14 Nov 2019

காசு கொடுத்து ஏமாந்த கதை!



செய்யு - 268
            வருஷங்களும், சக்கரமும் ஒண்ணு. ரெண்டுமே உருண்டோடிட்டே இருக்கும். வாத்தியாரு பயிற்சி பள்ளியோடத்துல சுப்பு வாத்தியாரு சேர்ந்து ஒரு வருஷம் ரெண்டு வருஷமாவது. ரெண்டாவது வருஷம் படிச்சிட்டு இருந்தப்போ ஒரு நாளு அவரு பேருக்கு ஒரு தந்தி வருது. தந்தின்னாலும், அண்டங் காக்கா கத்துனாலும் சாவுதான்னு  உதறலு எடுக்குற காலக்கட்டம் அது. அப்படித்தாம் என்னவோ எதுவோன்னு தந்தி வந்த சேதியைக் கேட்டதும் சுப்பு வாத்தியாருக்கு ஒதறலு எடுக்க ஆரம்பிச்சிடுச்சி. அப்படி ஒதறல் எடுக்குறாப்புல பெரும்பாலும் சாவு சேதிகளாகத்தாம் அப்போ தந்தியிலும் வரும். அவரு ஒடம்பு உதறலு எடுக்குறதுக்கு ஏத்தப்படி வர்ற தந்தியிலயும் சாவு சேதிதான் வந்து சேர்ந்திருக்கு. அவரோட பெரியம்மாவான ரத்தினத்து ஆத்தா தவறிட்டதா தந்தி வந்து சேதி சொல்லுச்சு.
            சுப்பு வாத்தியாரு ஒடனே பஸ்ஸூ பிடிச்சி விருத்தியூருக்கு விழுந்தடிச்சி ஓடுனாரு. மனுஷனுக்கு உறவுகள் மூலமாத்தான் வாழ்க்கையில ஒரு பிடிப்பு வருது. காலப்போக்குதல அந்த பிடிப்புகள மரணம்னு ஒண்ணு வந்து பிடுங்கிட்டுப் போயிடுது. இப்போ அவருக்குன்னு இருந்த ஒரு பிடிப்பும் விடுபட்டது போல ஆயிடுச்சி. இனுமே தங்கச்சியை வெச்சி எப்படிக் காலந்து பண்ணப் போறேங்ற கவலை வேற அதிகமா அவரோட மண்டையில ஆக்கிரமிச்சிடிச்சி. ரொம்பவே அதுல அவரு கலங்கிப் போயிட்டாரு. ரத்தினத்துக்கு ஆத்தாவுக்குத் துணையா நாகு அத்தையும், நாகு அத்தைக்குத் துணையா அதுவும் ஒருத்தருக்கொருத்தரு இருந்தாங்க. அதுல ஒருத்தருப் போயிச் சேர்ந்தா இன்னொருத்தரு நெலமை என்னாவுறது? இவரு தங்கச்சிக்குத் துணையா விருத்தியூர்ல இருக்குறதா? தங்கச்சிய விட்டுப்புட்டு வாத்தியாரு பயிற்சிப் பள்ளியோடத்துல ரெண்டாவது வருஷத்த படிச்சு முடிக்கிறதாங்க கொழப்பம். அதால ரத்தினத்து ஆத்தா சாவுல கலங்கி அழுதுகிட்டு அப்படியே கெடந்தவருதாம். திரும்ப வாத்தியாரு பயிற்சிப் பள்ளியோடத்துக்குப் போவாமல பத்து நாளு வரைக்கும் விருத்தியூர்லயே கெடந்துட்டாரு. ரெண்டு தடவை அவருக்கு மரணங்கள் சம்பந்தமா பித்து ஏற்பட்டதா முன்னாடி சொன்னோம்ல, இப்போ ரெண்டாவது தடவையா அப்பிடி ஆயிடுச்சி பித்துப் பிடிச்சாப்புல.
            பத்மா பெரிம்மா வந்து நாகு அத்தைய தாம் பாத்துக்கிறதாவும், நல்லபடியா வாத்தியாரு பயிற்சிப் பள்ளியோடத்துக்குப் போயி படிச்சிட்டு வான்னு சொல்லியும் சுப்பு வாத்தியாரு அதெ கேட்குற நெலமையில இல்ல. ஏற்கனவே ஒண்ணா இருக்க வேண்டிய குடும்பத்த ரெண்டா அடிச்ச அவங்க எப்படி தன்னோட தங்கச்சிய பாத்துப்பாங்கங்ற கவலை அவருக்கு. ஆனா பத்மா பெரிம்மாவுக்கும் ரத்தினத்து ஆத்தாவோட சாவு மனசுல ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியிருந்துச்சி. சுப்பு வாத்தியாருக்குத்தாம் அதெ புரிஞ்சிக்க முடியல. அவரு பாட்டுக்குப் பித்து பிடிச்ச மாதிரியே உக்காந்துட்டாரு. எட்டாவது படிக்கிறப்ப அவரோட சின்னம்மா இறந்து போனப்ப உக்காந்திருந்ததுல கூட ஒரு ஞாயம் இருக்கு. இந்த வயசுலயும் நாலு புள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்குற படிப்ப படிக்கிற ஒருத்தன் இப்படி உக்காந்திருந்தா என்ன பண்றதுன்னு ஊரு சனங்களும், சொந்தக்கார சனங்களும் ஆளாளுக்குப் புத்திச் சொல்லுதுங்க. ஆனா சுப்பு வாத்தியாரு அப்படியேத்தாம் உக்காந்திருந்தாரு.
            வேலங்குடி பெரியவரு தாம் வேணும்னாலும் தங்கச்சிய கொண்டு போயி வெச்சிக்கிறதாவும் சொல்லிப் பாத்தாரு. அதுக்கு பத்மா பெரிம்மா ஒத்துக்கல. எங்க வூட்டுப் பொண்ண நாங்க அப்படில்லாம் விட்டுட முடியாதுன்னுடுச்சி. அதுல கொஞ்சம் மனசுல தெம்புத்தாம் சுப்பு வாத்தியாருக்கு. இருந்தாலும் ரத்தினத்து ஆத்தா சாவு தந்த பித்த அவரால மாத்திக்க முடியல. செயராமு பெரிப்பாவும் எவ்வளவோ சொல்லிப் பாத்துச்சு. "போயி படிப்பப் பாத்து பொழப்பப் பாருடாம்பீ!"ன்னு அது சொல்லுது. அவரால அவரு மனச மாத்திக்க முடியல. கடைசியில வேற வழியில்லாம விகடபிரசண்டரு வாத்தியார்ரத்தாம் கண்ட்ரமாணிக்கம் போயி கொண்டு வந்தாங்க. அவரு வந்து, "கெளம்புடா பயலே!"ங்ற அந்த ரெண்டு வார்த்தையைச் சொன்னாரு. என்னவோ மந்திரத்துக்குக் கட்டுபட்ட பாம்பு போல சுப்பு வாத்தியாரு மறுபடியும் வாத்தியாரு பயிற்சிப் பள்ளியோடத்துக்குக் கெளம்புனாரு.
            அதென்னடா ஊர்ல இத்தனைப் பேரு சொல்லியும் எடுபடாத விசயம் அந்த வாத்தியாரு மட்டும் வந்து சொன்னா எடுபடுதுன்னு அதையும் ஊருகாரங்க ஆச்சரியமா பேசிக்குறாங்க. எப்படியோ நல்லது நடந்தா சரித்தாம்னு அதையும் அவங்களே அதுக்குப் பெறவு சொல்லிக்கிறாங்க. இப்படியாய் மறுபடியும் போயி வாத்தியாரு பயிற்சிப் பள்ளியோடத்துல படிச்சி முடிச்சாரு சுப்பு வாத்தியாரு.
            படிச்சி முடிச்சதும் அப்போ பஞ்சாயத்து சேர்மேன்களா இருக்குறவங்களப் பார்த்து அவங்க சிபாரிசுல வேலைக்குச் சேந்திருக்காங்க அப்போ வாத்தியாரு பயிற்சி எடுத்துக்கிட்டவங்க. சுப்பு வாத்தியாரு வெளிப்பழக்கம் இல்லாத ஆளுங்கிறதால யாரப் போயிப் பாக்கிறதுன்னு தெரியாமலே ரொம்ப காலத்துக்கு வேல பாட்டுக்கு அதுவா வரும்ங்ற நெனைப்புல செயராமு பெரிப்பாவோட வேலைக்குப் போயிட்டு கெடந்திருக்காரு.
            இடையில சுப்பு வாத்தியார்ர பார்க்க வந்த விகடபிரண்டரு வாத்தியாருதாம் இப்படியே இருந்தா வேலைக்கு ஆகாதுன்னு, அவருக்குத் தெரிஞ்ச ரிட்டையார்டு ஆகப் போற நெலையில இருந்த வாத்தியாரு ஒருத்தருகிட்ட சொல்லி மருத்துவ விடுப்புப் போடச் சொல்லி அந்த இடத்துல சுப்பு வாத்தியார்ர ரெண்டு மாசம் வேலைப் பாக்கச் செஞ்சிருக்காரு. அதெ லீவ் வேகன்ஸி அப்பிடின்னு சொல்லுவாங்க. அப்படி வேலைப் பாக்குறப்ப மாசத்துக்கு முந்நூத்து அம்பது ரூவாய் வரைக்கும் சம்பளம் கொடுத்திருக்காங்க. அந்தச் சம்பளத்துல நூறு ரூவாய லீவ் வேகன்ஸி போட்டுக் கொடுத்த வாத்தியாருக்குக் கொண்டு போயி கொடுத்துடணும். லீவ் வேகன்சி செஞ்சு கொடுத்ததுக்காக செய்யுற கைம்மாறு கணக்கா அப்போ அது மாதிரி ஒரு நெலமை இருந்திருக்கு. அதுல மிச்ச காசு லீவ் வேகன்ஸிப்  பாக்குற வாத்தியாருக்கு.
            இப்படி ரிட்டையர்டு ஆவப் போற வாத்தியாருமாருகளாப் போயி பார்த்து லீவ் வேகன்ஸிக்குப் போடச் சொல்லி அடுத்த ஒரு வருஷத்த ஓட்டியிருக்காரு சுப்பு வாத்தியாரு. அப்படி லீவ் வேகன்ஸியில வேல பாக்குறவங்கள ரிட்டையர்டு ஆவுற வாத்தியாருமாருகளுக்குப் பதிலா பஞ்சாயத்து சேர்மேன், பி.டி.ஓ. இவங்களா பாத்து ஒரு நேர்காணுலு மாதிரி வெச்சி வேலைக்குப் போடுறது ஒரு வழக்கமா வெச்சிருந்திருக்காங்க அப்போ. அப்படி அந்த நேரத்துல சுப்பு வாத்தியாரு போல எட்டு பேரு குடவாசலு பக்கத்துல வேலைப் பாத்திருக்காங்க. அதுல அஞ்சு பேருக்கு வேலையப் போட்டுக் கொடுத்திட்டாங்க. சுப்பு வாத்தியாரு போல வேல பார்த்த மூணு பேருக்கு வேலை கெடைக்கல. ஏம் எங்களுக்கு மட்டும் வேலைப் போட்டுக் கொடுக்கலன்னு துப்பு துலக்குனா பஞ்சாயத்து சேர்மன்ன கொஞ்சம் கவனிச்சத்தாம் வேலை கிடைக்கும்னு சொல்லியிருக்காங்க.
            வேலை கெடைச்சா செளரியமா இருக்குமேன்னு சுப்பு வாத்தியாரு தங்கச்சிக்குக் கல்யாணத்துக்கு ஸ்காலர்சிப்பு பணத்துல வாங்கி வெச்சிருந்த நகைய அடகு வெச்சி ஆயிரம் ரூவாய கொண்டுகிட்டு செயராமு பெரிப்பாவ வெச்சி அங்கங்க விசாரிச்சு ஒரு பஞ்சாயத்து சேர்மன் ஒருத்தருகிட்ட கொண்டு போயிக் கொடுத்திருக்காரு. அந்த ஆளும் பணத்த ஆசை ஆசையா வாங்கிகிட்டு இன்னொருத்தருக்கு வேலைய போட்டுக் கொடுத்திட்டாரு. வேலை தனக்குக் கிடைக்கலேங்ற சேதி தெரியுறதுக்கே சுப்பு வாத்தியாருக்கு அஞ்சாறு மாசம் ஆயிருக்கு. அந்தச் சேதிய கேள்விப்பட்டதும் அப்படியே மயக்கம் அடிச்சி கீழே விழுந்துட்டாரு சுப்பு வாத்தியாரு. படார்ன்னு கீழே வுழுந்ததுல அவரு முகத்துல அடிபட்டு மூக்கிலேந்து ரத்தமா கொட்டுது. சுத்தி இருந்தவங்கத்தாம் அவரைத் தூக்கிப் பிடிச்சி உக்கார வெச்சி அவருக்கு ஆறுதல சொல்லியிருக்காங்க. வேலைத்தாம் கொடுக்கல கொடுத்த பணத்தையாவது கொடுங்கன்னு அவரு பணத்தக் கொடுத்த பஞ்சாயத்து சேர்மன்ன போயி கேட்டதுக்கு அடுத்த தடவெ பாக்கலாம்ணு சொல்லி சாமர்த்தியமா அனுப்பியிருக்காரு.
            அடுத்த தடவ அவரு போடறதுக்குள்ள சேர்மன் சிபாரிசுல போடுறதெல்லாம் மாறிப் போயி டிஸ்டிரிக்ட் கலெக்ட்டரு நேரடியா போடுறாப்புல நெலை மாறிப் போயிடுச்சி. இனுமே அவ்வளவுத்தாம் நமக்கு வேலைக் கெடைக்காதுங்ற முடிவுக்கு வந்துட்டாரு சுப்பு வாத்தியாரு. யாரைப் பார்த்து வேலை கேட்டாலும் பணத்தை வாங்கி ஏமாத்திப்புடுவாங்கிற நெனைப்பு அவருக்கு வந்துப் போயிடுச்சி. அப்போ அப்படியே தச்சு வேலைப் பாக்குற ஆசாரிகளுக்குச் சம்பளமும் பத்து ரூவாய் வரைக்கும் வந்திடுச்சி. இந்த வேலையைப் பாத்தே பொழைச்சுக்கலாங்ற முடிவுக்கு வந்துட்டாரு. அவரு மனசுல ஒரே கவலைத்தாம் இப்போ இருந்துச்சி. தங்கச்சிய நல்லபடியா கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம்னு நகை எடுத்து வெச்சி அதுவும் போயி, வேலை கெடைக்கும்னு பணத்தைக் கொடுத்து அந்த வேலையும் கெடைக்காம போயிடுச்சேங்ற ஒரே கவலைத்தாம்.
            இனுமே இழந்ததை நினைச்சி வருத்தப்படுறதுல ஒரு அர்த்தமும் இல்லேன்னு செயராமு பெரிப்பாவோட வேலைக்குப் போக ஆரம்பிச்சாரு. கொஞ்ச நாள்லயே இவரு தனியா வேலை பிடிச்சி செய்யுற அளவுக்கு வேலையை நல்ல விதமா கத்துக்க ஆரம்பிச்சிட்டாரு. சின்ன வயசுலயே திண்ணை முழுக்க களிமண்ணுல கண்டதையும் செஞ்சி ரகளையா கலையா வெளையாண்ட ஆளாச்சா சுப்பு வாத்தியாரு. அவரோட வேலையில ஒரு கலைநயம் உண்டாக ஆரம்பிச்சிடுச்சு. சுப்புவ வேலைக்கு வெச்சா நல்ல வெதமா செஞ்சிக் கொடுப்பாங்ற பேரும் உண்டாக ஆரம்பிச்சிடுச்சு. அதோட நேரங்காலம் பார்க்காம அவரோட அண்ணங்காரரு மாதிரியே வேலை செஞ்சிக் கொடுப்பாரு. கூட கொறைச்சலுக்கெல்லாம் கணக்குப் பார்க்க மாட்டாரு.
            இப்படி அவரு வேலை பாக்குறதுக்கு இடையில வேலங்குடி பெரியவரு, சின்னவரு வூட்டுக்கும் போயி ஒரு வாரத்துக்கு, ரெண்டு வாரத்துக்கு ரெண்டு வூட்டுலயும் மாறி மாறி தங்கி வேலை செஞ்சிக் கொடுத்துட்டு வருவாரு. பொதுவா பெரியவரு வூட்டுல ஆடு, மாடுகளப் பாக்குறது, வய வேலைகள்னு அப்படித்தாம் இருக்கும். சின்னவருதாம் வேலைக்கு அழைச்சிட்டுப் போவாரு. அழைச்சிட்டுப் போயி நல்லா வேலையை வாங்கிக்கிட்டு அதுக்குப் பதிலா சாயுங்காலமா ரெண்டு டீயும், ரெண்டு பட்சணப் பொட்டலத்தையும் வாங்கிக் கொடுத்துட்டு கணக்க முடிச்சுப்பாருங்றது ஒங்களுக்குத் தெரிஞ்ச சங்கதித்தாம். ஊருக்குப் போறப்பயும் பைசா காச கண்ணுல காட்டி அனுப்ப மாட்டாரு.
            அம்மாக்காரிச் செத்த பிற்பாடு அக்காக்கள வந்து பார்க்க யாருமில்லாம போயிட்டாங்கங்ற நெனைப்பு அவங்களுக்கு வந்துடக் கூடாதுங்றதுக்காக சுப்பு வாத்தியாரு இப்படி இடையிடையில ஓடியாந்துப் பாத்துப்பாரு. அங்க விருத்தியூர்ல பத்மா பெரிம்மாவுக்கு வூட்டு வேலைகளைப் பாத்துக்கவும், ‍அதோட புள்ளைங்கள ஒரு ஆளு பாத்துக்கவும் ஒரு ஆளு தேவையாப் போனதால அது சுப்பு வாத்தியாரோட தங்கச்சி நாகு அத்தைய ஒண்ணுஞ் சொல்லாம வேலை வெத்துகள வாங்கிக்கிட்டு வெச்சிக்கிடுச்சி. அதுக்கு முன்னாடி ரத்தினத்து ஆத்தா சாவுற வரைக்கும் ரெண்டு அடுப்பு எரிஞ்ச வூட்டுல அதுக்குப் பெறவு ஒத்த அடுப்புத்தாம் எரிஞ்சிச்சி. அது ஒரு செளகரியமா சுப்பு வாத்தியாருக்கு அக்காமார்கள வந்து பாக்குறதுக்கு வசதியா போயிடுச்சு.
            அவரு ஒழுங்கா விருத்தியூர்லயே இருந்தாலாவது ஒழுங்கா சம்பாதிச்சு காசு சேர்க்கலாம். ஆனா அப்படி இருந்துட மாட்டாரு. ரெண்டு மாசத்துககு ஒருக்காலோ, மூணு மாசத்துக்கு ஒருக்காலோ வேலங்குடிக்கு வராம இருக்க மாட்டாரு. இப்படி வேலையைப் பாத்துக்கிட்டு, விருத்தியூருக்கும் வேலங்குடிக்கும் அலைஞ்சிகிட்டு கெடந்ததுல அவருக்கு வாத்தியாரு பயிற்சிப் படிச்சதும், வாத்தியாரு வேலைக்குப் போறதும் அறவே மறந்து போயிடுச்சி. இங்க விருத்தியூர்லயும் சரி, இங்க வேலங்குடியிலயும் சரி பொறந்த கொழந்தைங்க எல்லாத்தையும் வர்றப்ப எல்லாம் தூக்கி வளர்த்தது இவருதாம். இங்க விருத்தியூர்ல செயராமு பெரிப்பாவோட புள்ளைங்க எல்லாமும் சித்தப்பா சித்தப்பான்னு இவர்ர கண்டுகிட்டா விடாதுங்க. அங்க வேலங்குடியில பெரியவரு, சின்னவருன்னு ரெண்டு பேரோட புள்ளைங்களும் மாமா மாமான்னு இவர விடாதுங்க.
            ஒரு சாப்பாடு தண்ணிய போட்டு வெச்சா சுப்பு வாத்தியாருக்கு அந்தப் புள்ளைங்கள மடியில தூக்கி வெச்சிக்கிட்டு அதுங்களுக்கு ரெண்டு வாயி ஊட்டி விட்டத்தாம் அவருக்குச் சாப்பிடத் தோணும். வேலைக்குப் போயிட்டு வாரப்ப வெறுங்கையோட வர மாட்டாரு. சம்பாதிச்ச காசுல காராச்சேவோ, ரொட்டிப் பொட்டணமோ வாங்கிட்டுத்தாம் வருவாரு. அதால புள்ளைங்க இவரு வர்றப்ப வாசல்லயே இவரு வர்றத பாத்துட்டு நிக்கும்ங்க. இவரு வந்ததும் வராதுமா அவரு கையில இருக்குற பொட்டணத்தப் பிடுங்கிட்டு ஓடும்ங்க. வேலங்குடியில சின்னவரோட வேலைக்குப் போயிட்டு வாரப்ப அவரு வாங்கிக் கொடுக்குற ரெண்டு பட்சணத்துல ஒண்ண மட்டும் தின்னுட்டு ஒண்ண அவருக்கே தெரியாம எடுத்துட்டு வந்து புள்ளைங்களுக்குப் பிரிச்சிக் கொடுப்பாரு சுப்பு வாத்தியாரு.
            வேலங்குடிய விட்டு விருத்தியூரு கெளம்புறப்ப புள்ளைங்க கையில அஞ்சு காசு, பத்து காசுன்னு கொடுத்துட்டுத்தாம் கெளம்புவாரு. அக்காமாருகளான அத்தைங்க ரெண்டு பேரு கையிலயும் ஒத்தை ரூவாயோ, ரெண்டு ரூவாயோ கொடுக்காமலும் கெளம்ப மாட்டாரு. அதுல ரெண்டு அத்தைகளும், "ஏம்டாம்பீ! இஞ்ஞ வந்தாலும் செலவு பண்ணிட்டுப் வர்ற, போறப்பயும் செலவு பண்ணிட்டு வர்ற. ஒன்னயப் போட்டு அந்தப் பாடுபடுத்தி வேலையை வாங்கிட்டு சக்கையா உறிஞ்சித்தாம் அனுப்புறேம். ஒனக்கு ஒரு நல்ல கெதி வாரக் கூடாதா? இஞ்ஞயும் அஞ்ஞயுமா அலைஞ்சிட்டுக் கெடக்கறீயே?" அப்பிடின்னு நாலு சொட்டு கண்ணீரை வுட்டுத்தாம் அனுப்பும்ங்க. புள்ளைங்களும் மறுபடியும் எப்போ வருவே மாமான்னு அழுதுகிட்டே கேட்டுக்கிட்டுத்தாம் அனுப்பும்ங்க.   
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...