17 Nov 2019

15.2



            வார்த்தையிலிருந்து வார்த்தை பிறக்கிறது. வார்த்தை விளையாட்டுகள்தான் பேச்சா? வார்த்தைகளின் சங்கிலித் தொடர் பின்னல்கள்தான் எழுத்தா? ஆம். இல்லையென்று சொல்வதற்கு ஏதும் இருக்கிறதா?
            வடிவங்களை வடிவங்களாகப் பார்ப்பதில் பிரச்சனை இருக்கிறது. வடிவங்களை வார்த்தைகளாக்கிப் பார்த்தால்தான் புரிகிறது. உணர்ச்சியை, கவலையை, அழுகையை, பரவசத்தை எல்லாவற்றையும் பார்க்க வார்த்தைகள் தேவைகளாக இருக்கின்றன. கவிதையை, பாடல்களை, கதைகளை அப்படித்தாம் உரு கொள்கின்றன. உணர்வின் தெறிப்புகள் வார்த்தைகளாக வந்து விழுகின்றன. வார்த்தைகளைக் கவனிக்கிறோம். உணர்வுகளை விட்டு விடுகிறோம். ஒன்று இன்னொன்றாக மாறும் போது சேதாரம் இருக்கும், ஒழுகல் இருக்கும், இழப்பு இருக்கும். ஒன்று இன்னொன்றாக மாறும் போது முழுமையாகப் போய் சேர்வது சொற்பம். சொற்பத்தில் ஒரு பார்வை சேர்ந்து முழுமையாகிறது. பொருள் கண்ணெதிரே இருந்தாலும் வார்த்கைகளால் ஆன வரையறையில் அன்றோ இருக்கிறது பொருள்.
            நான் பருகும் தேநீர் என்னுடையதாகிறது. நீ பருகும் தேநீர் உன்னுடையதாகிறது. இருவரும் பருகிய தேநீர் ஒன்றாகாது. இருவரும் உணர்ந்த சுவை வேறு, அருந்திய வேகம் வேறு, இருந்த மனநிலை வேறு. பருகுவதற்கு முன்பிருந்த தேநீர் ஒன்றாக இருந்திருக்கலாம். பருகப்பட்டதற்குப் பின்பு வேறு வேறு.
             தரம் என்ன பெரிய தரம்? ஒவ்வொருவர் பேசுவதிலும், எழுதுவதிலும் ஏதோ ஒன்று இருக்கிறது. கூர்ந்து பார்க்க வேண்டியது கடமை. சுமாராக சொல்லப்படும் கவிதையிலிருந்து சுமாராகச் சொன்ன கவிஞரைக் கூர்ந்து பார்க்கலாம். கவிதையைப் பார்த்து கவிஞரை மதிப்பிட்டு ஏமாந்து விடக் கூடாது. கவிதை மூலம் கவிஞரைப் பார்க்கும் பார்வையில் சுமாரான கவிதையை எழுதிய கவிஞர் எழுத்தின் பரிணாமக் கட்டத்தைச் சொல்ல கூடியவர்.
            இலக்கியக் கூட்டத்திற்காக வலிந்து பேசியதோ? கூட்டத்திற்காக அவசரக் கதியில் தயார் செய்யப்பட்டதோ? அது இலக்கியமோ இல்லையோ என்னவோ? அது நிகழ்ந்ததற்கான நிதர்சனப் பின்னணி புதிய விசயங்களைச் சொல்லக் கூடும். அது ஒன்றையே நாவலாசிரியர் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்.
            பொதுவாக மனிதர்களுக்கு ஓர் இலக்கியக் கூட்டத்தை நடத்திக் காட்டுவதை விட, ஓர் இலக்கியக் கூட்டத்தை எழுதும் போது அது வேறு ஒரு வடிவம் கொள்கிறது, அதுவே அவர்களுக்குப் பிடிக்கிறது. கற்பனையில் ஒரு கூட்டம் அவர்களின் நாட்டம். காலத்தில் பின்தங்கி விட்ட, காலத்தால் காணொலிக்குள் உறைய வைக்கப்பட்டாத அந்தக் கூட்டங்களைப் பற்றி எழுதுவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது? ஒரு திரைப்படமாக எடுத்து அதை ஓட விட்டால் படுதோல்வி அடையும். எழுத்தில் அந்த வியாபாரத் தோல்வி இல்லை. எழுதி ஓரமாக வைத்து விட்டால் விருப்பப்படுவார்கள் படித்துக் கொள்வார்கள். விருப்பம் இல்லாதவர்கள் கழிவறைக் காகிதமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அந்தப் பிரச்சனைக்காக இதைப் புத்தகமாக்குவதும், ஆக்காமல் விடுவதும் சக்தியின் வேலையும் முடிவும் ஆகும். எழுத்து இணையத்தில் இருப்பது ஒரு பாதுகாப்பு. எடுத்துத் துடைக்க முடியாது.
            நமக்கு நேரமாகிக் கொண்டிருக்கிறது. நேரமாகி விட்டது. நாம் கூட்டத்திற்குச் செல்வோம்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...