செய்யு - 270
கோவில்பெருமாள் நல்ல செழிப்பான ஊரு. பக்கத்துப்
பக்கத்துலயே காவிரியோட அஞ்சு கிளையாறுங்க ஓடுற ஊரு. நெல்லு விவசாயத்த விட காய்கறி
விவசாயமும், பூக்கொல்லைகளும், வாழைக் கொல்லைகளுமா வருஷம் முழுவதும் விவசாயம் நடக்குற
ஊரு. அந்த ஊருதான் நாகு அத்தையைக் கட்டிக் கொடுத்த ஊரு. காலா காலத்துல நாகு அத்தைக்குக்
கலியாணத்த பண்ணி விட்டுடணும்னு பத்மா பெரிம்மா நெனைச்சதுல கோவில்பெருமாள் ஊர்ல இருந்த
நாது மாமாவோட நாகு அத்தைக்குக் கலியாணம் ஆச்சுது.
நாது மாமா நல்ல செவப்பு. ஒடிசலான தேகம்.
மரவேலையில நல்ல வேலைக்காரரு. ஆனா வேலை செய்ய மாட்டாரு. "பொதுவா நல்ல வேலைக்கார
ஆளுங்க வேலை செஞ்சி சம்பாதிக்க மாட்டானுங்க. சுமாரான வேலைக்காரங்க, வேலை சரியா தெரியாத
ஆளுங்க உற்சாகமா வேலை செஞ்சு சம்பாதிப்பானுங்க."ன்னு நாது மாமா போற போக்குல
அடிச்சி வுட்டுக்கிட்டு இருப்பாரு. வேலைக்குப் போனாலும் பாதி வேலையில ஆளு காணாமப்
போயிடுவாரு. ஆள பிடிச்சாந்து கொண்டாந்து வேலை வாங்கி முடிக்கிறதுக்குள்ள வூட்டுக்காரங்களுக்குப்
போதும் போதும்னு ஆயிடும். வூட்டுல வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டு எங்கேயாவது போயிட்டு
வருவாரு. அலட்சியமான புத்தி அவருக்கு. வானம் இடிஞ்சி விழுந்து, பூமி சுக்குநூறாப் போறப்ப,
"என்ன மாமா இப்படியாவுதே?"ன்னு கேட்டாக்கா, "ஆமா! அது கெடக்குப் போ!"ன்னு
போயிட்டே இருப்பாரு.
கோவில்பெருமாள் ஊர்ல இலைகட்டுக் கொல்லைகள்
அதிகம். வாழையிலைக்காகவே வாழைமரங்களை வளர்க்குற கொல்லைகளை இலைகட்டுக் கொல்லைகள்ன்னு
சொல்லுவாங்க. இலைபிடிக் கொல்லைன்னும் அதெ சொல்லுவாங்க. வாழைமரம் இலை விட ஆரம்பிச்சா
போதும் ரக வாரியா வெட்டி கட்டு கட்டிக்கிட்டே இருப்பாங்க. கும்பகோணத்துக்கு வர்ற
வாழையிலை எல்லாம் இங்கேயிருந்த வர்றதுதாம். இலைக்கட்டு கொல்லைகள்ல இலைகளை வெட்டிக்
கொண்டாந்து கட்டுறதுக்குன்னே ஒரு கொட்டாயி போட்டு வெச்சிருப்பாங்க. இலைகளைப் பங்கீடு
பண்ற வரைக்கும் அந்தக் கொட்டாய்கள்ல வேலை இருக்கும். அதுக்குப் பெறவு அப்படியே வெறிச்சோடித்தான்
கிடக்கும். அப்படி அந்தக் கொட்டாய்க ஏன் வெறிச்சோடி கெடக்கணும்னு அங்கப் போயி படுத்துடுவாரு
வேலைக்குப் போறதா சொல்லிட்டுப் போற நாது மாமா. அவருக்குக் குடி பழக்கம் வேற இருந்திருக்கு.
அது பிற்பாடுதாம் தெரிஞ்சிது. அவரும் குடிச்சிப்புட்டு, அங்கங்க நிற்குற ஆளுகளையும்
பிடிச்சி அவங்களுக்கும் வாங்கி ஊத்தி விட்டுட்டு இலைகட்டுக் கொல்லைகள்ல இருக்குற கொட்டாய்கள்ல
படுக்குறதே அவருக்கு வேலையாப் போச்சுது. அதெ ஒரு தொழில்முறை மாதிரியே பண்ணிட்டு இருந்தாரு
அவரு.
நாது மாமாவுக்கு நாகு அத்தையைக் கட்டி
கொடுத்த ஆரம்ப காலத்துல நாகு அத்தைக்கு இது பெரிசா தெரியல. கலியாணம் பண்ணிக் கொடுக்குற
பெண்ணுக்கு அப்போ நகைநெட்டுல்லாம் போட்டு, சீர்வரிசைச் சாமான்களோட ஒரு மாசத்துக்குத்
தேவையான மளிகை சாமான்கள் வரைக்கும் வாங்கிக் கொடுத்துதாம் அனுப்புவாங்க. அதே வெச்சிச்
சமைச்சுப் போட்டுக்கிட்டு, புருஷங்காரன் வேலைக்குப் போறதா நெனைச்சுக்கிட்டு சந்தோஷமா
இருந்திருக்கு. அதோட கலியாணத்த நடத்தி முடிக்கிறதுக்குள்ள மேல் மூச்சு கீழ் மூச்சு
வாங்கியிருக்கு சுப்பு வாத்தியாருக்கும், பத்மா பெரிம்மாவுக்கும். சுப்பு வாத்தியாரு
தச்சு வேலை பார்த்து சம்பாதிச்சு வெச்சிருந்த காசுல ஏழெட்டுப் பவுனு சேர்த்து வெச்சிருந்தாரு.
அதெப் போட்டு விட்டு, அங்கயிங்க கடன வாங்கி சீர்வரிசைச் சாமான்கள வாங்கிக் கொடுத்து,
மத்தபடி கலியாணச் செலவுக்கு வூட்டுல இருந்த பித்தளைப் பாத்திரங்க வரைக்கும் பத்மா பெரிம்மா
அடகு வெச்சித்தாம் நாகு அத்தையோட கலியாணத்த நடத்தியிருக்காங்க.
கலியாணம் சுவாமிமலையில நடந்திருக்கு. அந்தக்
கலியாணத்துக்கு சாமான்களையெல்லாம் மாட்டு வண்டியில போட்டுகிட்டு விருத்தியூர்லேந்து
போயிருக்காங்க. கலியாணத்துக்கு வேலங்குடி பெரிய மாமாவுக்குப் பத்திரிகையெல்லாம் வெச்சி
கெஞ்சிக் கூத்தாடி கூப்புட்டுப் பாத்துருக்காங்க. "அவ்வேம் மாப்புள சரியில்ல.
அதெச் சொன்னாக்கா மூத்த மருமவ்வேம்ங்ற மருவாதி நமக்கு ன்னா இருக்கு? அதால நம்மால வார
முடியா!"ன்னு ஒத்தக் கால்ல நின்னுருக்காரு. அப்படி நின்னபடியே கலியாணத்துக்கு
அவரு வரல. ஒரு எட்டுப் போயி பேருக்குப் பாத்துட்டு வந்துடுவோம்னு சொன்ன செயா அத்தையையும்
போக விடல. அவரு வந்திருந்தா கலியாண வேலைக அத்தனையையும் ஒத்த ஆளா எடுத்துக்கட்டிச்
செய்வாரு. யாருக்கும் எந்தச் செரமும் இருக்காது. அவரு வராம போக கலியாண வேலைகள எடுத்துக்கட்டிச்
செய்யுறதே செரமமா போயிருந்திருக்கு.
நாகு அத்தையோட கலியாணத்துக்கு வேலங்குடி
சின்னவரு மட்டுந்தாம் வந்தாரு ரசா அத்தையையும் அவரோட புள்ளைங்களையும் கூப்புட்டுகிட்டு.
வந்தவரு சோக்கா நின்னுப்புட்டு சோக்கா போயிட்டாரு. அவரு பெரியவரு மாதிரில்லாம் வேலைகள
எடுத்துக் கட்டிச் செய்ய மாட்டாரு. வந்தார்ன்னா வேட்டி மடிப்புக் கலையாம நாசுக்கா இருந்துட்டு
அதே நாசுக்குக் கொறையாம, கலியாணம் முடிஞ்சதும், ஊர்ல வேலைக் கெடக்குன்னு சொல்லிட்டுக்
கெளம்பிப் போயிடுவாரு. செயராமு பெரிப்பாவும், பத்மா பெரிம்மாவும் நாகு அத்தைய கலியாணம்
பண்ணி மறுவூடு கொண்டு போயி வெச்சதோடு சரிதாம்.
பொதுவா வூட்டுக் காரியங்க எதுலயும் செயராமு
பெரிப்பா பட்டும் படாமத்தாம் நடந்துக்கும். அதோட வேல வேலைக்குப் போறதும், சம்பாதிக்கிறது
மட்டுந்தாங்றது போல நடந்துக்கும். வேறெதையும் கண்டுக்காது. கலியாணத்து வேலைக அத்தனையும்
சுப்பு வாத்தியாரு தலையிலயும், பத்மா பெரிம்மா தலையிலயும்தாம் விழுந்துச்சி. இதுல ஏற்பாடு
எல்லாம் பத்மா பெரிம்மாங்றதால அது வேலங்குடி பெரியவரு மாதிரியே நின்னு கலியாணத்து முடிச்சிக்
கொடுத்துச்சு. அப்படி முடிச்சிக் கொடுத்ததுதாம். செயராமு பெரிப்பாவும், பத்மா பெரிம்மாவும்
நாகு அத்தைய மறுவூடு கொண்டு போயி வெச்சிட்டு, அதுக்குப் பின்னாடி அந்தப் பக்கமே எட்டிப்
பார்க்கல. கதை முடிஞ்சிப் போயிடுச்சின்னு விட்டுட்டாங்க. சுப்பு வாத்தியாருதாம் அப்பைக்கப்போ
போயி பாத்துட்டுக் கெடந்திருக்காரு.
நாது மாமாவோட அண்ணன் தம்பிங்க எல்லாரும்
தனித்தனியா இருந்ததால நாது மாமா, நாகு அத்தை இவங்க ரெண்டு பேரும் தனிக்குடித்தனமாத்தாம்
இருந்தாங்க. நாது மாமாவோட அண்ணன்ங்க எல்லாரும் தெருவுக்கு முன்னாடி வீடுகள கட்டியிருந்ததால,
இவருக்கு வீட்டுக்குப் பின்னாடி இருந்த எடத்த கொஞ்சம் பிரிச்சிக் கொடுத்து அங்க ஒரு
கொட்டாயைப் போட்டுக்கச் சொல்லி, அந்தக் கொட்டாயிக்குப் போய்ட்டு வர்றதுக்கு ஒரு
சந்தை வேலி வெச்சி ஒதுக்கி விட்டுட்டாங்க. ஒத்தையடிச் சந்து அது. அந்தச் சந்துக்கு
ரெண்டு புறமும் முள்ளு வேலிகள வெச்சா எப்டி இருக்கும்? வேலி முள்ளுங்க முன்ன பின்ன
நீட்டிக்கிட்டு சந்து வழியா போறவங்கள கீறிக்கிட்டும், கிழிச்சிக்கிட்டும் கெடந்ததுங்க. நாது மாமா அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கல. அதுவே
போதும்னு இருந்திடுச்சு. நாகு அத்தைக்கும் அதிலெல்லாம் மனத்தாங்கல் இல்ல. எடமும் இல்ல,
ஒண்ணும் இல்லன்னு வெரட்டி விடாம, ஏதோ இருக்க கொல்லைக்குக் கடைசியிலயாவது எடம் கொடுத்தாங்களேன்னு
திருப்திப்பட்டுக்கிச்சு. அந்தச் சூழ்நிலையெல்லாம் அதுக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சி.
நாட்கள் ஓட ஓடத்தான் பிரச்சனை ஆரம்பிச்சிச்சு.
வேலைக்குப் போகாம எத்தனை நாளுக்குத்தாம்
பொழுத ஓட்டுறது? ஆடிக்கொரு ஒரு தடவெ அமாவாசைக்கு ஒரு தடவெ வேலைக்குப் போய்ட்டு,
அதுல சம்பாதிக்கிற காசையும் நல்லா குடிச்சுப்புட்டு, ஏதோ பேருக்குக் கொஞ்சம் காச
நாகு அத்தைக்கிட்ட கொடுப்பாரு நாது மாமா. அந்தக் காசு அன்னைக்கு அரிசி வாங்கிச் சமைக்குறதுக்கே
பத்தாது. சாப்பாடு போடாட்டியும் அது பத்திப் பெரிசா கண்டுகிட மாட்டாரு நாது மாமா.
அவரு பாட்டுக்கு கடையில நாலு இட்டிலிய சாப்பிட்டுட்டுப் போய்ட்டு இருப்பாரு. சரியா
நாலு இட்டிலித்தாம் சாப்பிடுவாரு. அதுக்கு மேலயும் சாப்பிட மாட்டாரு. வூட்டுல சமைச்சிப்
போட்டாலும் புளிப்புப் பத்தல, உப்ப சரியாப் போடல, காரம் கம்மியா இருக்குன்னு எதையாச்சியும்
நொட்டாரம் சொல்லிட்டு இருப்பாரு. அததெ சமைக்கிறதுக்கு உண்டான சாமான்களா வாங்கிப்
போட்டாத்தான்னே வூட்டுல இருக்குற பொண்டுக சரியா சமைச்சிப் போட முடியும். அதெ நாது
மாமா புரிஞ்சிக்க மாட்டாரு. தாஞ் சம்பாதிச்சிப் போடாட்டியும் சாப்பாடு நறுவிசா இருக்கணும்னு
நெனைப்பாரு.
எப்போதும் இப்படித்தாம் ஒரு சாமாஞ் செட்டு
எதையும் வாங்கிப் போட மாட்டாரு, வூட்டோட நெலையையும் கண்டுக்க மாட்டாரு நாது மாமா.
ஆனா சமைச்சிப் போட்டா நல்லா கொறைய மட்டும் சொல்வாரு. ஏதோ நாகு அத்தை அங்க இங்க
கடன ஒடன வாங்கி சமைச்சிப் போட்டிருக்கும். அதெச் சாப்பிட்டுட்டு, "நாக்குக்கு
ருசியா சமைச்சிப் போட்டாத்தான்னே மனுஷன் சாப்புட முடியும்! இப்டிச் சமைச்சிப் போட்டா
மனுஷன் எப்டிச் சாப்புட முடியும்?"ன்னு பாதிச் சாப்பாட்டுலயே எழுந்துட்டுப் போயிடுவாரு.
நாகு அத்தைக்கு ச்சேன்னுப் போயிடும். பல நாளு இதெப் பிரச்சனை ஆக அது மனசளவுல சோர்ந்துப்
போயி சமைக்காம கொள்ளாம அப்படியே படுத்துக்கிட ஆரம்பிச்சிடுச்சி. அக்கம் பக்கத்துல
இருந்த சனங்கத்தாம் வந்து பாத்துக்கிட்டு அவங்க வூட்டுல சமைச்சதுல பட்டினியா கெடக்குதுன்னே
ஒரு வேளையோ, ரெண்டு வேளையோ ரவ சோத்தப் போட்டுக் கொண்டாந்து கொடுத்துட்டுப் போயிருக்காங்க.
சுப்பு வாத்தியாரு போயி பாத்துட்டு வர்றப்ப சும்மா வராம பணத்த கொஞ்சம் கொடுத்துட்டுத்தாம்
வருவாரு. அப்படியும் அவருக்கு மனசு கேக்காம பஸ்ஸூ ஏறப் போற நேரத்துல, பஸ்ஸூ ஏறாம கடையில
கொஞ்சம் உப்பு, புளி, மிளகா, அரிசின்னு சாமான்கள கொஞ்சம் வாங்கிப் போட்டுட்டு மறுபடியும்
வந்து பஸ்ஸூ ஏறுவாரு.
சுப்பு வாத்தியாரும் அவரு பங்குக்கு மச்சாங்காரர்கிட்ட
எவ்வளவோ சொல்லித்தாம் பார்க்குறாரு. "அது கெடக்குது மச்சாம் பாத்துக்கலாம்.
மரத்த வெச்சவங் தண்ணி ஊத்தாமல போயிடுவாம்? பொழுது விடிஞ்சா பொழுது போவாமலயாப் போயிடுது?
யார கேட்டுச் சூரியென் வருது? யார கேட்டு நெலா வருது? அதல்லாம் அந்தந்தக் காலத்துக்கு
நடக்க வேண்டியது நடந்துகிட்டே இருக்கும்! ஜோப்புல எம்மாம் வெச்சிருக்கே! பணம் இருந்தா
கொஞ்சம் கொடேம்!"ன்னு பணத்த வாங்கிக்கிட்டு அவரு பாட்டுக்குப் பட்டச்சாராயத்த
தேடிட்டுக் கெளம்பிடுவாரு.
ஒரு கொழந்தைக் குட்டின்னு பொறந்தா எல்லாம்
சரியாப் போயிடும்ன்னு நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு. அந்த மாதிரி நெனைப்புகதானே ஒரு
பிடிப்பையும், நம்பிக்கையையும் வாழ்க்கையில கொடுக்குது. அப்படி லேசுல சரியாப் போவுற
பிரச்சனையா அது?
*****
No comments:
Post a Comment