15 Nov 2019

15.0




            பலவிதமாக நிறையப் பூக்களைச் சரியாகக் கோர்த்துக் கட்ட நூல் தேவைப்படுகிறது. நூலின் தேவையைப் புறக்கணித்து விட முடியாது. ஆம்! அதேதாம்! நூல் சரியாகக் கட்ட தேவையாக இருக்கிறது. நூல் என்ற சொல் இருபொருள் கொள்கிறது. அதன் இன்னொரு பொருள் இலக்கியங்களைச் சுமந்து நிற்பதான நூல். சரியாக வாழ்க்கையைக் கோர்த்துக் கட்ட நூல் தேவையாகத்தான் இருக்கிறது என்பதை இப்போது ஒப்புக் கொள்வீர்கள். கட்டுமானத்தில் ஒரு சிக்கல் என்னவென்றால் கட்டிய பிறகு அதிலிருந்து விடுவித்துக் கொண்டு வர முடியாமல் சிக்கிக் கொள்வது.
            இயற்கையாகச் செடியில் பூத்த மலருக்கு எதற்கு நூல்? செடியின் காம்பு அதைக் கோர்த்துக் கட்டியிருக்கிறது. காம்பிலிருந்து பறிக்கப்பட்டப் பூக்களுக்கு நூலின் தேவை இருந்து கொண்டு இருக்கும். சாமந்திப் பூக்கும் செடியில் சாமந்திப் பூக்கள் மட்டும் இருக்கும். நூலால் கோர்த்துக் கட்டப்படுகிற போது சாமந்திப்பூவோடு, ரோஜாப்பூவும் சிரிக்கிறது. நூலின் வசிய சக்தி அது. நூலற்ற வாழ்க்கை ஒருபடித்தான வாழ்க்கை. நூலோடு கூடிய வாழ்க்கை பலபடித்தானது.
            இலக்கியம் ஒரு நூல். அது கதையை, கவிதையை, அனுபவத்தை, கட்டுரையை, வலியை, வேதனையை, சிரிப்பை, ஏகாந்தத்தை, கவலையை, சிருங்காரத்தை என்று எல்லாவற்றையும் சேர்த்துக் கட்டுகிறது. இலக்கியம் எல்லாமுமாக இருக்கிறது. அறிவியலுக்கு, கணிதத்துக்கு, அரசியலுக்கு, பொருளியலுக்குத் தாயாக இருக்கிறது. அறிவியல், கணிதம், அரசியல், பொருளியல் என்ற இன்ன பிற அனைத்தும் இலக்கியத்தின் பால் குடித்த பிள்ளைகள். எதிலும் ஓர் இலக்கிய வரியை எடுத்து மேற்கோள் காட்டலாம், தாயை எப்போது வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம், அவள் ரத்தத்தை உறிஞ்சலாம் என்பது போல.
            இலக்கியத்தின் தோற்றுவாய் எதுவென்று நீங்கள் கேட்கலாம். சத்தியமாக வாய்தான். அது பேசத் தொடங்கியதிலிருந்து இலக்கியம் பிறக்கிறது. காற்றில் கலக்கும் ஓசைகள் மரித்து விடக் கூடாது என்பதற்காக அவை எழுத்தாகி, இலக்கியமாகி நின்றன. இன்று ஓசையைப் பதிவு செய்யும் நுட்பம் வந்தாகியிருக்கிறது. ஓசையென்ன ஓசை பதிவுகள் காட்சிகளாகி விளையாடுகின்றன. நூன்முகம் மெல்ல தன் முகமாற்றத்தை உணர்கிறது. பேச பேச எழுதும் தொழில்நுட்பத்தைப் பார்த்து கை பொறாமை கொள்கிறது. கையெழுத்துப் போடுவதற்கென்ற விரல்கள் கைரேகை நுட்பத்தைப் பார்த்து பயந்து பின்வாங்கியிருக்கிறது. மனிதர் ஆதியில் எப்படி இருந்தாரோ அப்படி ஆகிக் கொண்டிருக்கிறார்.
            வாய் இருக்கிறது என்பதற்காக பேசும் சாதி மனிதசாதி. குருவிக்கும், நாய்க்கும், திமிங்கலத்திற்கும் நம்மைப் போன்ற செவ்வையான மொழி வாய்க்காது போனது துரதிர்ஷ்டம். குருவிகளின் இலக்கியக் கூட்டம், நாய்களின் இலக்கியக் கூட்டம், திமிங்கலங்களின் இலக்கியக் கூட்டம் மிக நன்றாக நடந்திருக்கும். அவை கூடிப் பேசுவதை இலக்கியமல்ல என்று சொல்வது சாத்தியமாகாது. ஒரு நாய் ஒரு புத்தகம் எழுதாத வரை அதை ஓர் இலக்கியவாதியாக நாம் மதிக்கப் போவதில்லை. நாமும் நாய்களின் கால்களில் பேனாவைக் கொடுத்துப் பார்க்க பிரியப்படுவதில்லை.
            இலக்கியக் கூட்டம் கடைசிப் புகலிடம். முதல் மற்றும் முழுமுதற் புகலிடங்கள் பல்ஊடகச் சாதனங்கள். அதன் ஒவ்வொரு பல்லும் மென்று கொண்டிருக்கின்றன பார்வையாளர்களை. காட்சிகளை உருவாக்க விழையா மனதின் சோம்பேறித்தனத்திற்கு அவை தீனி வைத்துக் கொண்டிருக்கின்றன.
            கற்பனையை தீண்டிப் பார்க்க இலக்கியத்தை உரசிப் பார்க்க வேண்டும். அப்படித்தான் அகலின் இலக்கியக் கூட்டங்கள் ஆரம்பித்தன. விதவிதமான மனிதர்கள் அதன் பின் அங்கு நடமாட ஆரம்பித்தார்கள். நாவலாசிரியர் இங்கே கூட்டத்துக்கு வந்த ஆட்களைப் பற்றிச் சொல்லவில்லை. பேசப்பட்ட பேச்சுகளில் பிறந்த ஆட்களைப் பற்றிச் சொல்கிறார். அவர்களை நீங்கள் முன்பின் பார்த்திருக்க முடியாது. கற்பிதம் செய்தால் ஒருவேளைப் பார்க்கலாம். அவர்கள் கற்பனா சக்தியில் ஜீவனம் செய்பவர்கள். கொஞ்சம் அசலும், கொஞ்சம் நகலும் கலந்தவர்கள். டீயையும், காபியையும் கலந்தவர்கள் போன்றவர்கள்.
            நான்கு பேர் அமர்ந்திருக்கும் கூட்டத்துக்கு நானூறு பேராய் வரும் கூட்டவாதிகள் கற்பனையும், இலக்கியமும் கலந்து கட்டமைத்துக் கொள்ளும் பிரதிகள் ஆவர். உங்களால் ஓர் இலக்கியக் கூட்டத்தில் அமர்ந்திப்போரை எண்ண முடியாது. உங்கள் கண்களுக்குத் தெரிந்தோர் கொஞ்சம். தெரியாதோர் முடிவிலி. வெளிகளில் கண்ணுக்குத் தெரியாமல் கூட்டவாதிகள் நடமாடிக் கொண்டு இருப்பார்கள். அவர்களைக் காண்பதற்கு இலக்கியம் கண்ணாடி வேண்டப்படுகிறது. யார் அந்த ஏலியன்கள் என்று கேட்காதீர்கள். குடும்பக் கட்டுபாடு செய்து கொள்ளாத கற்பனைக்குப் பிறந்தவர்கள் அவர்கள்.
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...