18 Nov 2019

16.0



முதல் கூட்டத்திற்கு வந்தோர் பற்றிய குறிப்புகள் :
கூட்டத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்குவதன் மரபு கருதி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது வந்தக் குழப்பம் முக்கியமானது.
கண்டமிதிலுக்குப் பிறகு,
'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி முதலில் வருமா?
'தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே' என்ற வரி முதலில் வருமா? என்ற குழப்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 'கண்டமிதில்' பாடியதோடு கூட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. அவசரத்துக்குப் பார்ப்பதற்கு ஏதோ ஒரு வகுப்பின் தமிழ்ப்புத்தகம் இலக்கியக் கூட்டத்தில் எங்கும் இல்லாமல் போய் விடுகிறது. முதல் கூட்டம் என்பதால் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஒரு வரியே கூட போதுமானதுதாம் என்று முடிவாகிறது. இந்தக் குழப்பமோ, சிக்கலோ முதல் கூட்டத்தை முடித்து விடக் கூடாது அன்றோ! இரண்டு வரிகள் என்பது அதிகம்தான் என்பது போல மற்ற மற்ற வரிகளுக்குப் போகாமல் இலக்கியக் கூட்டம் தொடங்குகிறது. அடுத்தடுத்த கூட்டங்களில் தமிழ்த்தாய் முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்பதில் ஓர் உறுதி எட்டப்படுகிறது. ஓர் இலக்கியக் கூட்டம் நடத்துவதில் இப்படி ஒரு சிக்கல் ஏற்படும் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஏற்பட்டு விடுகிறது.
1. இந்தியாவில் துவங்கப்பட்டு உலகெங்கும் கிளை அலுவலகங்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிறுவனத்தில் முதலீடு இல்லாமல் தொழில் செய்யவும் இரண்டே ஆண்டுகளில் வாழ்க்கைத் தரத்தை மாற்றிக் கொள்ளவும் இருபத்தோரு வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் இருபாலோரும் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ செயல்பட்டு உழைத்து முன்னேற ஆர்வம் உள்வர்கள் மட்டும் உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற முன்குறிப்போடு வந்தவர்க்கு மூன்று அலைபேசி எண்கள் இருக்கின்றன. அவர் அந்த மூன்றையும் கொடுத்து கூட்டத்திற்கு வருகை தரும் இலக்கிய ஆர்வலர்கள் தனது தொழில் வாய்ப்பிற்கும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.
2. மனம் படைத்தவர் மனிதர்.
நினைக்கத் தெரிந்தது மனம்.
வாழ்க்கையின் முதுகெலும்பு உழைப்பு.
நகர மனிதர் அவசரமாய் வாழ்கின்றார்.
கிராமத்து மனிதர் அமைதியாய் வாழ்கின்றார்.
கல்வி கெல்லுதல் என்ற சொல்லிலிருந்து பிறந்தது.
இளமையில் கல் என்பது கட்டளை.
எப்போதும் கல் என்பது நியதி.
கருவாகி உருவாகி வாழும் வாழ்க்கையைக் கல்வியே முழுமைப்படுத்துகிறது. அதற்கான இலக்கியக் கல்வியைத் தரப் போகிறது இக்கூட்டம் என்கிறார் தமிழய்யா.
3. ஒரு பூக்காரியின் கதையைச் சொல்கிறார் வில்சன் அண்ணன்.
ஒரு ஊரில் ஒரு பூக்காரி இருந்தாள். பூவை விற்று விட்டு அவள் குடிகாரக் கணவனுக்கு பிரியாணியும், குவார்ட்டரும் வாங்கிச் செல்கிறாள். ஏன் இப்படி? என்று கேட்கிறாள் பூக்காரியின் சிநேகிதி. இதை வாங்கிக் கொண்டு போகவில்லை என்றால் கணவன் அடிப்பானே என்கிறாள் பூக்காரி. அப்படி ஏன் அவனோடு வாழ்கிறாய் என்கிறாள் சிநேகிதி. அப்படி வாழாவிட்டால் சோற்றுக்கு வழியில்லாமல் அவன் போய்ச் சேர்ந்து விட்டால் பூவும், பொட்டும் இல்லாமல் எப்படி பூ விற்பது என்கிறாள் பூக்காரி. ரோஜாவில் இருக்கும் முள்ளைப் போல பூக்காரியன் பதில் சிநேகதியைக் குத்துகிறது.
            கதையைக் கேட்ட எல்லாருக்கும் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டு விடுகிறது.
4. எழுத வசதியாக இருக்கிறதே என்று விகடு அப்போது ஹைக்கூவும், நகைச்சுவைத் துணுக்குகளும் எழுதிக் கொண்டிருக்கிறான். இரண்டோ மூன்றோ வரிகள் எழுதினால் போதுமானது இல்லையா! இரண்டிலும் அவன் சோபிக்கவில்லை என்பது வேறு விசயம். அன்று அவன் பேசியது,
அன்று ஊற்றில் நீர்
இன்று பாட்டில் நீர்
என்று அவன் சொன்னதும் எல்லாரும் கைத்தட்டினார்கள்.
            விசச்சாரயம் விலைக்கு
            விற்கப்படுகிறது.
            பிறகென்ன ஓசிக்கா விற்பார்கள்?
மனிதர் மரத்தைக் கதவாக்கிப் பூட்டிக் கொள்கிறார்
கதவாகும் முன் எந்த மரம் பூட்டிக் கொண்டது?
            இந்த ஹைக்கூக்களைச் சொல்லி விட்டு ஒரு நகைச்சுவைத் துணுக்கைச் சொல்கிறான் விகடு. நிஜமான ஹைக்கூவாக சூழல் அமைந்துப் போனது ஒரு வித நகை முரண். ஹைக்கூக்கள் அப்படித்தான் ஒரு அதிர்ச்சியை இறுதியில் ஏற்படுத்தும். அப்படி ஓர் அதிர்ச்சியை அவன் ஏற்படுத்துகிறான். கோபத்தை ஒழிப்பதற்கு யோசனைச் சொன்னதைக் கேட்டு கோபப்பட்டு விட்ட ஒரு கருமாந்திர துணுக்கைச் சொல்லி அவன் தன் பங்கை நிறைவு செய்கிறான். கேட்பவர்களுக்குக் கோபம் வந்தாலும் கோபப்பட முடியாத நிலை.
5. வண்ணத்துப் பூச்சி செடிக்குச் செடி பறந்து என்னை விட நீ அழகோ? என்னை விட உன் நிறங்கள் அழகோ? என்று ஒவ்வொரு மலராக கேள்விக் கேட்பதாக கவிதை வாசிக்கிறார் மாணிக்கம் ஐயா. அவர் ஒரு ஓவியராகவும் இருந்தார். பென்சில் ஓவியர். பென்சிலைக் கொடுத்தால் ஓவியம் தீட்டி விடுவார். ஆரம்பத்தில் கடை வைத்து, பிற்பாடு காவலாளியாக இருந்து அப்போது கவிஞராக இருக்கிறார் ஐயா.
6. கென்னடி, அண்ணா, எம்.ஜி.ஆர் எல்லாரையும் சேர்த்து ஒன்றாக கலந்து கட்டிப் பேசி விட்டு அமர்கிறார் லத்தீப் ஐயா. அவர் அஞ்சலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாகவும் இருந்து சமூக சேவகராகவும் அறியப்பட்டு இருக்கிறவர். இலக்கியம் சமூகத்தை நோக்கி நகர வேண்டும், சமூகச் சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.
7. திரைப்படத்தில் பாடல் எழுத முயற்சி செய்கிற சிவா வந்திருக்கிறார். கொடிகளை இணைத்து ஒரு கவிதை செய்திருக்கிறார். தொப்புள் கொடி, தாலிக்கொடி, காய்கறிக் கொடி, தேசியக்கொடி இவைகளெல்லாம் வளர்ந்தால் நல்லது என்றும் கட்சிக்கொடி வளர்ந்து நல்லது எதைக் கொடுக்கிறது என்றும் கேள்வியைக் கேட்டு வைக்கிறார். நல்லவேளையாக அந்தக் கூட்டத்திற்கு அரசியல் கட்சியைச் சார்ந்த யாரும் வராமல் போனது நல்லதிர்ஷ்டமாகப் போகிறது.
8. காதலைப் பாடுகிறார் கவிஞர் வேலு. முதுமைப் பருவத்தில் வருவதுதாம் முறையான காதல் என்கிறார் அவர். முதுமையில் வியாதியைத் தவிர வேறென்ன வருகிறது? அபூர்வமாக யாரோ சிலருக்கு வரும் காதலை அவர் கவிதையாய்ப் பாடுகிறார் கர்ஜிக்கும் குரலோடு.
9. ஒல்லியல் மருத்துவர் அருளும் கூட்டம் பற்றிக் கேள்விப்பட்டு வந்திருக்கிறார். அவர் ஒல்லியல் மருத்துவம் பற்றி கவிதைப் படிக்கிறார். கடுகளவு மருந்து கடலளவு வியாதிகளைப் போக்குவதாகச் சொல்கிறார். கட்டிகளைக் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி விரட்டுவதாக நாமக்கல் கவிஞரை அவர் துணைக்கழைத்து ஒல்லியல் மருத்துவத்தின் யாத்திரையை அவர் தொடங்கி வைக்கிறார். ஒரு பின்குறிப்பு என்னவென்றால், ஒல்லியல் மருத்துவம் என்பது ஓமியோபதி மருத்துவம் ஆகும்.
10. ஸ்ரீ அஷ்டலெட்சுமி ஜோதிட நிலையத்திலிருந்து வந்திருந்த சாமி ஐயா அம்மாதத்திற்கான ராசி பலனைச் சொல்கிறார். இலக்கியக் கூட்டத்தின் பல்சுவையை நிறைவு செய்கிறது அவரது பலன்கள்.
11. கூடுதலாக வந்திருந்த கோ.த.கா. ஐயாவோ, சி.கே.பி.தேவ் ஐயாவோ பேச மறுத்து விடுகிறார்கள்.
12. அறிவுரைகள் இல்லாத இலக்கியக் கூட்டத்தில் என்ன இருக்கிறது? உப்பில்லா பண்டம் உண்டோ? அறிவுரைகள் இல்லாத கவிதைகள் நம் தேசத்தில் உண்டோ? கவிஞர்கள் என்போர் தனித்தொனியில் அறிவுரை வழங்குவோர் ஆவர்.
உணவில் உன் பெயர் இருப்பதால், உறங்கும் பொழுதில் கனவுகள் இருப்பதால், செய்யும் தொழிலில் சிறப்புகள் இருப்பதால், எண்ணும் எண்ணம் நிறைவேற வேண்டி இருப்பதால் முடியும் என்று உழைத்திட வேண்டும் என்றும், சோம்பேறித்தனத்தை விரட்டிடவும், சுறுசுறுப்பைத் திரட்டிடவும் உழைத்திட வேண்டும் என்றும் கவிதை வழங்குகிறார் கவிஞர் முருகு.
            நமது பகுதியில் கலை இலக்கியத்தை ஒளி வீசச் செய்திட அகல் இலக்கியக் கூட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் படைப்புகளோடும், கருத்துகளோடும் ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொருவரும் நண்பர் ஒருவரைக் கூடுதலாக அழைத்துக் கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதாகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. முடிவில், வாழ்வில் மலரட்டும் இலக்கியம் என்ற முழக்கம் எழுப்பப்படுகிறது. கூட்டத்தின் நிறைவில் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்படுகிறது. தேநீரும், சிற்றுண்டியும் அருமை என சொன்னபடி கூட்டத்திற்கு வந்தவர்கள் கலைந்து செல்கிறார்கள். இரவு எட்டு மணிக்குத் தொடங்கியக் கூட்டம் முடிந்த போது இரவு பதினோரு மணியைக் கடந்திருக்கிறது.
            கூட்டத்திற்கு முழுமுதற் காரணகர்த்தாவான கவிஞர் தீக்காபி வரவில்லை. அவர் பிறகு எந்தக் கூட்டத்திற்கும் வரவில்லை. தீக்காபி தேசத்தில் எங்கிருக்கிறார் என்பதும் அறிய முடியவில்லை. என்றாவது ஒரு நாள் கவிஞர் தீக்காபி கூட்டத்திற்கு வருவார் என்ற நம்பிக்கையோடு மாதா மாதம் கூட்டம் மட்டும் நடந்து கொண்டிருக்கிறது.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...