகு அத்தை மேல ஏறி மிதி மிதின்னு
மிதிக்க சுத்தி நின்ன சனங்கத்தாம் நாகு அத்தையைப் பிடிச்சி சாமியாடிய காப்பாத்த வேண்டியதாப்
போச்சு.
அவர அப்படியே பிடிச்சி ஓரமா கொண்டாந்து
உக்கார வெச்சு கேட்டா, "ஏய் எப்படி இது உக்கிரமான சண்டாமுனிய இருக்கும் போலருக்கே.
ஏஞ் சர்வீஸ்ல இப்படி ஒரு சண்டாமுனிய பார்த்ததில்ல. அது அடிச்ச அடிக்கு இன்னும் பத்து
நாளைக்கித் தூங்க முடியா போலருக்கே. ஏலே யம்பீ நாது! பட்டச் சாராயத்துக்கு ஏற்பாடு
பண்ணுடா! இல்லன்னா ஒடம்பு வலியுல உசுரு போயிடும்டா ஒங்கண்ணனுக்கு!" அப்பிடிங்கிறாரு.
"நீதாம் பேயும் ஓட்டல ஒண்ணும் ஓட்டல.
ஒனக்கு என்ன மயித்துக்குடா பட்டச்சாராயம். போயிப் பச்சத் தண்ணிய ரோட்டோரத்துப் பைப்புல
அடிச்சிக் குடிச்சிட்டு போ!" அப்பிடிங்குது நாது மாமா.
சுப்பு வாத்தியாருதாம் ஒண்ணுஞ் சொல்லாம
ரெண்டு ரூவாய எடுத்துக் கொடுத்தாரு. அதெ வாங்கி கண்ணுல ஒத்திக்கிட்ட சாமியாடி,
"கவலப்படாதீங்க மக்கா! ராத்திரி அந்தப் பெண்டு தூங்குன பெற்பாடு வந்து தகவலச்
சொல்லுங்க. ராத்திரி வெச்சிக்கிறேம் எம்மட வேட்டைய! அது வேற ஒரு சங்கதி. எப்படிப்பட்ட
சண்டாமுனியா இருந்தாலும் அதுக்கு மெரண்டுதாம் ஆவணும். ஓடித்தாம் போவணும். பாக்குறீயா?
பாக்குறீயாடா நாது? பாரு! அப்பப் பாரு!" அப்பிடிங்கிறாரு.
என்னடா இது நாம ஒண்ணு நெனைச்சிப் பண்ணா
அது ஒண்ணா நடக்குதுன்னே தாதிமாரு கெழவிக்குக் கொஞ்சம் சங்கட்டமாத்தாம் போயிடுச்சு.
இருந்தாலும் என்ன பண்றது? சாமியாடி சொல்றாப்புல ராத்திரி நாகு அத்தை தூங்குன பிற்பாடு
அவங்கிட்டப் போயி சொல்லிப் பார்ப்போம்ன்னு அது யோசனையும் சொல்லுது. பண்றதையெல்லாம்
பண்ணியாச்சி, அதையும் பண்ணிப்புடுவோம்ன்னு ராத்திரி நாகு அத்தை தூங்குன பிற்பாடு சுப்பு
வாத்தியாரு சாமியாடிட்ட தகவல் சொல்லி அவர மறுபடியும் கொண்டாந்தாரு. அது ஏன் சாமியாடிய
கூப்புட சுப்பு வாத்தியாரு போனாருன்னா... "அது கெடக்குப் போ! பாத்துக்கலாம்!
இந்தத் தடவ சாமியாடிய கூப்புட போவ மாட்டேம்!"னு நாது மாமா சொல்லிட்டதால சுப்பு
வாத்தியாரே போவ வேண்டியதாப் போயிடுச்சி.
சாமியாடி வந்தவரு, நாகு அத்தையோட தலையில
இருந்த மயித்தைக் கொஞ்சம் அப்படியே கையில வெச்சிருந்த சின்ன கத்தியால அரிஞ்சி எடுத்தாரு.
அதெ கொண்டு போயி ஊரு எல்லைக் கடைசியில இருந்த வேப்பமரத்துல ஆணியில சுத்தி ராத்திரியோட
ராத்திரியா அடிச்சி வெச்சுப் பார்த்தாரு. அவரு இங்க ஆணிய வெச்சு அடிக்க அடிக்க அங்க
நாகு அத்தைச் சாத்தியிருந்த கதவை ஒதைச்சித் தள்ளிட்டு அந்தப் பக்கமா சுடுகாடு இருக்குற
திசையில வந்திடுச்சி. அதெப் பார்த்த சாமியாடி அங்கேயிருந்து பிடிச்ச ஒட்டந்தாம். அவர
ஊரு பக்கம் பத்து பதினைஞ்சு நாளைக்கு ஆளக் காணல.
தாதிமாரு கெழவிக்கும் இதுல மனச்சங்கடமா
ஆயிப் போச்சு. திருப்தியா பார்த்த பெரசவம் இப்படி ஆவும்ன்னு அதுக்குத்தாம் என்ன தெரியும்?
குணமாக்கலாம்னு ஒவ்வொண்ணா பண்ணப் பண்ணி அது வேற விதமா உக்கிரமா ஆயிட்டே போவுது. கட்டக்
கடைசியா அதுக்கு ஒரு யோசனை வந்து தெருகோடியில இருக்குற காளியம்மன் கோயில்லயும் ஒரு
வாரம் வரைக்கும் கொண்டு போயி படுக்க வெச்சிப் பார்த்துச்சு. காளியம்மனுக்கு வேண்டிக்கிட்டு
செவப்பு கயித்த முடிச்சா முடிஞ்சி கையிலயும், கருப்பு கயித்த அது போல முடிச்சு முடிச்சா
முடிஞ்சு காலுலயும் கட்டி விட்டுச்சு. காளியம்மன் கோயில்ல படுத்துக் கெடக்குறப்ப கொஞ்சம்
சாந்தமாத்தாம் இருக்கு நாகு அத்தை. வூட்டுக்கு வந்தா அதுக்கும் சேர்த்து வெச்சி உக்கிர
தாண்டவம் ஆடுது. ஒண்ணுக்கும் குணம் ஆவுறாப்புல தெரியல.
முடிவா, சுப்பு வாத்தியாரு இது எதுவும்
வேலைக்கு ஆவாது, இது ஒரு மனவியாதின்னு சொல்லி கும்பகோணத்துல இருந்த டாக்கடருக்கிட்ட
கொண்டு போயி காட்டி மாத்திரை மருந்துகள வாங்கிக் கொடுத்தாரு. அந்த மருந்து மாத்திரைகளை
சாப்பிட்ட நாகு அத்தை நாள் முழுக்க தூங்கிக்கிட்டே இருந்துச்சு. வீட்டுல இருந்த ஒத்த
பொம்பளையும் ஒடம்பும், மனசும் சரியில்லாம இப்படிக் கெடந்தா சமைக்கிறது கொள்றது வூட்டு
வேலைகள பாக்குறது யாரு? தாதிமாரு கெழவி முடிஞ்சப்ப வந்து உதவி பண்ணிட்டு போவும். அது
வராத நாட்கள்ல சுப்பு வாத்தியாருத்தாம் அவ்வளவையும் பாத்துகிட்டு, மச்சாங்காரருக்கும்,
தங்காச்சிக்காரிக்கும் சமைச்சும் போட்டுகிட்டு வேலைக்கும் போயிட்டு வந்துட்டுக் கெடந்தாரு.
வேலைக்குப் போகலன்னா அன்னாட பொழுதை ஓட்டுறது எப்படிங்றதோட, வைத்தியம் பாக்குறதுக்கு
காச தேத்துறது எப்படிங்றதால அவரு வேலைக்கும் போய்கிட்டு, ராத்திரி தூங்குற நேரத்திலயும்
சரியா தூங்காம கொள்ளாம முக்காலியும், ஸடூலுமா அடிச்சிப் போட்டு அதெ வேலைக்குப் போற
நேரத்துல வூடு வூடா போயி வித்து காசு கிடைக்குமான்னு அலைஞ்சிட்டும் கெடந்தாரு.
இப்படியே ரெண்டு மூணு மாசம் மருந்து மாத்திரைகளைத்
திங்குறதும், அதெ தின்னவுடனே தூங்குறதும்ன்னு ஓடுன பிற்பாடுதான் நாகு அத்தை கொஞ்சம்
எதார்த்த நிலைக்கு வந்துச்சி. கொஞ்சம் கொஞ்சமா அதுக்கு தன்னோட நிலை புரிய ஆரம்பிச்சிது.
திடீர்ன்னு ஒரு நாளு மருந்து மாத்திரைக எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டு அதுவா வூட்டுவேலைகள
பார்க்க ஆரம்பிச்சிது. அண்ணங்காரரான சுப்பு வாத்தியாரு படுற பாட்டப் பாத்துட்டு,
"யண்ணே! நீயி ஊருக்குப் போயி ஆவ வேண்டியதப் பாரு! இனுமே அப்பிடி இப்பிடின்னு
நம்மாள முடிஞ்ச அளவுக்குப் பாத்துக்கிறேம்!"ன்னு சொல்லிச்சு. அப்பவும் கெளம்பி
ஊருக்கு வர்றதுக்கு யோசனைத்தாம் சுப்பு வாத்தியாருக்கு. மச்சாங்காரரான நாது மாமாதாம்,
"அது கெடக்குது போ மச்சாம்! நீயி அப்பைக்கப்போ வந்து பாத்துக்கோ! அது போதும்!
நாம்ம இனுமே நல்ல வெதமா இருந்து நல்ல வெதமா அத்தைப் பாத்துக்கிறேம்!" அப்பிடின்னு
சொன்ன பிற்பாடுதாம் அவரு அரை மனசும், கொறை மனசுமா கெளம்பி விருத்தியூருக்குக் கெளம்புனாரு. ஒரு பெரிய பூகம்பத்த சந்திச்சிட்டு வந்தது போல
ஆயிடுச்சு அவரோட நெலமை. விருத்தியூரு வூட்டுக்கு வந்தவரு யாருக்கும் தெரியாம ஒரு மூலைக்குப்
போயி அதுல சரிஞ்சி சாஞ்சாப்புல உக்காந்துகிட்டு, "இத்தையெல்லாம் பாக்கக் கூடாதுன்னுத்தாம்
ஒண்ணுக்கு ரண்டா இருந்தும் யம்மாடிகளா நீஞ்ஞ எல்லாம் போயிச் சேந்துட்டீங்களா?"ன்னு
கண்ணு கலங்கப் பாக்குறாரு. கண்ணுல தண்ணித்தாம் வரல. எல்லாம் வத்திப் போயி நாளாயிடுச்சு
போலருக்கு.
*****
No comments:
Post a Comment