15 Nov 2019

சாவு காரியம் வந்தா கலியாண காரியம் பண்ணு!




செய்யு - 269
            வீட்டுக்கு வீடு புள்ளைங்க கணக்கு அப்போ அதிகம். புள்ளைங்க புள்ளைங்களோட கலந்து விளையாடணும்னு தெருவுக்குப் போக வேண்டியதில்ல. ஒவ்வொரு வூட்டுக்குள்ளயும் அவ்வளவு புள்ளைங்க தெருவுல நிக்குற மாதிரித்தாம் நிக்கும். ஒவ்வொரு வூட்டுக்கும் அஞ்சுப் புள்ளைங்க, பத்துப் புள்ளைங்கலாம் சர்வ சாதாரணம். அத்தனைப் புள்ளைங்கள்ல தங்குற புள்ளைங்களைத்தாம் நாம்ம கணக்குல எடுத்துக்கணும். ஏன்னா எந்தப் புள்ளை எப்போ பொட்டுன்னு போகும்னு அப்போ சொல்ல முடியாது. திடீர்ன்னு காய்ச்சல்ன்னோ, ஒடம்புக்கு முடியலன்னோ படுக்கும். செத்துப் போயிடும். வீட்டுக்கு வூடு புள்ளைங்களோட மரணம் ஒண்ணொ, ரெண்டோ அப்போ ஒவ்வொரு வூட்டுக்கும் இருக்கும். அப்படிச் செத்துப் போற புள்ளைங்கல மெனக்கெட்டு போட்டோ பிடிச்சி படமா மாட்டி வெச்சு சாமியா கும்புடுவாங்க. அது ஒரு பழக்கம். போட்டோ புடிக்கிறதுன்னா அப்போ சாதாரணமா காரியமா? அதுக்காக குடவாசலு வரைக்கும் போயி போட்டோக்கடை வெச்சிருக்கவங்கள மெனக்கெட்டுக் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டாந்து ரொம்ப செலவு பண்ணித்தாம் படம் எடுக்கணும். செத்துப் போன புள்ளைய திரும்பக் கொண்டார முடியாதுன்னாலும், அந்தப் புள்ளைய படத்துலயாவது பாத்துட்டு இருப்போம்ன்னு ஆறுதலுக்காகத்தாம் அப்போ அம்புட்டு செலவு பண்ணி போட்டோ பிடிப்பாங்க.
            அப்படி விருத்தியூர்ல ஒரு போட்டோ படம் இருக்கு. அது பத்மா பெரிம்மாவோட பொம்பள புள்ளையான பவானியோட போட்டோ. பத்மா பெரிம்மாவுக்கு மொத்தமா கணக்குப் பார்த்தா நாலு பொம்பளைப் புள்ளைங்க, மூணு ஆம்பளைப் புள்ளைங்க வரும். அதுல மூத்ததா பொறந்த பொண்ணுதாம் பவானி. நல்ல அழகான பொம்பளப் புள்ளைன்னு அதைப் பத்திப் பேசிப்பாங்க. ரத்தினத்து ஆத்தா, தையல்நாயகி ஆத்தா, சுப்பு வாத்தியாரு, நாகு அத்தைன்னு எல்லாரும் செல்லமா தூக்கி வளர்த்தப் பொண்ணு. அதெ பத்மா பெரிம்மா பெத்துப் போட்டாலும் அது வளர்ந்தது எல்லாம் ரத்தினத்து ஆத்தாகிட்டத்தாம். நல்லா வளர்ந்து பத்து பதினோரு வருஷம் வரைக்கும்  திடகாத்திரமா இருந்த பொண்ணுதான் அது.
            ரத்தினத்து ஆத்தா செத்துப் போயி ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ ஆயிருக்கும். அப்போ திடீர்னு ஒரு நாள் காய்ச்சல்ன்னு படுத்த புள்ளைத்தாம். வீட்டுலயும் என்னென்னமோ செஞ்சுப் பாக்குறாங்க. அப்போ ஊருக்கு ஊரு ஒரு வைத்தியரு இருப்பாரு. அவரும் வந்து பாத்துட்டு என்னென்னமோ மூலிகைளை அரைச்சுக் கொடுத்துப் பார்க்குறாரு, கசாயத்த கொடுத்துப் பார்க்குறாரு. காய்ச்சலு மட்டும் மட்டுப்படுறாப்புல இல்ல. ஒரு கட்டத்துக்கு மேல அவரே, "இனுமே இது எங் கையில இல்ல. குடவாசலு தர்மாஸ்பத்திரிக்குக் கொண்டு போங்க!" அப்பிடின்னுட்டாரு. அங்க கொண்டு போனா ரோஸூ கலர்ல, செவப்பு கலர்ல என்னென்னமோ மருந்த கலந்து கொடுத்துப் பாக்குறாங்க. ஊசியும் போட்டுப் பாக்குறாங்க. எந்த மருந்துக்கும் அந்தக் காய்ச்சல் கட்டுபடாம பவானி அன்னிக்கு ராத்திரியே இறந்துப் போச்சுது. குடும்பத்துல அப்போ அது ஒரு தாங்க முடியாத சோகமாப் போயிடுச்சி. சுப்பு வாத்தியாருக்கும், நாகு அத்தைக்கும் ஏக வருத்தம். அவங்க கைக்குள்ளயே வளர்ந்த புள்ள அது.
            இப்படி அடிக்கடி சாவும் சங்கதியுமா வூடு போயிட்டு இருக்கே! இந்தக் குடும்பத்துல ஒரு நல்ல காரியம் நடக்கணும்னு ஊருக்குள்ள எல்லாருக்கும் ஒரு நெனைப்பு உண்டாயிடுச்சு. அது மட்டுமில்லாம இப்போ அப்பன் ஆயி இல்லாத பொண்ணா வேற ஆயிடுச்சா நாகு அத்தை. அதால அது மேல எல்லாருக்கும் தனிக்கரிசனமும், பாசமும் வேற வந்துப் போச்சு. ஆளாளுக்கு அதுக்கு ஒரு மாப்புள்ளையா பாத்துக் கல்யாணம் பண்ணி வைக்கணும்ங்ற எண்ணம் உண்டாயிடுச்சி.
            விருத்தியூருக்கு முக்கியமான டவுன்னுன்னா கும்பகோணந்தாம். அங்கப் போனா எல்லா சாமான்களயும் வாங்கிட்டு வந்துப்புடலாம். அவ்வளவு தூரம் போவ முடியாதப்ப மட்டுந்தாம் சனங்க குடவாசல்ல சாமான்கள வாங்கிக்கும்ங்க. ஒரு சில சனங்க திருவாருக்கும் வந்து சாமான்கள வாங்கிக்கும்ங்க. கும்பகோணத்தோட ஒப்பிட்டா அப்போ திருவாரூ ஒரு கிராமம்ன்னுத்தாம் சொல்லணும். ஏன்னா கும்பகோணங்றது நூறு திருவாரூக்குச் சமம். கும்பகோணம் போகணும்ன்னா நேஷனல் பஸ்ல ஏறி உக்காந்தா குடவாசலு போயி அங்க கொஞ்ச நேரம் கெடந்துட்டு அடுத்த முக்காலு மணி நேரத்துல கும்பகோணத்துலக் கொண்டு போயி வுட்டுப்புடும். ஒரே பஸ்ஸூதாம். திருவாரூன்னா குடவாசலு வரைக்கும் ஒரு பஸ்ஸூ, குடவாசல்லேர்ந்து திருவாரூக்கு இன்னொரு பஸ்ஸூன்னு ரெண்டு பஸ்ஸூ மாறணும். அந்த வகையில பெரும்பாலான சனங்களுக்கு கும்பகோணந்தாம் பிடிச்சமான டவுனு.

            சாமான்கள வாங்குறதுக்கு மட்டுமில்லாம பஸ்ஸூக போயிட்டு வர ஆரம்பிச்ச அப்புறம் விருத்தியூர்லேந்து கும்பகோணத்துக்குப் போயி வேலை வெட்டிகளப் பாக்குற சனங்களோட எண்ணிக்கையும் அதிகமாயிடுச்சி. கும்பகோணத்த சுத்தி இருக்குற ஊர்கள்ல வாழைக்கொல்லை, பூக்கொல்லை, காய்கறிக் கொல்லைன்னு அங்க பாக்குறதுக்கு ஏகப்பட்ட வேலைங்க கெடைச்சது. அத்தோட அங்கேயிருந்து காய்கறி, பழங்கள வாங்கியாந்து விக்குறதுன்னு ஏகப்பட்ட சனங்க விருத்தியூருக்கும், கும்பகோணத்துக்கும் பயணப்பட ஆரம்பிச்சதுங்க. அப்படி சனங்கப் போயிட்டு வந்ததுல கும்பகோணத்துக்குப் பக்கத்துல இருக்குற கோயில்பெருமாள்ங்ற ஊர்ல இவங்க வகையுறாவுல ஒரு மாப்புள்ளை இருக்குறதாவும், அந்தப் பையன நாகு அத்தைக்குக் கட்டிக் கொடுக்கலாம்னு போய்ட்டு வந்த சனங்க பத்மா பெரிம்மாகிட்ட போயிச் சொல்லியிருக்குங்க.
            பத்மா பெரிம்மாவும் ஒரு நாளு சனங்களோட சனங்களப் போயி விசாரிச்சுப் பாத்துட்டு வந்துச்சு. அந்த சங்கதிய அப்படியே அது சுப்பு வாத்தியார வெச்சி கடுதாசியா எழுதி வேலங்குடி பெரியவருக்கு எழுதிப் போட்டுச்சு. இதுல வேடிக்கை என்னான்னா பத்மா பெரிம்மா செயராமு பெரிப்பாவையோ, சுப்பு வாத்தியாரையோ எதுவும் கலந்துக்கல. அது பாட்டுக்குப் போனுச்சி. அது பாட்டுக்கு விசாரிச்சிச்சு. அடுத்தபடியா சுப்பு வாத்தியார்ர கூப்பிட்டு வெச்சி விசயத்த சுருக்கமா சொல்லிப்புட்டு வேலங்குடி பெரியவருக்குக் கடுதாசிய எழுத சொல்லிப்புடுச்சி. அவரு அண்ணங்காரரு மட்டுமில்லாம அந்தக் குடும்பத்துக்கு மூத்த மருமவன் வேறய்யா. அத்தோட கலியாண சோலின்னா அவர்ர மாதிரி எறங்கி வேலைப் பார்க்க யாரு இருக்கா?
            கடுதாசி விருத்தியூர்லேந்து வேலங்குடிக்குப் பறந்துச்சு. கடுதாசி கெடைச்சதும் வேலங்குடி பெரியவரு வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையுமா கையில கடியாரத்தைக் கட்டிக்கிட்டு பந்தாவா திருவாரூக்கு நடையைக் கட்டிட்டாரு. திருவாரூ வந்தவரு ஒரு தினத்தாள வாங்கி கையில வெச்சுகிட்டு அப்படியும் இப்படியுமா ஒரு அஞ்சு நிமிஷத்துக்குப் பாத்தாரு. அவருக்கு அதுல தலைப்பைத் தவிர வேற எதையும் படிக்குறதுன்னா கஷ்டந்தாம். இருந்தாலும் அவரு பேப்பரை இப்படியும் அப்படியுமா வெச்சிப் பாக்குறதை நாலு பேரு பார்க்கணும்னு நெனைப்பாரு. அத்தோட அங்க இங்க கேட்ட செய்திகளையும், எப்பாயாச்சிம் எங்கேயாவது போறப்ப ரேடியோவுல கேட்ட சேதிகளையும் கலந்து கட்டி அந்தப் பேப்பர்லேந்து படிச்ச மாதிரி பக்கத்துல இருக்குறவங்ககிட்ட கதெ அளந்துகிட்டு இருப்பாரு. அப்படி ஒரு அளப்பு அளந்துட்டு அந்த தினத்தாள அப்படியே கக்கத்துல சுருட்டி வெச்சிக்கிட்டு, ஒரு சிகரெட்டு வாங்கி பத்த வெச்சிக்கிட்டு கும்பகோணத்துக்கு நடந்துப் போறது ஆகுற கதையில்லன்னு முடிவு பண்ணிட்டு பஸ்ஸ பிடிச்சு ஏறி கோவில்பெருமாள்ல எறங்கிக் கடுதாசியில உள்ள மாப்புள்ளப் பத்தின விவரங்கள விசாரிக்கிறாரு. விசாரிச்சா அவருக்குத் திருப்திப்படல. ஒடனே அங்கேயிருந்து பஸ்ஸப் புடிச்சி குடவாசல்ல எறங்குனவரு, விருத்தியூருக்கு அங்கேயிருந்து நடையைக் கட்டிட்டு வர்றாரு.
            "ன்னாடி தங்காச்சி நீயி மாப்புள்ள புள்ள பாத்திருக்க. போயி விசாரிச்சேம். நமக்குத் திருப்திப்படல. வேற எடம் பாத்துக்கலாம்." அப்பிடிங்கிறாரு வேலங்குடி பெரியவரு பத்மா பெரிம்மாகிட்ட.
            "ன்னா ஒனக்குத் திருப்திப்படல. கோவில்பெருமாள் ஊர்ல ஒரு மாப்புள்ள கெடைக்கிறதுன்னா ச்சும்மாவா? வருஷத்துக்கு அத்தனை நாளும் வேல கெடைக்கும் தெரியும்ல. பூ பறிக்குறது ன்னா? களைப் பறிக்குறது ன்னா? வாழைக்கொல்லையில வேலை ன்னா? ச்சும்மா பொழுது போகலன்னு அரை நாளு வேலைக்குப் போனாலும் அம்புட்டுக் காச அள்ளிட்டு வந்திடலாம். அந்த ஊர்ல ஒரு புள்ளையாண்டான் கெடைக்குறான்னா தோதுபடல, திருப்திப்படலன்னு வந்து நிக்குறீயே?" அப்பிடிங்குது பத்மா பெரிம்மா.
            "நாம்ம சொல்ல வேண்டிய சொல்லிட்டேம். அத்து வாணாம்ன்னா வாணாம். மாப்புள்ள புள்ளையாண்டான் வேலைக்காரன்னாலும் சரியா வேலைக்குப் போறதில்ல, ஊரு சுத்திக்கிட்டு கெடக்குறான்னு பேசிக்கிறாங்க தெரியும்மா ஒனக்குத் தங்காச்சி!" அப்பிடிங்கிறாரு பெரியவரு.
            "ஊருல நாலு வெதமாத்தாம் பேசிப்பாம். நாம்ம விசாரிச்ச வரைக்கும் அவுங்க அண்ணன் தம்பி நாலு பேரு. நாலு பேத்துக்கும் எடம் இருக்கு. அவுங்கவங்க கலியாணத்தப் பண்ணிட்டு குழந்தைக் குட்டியோட தனிதனியா வூடாகிக் கெடக்காங்க. இருக்குற வூடு அந்தப் புள்ளையாண்டானுக்குத்தாம். கொல்லை, எடம் பவுசு எல்லாம் போதும். அதாங் வேலைக்காரம்ன்னு நீயே சொல்லுதியே! பெறவு ன்னா கலியாணம் ஆயி பொண்டாட்டின்னு ஒருத்திப் போயி குந்துன்னா எல்லாஞ் சரியாயிடும். நல்ல சம்பந்தமா இருக்கு. வுட்டுட்டா பெறவு கெடைக்காது பாத்துக்க!" அப்பிடிங்குது பத்மா பெரிம்மா.
            "நீயும் ஒம்மட வூட்டுக்காரரும் அத்தோட கொழுந்தனாரு யம்பீயையும் அழைச்சிட்டுப் போயிட்டு வந்துட்டுச் சொல்லுங்க. பெறவு பாத்துக்கலாம். கலியாணங்றது ஆயிரம் காலத்துப் பயிரு. ஊருல அவங்க சொன்னாங்க, இவுங்க சொன்னாங்கன்னு சொல்றதுக்குல்லாம் பண்ணிட்டு நிக்க முடியாது. கடைக்குட்டி பொண்ணு வேற. பாத்துத்தாம் செஞ்சாவணும். சித்தே அவசரபடாத!" அப்பிடிங்கிறாரு பெரியவரு.
            "அததெ காலா காலத்துக்குக் கதைய பண்ணி வுட்டுட்டா அதது கதையெ பாத்துட்டுப் போயிடும்ங்க. அத்தெ கலியாணத்தப் பண்ணி வுட்டாத்தாம் யண்ணே ஒம்மட சின்ன மச்சானுக்கு ஒரு கதையெ கட்டி வுடலாம். எல்லாத்தையும் எத்தனை காலத்துக்கு வூட்டுலயே வெச்சிக்க முடியும்? காலா காலத்துல கதையெ கட்டி வுட்டாகணும் பாத்துக்கோ. ரொம்ப கணக்குப் பாத்துட்டு கெடந்தீன்னா ஒரு கதையும் ஆவாது." அப்பிடிங்குது பத்மா பெரிம்மா.
            "ஒம்மட அவசரத்துக்கு எல்லாம் கதையெ கட்ட முடியா தங்காச்சி. அது நல்லதில்ல. ஆர அமர யோஜிச்சுத்தாம் பண்ண முடியும். ஒண்ணுக்கு நாலு எடமா விசாரிச்சுப் பாத்துத்தாம் செய்யணும். தாளிக்கப் போடுற கடுகா பொரிஞ்சுத் தள்ளாத. இதல்லாம் நெதானமா சூதானமா பண்ண வேண்டியது." அப்பிடிங்கிறாரு பெரியவரு.
            "நீயி நெதானமா சூதானமா பண்ணிட்டுக் கெடப்பே. அது வரைக்கும் இதல்லாம் வெச்சி யாரு சோத்தப் போட்டுப் பாத்துக்கிட்டுக் கெடக்குறது? வயசுக்கு வந்தப் பொண்ண எத்தினி நாளு வூட்டுல வெச்சிட்டுக் கட்டுக்காவலு பாத்துட்டு நிப்பே. கண்ணல வெளக்கெண்ணய விட்டுட்டுல்லாம் நிக்க முடியா. நீயி யண்ணே! நேரங்காலம் புரியாம அலைஞ்சி அலைஞ்சி மாப்புள்ள பாத்துட்டு இருப்பே. அதுக்குள்ள இதுக்கெல்லாம் முடி நரைச்சி கெழவியா போயிடும். பெறவு ஒரு கெழவன பாத்துத்தாம் கட்டி வைக்கணும். அதுக்கும் நீயி கெழவன்னா மாப்பிள்ளையா கொண்டாரன்னு அது செத்து அதோட கருமாதிக்குத்தாம் ஒரு கெழவன்ன பிடிச்சிட்டு வருவே!" அப்பிடின்னுது சுருக்குன்னு பத்மா பெரிம்மா.
            "ஏய் எப்பாடி! அப்டி போவுதா சங்கெதி? அப்பிடின்னா ஒம்மட விருப்பப்படி கலியாணத்தப் பண்ணிகோ. நம்மள கலியாணம் அது இதுன்னு கூப்புடற வேல வெச்சிக்கக் கூடாது. நம்ம மொகத்துலயும் முழிக்கக் கூடாது!" அப்பிடின்னு சொன்னவருதாம். திடீர்ன்னு எழுந்திரிச்சி வூட்டை வுட்டு வெளியில போவாருன்னு யாரும் எதிர்பார்க்கல. மின்னல் வேகத்துல யாரும் தடுத்து நிறுத்த முடியாதபடி பாய்ஞ்சு அப்படியே போனவருதாம். எங்கடா ஆளக் காணும்ன்னு பார்த்தா வேலங்குடியில் வந்து நிக்குறாரு. "இனுமே நீயி பொறந்த குடும்பத்தோட எந்தக் கலப்பும் கெடையாது. கலியாணம் தேவ திங்கன்னு பத்திரிகை கொண்டு வந்தா வூட்டுலேந்து யாரும் போவக் கூடாத. பாத்துக்கோ!" ன்னு செயா அத்தைக்கிட்ட சத்தம் வுட்டுக்கிட்டு இருக்காரு. 
*****


No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...