தீராத மனஉளைச்சல் எப்படி இருக்கும் தெரியுமா?
கடல் கொந்தளிப்பது போல இருக்கும். கடல் கொந்தளிப்பது எப்படி இருக்கும் தெரியுமா?
தீராத மனஉளைச்சல் போல இருக்கும். இதென்ன வேடிக்கைக் கூத்தாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
மனம் கடல் போல. ஆழக்கடல் போல மனம் ஆழமானது. அதிசயங்கள் நிரம்பிய கடல் போல மனம்.
அதில் மனிதர் தோணியில் போவது போல போய்க் கொண்டிருக்கிறார். அந்தத் தோணியில் ஓட்டை
விழுந்தாலோ, கடல் கொந்தளித்தாலோ போயிற்று அத்தோடு எல்லாம். கடலில் மனிதர் மூழ்குவதைப்
போல மனதுக்குள் மனிதர் மூழ்கி விடுவார்.
நடுக்கடலில் தோணியின் ஓட்டையை அடைப்பதைப்
போன்ற அசாத்தியம் வேறில்லை. அதை விட கொந்தளிக்கும் கடலை அடக்குவது அசாத்தியம். அந்த
அசாத்தியங்கள் காலம் காலமாக ஏதோ ஓர் வடிவில் நடந்து கொண்டு இருக்கின்றன.
தோணி என்பது சிந்தனை. தோணி என்பது கற்பனை.
தோணி என்பது கருத்து. தோணி என்பது இலக்கு. தோணி என்பது எண்ணம். தோணியற்றுக் கடலில்
மிதக்கும் நிலை கை கூடுவது ஞானம். ஞானம் என்பது சிந்தனை, கற்பனை, கருத்து, இலக்கு மற்றும்
இன்ன கருமாந்திரங்கள் எது இருந்தாலும் அஃதையும் சேர்த்து எண்ணம் கடந்த நிலை.
மிதக்க இயலாதவருக்குத்தாம் தோணி.
மிதக்க முடியுமானால் எதற்குத் தோணி?
இசை, பாடல், இலக்கியம், நாடகம், தொலைக்காட்சி,
முகநூல், கீச்சு, புலனம், கணொலிகள் இவை தற்காலிக ஓட்டையை அடைக்கும் முயற்சிகள். இவற்றில்
சில தம்மையறியாமல் ஞானத்தின் பாதையைத் திறந்து விடலாம். இலக்கியத்தில் அதற்கான சாத்தியப்பாடுகள்
அதிகம் இருக்கின்றதாகத் தோன்றுகிறது. ஞானிகள் பலர் இலக்கியவாதிகளாக இருந்து இலக்கியவாதிகளாக
அவதிப்பட்டு அவ்வண்ணம் ஞானிகளாக ஆகியிருக்கிறார்கள். ஞானிகளாக இருந்தும் இலக்கியவாதியாக
ஆசைப்பட்டு இலக்கியம் படைத்திருக்கிறார்கள். பைத்தியக்காரத்தனத்துக்கும், முதிர்ந்த
நிலைக்கும் நூலிழை வேறுபாடு இலக்கியத்தில் இருக்கும்.
கலை என்றால் கலைத்துப் போடுவதுதாமே? பிறகென்ன
கலையை கலை என்பது? கலையை கலை என்கிறார்கள். அது மனதை மென்மைபடுத்துவதாக, மிருகத்தோலை
உரிப்பதாக பலவிதமாகப் பேசுகிறார்கள். கலை கலைத்துப் போடவே செய்யும். மனதை ஒழுங்காக
அடுக்கி வைத்துக் கொள்வதில் என்ன இருக்கிறது? ஒழுங்கா அடுக்கப்பட்ட மனம் அல்லது ஒழுங்காக
அடுக்கப்பட நினைக்கும் மனம் வெகு விரைவில் பைத்தியாரத்தனத்தின் வாசலை நெருங்குகிறது.
மனதின் ஓட்டை அடைபடுவது என்பது சிறிது நேர மனச்சிதறல். அதில் அடைபட்டது போன்ற தோற்றம்
பிறகு மீண்டும் திறந்து கொள்ளும். மனமென்ற ஒன்றே பொய்யானால் அதில் உண்டாவதான ஓட்டை
மாபெரும் பொய்யல்லவா!
கடலுக்குத் தோணி மிதந்தால் என்ன? மூழ்கினால்
என்ன? அது பாட்டுக்கு ஆழ்கடலில் அமைதியாக இருக்கும். கரைகளில் அலைகளை வீசிக் கொண்டிருக்கும்.
அதற்கு ஆழ்கடலும் ஒன்றுதாம், கரையோரமும் ஒன்றுதாம். இருக்குமிடத்தைப் பொருத்து இரண்டும்
இரண்டு விதமாக இருக்கிறது. அது நினைத்தால் கடலோர நீரை ஆழ்கடலுக்கும், ஆழ்கடல் நீரை
கடலோரத்துக்கும் நிமிடத்தில் மாற்றிக் கொள்ளும்.
இலக்கியம் மாபெரும் துயரம். அந்தத் துயரத்தை
வாசிக்க வாசிக்க, பேச பேச உங்கள் துயரம் குறைந்தது போலத் தோன்றலாம். உண்மையில் துயரங்கள்
குறையாது வாழ்க்கை இருக்கும் வரை. குறைந்தது போன்ற ஒரு தோற்றம் தேவையாகும் போது
இலக்கியக் கூட்டங்கள் தேவாமிர்தமாகி விடும். இலக்கியத்தின் அந்த இடத்தை பத்தொன்பதாம்
நூற்றாண்டுகளில் நாடகம் பிடித்துக் கொள்கிறது. இருபதாம் நூற்றாண்டில் படிப்படியாக
சினிமாவும், டி.வி.யும் பிடித்துக் கொள்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டில் இணைய வெளியில்
தன் சுதந்திரத்தைப் பறிகொடுக்கிறது இலக்கியம். ஓயாது அது இணையவெளியில் கூச்சலிட வேண்டிய
அவஸ்தைக்கு ஆளாகிறது. கூட்டங்களோ, கூட்டவாதிகளோ குறைந்தபாடில்லை. அவர்கள் உண்மையில்
சிறுபான்மையர்களாகி விட்டனர். உலகில் கடைசி மனிதர் ஒருவர் இருக்கும் வரை கூட்டம் என்ற
ஒன்று இருக்கும். ஒரு மனிதர் கூட்டமா? என்றால் இருக்கின்ற ஒரு மனிதருக்கு அவர் ஒரு
கூட்டம். இன்னொரு மனிதர் இருந்தால் எதிர்க்கூட்டம் போடுவார். கூட்டத்திற்கு எதிர்க்கூட்டம்
என்றாவது கூட்டங்கள் நடந்து கொண்டு இருக்கும். கூட்டவாதிகள் இருந்து கொண்டே இருப்பார்கள்.
அகல் இலக்கியக் கூட்டங்களில் ஓர் அமைதி
இருக்கிறது. சற்று நேரம் இதில் இளைப்பாற முடிகிறது. மாதத்திற்கு ஒரு கூட்டம் என்பது
இரண்டாகாதா என்ற ஏக்கம் இருக்கிறது. அந்த ஏக்கம் இருக்க வேண்டுமே தவிர அதை நிறைவேற்றி
விடக் கூடாது என்பதில் குறியாக இருந்ததில் மாதந்தோறும் ஒரு கூட்டம் நடந்து கொண்டேயிருக்கிறது.
இலக்கியம் எனும் வஸ்துக்காக அது நடந்து
கொண்டு இருக்கிறது. அது வஸ்து வஸ்துவேதாம். ஒரு போதை. ஒரு லாகிரி. அந்தப் போதைக்காக
வருபவர்கள் உலகம் அழிந்த பின்னும் ஒருத்தர் இருக்கவே செய்வார்.
முதல் கூட்டம் நடந்த போது அது வில்சன்
அண்ணன் வீட்டின் நடுக்கூடத்தில் அது நடந்தது. கூட்டவாதிகள் நாற்காலிப் போட்டு உட்கார்ந்திருக்க
அது நடந்தது. காபி, பலகாரம் என்று கொடுத்து அமர்க்களப்படுத்தினார் வில்சன் அண்ணன்.
காபி நன்றாக இருந்தது. காபி ரொம்பவே பிரமாதம். பேசுபொருள் எப்படி என்பதை தம்ப்ளரின்
அடியில் மீந்து இருக்கும் கன்னங்கரலேன்ற ஒரு சொட்டு காபித்துளியைக் கேட்க வேண்டும்.
*****
No comments:
Post a Comment