செய்யு - 271
நாகு அத்தை வாயும் வயிறுமா மாசமா இருந்துச்சி.
பொண்ணுங்களுக்கு மொத பிரசவம் தாய்வூட்டுலதாம்பாங்க.
நாகு அத்தைக்கு தாய் வீடு இருக்குதே தவிர ஒண்ணுக்கு ரெண்டா இருந்த தாய்மாருகத்தாம்
போயிச் சேந்துட்டாங்களே. பத்மா பெரிம்மாத்தாம் அதெ அழச்சாந்து பிரசவம் பாத்து நல்லபடியா
கொண்டு போயி வுடணும். பத்மா பெரிம்மா அந்த விசயத்துல தெளிவா சொல்லிடுச்சி,
"காலா காலத்துல கதையைக் கட்டி வுட்டாச்சி. அவ்வளுதாம் நம்மால பண்ண முடியும். கலியாணத்துக்கு
அடவு வெச்சத இன்னும் மூக்காம கெடக்கு. இதுல பெரசவமும் வெச்சிப் பாத்தா அடவு வைக்கிறதுக்கு
வூடுதாம் இருக்கும். அதயும் அடவு வெச்சிட்டு நாம்ம ன்னா நடுத்தெருவுலயா நிக்குறது?
அததுக்கு குடும்பம் கண்ணின்னு ஆனா அதது அதத பாத்துக்க வேண்டியதுத்தாம். காலத்துக்கும்
பிடிச்சிக்கிட்டே தொங்கிக்கிட்டே இருந்தா, இஞ்ஞ நாம்ம குடும்பத்த எப்பிடிப் பாக்குறது?"
அப்பிடின்னு.
பிரசவம்ங்றது பொம்பளைங்க துணையிருந்து
பாக்குற சமாச்சாரம். இந்த விசயத்துல ஆம்பளைங்க ஒண்ணும் பண்ண முடியாது. பத்மா பெரிம்மா
இப்பிடிச் சொன்னதும் சுப்பு வாத்தியாருக்கு என்ன பண்றதுன்னே புரியல. சரி விருத்தியூருக்கு
வேணாம், வேலங்குடியிலயாவது கொண்டு போயி விடலாம்ன்னா கலியாணத்துக்கே வராத வேலங்குடி
பெரியவர்ட்ட எப்படிப் போயிக் கேக்குறதுன்னு சுப்பு வாத்தியாருக்கு யோசனையா இருந்துச்சு.
சரி பெரியவர்கிட்ட கேட்க வாணாம், சின்னவருகிட்ட கேட்டுப் பார்ப்போம்ன்னு வேலங்குடி
போயி சின்னவருகிட்ட கேட்டாக்க, "அந்த பேச்ச பேசிட்டு இந்த வூட்டுப்பக்கம் வராத!"ன்னு
மூஞ்சுல அடிச்சாப்புல சொல்லிப்புட்டாரு. சுப்பு வாத்தியாருக்கு ரொம்ப அவமானமா போயிட்டதா
மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டு, வேலங்குடிப் போன வேகத்துல பக்கத்துல இருக்குற பெரியவரு
வூட்டுக்குக் கூட போகாம திரும்பிட்டாரு.
நாது மாமாவுக்குக் குடிப் பழக்கமும், வேலை
வெட்டிக்குப் போகாத பழக்கமும் இருந்துச்சே தவிர, மத்தபடி அது நாகு அத்தையை அடிச்சதோ,
திட்டுனதோ கெடையாது. என்னதாம் சமைச்சி வைச்சாலும் நாக்குக்கு ருசியா இல்லன்னு கொறைபட்டுக்குமே
தவிர, வேறு எதையும் அது கொறையா சொல்லாது. மத்தபடி அவர போல நல்ல மனுஷன இந்தப் பூமியில
பார்க்க முடியாது. என்னதான் கஷ்டம்னாலும், நெலமைச் சரியில்லன்னாலும், "அது கெடக்குப்
போ!"ன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருப்பாரு.
சுப்பு வாத்தியாரு நாது மாமாட்ட வந்து
நெலமையைச் சொல்லிப் பேசுனாரு, "இந்தாருங் மச்சாம்! தங்காச்சிய பிரசவத்துக்கு
அழச்சிட்டுப் போவலேன்னு நெனைச்சிக்க வாணாம். அழைச்சிட்டுப் போறதுக்கான தோது இல்ல.
தங்காச்சி இஞ்ஞயே இருக்கட்டும். பிரசவத்துக்கு ஆவுற செலவு எல்லாத்தையும் நாம்ம பாத்துக்கிறேம்.
நாமளும் இஞ்ஞயே தங்கி தங்காச்சி பிரசவத்த முடிஞ்ச பிற்பாடு கெளம்புறேம்." அப்பிடிங்கிறாரு.
நாது மாமா அதுக்கெல்லாம் குறைபட்டுக்கல்ல. "அதுக்கென்ன மச்சாம்! இத்து ன்னா ஒரு
விசயமா? அஞ்ஞ இருந்தாலும் கொழந்த பொறக்கத்தாம் போவுது. இஞ்ஞ இருந்தாலும் கொழந்த
பொறக்கத்தாம் போவுது. எஞ்ஞ பொறந்தா ன்னா? ஜோப்புல எம்மாம் வெச்சிருக்கீங்க?"
அப்பிடின்னுதாம் கேக்குறாரு. சுப்பு வாத்தியாரு சட்டைப் பையிலேந்து அஞ்சு ரூவா நோட்ட
எடுத்துக் கொடுத்ததும், அதை வாங்கிட்டுச் சந்தோஷமா சாராயக்கடைக்குப் போனவருதாம்.
நல்லா போதையில நடுராத்திரிதாம் வூடு வந்து சேர்ந்தாரு.
பெரசவம் ஆவுற வரைக்கும் தங்காச்சிக்கு
ஒரு பேச்சுத் துணைக்காவது கோவில்பெருமாள்ல இருப்போம்னு அங்க தங்கி அங்கேயிருந்து
மச்சாங்காரரு வேலை பார்த்த எடங்களுக்குப் போயி வேலை பார்க்க ஆரம்பிச்சாரு சுப்பு வாத்தியாரு.
இது நாது மாமாவுக்கு ரொம்பவே வசதியா போச்சுது. காலங்காத்தாலயே மச்சாங்காரருக்குக்
கொடுக்குற சம்பளத்துல பாதிய கொடுங்கன்னு போயி வேலை நடக்குற வூட்டுக்கு முன்னாடி
நின்னு பணத்த வாங்கிட்டுத்தாம் அந்தாண்ட இந்தாண்ட நகர்வாரு நாது மாமா. வாங்கிக்கிட்டு
ஊரெல்லாம் சுத்திக்கிட்டு அவருக்கா தோணுறப்பத்தாம் வூடு வந்து சேர்வாரு. என்னைக்காவது
நெனைச்சிக்கிட்டா ஒரு நாளோ, ரெண்டு நாளோ காலங்காத்தாலேயே எழுந்திரிச்சி குளிச்சி
முடிச்சிட்டு, சந்தனப் பொட்டு, குங்குமப் பொட்டு எல்லாம் வெச்சிக்கிட்டு சுப்பு வாத்தியாரையும்
கெளப்பிக்கிட்டு வேலைக்கு வருவாரு. நல்லா மாடு போல வேலைப் பார்ப்பாரு. மச்சாங்காரரான
சுப்பு வாத்தியரப் பார்த்து, "நமக்கு இப்பதாம் புத்தி வர்ருது மச்சாம். கொழந்த
வேற பொறக்கப் போவுது. சூதானமா இருந்தாவணும். இனுமேலும் பொறுப்பில்லாம இருக்கக் கூடாது."
அப்பிடிம்பாரு. அதெ கேட்குறப்ப, "இஞ்ஞ வந்து தங்குனதும் நல்லதாப் போச்சுது. நம்மள
பாத்தாவது மச்சாங்காரரு மனசு திருந்துனாரே!" அப்பிடின்னு சுப்பு வாத்தியாரு நெனைச்சிப்பாரு.
இந்த மாத்தம்லாம் ரெண்டு நாளைக்குக் கூட
வராது. நாயி வாலைத்தாம் நிமுத்த முடியுமா? கடலு தண்ணிய எறைச்சி கட்டாந்தரையாத்தாம்
ஆக்க முடியுமா? வானத்தைப் பாயா சுருட்டத்தாம் முடியுமா? வேதாளந்தாம் முருங்கை மரம்
ஏறாம இருக்குமா? வுட்றா ஜூட்டன்னு... மூணாவது நாளு எப்படியும் நாது மாமாவ கண்டுபிடிக்க
முடியாது. ரெண்டு நாளு வேலை பார்த்த சம்பளத்தோடு, சுப்பு வாத்தியாரோட சம்பளத்தையும்
வாங்கிக்கிட்டு இலைப்பிடிக் கொல்லையில கூட்டத்தைச் சேத்துக்கிட்டு அதுங்களுக்கும்
சாராயத்தை வாங்கிக் கொடுத்துட்டு, இவரும் மூச்ச முட்ட குடிச்சிப்புட்டு கொட்டாய்ல
ஒண்ணுக்கு மண்ணா பெரண்டு கெடப்பாரு. இருக்குற நெலமையில தங்காச்சிய ஏம் தலைபிரசவத்துக்கு
அழைச்சிட்டுப் போவலன்னு கேட்டெல்லாம் பிரச்சனை பண்ணாததை நெனைச்சுகிட்டு சுப்பு வாத்தியாரும்
ஒண்ணுஞ் சொல்ல முடியாம மச்சாங்காரர கண்டுக்கிடாம அப்படியே விட்டுப்புட்டாரு. ஆனா ஊருல
ஒரு பேச்சாத்தாம் இருந்துச்சி. தலைபெரசவத்துக்கு தாய்வூட்டுக்குப் போவாம இஞ்ஞயே வெச்சிருக்காங்களேன்னு.
அப்போல்லாம் பெரும்பாலும் பிரசவங்க வூட்டுலதாம்.
பக்கத்துல அஞ்சாறு கிலோ மீட்டருல கும்பகோணத்துல ஆஸ்பத்திரி இருந்தாலும் அங்கல்லாம்
கிராமத்துலேந்து போயி கொழந்தைப் பெத்துக்கிறதில்ல. அதுவும் இல்லாம கோவில்பெருமாள்லயே
ஒரு தர்மாஸ்பத்திரியும் இருந்திச்சி. அங்கயும் போயி பிரசவம் பாத்துக்கலாம்ன்னாலும்
அங்க நோய் நொடின்னு மக்கள் போவுமே தவிர, பிரசவத்துக்குன்னு போறதில்ல. பிரசவத்துக்கு
எல்லாம் யாரு ஆஸ்பத்திரி போவாங்கன்னு மக்கள் நெனைச்ச காலகட்டம் அது.
தாய்வூட்டுக்குத் தங்காச்சிய அழைச்சுகிட்டுப்
போவலன்னு சுப்பு வாத்தியாருக்கு ஒரு மனக்குறைத்தாம். அதுக்கு ஒரு யோசனையைப் பண்ணி,
சுப்பு வாத்தியாரு அந்த ஊர்ல இருந்த தாதிமாரு கெழவிகள்ல ஒண்ண பார்த்து விசயத்தச் சொல்லி,
"நீஞ்ஞதாம் கொஞ்சம் தொணைப் பண்ணி தங்காச்சி பெரசவத்த நல்ல வெதமா பாத்துக் கொடுக்கணும்னு!"
அஞ்சு ரூவா பணத்தையும், வெத்தலைப் பாக்கையும் வெச்சிக் கொடுத்துக் கேட்டுக்கிட்டாரு.
அஞ்சு ரூவா பணத்தைப் பார்த்ததும் அந்தக் கெழவிக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சுது. யாரும்
இப்படி முன்கூட்டி பணத்தை வெத்தலைப் பாக்கோடு வெச்சிக் கொடுக்குறதில்ல. அவங்களும்
பணத்துக்காக பெரசவம் பாக்குறது இல்ல. பெரசவம் பாக்குறத அவங்களோட கடமையா நெனைச்சித்தாம்
செய்வாங்க. இது மாதிரி ஊர்ல இருக்குற கெழவிங்க ஒவ்வொண்ணும் நூறு பிரசவம், இருநூறு
பிரசவத்த அசால்ட்டா பாத்திருக்கும்ங்க. பெரசவம் பாத்து முடிச்சதும் ரெண்டு ரூவா பணமும்,
ஒரு புடவையும், வெத்தலைப் பாக்கையும் ஒரு மரியாதைக்கு வெச்சிக் கொடுத்தா சந்தோஷமா
வாங்கிப்பாங்க. புடவையையும் புதுப்புடவையா கொடுக்கணும்னு அவசியமில்ல. பழையப் புடவையைக்
கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிப்பாங்க.
சுப்பு வாத்தியாரு தந்த அஞ்சு ரூவாய் பணத்த
எட்டா மடிச்சி புடவைத் தலைப்புல வெச்சி முடிச்சிப் போட்டுக்கிட்டு அந்தத் தாதிமாரு
கெழவி சொல்லிச்சி, "ஒந் நெலமை புரியுதுய்யா நமக்கு. இஞ்ஞ வூட்டுல நாம்ம சும்மாத்தானே
கெடக்கிறேம். ஒந் தங்காச்சிக்கு பெரசவம் ஆயி கொழந்த பொறந்து நல்ல வெதமா ஆவுற வரைக்கும்
அஞ்ஞ அந்த வூட்டுலயே வந்து தங்கிடறேம்யா!" அப்பதாம் சுப்பு வாத்தியாருக்கு மனசுல
இருந்த பாரம் கொஞ்சம் இறங்குனுச்சு. "ரொம்ப சந்தோசம். நல்ல வெதமா கொழந்தைப்
பொறந்தா ஒங்களுக்கு ன்னா செய்யணுமோ அதெ ரண்டு பங்கா செய்யுறேம்!"ன்னாரு சுப்பு
வாத்தியாரு. "இந்த ஊருல கெடக்குற கொடுக்குக எல்லாம் நாம்ம கைய வெச்சிப் பொறந்ததுதாம்யா!
நீயி ஒண்ணும் கவலப்பட வேணாம்யா! நீயி மவராசனா போயி ஒம்ம வேலயப் பாரு. பெரசவம் பண்ணி
ஒனக்கு ஒரு மருமவன கொண்டாறது நம்மட கடமெ!" அப்பிடின்னுச்சி அந்தக் கெழவி. இப்போ
சுப்பு வாத்தியாரோட மனசுல இருந்த பாரம் சுத்தமா இறங்கிடுச்சி.
அவரு சந்தோஷமா வேலைக்குப் போக ஆரம்பிச்சாரு.
மரவேலைன்னு மட்டுமில்லாம, இலைபிடிக் கொல்லையில இலை நறுக்குற வேலைன்னு எந்த வேலைன்னாலும்
கோவில்பெருமாள்ல செய்ய ஆரம்பிச்சிட்டாரு. ராத்திரி நேரத்துல யாராவது வந்து,
"இந்தாரும்யா! இதெ சைக்கிள்ல வெச்சி கும்பகோணத்துல போயி இந்த மூட்டையைப் போட்டுட்டு
வந்துடு, ரெண்டு ரூவா தர்றேம்!"ன்னு சொன்னாலும் சுப்பு வாத்தியாரு எங்க சைக்கிளு,
எங்க மூட்டைன்னு எடுத்து வெச்சிட்டுக் கெளம்பிடுவாரு. பிரசவம் ஆவுற தங்காச்சிக்குக்
கேட்குறத வாங்கிக் கொடுக்குறதுக்கும், பிரசவ நேரத்துல பண்ணுறதுக்கு செலவுக்கு ஆவுமேன்னு
இந்த வேலை, அந்த வேலைன்னு எந்தக் கணக்குமில்லாம எந்த வேலை எப்ப வந்தாலும் செஞ்சிட்டுக்
கெடந்தாரு சுப்பு வாத்தியாரு.
நாகு அத்தைக்குத் தலைபிரசவத்துல அழகான
பொம்பளைப் புள்ளை பொறந்துச்சி. பெரசவம்லாம் நல்ல விதமா முடிஞ்சதுல சுப்பு வாத்தியாருக்குச்
சந்தோஷம் தாங்க முடியாம, அப்பவே ஒடனே கும்பகோணத்துக்கு ஒரு வாடகைச் சைக்கிள எடுத்துட்டுப்
போயி அந்தத் தாதிமாரு கெழவிக்கு பன்னெண்டு ரூவாயில ஒரு நல்ல புடவைய எடுத்துக்கிட்டு,
அந்தக் கெழவி சொன்ன மருந்து சாமான்கள எல்லாத்தியும் நாட்டு மருந்துக் கடையில வாங்கிட்டு
வந்தாரு. கெழவிக்குப் புடவையோட, பத்து ரூவாய் பணத்தையும், வெத்தலைப் பாக்கோடு வெச்சிக்
கொடுத்தாரு சுப்பு வாத்தியாரு. கெழவிக்குத் தாங்க முடியாத சந்தோஷம்.
"இத்து மாரி எனக்கு யாரும் ஏம் அனுபவத்துல
பண்ணதில்லய்யா. பெரசவம் பாக்குறவங்கள்ல முடிஞ்சவ இருப்பாங்க, முடியாதவங்க இருப்பாங்க.
அதால நாஞ்ஞ இதயெல்லாம் எதிர்பார்க்க மாட்டோம். கொடுத்தா வாங்கிக்கிறது. இல்லன்னா
நல்ல வெதமா கொழந்தைப் பொறந்துச்சேன்னு அதெய சந்தோஷமா நெனைச்சிட்டுப் போயிடுறது.
இதுவரைக்கும் நாம்ம கையி வெச்சி ஒண்ணு பழுதில்ல. எல்லாம் நல்ல வெதமா பொறந்து, பொறந்தது
வளர்ந்து அதுகளுக்கும் பெரசவம் பாத்தாச்சி. எல்லாம் அந்த எழுமலையாம் புண்ணியம். நம்ம
கையில ன்னா இருக்கு? எல்லாம் அவ்வேம் பாத்து கொடுத்து ராசித்தாம்யா! நீயி நெல்லா இருப்பே.
ஒங் கொழந்தைக் குட்டிங்களோட மவராசனா இருப்பேய்யா! யாரு வுட்டாலும் தங்காச்சிய வுட்டுடக்
கூடாதுன்னு வந்து நிக்குறே பாரு அந்த கொணத்துக்கே ஒனக்கு ஒரு கொறையும் வாராதுய்யா!"
அப்பிடின்னுது அந்தக் கெழவி.
பொம்பளைப் புள்ளையா பொறந்திடுச்சேன்னு
மச்சாங்காரருக்கு வருத்தமோ என்னவோன்னு அதையும் மனசுல வைச்சுக்காம சுப்பு வாத்தியாரு
நாது மாமாகிட்டே கேட்டாரு, "ஏம் மச்சாம்! பொம்பள புள்ளயா பொறந்திடுச்சேன்னு
ஏதாச்சிம் நெனைக்குறீங்களா?"ன்னு.
"மொத புள்ள பொம்பள புள்ளயத்தாம்
மச்சாம் பொறக்கணும். மகாலட்சுமி வந்துப் பொறந்திருக்கிறதா சொல்லுவாங்க. புள்ளீகள்ல
எந்தப் புள்ள பொறந்தா ன்னா? எல்லாம் புள்ளீகத்தாம். அது செரி! ஜோப்புல எம்மாம் வெச்சிருக்கீங்க?
பெரசவத்துக்கு வேற செலவு ஆயிருக்குமே?" அப்பிடிங்கிறாரு நாது மாமா. சுப்பு வாத்தியாரு
சிரிச்சிக்கிட்டே அஞ்சு ரூவாயை எடுத்துக் கொடுத்தாரு. அஞ்சு ரூவாயையும் கொழந்தைப்
பொறந்த சந்தோஷத்தைப் போதையோட கொண்டாடத்தாம் நாது மாமா பயன்படுத்துவாருன்னு சொல்ல
வேண்டியதில்ல. அப்படித்தாம் பண்ணாரு.
சுப்பு வாத்தியாருக்கு வேலைக்கிப் போயிட்டு
வந்தா அந்தக் கொழந்தைய தூக்கி வெச்சிக்கிறதுதாம் வேல. கொழந்தை நல்லா கொழுகொழுன்னு
செவப்பா மூக்கும் முழியுமா லட்சணமா வேற பாக்கறதுக்கு நாது மாமா சொன்ன மாதிரியே மகாலெட்சுமி
போலவே இருக்கு. அதோட லட்சுமிக் கடாட்சத்த பாத்துட்டு பதினாறு கொண்டாடுறப்போ கொழந்தைக்கு
லட்சுமின்னே பேரும் பெச்சிட்டாங்க. கொழந்தையோட அழகையும், அது கையி கால ஆட்டிப் பண்ணுற
குறும்புகளையும் பாத்த அக்கம் பக்கத்துல இருக்குற சனங்க அந்தப் பாப்பாவ தூக்கிட்டுக்
கொண்டு போயி வெச்சிக்கிறதையே ஒரு வேலையா பண்ண ஆரம்பிச்சிடுச்சுங்க.
பாக்குற சனங்க எல்லாம கொழந்தை நல்லா இருக்கு,
நல்லா இருக்குன்னு சொல்லியே கண்ணு வைக்குறதா தாதிமாரு கெழவி குழந்தைக்கு திட்டிச்
சுத்தியெல்லாம் போட்டு அப்பைக்கப்போ வந்து பாத்துகிடுச்சி. சுப்பு வாத்தியாரும் வாரா
வாரத்துக்கு கெழவிக்கு ரண்டு ரூவா பணத்தைக் கொடுத்திட்டு இருந்தாரு.
லட்சுமி பாப்பா நல்ல விதமாத்தாம் இருந்துச்சி.
அந்தப் பாப்பா குப்புற பொறள்றதுக்குள்ளயே சுப்பு வாத்தியாரு அதுக்கு நடைவண்டிய செஞ்சுப்
போட்டாரு. ரொம்ப அம்சமா அழகா வேற செஞ்சிப் போட்டாரு. அதெப் பாக்குற சனங்க எல்லாம்
நடைவண்டியோட அழகைப் பாத்துட்டு ரண்டு மாசத்துலயே கொழந்தை எந்திரிச்சி நடக்கப் போவுதுன்னு
கிண்டல் பண்ணிப் பேசிக்கிட்டாங்க. மூணு மாசம் வரைக்கும் எந்தக் கொறையும் இல்ல லட்சுமிப்
பாப்பாவுக்கு.
ஒரு நாளு ராத்திரி கொழந்தைக்கு மூச்சு
இழுத்து இழுத்து வாங்குது. என்ன ஏதுன்னு புரியாம தாதிமாரு கெழவிய கொண்டாந்துப் பாத்தாங்க.
கணையா இருக்கும்னு அது கை வைத்தியமா என்னென்னமோ செஞ்சிப் பார்க்குது. எதுக்கும் அது
அடங்கல. ஒடனே கோவில்பெருமாள் தர்மாஸ்பத்திரிக்குக் கொண்டு போனா அந்த நேரத்துல அங்க
ஒரு நர்ஸம்மாத்தாம் இருக்கு. அத நெலமையைப் பாத்துட்டு கும்பகோணத்துக்குக் கொண்டு
போங்கன்னு சொன்னதும் ஒடனே ஒரு மாட்டு வண்டிய கட்டிக்கிட்டுப் போறாங்க. போற வழியிலேயே
கொழந்தைக்கு மூச்சடங்கிப் போயிடுச்சு.
"என்ண்ணே! இப்பிடியாயிடுச்சே!"ன்னு
அழுது பொலம்புன நாகு அத்தையை வூடு கொண்டாந்து சேக்குறதுக்குள்ள பெரும்பாடு ஆயிடுச்சி.
நாகு அத்தை மாட்டு வண்டியில ஏறி நின்னு கிறுக்குப் புடிச்சாப்புல குதிக்குது. சத்தம்
போடுது. மாருல அடிச்சிக்கிது. கீழே வுழுவுது. எழுந்திரிச்சி நின்னு தலையில அடிச்சிக்கிது.
சுப்பு வாத்தியாருக்கு அழுத கண்ணீருக்கு அளவு இல்ல. சின்ன புள்ளை கணக்கா மூசு மூசுன்னு
அழுவுறாரு. வண்டி வூடு வந்து சேருது. சேதி தெரிஞ்சி சனங்க எல்லாம் கூடிடுச்சி. வூடு
வூடா தூக்கிட்டுப் போயி செல்லங் கொஞ்சுன பாப்பாங்றதால ஒவ்வொரு சனமும் அழுது பொரளுது.
காவிரியோட அஞ்சு கிளையாறு ஓடுற அந்த ஊர்ல சனங்களோட கண்ணுத்தண்ணி ஓடாத கொறைதாம்.
ஆனா நாது மாமா கண்ணுலேந்து மட்டும் சொட்டுத் தண்ணி எறங்கல.
காலாங்காத்தாலேயே தொட்டில்ல பாடைக் கட்டி
லட்சுமிப் பாப்பாவ கொண்டு போயி புதைச்சிட்டு வந்தாங்க. நாகு அத்தை அழுது அழுது ஓய்ஞ்சிப்
போயி வூட்டுக்குள்ளார சுருண்டு போயி வுழுந்து கெடக்கு. நாது மாமா முகத்துல எந்தச்
சலனமும் இல்ல.
சுப்பு வாத்தியாரு நாது மாமாட்ட வந்து,
"மச்சாம்! மனசுலயே வெச்சுக்காதீங்க. அழணும்னா அழுதுபுடுங்க!" அப்பிடிங்கிறாரு.
"அது கெடக்குது மச்சாம்! போவட்டும்.
ஒண்ணு போனா இன்னொன்னு பெத்துகிட்டப் போச்சு. ஜோப்புல எம்மாம் வெச்சிருக்கே?"
அப்பிடிங்கிறாரு. சுப்பு வாத்தியாருக்கு வர்ற கோபத்துக்கு ஒண்ணுஞ் சொல்ல முடியாம
ரண்டு ரூவாய எடுத்துக் கொடுத்தாரு. அதெ வாங்கிட்டுப் போயி சாராயத்த குடிச்சிட்டு
வந்தவரு இலைபிடிக் கொல்லையில இருக்குற கொட்டாயில படுக்காம மொத மொதல்லா வூட்டுத்
திண்ணையில வந்து படுத்தாரு. அவரு கண்ணுலேந்து கொஞ்சம் கண்ணீரு வழிஞ்சிருந்துச்சு.
*****
No comments:
Post a Comment