ஒன்றையொன்று விழுங்குவது வாழ்க்கை. மீன்
புழுவை விழுங்குகிறது. மீனை மனிதன் விழுங்குகிறான். மனிதனை மனிதர்களோ, மலைப்பாம்போ
விழுங்குகிறது. விழுங்குவதும், விழுங்கப்படுவதும் பூமியின் மாறாத விதி. பூமி அவ்வபோது
சுனாமியின் நாவெடுத்தோ, பூகம்பத்தின் பல் பிடித்தோ விழுங்காமல் இருக்காது. இலக்கியக்
கூட்டத்தை அரசியல் கூட்டம் விழுங்கத் தொடங்கி, நாடகக் கொட்டகைகள் செரித்து, சினிமாக்
கொட்டகைகள் ஏப்பம் விட்டு, தொலைக்காட்சி, சீரியல்கள் மலமாய் வெளியேற்றிய ஆண்டுகளில்
அகலின் முதல் கூட்டம் தொடங்கியிருந்தது. வில்சன் அண்ணன் வீடு மாடியில் இருந்தது. மாடிக்குக்
கீழே கடை இருந்தது. மாடிக்கூடத்தில் கூட்டம் நடைபெற்றது.
வில்சன் அண்ணனின் அம்மாவோ, அவரது துணைவியாரோ
கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் கூட்டவாதிகளுக்கான சிற்றுண்டி, தேநீர் தயாரிப்பதில்
மும்மரமாக இருந்தார்கள். கூட்டத்திற்கு ஆண்கள் யாரும் தங்கள் மனைவிமார்களை அழைத்து
வரவில்லை. ஆண்களுக்கான கூட்டமாக இருந்தது அந்த இலக்கியக் கூட்டம். இலக்கியக் கூட்டம்
என்றால் அது ஆண்களின் கூட்டம். ஆக இலக்கியக் கூட்டம் என்ற பெயர் இலக்கண முறைப்படி தவறு.
ஆண்களின் கூட்டம் என்பது சரி. பெண்களுக்கு இலக்கியம் வேண்டாவோ என்னவோ? அதனாலென்ன
இலக்கியக் கூட்டங்களில் பெண்களின் சமஉரிமை, ஆண் பெண் சமத்துவம் பற்றிப் பேசப்படுகிறது.
இலக்கியம் என்ன செய்யும்? பேசத்தான் முடியும் அதனால். வெறுமனே பேசுவதற்குக் கூட ஆண்களே
போதும் அதுக்கு. பேச்சுக்குக் கூட பெண்களைப் பெரிதுபடுத்தாது இலக்கியக் கூட்டங்கள்.
ஆனாலென்ன இலக்கியத்தில் பெண்களைப் பற்றிய குறிப்புகள் அதிகம்.
விகடு கல்யாணம் ஆகும் முன்பிலிருந்து,
கலியாணம் ஆன பின்பு வரை அகல் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறான். தங்கையையோ, மனைவியையோ
இலக்கியக் கூட்டத்துக்கு அழைத்துப் பார்த்து ஏமாற்றத்தின் உச்சாணிக் கொம்பில் ஊசலாடியிருக்கிறான்.
"அந்த அறுவையையெல்லாம் கேட்டுகிட்டு எம்மாம் நேரம்ப்பா உட்கார்ந்திருக்கிறது?"
என்ற கேள்வியில் அவனது மனைவி இலக்கியத்தைத் தாளித்து வறுத்தெடுத்து அவன் கையில் கொடுத்திருக்கிறார்.
தொலைக்காட்சியில் பார்க்கும் சீரியல்
இலக்கியம் இல்லையா? தீபாவளிப் பட்டிமன்றம் இலக்கியம் இல்லையா? என்ற தங்கையின் கேள்விக்கு,
அதெப்படி இலக்கியம் இல்லை என்று அடித்துச் சொல்ல முடியும்? என்று அடிசறுக்கியிருக்கிறான்.
வெறும் கேளிக்கை மட்டும் எப்படி இலக்கியம்
ஆக முடியும்? சமகாலத்தில் வெறும் கேளிக்கை மட்டும் இலக்கியம். உருவகேலியும், பெண்மையைச்
சிறுமைபடுத்தும், திருநங்கையரையும், திருநம்பியரையும் இழிவு செய்யும், மனிதரை மனிதர்
மட்டும் தட்டும், அநாகரிகம் செய்யும் நகைச்சுவை இலக்கியம். வெறும் நகைச்சுவை
- வெற்று நகைச்சுவைகள் இலக்கியம். ஒரு நிமிடத்துக்கு
எண்பது முறை சிரிக்க வேண்டும். ஒரு நிமிடத்துக்கு இருப்பது அறுபது நொடிகள். எப்படி
எண்பது முறை சிரிக்க முடியும்? அப்படிச் சிரிக்க வைத்தால் அது மட்டுமே இலக்கியம். நகைச்சுவையும்
சிரிப்பும் நல்ல மருந்து. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும். நகைச்சுவையில்
தீராத வியாதியில்லை. எல்லாம் சரி. இங்கு வியாதியே அதுதாம் என்றால் அதுக்கு எப்படி அதுவே
மருந்தாகும்?
நாவலாசிரியரால் சிரிக்க சிரிக்க பேச முடியாததற்கு
மன்னிக்கவும். சிரிக்க சிரிக்க அவரால் எழுத முடியாமைக்கும் மன்னிக்கவும். அவர் தீவிரமான
ஒரு விசயத்தை நோக்கி வர விரும்புகிறார். Be Serious!
*****
No comments:
Post a Comment